

இறைவன் படைப்பவன். படைக்கும் ஆற்றலுடையவன் என்று சொல்லுகிறோம். ஆனால் அதற்கு அர்த்தம் புரியாமல் சொல்கிறோம். ஒரு பொருளை புதிதாகப் படைக்கும் ஆற்றல் உடையவன் என்றால் அவன் எவ்வளவு மேன்மையானவன்.
பலர் தன்னைக் கடவுள் என்றும், கடவுளின் அவதாரம் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். அவர்களால் எதையேனும் புதிதாகப் படைக்க முடியுமா? சிறிதளவு மண்ணை, அல்லது ஈயை புதிதாக படைக்க முடியுமா? ஒரு அரிசியைப் படைக்க முடியுமா?
மாம்பழம் சாப்பிடுகிறோம். மாம்பழ வண்டைப் பார்த்திருப்பீர்கள். பழம் சாப்பிட ஆரம்பித்தவுடன் நம்மைச் சுற்றி வரும். புதிய வண்டாக, பளபளவென்று, அப்போதுதான் பிறந்த வண்டாக தோன்றும். அதற்கு முன் நாம் பார்த்ததில்லை. இறைவனால் படைக்கப்படுகிறது. மழை பெய்தவுடன் மண் வாசனைக்காக ஈசல்கள் காற்றில் பறக்கின்றன. அதற்கு முன் ஈசல்களை எங்காவது பார்த்திருக்கிறோமா? அவதார புருஷர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற எவருமே எதையும் புதிதாக படைக்க முடியாது.
இறைவன் புதிதாக படைக்கும் ஆற்றலுடையவன். ஒன்றைப் போல் மற்றொன்றைப் படைக்க மாட்டான். காப்பியடிக்க மாட்டான். ஒரு மனிதனைப் போல் இன்னொரு மனிதன் இதுவரை பிறந்ததில்லை. அவனைப் போல் இருக்கலாம். ஆனால் அவன் இவனாக இருக்க மாட்டான். அவ்வளவு ஆற்றல் படைத்தவன். 700 கோடி மனிதர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேரும், ஒருவர் கூட மற்றவரைப் போல் அல்ல.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள். சிறுநீரகத்தை தானமாகப் பெற்று, அதை அடுத்தவருக்கு பொருத்துகிறார்கள். தாய், அல்லது தந்தை அல்லது உடன் பிறந்தவர்கள், ஒரே குரூப் உள்ள ரத்தம் உள்ளவர்களிடம் இருந்து சிறுநீரகம் கிடைக்கப் பெற்றாலும், இரண்டும் வெவ்வேறு தான். ஒருவர் சிறுநீரகத்தை மற்றவரது உடல், நிராகரிக்கத்தான் செய்யும்.
சிறுநீரகம் வேறு ஒருவரிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு, பொருத்தப்பட்டவுடன் நிராகரிக்கப்பட்டுவிடும். நம் உடலின் எதிர்ப்பு சக்தியாக அந்த சிறுநீரகத்தை வேற்றுப் பொருளாக அறிந்து உடனே நிராகரிக்கும். அப்படி நிராகரிக்கப் படாமல் இருந்து நம்முடைய எதிர்ப்பு சக்தியை அழிக்க கூடவே அதற்காக மருந்துகளைக் கொடுக்கிறார்கள்.
நம்முடைய தோலை எடுத்து நம் உடலில் வேறு இடத்தில் பொருத்தினால் அதை நம் உடம்பு ஏற்றுக் கொள்ளும். ஆனால் அடுத்தவர் தோலை ஏற்றுக் கொள்ளாது. ஏனென்றால் இறைவன் படைப்பு அது மாதிரி. ஒவ்வொன்றும் தனித் தனிதான். ஒவ்வொருவருடைய குணமும், மனமும், உயிரோட்டமும், அவருக்கென்றே படைக்கப்பட்டது. 1000 மாடுகள் இருந்தால் ஒவ்வொன்றும் வேறானவை. மாடு மேய்ப்பவர் ஒவ்வொன்றுக்கும் அடையாளம் வைத்திருப்பார். ஒரு மாடு தொலைந்தால் அதன் அடையாளத்தை சொல்லுவார்.
ஒரு தாய் தன் பெற்ற பிள்ளையை எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் கண்டு கொள்ள முடியும். இதுதான் இறைவனுடைய படைப்பு. எதுவும் இயற்கையாக உருவானது அல்ல. எல்லாமே இறைவனால் படைக்கப்பட்டது. மனிதன் உருவாக்கப்பட்ட பொருளுக்கு ஒரு அளவு உண்டு. ஒரு வரையறை உண்டு. மின்சாரத்தில் வேலை செய்யும் பல்புகளுக்கு இவ்வளவு வோல்ட் தேவை என்று மனிதன் அமைத்து இருக்கிறான். வீட்டில் உள்ள டியூப் லைட், 160 லிருந்து 230 தேவை. 160 க்கு குறைந்தாலோ, 230 தாண்டினாலோ, டியூப் லைட் வேலை செய்யாது.
மனித உடம்பில் ரத்த அழுத்தம் 120/80 என்று சொல்கிறார்கள். இதுவே எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. டியூப் லைட்டுக்கு மனது கிடையாது. ஆனால் மனிதனுக்கு மனம் உண்டு. மனத்தைப் பொறுத்து ரத்த அழுத்தம் மாறும். இது ஆங்கில மருத்துவத்துக்கு தெரியாது. மருத்துவர்கள் சோதித்துப் பார்த்துவிட்டு, உங்களுக்கு ரத்த அழுத்த நோய் என்று சொல்லவும், வாழ்நாள் முழுவதும் அது குறைவது இல்லை. மனத்தின் தன்மைக்கேற்ப மாறக் கூடியதை நோய் என்று பெயரிட்டு விடுகிறார்கள்.
இயற்கையை படைக்கிறான் இறைவன். இயற்கைக்கு ஆற்றல், அது இறைவனால் அளிக்கப்படுகிறது. ரோட்டில் ஒரு பெண்மணி நடந்து செல்கிறார். திடீரென்று ஒரு சின்ன கல்துண்டு தெரித்து கண்ணில் பாய்ந்து கண் குருடாகிவிட்டது. அந்தக் கல்லுக்கு ஆற்றல் வந்தது. அது அழித்துவிட்டது.
வானத்தைப் பார்க்கிறோம். மழை வருகிறதா என்று. கருத்த மேகமே இல்லை. ஆனால் மழை வேண்டுமே என்று விருப்பம். குளிர்ச்சியாக தெரிகிறதே என்று நிமிரிந்து பார்த்தால் தெளிவாக இருந்த வானத்தில் கருத்த மேகம். சிறிது நேரத்தில் மழைத் தூறல். இறைவன் மேகங்களை படைத்து, காற்றையும் படைத்து, மழையையும் தான் விரும்பிய இடத்தில் விழச் செய்கிறான். மழையும், மேகமும், காற்றும் இறைவனால் படைக்கப்படுகிறது. இன்று மழை பெய்யும், நாளை பெய்யாது என்று அனுமானிக்கலாமே தவிர, நாம் சொல்வதன்படி மழை பெய்வதில்லை.
சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று 40 வயதிலிருந்து மருந்து சாப்பிடுகிறார்கள். அது என்ன மருந்து, அதன் பக்க விளைவுகள் என்ன என்று அறிந்து கொள்ள விரும்பி, அரை மணி நேரம் செலவழித்தால் போதும். இன்டர்நெட்டில் எல்லாமே தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரிடம் கேட்டேன். நீங்கள் 20 வருடங்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டிருக்கிறீர்கள். இன்றைக்கு உங்களுக்கு, ஒரு கையும், காலும் வேலை செய்யவில்லை. ஏன் 20 வருடங்களும் உங்களுடைய மருந்து மாத்திரையின் பக்கவிளைவை தெரிந்து கொள்ளவில்லையா. தினமும் மாத்திரை உட்கொண்டீர்கள். வாய்க்குள் போடும்போது இது நம் உடல் சம்பந்தப்பட்டது. இது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்திருக்க வேண்டாமா? சர்க்கரை நோய் என்று இவ்வளவு நாள் மருந்து சாப்பிட்டது, நமக்கு சர்க்கரை நோயினால் கண், சிறுநீரகம், இருதயம், கால், கைகள் பாதிக்கப்படக் கூடாது என்று தானே சாப்பிட்டீர்கள்?
மருந்தை 15, 20 வருடம் ஒழுங்காக சாப்பிட்டும், ஏன் கண்கள் பார்வை இழக்கின்றன? சிறுநீரகம் ஏன் செயல் இழக்கிறது? அவரிடம் கேட்டபோது பதில் இல்லை.
எனது உறவினர் கடந்த 20 வருடஙக்ளாக சர்க்கரை, ரத்த அழுத்த மருந்தை சாப்பிட்டு வருகிறார். இது மட்டுமல்லாது, அவ்வப்போது கை வலி, கால் வலி வரும். அதற்கு டாக்டரிடம் போய், ஊசி மாத்திரை போட்டு வருவார். காதில் சீழ் வருகிறது. காதுவலி என்று அதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரை என்று ஏராளமான மாத்திரைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இப்போது, சிறுநீரகம் வேலை செய்யவில்லை. இரண்டு கால்களும் வீங்கிப் போய்விட்டன. மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று சொல்லவும், மறுத்து வீட்டுக்கு ஒடிவந்து விட்டார்.
வீட்டில் டாக்டர் ஆலோசனைப்படி உப்பு இல்லாமல் சாப்பிடச் சொன்னார்கள். ஆனால் அவர் சாப்பிட மறுத்து வீட்டில் பிரச்னை. இப்படி அவர்கள் காலம் போய்க் கொண்டிருக்கிறது. நாம் இறைவனுக்கு பயந்து கொள்வோம். சிந்தித்து உணர்பவர்களுக்கு இறைவன் உதவி செய்கிறான். சிந்திக்கும் திறன் அதாவது நல்லது கெட்டதை பிரித்து அறியக் கூடிய ஆற்றலோடுதான் மனிதனை படைத்திருக்கிறான்.
ஆனால் மனிதன் பெருமை கொண்டவனாக தன் அறிவைக் கொண்டு இறைவனை மறுக்கிறான்.
தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.