12. இறைவன் நேரில் வருவானா?

இறைவன் நேரில் வருவானா? அல்லது இறை ஞானங்களை கற்பிப்பானா? இறைவன் ஒவ்வொரு மனிதனையும், அவனது
12. இறைவன் நேரில் வருவானா?
Updated on
2 min read

இறைவன் நேரில் வருவானா? அல்லது இறை ஞானங்களை கற்பிப்பானா? இறைவன் ஒவ்வொரு மனிதனையும், அவனது தேவைகளை கொடுத்து அவனை வாழவைக்கிறான். தான் சுகமாக வேண்டும், நோயிலிருந்து சுகமாக வேண்டும் என்று தனது தேவையை உணர்கிறான். தான் ஒரு வெளியூருக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறான். செல்லும் வழியில் ஒரு ஆறு குறுக்கே ஓடுகிறது. அந்த ஆற்றை எப்படி கடப்பது? அந்த ஆற்றை கடப்பதற்கான வழி என்ன? அப்போது அந்த ஆற்றை கடக்க வேண்டுமே என்ற விருப்பம் உண்டாகிறது. அந்த விருப்பத்தின் காரணமாகக் கடந்து செல்ல, கண் முன்னே ஒரு மரம் காட்டப்படுகிறது. அந்த மரத்துண்டை தண்ணீரில் மிதப்பதற்கு வசதியாக உருவாக்கி அதில் ஆற்றை கடக்கிறான். இப்படி வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நமக்கு, ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலையை கடந்து செல்ல விருப்பம் உண்டாகி, அந்த விருப்பம் நிறைவேற சிந்திக்கும்போது, அதற்காக பொறுமையோடு காத்திருக்கும்போது புதிதாக ஞானம் பிறக்கிறது. அது யாருக்கும் இதுவரை புலப்படாத தோன்றாத வழியாகும்.

விருப்பம்தான் வாழ்க்கை

இறைவழி மருத்துவமும் இங்கேதான் உருவாகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மேற்படிப்புக்காக பயிற்சி பெறும்போது, இரவு 1 மணிக்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, பக்கத்து வார்டில் இருந்து அழைப்பு வந்தது. அதில் 4 நாட்களுக்கு முன்பு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 20 வயது நிரம்பிய இளைஞன் மிகவும் ஆபத்தானநிலையில் இருக்கிறான். உடனே வந்து பார்க்கவும் என்பதுதான் அந்தச் செய்தி. என்னுடன் பணியாற்றும் மூத்த மருத்துவர், என்னை அந்தப் பணிக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பையன், அசாமிய இளைஞன். மொழி தெரியவில்லை. அங்கே வைக்கப்பட்டிருந்த அவனுடைய பதிவேட்டில், அவனுக்கு எமர்ஜென்சியாக வயிற்றில் ஆபரேஷன் நடந்திருக்கிறது. இரைப்பையில் ஓட்டை விழுந்து அடைக்கப்பட்டிருந்தது. நான்கு தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை காலை 11 மணிக்கு நடந்து இருக்கிறது. இரவில் 10 மணி வாக்கில் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை நிபுணருக்கு மெமோ அனுப்பி இருக்கிறார்கள். மருத்துவர் வந்து பார்த்துவிட்டு யூரியா மற்றும் சோடியம், பொட்டாஷியம், குளோரைடு இவை ரத்தத்தில் எந்த அளவு இருக்கின்றன என்று பரிசோதித்து பார்த்துவிட்டு ஆலோசனை வழங்கி இருக்கிறார். மற்றும் குளுக்கோஸ் பாட்டிலில் இன்னென்ன பாட்டில் போட வேண்டும் என்று எழுதி இருக்கிறார். ஆக்சிஜனை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று, அந்த பதிவேட்டில் எழுதி சென்றுவிட்டார். வார்டில் உள்ள செவிலியர்கள், அதன் பிரகாரம் செய்துவிடுவார்கள். அடுத்த நாள் வரையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அறுவை சிகிச்சை டாக்டர்கள் காலையில் வந்து பார்க்கிறார்கள். அவர்களும் இரவில் அந்த மருத்துவர் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தாரோ அதையே பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அசாமியர்

அன்றும் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் இரவுப் பணியில் இருக்கும் மருத்துவருக்கு மெமோ. இப்படியாக நான்கு நாட்கள் கடந்தது. நோயாளி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான். நிமிடத்துக்கு 4 தடவை மூச்சு இழுத்து விடுவதற்குப் பதிலாக, அவன் 40 தடவை மூச்சு இழுத்து விடுகிறான். வேக வேகமாக மூச்சை இழுத்து, சக்தி இழந்து காணப்பட்டான். வாய் வழியாக உணவு சாப்பிடக்கூடாது. கையில் குளுக்கோஸ் மாத்திரமே ஏற வேண்டும். இந்தச் சூழ்நிலையில், அந்த நோயாளி முன் நான் நிற்கிறேன். அவனுக்கு சுகம் கிடைக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம்.

மனம் வேலை செய்யும்

என்னுடைய ஸ்டெதாஸ்கோப்பை எடுத்து அவனது மார்பில் வைத்துப் பார்த்தேன். வலது பக்க மார்பில் சுவாசக் காற்று வந்துபோவதாக தெரியவில்லை. இடது மார்பில் சுவாசக் காற்று நுழைவது தெரிகிறது. உடனடியாக மார்புக்கு எக்ஸ்ரே எடுக்கும்படி சொன்னேன். சில நிமிடங்களிலேயே கையில் எக்ஸ்ரே கிடைத்தது. மார்பு எக்ஸ்ரேயை பார்த்தால் வலது நுரையீரல் காற்று இல்லாமல் பலூன்போல ஒரு விரல் அளவுக்கு சுருங்கிப்போயிருந்தது. ஏனென்றால், மூச்சுக் குழாய் வழியாக வலது நுரையீரலுக்குள் காற்று நுழைய முடியவில்லை. அறுவை சிகிச்சை நடந்த பிறகு, மயக்க மருந்து கொடுத்த மருத்துவர் மூக்கில் வைத்திருந்த ரப்பர் குழாயை வெளியே எடுக்கும்போது நுரையீரலுக்குள் காற்று செல்கிறதா என்று கவனித்திருக்க வேண்டும். இங்கே இவருக்கு, வலது குழாயிலிருந்து அடர்த்தியான திரவத்தின் காரணமாக அடைபட்டிருந்தது. அந்த அடைப்புதான் இந்தப் பிரச்னைக்கு காரணம். உடனடியாக அந்த பையனுக்கு அந்த அடைப்பு நீக்கப்பட்டது. முழுமையான சுகம் அடைந்தான். நன்றாக மூச்சுவிட்டான். அந்தப் பையனுக்கு சுகமாக வேண்டும் என்று எழுந்த அந்த விருப்பம்தான் அவனை சுகப்படுத்தியது.

(தொடரும்)

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com