24. சுநீதி!

அரசியின் அந்தரங்கத் தோழி பூர்ணா மூச்சிரைக்க ஓடி வந்தாள். துளசி மாடத்தில் எரிந்து கொண்டிருந்த தீபத்திற்கு
24. சுநீதி!
Published on
Updated on
5 min read

அரசியின் அந்தரங்கத் தோழி பூர்ணா மூச்சிரைக்க ஓடி வந்தாள். துளசி மாடத்தில் எரிந்து கொண்டிருந்த தீபத்திற்கு நெய் ஊற்றிக் கொண்டிருந்த சுநீதி அவளை நோக்கி, ‘என்ன பூர்ணா, இத்தனை வேகம் ஏன்?’ எனக் கேட்டவாரே தீபத்தை தூண்டிவிட்டாள். தீபம் முத்துப் போல் சுடர் விட்டு பிரகாசித்தது. தீபச் சுடரையும் அச்சுடர் ஒளியில் தெய்வீக அழகுடன் ஒளிவீசும் தன் அரசியின் முகத்தையும் பார்த்து ஒரு நொடி பிரம்மித்த பூர்ணா, தன்னை சுதாரித்துக் கொண்டு பதை பதைப்பாகக் கூறினாள் ‘மன்னர் நம் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் என்று செய்தி வந்துள்ளது. நீங்கள் சீக்கிரம் தயாராகுங்கள் தேவி. வருடங்களுக்குப்பின் மன்னர் தங்களைக் காண வருகிறார்’ என்றாள்.

சுநீதியின் முகத்திலும் சற்று பிரகாசம் கூடியது போல்தான் இருந்தது. ஆனால் அவள் பரபரப்படையவில்லை. மாறாக அவளிடத்தில் அதே அமைதி. முகத்தில் தவழும் புன்னைகையுடன் ‘பிரத்தியேக அலங்காரங்கள் ஏதும் தேவையில்லை பூர்ணா. அவர் எத்தனை நேரம் இங்கிருப்பார் எனத் தெரியவில்லை. அலங்காரத்தில் கவனம் செலுத்தினால் அவருக்குப் பிடித்ததை கொடுக்க முடியாமல் போய்விடும். வா முதலில் அவருக்குப் பிடித்த உணவுகளை தயார் செய்வோம்’ என்றபடியே கிளம்பினாள்.

பூர்ணாவிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ‘என்ன இது? இத்தனை வருடங்கள் இளையவளுடன் இருந்து கொண்டு தனக்காக இன்னொரு மனைவி காத்திருப்பாள் என்ற நினைவே இல்லாதிருந்த அரசன், இன்று யார் செய்த புண்ணியமோ இவளைத் தேடி வந்து கொண்டிருக்கிறான். அதுவும் இளையவளுக்கு தெரிந்தால் பாதியிலேயே தகவல் அனுப்பித் தடுத்துவிடுவாள். வருடங்கள் கழித்து வரும் கணவனை சிருங்காரம் செய்து சாதுர்யத்தால் தன் வசமே வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாது இருக்கிறாளே தன் அரசி என அவளை உறுத்துப் பார்த்தபடியே சமையல் கூடத்திற்குச் சென்றாள்.

சாப்பாட்டு மேடையில் அவனுக்குப் பிடித்ததை எல்லாம் வெள்ளிக் கிண்ணங்களில் அழகாகவும் எளிமையாகவும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.  உத்தானபாதனின் காலடி ஓசையை தூரத்திலிருந்தே உணர்ந்து கொண்ட சுநீதி வேகமாக இதயம் துடிக்க அந்தப்புர வாசல் நோக்கி விரைந்தாள். இத்தனை நேரம் அவள் கட்டிக் காத்த பொறுமையும் அமைதியும் காற்று மேகங்களைக் கலைத்துப் போனது போல் அவன் காலடி ஓசையில் கலைந்து மறைந்தது.

சிரிப்பும் பதற்றமுமாக ஓடி வந்து மூச்சிரைக்க அவன் முன் நின்றாள். அவளுடைய வியர்த்த முகத்தையும் மூச்சிரைப்பில் ஏறி இறங்கிய மார்புகளையும் காதல்நிறைந்த விழிகளும் அவனுள் காதலுக்குப் பதில் இரக்கத்தை தோற்றுவித்தது. அவளைக் கண்டதும் அவன் பெரும் இரக்கத்தை அடைந்தான். அவ்விரக்கம் அவனுள் காமம் எழாது செய்தது.  இரக்கம் பனிக்கு நிகரானது.  காமத்தைப் போல கொழுந்துவிட்டு எரியும் தீ போன்றதல்ல என அவன் அறிந்திருந்தான்.

அவன் எண்ண ஓட்டத்தை அறியாதவளாக ‘உங்கள் பாதம் இங்கு படும் இன்று என எண்ணவே இல்லை, இன்று நான் கருணைக்குரியவளானேன்’ என்றாள் சுநீதி. ‘வரவேண்டும் வரவேண்டும்’ என்று அவன் கைகளைப் பற்றினாள். எப்போதோ இங்கு அவன் வரும் எப்போதும் சொல்லப்பட்டு வரும் சொற்கள்.

இந்தச் சொற்களில் ஒரு துள்ளல் இருந்திருந்தால்,  புன்னகையில் எங்கோ கொஞ்சம் வன்மம் கலந்திருந்தால், விழிகளுக்குள் சற்றே  குரூரம் மின்னியிருந்தால் இவளை விட்டு நீங்காதிருந்திருப்பேன். ஆனால் இவள் முகத்தில் பேரமைதி குடி கொண்டிருக்கிறது. புன்னகையில் ஆசைக்கு பதில் அன்பு பரவி இருக்கிறது. பார்த்தவுடன் பற்றிக் கொண்டு ஈர்க்கும் தீச்சுவாலையைப் போல இல்லாது முகம் தெய்வீக அழகுடன் சுடர் விடுகிறது. இவ்வுலகில் பேரன்பைப் போல சலிப்பூட்டுவது  ஏதுமில்லையோ என எண்ணினான்.

இருந்தாலும் மனைவி என்பவளின் ஆசையை பூர்த்தி செய்யும் கடமை கணவனாகிய தனக்கு இருக்கிறது என்ற நியாய உணர்ச்சியின் பேராலேதான் எப்போதேனும் வருகிறான் உத்தானபாதன். அதற்கும் மேல் தன் மகன் ஐந்து வயது பாலகன், துருவன் மேல் கொண்டிருக்கும் பிரியம். அதை தன் இரண்டாவது மனைவி சுருசியின் முன் காண்பிக்க முடியாது. இவ்வாறு இங்கு தனிமையில் இருக்கும் போதுதான் அவனை அள்ளித் தூக்கி கொஞ்ச முடியும். இன்று இரவு இங்கு இவளுடன் தங்கி சுநீதிக்கு தன் பிரியத்தை அளிக்க வேண்டும், துருவனிடமும் கதைகள் பேசி விளையாடி வெகு நாளாகிறது. அவனிடமும் நேரத்தை செலவிட்டுவிட்டே செல்ல வேண்டும் என்ற முடிவுடன் வந்திருக்கிறான்.

உத்தானபாதன் ஸ்வாயம்புவ மனுவின் மைந்தன். அவனுக்கு சுநீதி சுருசி என்று இரு மனைவியர்கள். சுநீதிக்கு பிறந்தவன் துருவன். சுருசிக்கு பிறந்தவன் உத்தமன். தெய்வீக அழகுடைய சுநீதியை விட எரியும் நெருப்புத் துண்டைப் போல் பற்றிக் கொள்ளும் ஆகர்ஷ்ணத்தை உடைய சுருசியிடம் உத்தானபாதனுக்கு மோகம் அதிகம் இருந்தது. அதை அவள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள். சுநீதியின் பக்கம் அரசன் செல்லாதபடிக்கு தன்னிடமே சாகசம் செய்து வைத்திருந்தாள். அவன் உதிரத்தில் உதித்த மகன், மூத்த மகன் துருவனைக் கூட அருகில் நெருங்க விடுவதில்லை. தன் மகன் உத்தமனே அடுத்து அரசாள வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். அவளின் ஆதிக்கத்தாலும் அவள் மீது கொண்ட மோகத்தாலும் கட்டுண்ட உத்தானபாதன் சுநீதியையும் துருவனையும் தன்னருகில் இருத்திக் கொள்ள முடியாதபடி கையாலகாதவனாகிக் கிடந்தான்.

உணவு மேசையிலும் அடுக்கப்பட்டிருந்த உணவு வகைகளிலுமே அவனால் சுநீதிக்கும் சுருசிக்கும் உள்ள மலையளவு வித்தியாசத்தை உணர முடிந்தது. தேவைக்கு ஏற்ப ருசியான அளவான உணவுகள் பாங்காக வைக்கப்பட்டிருந்தது. அவ்வரண்மனையிலோ தேவைக்கு அதிகமாக ஆர்ப்பாட்டமான உணவு வகைகள். அத்தனையிலும் ஒவ்வொரு வாய் ருசித்தாலும் ஒரு வாரத்திற்கு உணவு தேவைப்படாத வண்ணம் ஏராளமான வகைகள். அத்தனையும் அவ்வேளைக்குப் பின் வீணாகப் போகக் கூடியது தான். ஆனால் சுருசிக்கு வீணாவது குறித்த கவலை எல்லாம் இல்லை. அரச குடும்பத்தினர் என்றால் இத்தனை வகைகள் இருக்கத்தான் வேண்டும் என்ற ஆடம்பர எண்ணம்தான் அதிகம்.

பரிமாறிக் கொண்டிருந்த சுநீதியின் கைகளைப் பார்த்தபடியே ’துருவன் எங்கே’ எனக் கேட்டான். அவனுக்கு தாங்கள் இன்று வருவீர்கள் எனத் தெரியாது. பாட்டனாரின் அரண்மனைக்கு விஷ்ணு கதை கேட்கச் சென்றிருக்கிறான். அவனுக்கு விஷ்ணு என்றால் கொள்ளைப் பிரியம். பாட்டனாரிடமும் உயிராய் இருக்கிறான். உங்கள் அன்பை அவரிடத்தில் காண்கிறானோ என்னமோ? சுநீதி என்னமோ சாதாரணமாகத்தான் கூறினாள். ஆனால் குற்றமுள்ள நெஞ்சல்லவா உடனே அடைத்துப் புறையேரியது உத்தானபாதனுக்கு.

இருவரும் பள்ளியறைக்குச் சென்றனர். தாம்பூலம் மடித்து கொடுத்துக் கொண்டிருந்தாள் சுநீதி. அப்போது அவளின் அந்தரங்கத் தோழி திரைக்குப் பின் இருந்து அவளை அழைத்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்த்த சுநீதி என்னவென்று பதற்றத்துடன் கேட்டாள். இளையவள் அரண்மனையிலிருந்து மன்னருக்கு உடனே வரும்படி சேதி வந்திருப்பதாகக் கூறிச் சென்றாள்.

வருடங்கள் கழித்து தன் ராணியுடன் சேர்ந்திருக்க வந்த மன்னனை சிறிது நேரம் கூட இருக்க விடாமல் இளைய ராணி சதி செய்வது சேடிக்கே பொறுக்கவில்லை. சுநீதியின் முகத்தில் இது எப்போதும் நடப்பது தானே என்ற விரக்தி புன்னகையாக தோன்றியது. செய்தியை மன்னனுக்குச் சொன்னவுடன் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளானான். தன் கணவனுக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்று நினைத்த சுநீதி அவனை தானாகவே கிளம்பும்படி கூறி வழியனுப்பி வைத்தாள்.

மறுநாள் பாட்டன் அரண்மனையிலிருந்து திரும்பிய துருவன் தன் தந்தை தன்னைக் காண வந்திருந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தான். கூடவே தான் இல்லாமல் போனது குறித்து வருந்தினான். சிறு குழந்தை தானே ‘அம்மா அப்பா என்னைப் பற்றிக் கேட்டாராமே, என்னை பார்க்க வேண்டும் கொஞ்ச வெண்டும் என்று சொன்னாராமே என்று தாயைக் கேட்டவாறே இருந்தான். ஐயோ இச்சமயம் பார்த்து நான் இல்லாமல் போய்விட்டேனே’ என்று பலமுறை கூறி புலம்பினான். உடனே அதற்கும் அவன் ஒரு தீர்வு கண்டுபிடித்து, அம்மா நான் அங்கு அரண்மனைக்குப் போய் அப்பாவைப் பார்க்கிறேன் எனக் கிளம்பிவிட்டான்.

சுநீதிக்குப் பதைத்தது. அங்கே இளையவளுக்கு இவனைக் கண்டால் ஆகாதே, ஏதேனும் சுடுசொல் கூறி இப்பிஞ்சு நெஞ்சம் வருந்தப் போகிறதே என அவனைப் போக வேண்டாம் என்றாள். ஆனால் அவளால் துருவனை தடுக்க முடியவில்லை. ஒன்றை  மட்டும் சொல்லி அனுப்பினாள், அங்கே எது நடந்தாலும் அப்பாவிற்கோ சிற்றன்னைக்கோ அவமானம் நேரும்படி பேசக் கூடாது, சபையில் அவமானம் நேரும் வண்ணம் நடந்து கொள்ளக் கூடாது என்று பலமுறை கூறியே அரை மனதோடு அனுப்பி வைத்தாள்.

துருவன் அரண்மனை சென்ற நேரம், உத்தானபோதனின் மடியில் சுருசியின் பிள்ளை உத்தமன் அமர்ந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த துருவனுக்கு தானும் தன் தந்தை மடியில் அமர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்பா என்று அழைத்தபடியே உத்தானபாதனின் இடது பக்கத் தொடையில் ஏறி அமர்ந்தான். உடனே சுருசி அவனை இடக்கையால் அருவருக்கத் தக்கதை தூக்கி எறிவதைப் போல ஒதுக்கித் தள்ளி ‘இவர் மடியில் அமரும் உரிமையை யார் உனக்குத் தந்தது. ஒதுங்கி நில் என்று கத்தினாள்’ பயந்து நடுங்கிய துருவன், மெல்லிய குரலில் ‘ஏன் சித்தி நான் அமரக் கூடாது. எனக்கும் இவர் தந்தை தானே?’ என்றான்.

‘ஆம் இவர் உனக்குத் தந்தைதான். ஆனால் அவர் மடியில் உட்காரவும், நாடாள முடி சூடவும் நீ என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும். உன் முன் ஜென்ம பாவத்தால் நீ அந்த அபாக்கியவதி சுநீதியின் வயிற்றில் பிறந்துவிட்டாய். அடுத்த ஜன்மத்திலாவது என் வயிற்றில் உதிக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள். சுநீதியின் வயிற்றில் உதித்த உனக்கு எவ்வுரிமையும் இவரிடத்தில் இல்லை வெளியே போ’ என்று விரட்டிவிட்டாள். அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த உத்தானபோதனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. சுருசியின் மேலிருந்த மோகமா அல்லது பயமோ ஏதோ ஒன்று அவனைக் கட்டிப் போட்டுவிட்டது.

அழுகையும் ஆத்திரமும் அவமானமுமாக வேகமாக அரண்மனைக்குள் நுழைந்த துருவனைக் கண்டு கலங்கினாள் சுநீதி. அவளிடம் கடவுளிடம் செல்ல என்ன செய்ய வேண்டும் அம்மா என்று அழுது கொண்டே கேட்டான் துருவன். அவனை சமாதானம் செய்து மெள்ள விஷயத்தை அறிந்து கொண்டாள். கணவனிடம் தன் பேச்சுக்கோ இருப்புக்கோ பயனிருக்காது என்பதை நன்குணர்ந்த சுநீதி, துருவனிடம் ‘உலகில் தந்தையின் மடியைவிட உயர்ந்த நிலை உள்ளது கண்ணே. அதற்கு நீ அந்த நாராயணனை சரணடைய வேண்டும். அவர் நினைத்தால் அவர் மடியிலேயே உனக்கு இடம் கிடைக்கும்’ என்றாள்.  

அப்படி என்றால் நான் இப்போதே நாராயணனை நோக்கிப் போகிறேன். அவரிடம் என்ன கேட்பது அம்மா என்று குழந்தைத்தனமாகக் கேட்டான் துருவன். அறியாக் குழந்தை தெரியாமல் ஏதாவது செய்துவிடப் போகிறானே என்று கவலை கொண்ட சுநீதி, அவனிடம் ‘யார் மனதையும் நோக வைக்காமல், யாரையும் புண்படுத்தாமல், யாரையும் வெறுக்காமல் இறைவன் நாமத்தை மட்டுமே ஜபித்திரு கண்ணே. அந்த பரம்பொருளே உனக்கு வேண்டியதைக் கொடுப்பார்’ என்றாள்.

எங்கே தன் குழந்தை நடந்த அவமானத்தில் அவன் தந்தையை வெறுத்து விடுவானோ, சிற்றன்னையை சினந்து கொள்வானோ என்று கவலைப்பட்டாள். ஒரு போதும் தன் குழந்தை அடுத்தவர்களை வெறுக்கக் கூடாது என்பதிலும் உடன் பிறந்தவனைக் கண்டு பொறாமை கொள்ளக் கூடாது என்பதிலும் திடமாக இருந்தாள் சுநீதி.

அவள் கூறியதை அப்படியே பற்றிக் கொண்டான் துருவன். நான் தவம் செய்து அந்த நாராயணன் மடியிலேயே உட்காரப் போகிறேன் என காட்டுக்கு கிளம்பி விட்டான். துருவன் தவம் செய்வதில் வெகு தீர்மானமாக இருந்தான்.. அவனுக்கு வழிகாட்டியாக நாரத முனிவர் வந்தார். அவனுக்கு நாராயண மந்திரத்தை உபதேசம் செய்து வைத்தார். அவன் தவத்தின் பலனாக நாராயணனே அவன் முன் தோன்றி அவனுக்கு எல்லாவற்றையும் விட உயர்ந்ததான துருவ பதத்தை அளித்தார். அவன் வானில் துருவ நட்சத்திரமாக இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கிறான். அவன் தாய் சுநீதியும் அவனருகில் வழிகாட்டியாக நட்சத்திரமாக எப்போதும் அவனுடன் இருக்கிறாள்.

இதிலுள்ள பாத்திரங்களின் பெயருக்குள் சூட்சும சங்கதிகள் பொதிந்து இருக்கின்றன.  உத்தானபாதன் என்ற பெயருக்கு ‘முயற்சியில் ஒழுக்கமுடைய ஜீவன் என்று பொருள். இந்த ஜீவனுடைய புத்திக்கு இரண்டு வேலைகள். அவையே மனைவிகள். ஒன்று அழகிய நீதி – ஸுநீதி. இரண்டாவது உலக சுகங்களின் மேல் அதிக விருப்பம் கொண்டது சுருசி. சு-அதிக, ருசி- விருப்பம்.  இவ்விருப்பத்தினால் உலக சுகங்களே உத்தமம் என்று தோன்றி உத்தமனை புதல்வனாகப் பெற்று அவனை மடியில் வைத்து கொஞ்சுகிறான்.

பரமார்த்தத்தை சாதித்து அளிக்கும் தர்ம பத்தினியே ஸுநீதி. இத்தகைய தர்ம சிந்தனையால் நடத்தையால் கிடைப்பது நிச்சலமான (அசையாத) நிச்சயமான (த்ருவம்) பக்தி. அவனே துருவன்.  இந்த பக்தி பாவனையை சுருசியின் குணத்தால் பெற முடியாது. சுநீதியே பக்தியைத் தூண்டக் கூடியது, பலிக்கச் செய்யக் கூடியது.

நல்ல நடத்தையால் கிடைக்கும் (த்ருவமான) அசையாத பக்திக்கு இறைவனே தகுந்த குருவை அனுப்பி மார்க்கத்தை உபதேசிப்பான். அவ்விதம் வந்த குருவே நாரதர். திடமான பக்தி உன்னத நிலையைப் பெறுகிறது. எனவே த்ருவன். அவனின் பக்திக்கும் நன்நடத்தைக்கும் சுநீதியே ஆதாரமாகிறாள்.

நல்ல தாயால் வளர்க்கப்படும் மகன் உன்னத நிலையை அடைகிறான். மகனால் தாயும் அவன் அருகிலேயெ இருந்து வாழ்த்தும் அழியாத உன்னத நிலையை அடைகிறாள். சுநீதி தனது ஆழ்ந்த நம்பிக்கையால், உயர்ந்த பக்தியால், அளப்பரிய பொறுமையால் என்றும் நிலைத்திருகும் பேற்றைப் பெற்றாள்.

- இசைக்கலாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com