14. உணவை மாற்றினால் உலகையே மாற்றலாம்!

பிற உயிரினங்களைப்போல், சமைத்த உயிரற்ற உணவில் வாழ்வதிலிருந்து, சமைக்காத உயிருள்ள இயற்கை உணவுக்கு மாறி வாழ ஆரம்பிக்கும்போதுதான் மனிதர்களால் உலகையே மாற்றமுடியும்.
14. உணவை மாற்றினால் உலகையே மாற்றலாம்!
Published on
Updated on
2 min read

பிற உயிரினங்களைப்போல், சமைத்த உயிரற்ற உணவில் வாழ்வதிலிருந்து, சமைக்காத உயிருள்ள இயற்கை உணவுக்கு மாறி வாழ ஆரம்பிக்கும்போதுதான் மனிதர்களால் உலகையே மாற்றமுடியும். அதுவரை, இவ்வுலகில் அமைதி நிலவாது. மனிதர்களின் மனத்துக்கு சாந்தி கிடைக்காது. அராஜகம்தான் ஓங்கி நிற்கும். அமைதி, சாந்தி உலகில் நிலவ வேண்டும் என உலகில் உலாவிய அனைத்து ஞானிகளும் இறைவனை வேண்டி தியானம் செய்து பிரார்த்தனை செய்துள்ளார்கள். ஆனால், அமைதி ஓங்குவதற்குப் பதில், அராஜகம்தான் உலகில் ஓங்கி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், தவறான உணவுப் பழக்கம். அதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தவறான வாழ்க்கை முறை.

மேலும், உலகில் நாளுக்கு நாள் வறட்சி, வெப்பம், இயற்கை, சீற்றம் போன்றவை அதிகமாகி, இயற்கைச் சமநிலை சீர்கெட்டு வருகிறது. ‘கனிகளை இறைவன் படைத்தான்; சமையலை சைத்தான் படைத்தான்’ எனும் முதுமொழிக்கேற்ப, இறைவன் படைத்த கனிகளை உண்டு வாழ முற்படும்போதுதான், உலகில் இறைநிலை ஏற்படும். நம்மிடையேயும் இறைத்தன்மை மிளிரும். சைத்தான் படைத்த சமையல் உணவில் நாம் வாழ்வதால்தான், நம்மிடையே சைத்தான் பண்பு மிகுதியாகி வருகிறது. ஆதலால், சாத்விக உணவாகிய கனிகளை உண்டு வாழ நாம் மாறுவோம். ரஜோ, தாமச உணவுகளாகிய அனைத்து சமைத்த உணவுகளை உண்டு வாழ மறுப்போம்.

நாம் தானியங்களையும், காய்கறிகளையும், கீரைகளையும் சமைத்து சாப்பிட்டு வாழும்போது, உலகில் மரங்கள் வெட்டுவதற்குத்தான் வாய்ப்பு அதிகம். மரங்கள் குறைவதால் மழை குறைகிறது. வெப்பமும் வறட்சியும் பெருகி, நிலத்தடி நீர் இல்லாமல் போகிறது. மண்ணரிப்பு ஏற்படுகிறது. நிலவளமும், நீர்வளமும் குறைந்துபோன உலகில் வாழ, இனி வரும் தலைமுறையினர் மிகவும் சிரமப்படுவார்கள். உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாம் கனிகள் உணவுக்கு மாற முயற்சி செய்யும்போது, தானியங்கள், காய்கறிகள், கீரைகள் விளையும் விளை நிலங்களில் எல்லாம் தென்னை, வாழ்கை, மா, பலா, நாவல், நெல்லி, சப்போட்டா, பப்பாளி, ஆரஞ்சு, மாதுளை மற்றும் இதர பழ மரங்களை இயல்பாகவே, நமது கனிகள் உணவுத் தேவைக்காக நட்டு, பழமுதிர் சோலைகள் உலகெங்கும் பெருகும். மாதம் மும்மாரி மழை பெய்யும். பூமியில் வறட்சியும், வெப்பமும் இருக்காது. மண்ணரிப்பு ஏற்படாது. நிலத்தடி நீர் குன்றாது, மேலாக இருக்கும். நிலவளமும், நீர்வளமும் பெருகும். உணவுப் பஞ்சம் ஏற்படாது. உணவில் கலப்படம், உணவுப் பதுக்கல் இருக்காது. உலகில் நோய் நொடிகள் மறைந்து, ஆரோக்கியம் பெருகும். இளமை அதிகரிக்கும். நீடித்த ஆயுள் உண்டாகும். மது ஒழியும். மருந்துக் கடைகள், மருத்துவமனைகள் அவசியமில்லாது போகும். உலகில் பாலியல் பலாத்காரம், கொலை, களவு, வஞ்சம், ஏமாற்று இல்லாது போகும். உலகில் அமைதி, சாந்தி, ஆரோக்கியம், ஆனந்தம் அதிகரிக்கும். உலகில் நல்லோர் எண்ணிக்கை பெருகும். தீயோர் எண்ணிக்கை குறையும். பொருளாதாரம் பெருகும். தேவைகள் குறையும். எளிமையான வாழ்க்கை முறை பரவலாகும். ஆடம்பரங்கள் மங்கிவிடும். மெய்யான ஆன்மிக வாழ்வு அதிகரிக்கும். மனித நேயம் மிகும். பிரச்னைகள் இல்லாத வாழ்வும், உலகும் உருவாகும். சாதி, சமய வேறுபாடு மறையும். மூடப் பழக்கங்கள் மறையும். அறிவு அதிகரிக்கும். பழ உணவு உண்போர் சமுதாயம் எனும் புதியதொரு சமுதாயம் உலகெங்கும் உருவாகிப் பல்கிப் பெருகும்.

தனியொருவர் உணவை மாற்றி அமைத்து இயற்கை வழிகளைப் பின்பற்றி தன்னைதான் திருத்திக்கொண்டால், உலகே திருந்தும். மக்கள் தொகைப் பெருக்கம் குறையும். தனியொருவர் நல்வாழ்வுக்காக உணவை தனியொருவர் மாற்றி, நல்வாழ்வையும் நல் உலகையும் உருவாக்குவோம்.

இன்றைய உலகில் மிக முக்கியமான புரட்சி, இத்தகைய இயற்கையுணவுப் புரட்சியாகும். இயற்கை உணவாளர்கள் உலகெங்கும் பரவி, இயற்கை வாழ்வு உலகில் மிளிரும்.

உலகிலுள்ள துன்பங்களுக்கு எல்லாம் காரணம், சமைத்து உண்ணும் பழக்கமே. சமைத்துண்பது தற்கொலைக்குச் செயலே. சமையலே இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா? பஞ்ச மகா பாவங்களைவிடக் கொடிது சமைத்து உண்பது. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. கொடிது கொடிது சமைத்து உண்பது கொடிது!

எனவே, நம்மையும், உலகையும் கெடுக்கும் சமையல் உணவுப் பழக்கத்திலிருந்து இயற்கை உணவுப் பழக்கத்துக்கு மாறி, உலகையே மாற்றி அமைப்போம்! வாரீர்! அணி திரள்வீர்!!

தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com