பகுதி 11: சைவ பேலியோ!

உலகில் சைவ உணவு நெறிக்கொள்கையை முதலில் அறிமுகப்படுத்திய நாடு, இந்தியா. உலக வரலாற்றில் பதிவான
Updated on
7 min read

லகில் சைவ உணவு நெறிக்கொள்கையை முதலில் அறிமுகப்படுத்திய நாடு, இந்தியா. உலக வரலாற்றில் பதிவான முதல் சைவ உணவு நெறியாளர் என ஜைன தீர்த்தங்கரர் பார்சுவநாதரைக் குறிப்பிடலாம். அவர் 23-ம் ஜைன தீர்த்தங்கரர். வேத காலத்துக்கும் முந்தைய கிமு 9-ம் நூற்றாண்டில் பிறந்தவர்.

பார்சுவநாதர் காலத்துக்கு முன்பும் சைவ உணவு நெறியாளர்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வரலாற்றில் பதிவாகவில்லை. ஆக 23-ம் ஜைன தீர்த்தங்கரரான பார்சுவநாதர் மற்றும் 24-ம் தீர்த்தங்கரரான மகாவீரர் ஆகிய இருவருமே இந்தியாவில் சைவ உணவு நெறி பரவியதற்கு முழுக் காரணம் என்று கூறலாம். கொல்லாமை, அகிம்சை, உயிர்களிடத்தில் கருணை போன்றவற்றை வாழ்க்கை நெறியாக மாற்றி, உலகமெங்கும் பரப்பிய மதம் என்று சமண மதத்தைக் குறிப்பிடமுடியும். 

சமணம் மெளரிய மன்னர்களின் அரசவம்ச மதமாகி, சைவ நெறி நாடெங்கும் பரவியது. புத்தரும் உயிர்ப்பலியைக் கண்டித்தார். இந்தியாவில் முதல்முதலாகப் பசுவதை தடைச் சட்டத்தைப் பிறப்பித்த மன்னர், அசோகர். இன்று உலகெங்கும் நனிசைவ இயக்கங்கள் பெருகி வருகிறது. அதற்கான வித்து, இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பார்சுவநாதராலும், மகாவீரராலும் இடப்பட்டது.

(வீகன் என்று அழைக்கப்படும் நனி சைவத்தின் (சுத்த சைவம்) உணவுமுறையில் பால் பொருள்களை அறவே தவிர்க்கப்படவேண்டும். விலங்கினங்களில் இருந்து பெறப்படும், தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி மற்றும் தேன் என எந்த உணவுக்கும் இதில் இடமில்லை. காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழு தானியங்கள் போன்றவற்றை உண்ணவேண்டும்.)

அதேசமயம் சமணம், பவுத்தம் ஆகியவை மன்னர்களின் மதமாக இருந்த சமயம், எளிய மக்களின் மதமாக அன்று இருந்த சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் காலப்போக்கில் ஒருங்கிணைந்து இந்து சமயமாக உருவெடுத்தன. இந்து, பவுத்தம், சமணம் ஆகிய மதங்கள் ஒன்றாக வளரும்போது ஒன்றின் கொள்கையை இன்னொன்று உள்வாங்கியே வளர்ந்தன. சமணத்திலும் இராமாயணம் உண்டு, இந்து சமயத்தில் புத்தர் ஒரு அவதாரமாகக் கருதப்படுகிறார். இன்றிருப்பதுபோல சைவம், அசைவம் என இறுகிய போட்டி மனப்பான்மை அன்றைய சைவர்கள், அசைவர்களிடையே இருக்கவில்லை. 

பேலியோலிதிக் காலம் (கற்காலம்) என்பது 26 லட்சம் ஆண்டுகள் பழமையானது. நாகரிகங்கள், தெய்வங்கள், பண்பாடுகள், நகர்ப்புறக் குடியிருப்புகள் ஆகியவை கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் உருவானவையே. புலால் உணவின் வரலாற்றுத் தொன்மையை ஆராய்ந்தால் அது வரலாற்றுக் காலத்தையும் தாண்டிச் செல்லும். சமீபத்திய சில ஆய்வுகளின்படி, இந்தியரில் 31% பேரே சைவ உணவு நெறியாளர்கள் என்றும் 69% இந்தியர்கள் புலால் உண்பவர்களே என்றும் கூறப்படுகிறது. இதைப் பண்டைய காலகட்டத்துடன் ஒப்பிட்டால், சிறிது வித்தியாசப்படலாம். மற்றபடி இந்தியாவில் மக்கள் சைவ உணவுநெறியைப் பெருமளவில் பின்பற்றிய காலகட்டம் என எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை.

பேலியோ டயட் என்பதே கற்கால மனிதனின் புலால் உணவு வழிமுறைதான் என்றாலும், நம் பண்பாட்டின் அடிப்படையில் சைவ பேலியோ டயட் என்பதை முதல்முறையாக அறிமுகப்படுத்தியது, ஆரோக்கியம் & நல்வாழ்வு ஃபேஸ்புக் குழு தான். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரின் நம்பிக்கையை மதிக்க வேண்டியது நம் கடமை அல்லவா! வியப்பளிக்கும் வகையில் முட்டை கூட சேர்க்காத சைவ பேலியோ உணவுமுறையால், மருந்துகளால் குணமாகாத ரத்த அழுத்தம் போன்ற வியாதிகளை ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் உள்ள சிலர் வெற்றி கண்டார்கள்.

அவர்களின் அனுபவங்களை முதலில் பார்த்துவிடலாம்.

பொன். கிருஷ்ணசாமியின் சைவ பேலியோ அனுபவங்கள்:

‘பேலியோ டயட்டை 2014 நவம்பர் முதல் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். நான் முட்டை கூட உண்ணாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். எனவே அதே உணவுமுறையில்தான் என் பேலியோ டயட்டும் இருந்தது. அப்போது என் எடை 97 கிலோ (உயரம் 173 செ.மீ). கூடுதல் எடையோடு ரத்த அழுத்தமும் 10 வருடங்களாக பிரச்னை கொடுத்து வந்தது. காலையில் 5 மி.கி., இரவில் 2.5 மி.கி. என இந்தப் பத்து வருடங்களும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்தேன். நண்பர் கோகுல் ஜி-யின் பரிந்துரையின் பேரில் பேலியோ டயட்டைப் பின்பற்ற ஆரம்பித்தேன்.

முதல் மாதத்தில் கிட்டத்தட்ட 10 கிலோவைக் (87.8) குறைத்தேன். அதுவும் முதல் 5 நாள்களில் 4 கிலோ வரை குறைந்தது. 15 நாள்களில் ரத்த அழுத்தத்துக்காக எடுத்துவந்த மாத்திரைகளை அடியோடு நிறுத்தினேன். இன்றுவரை அதே நிலைமைதான். சைவ பேலியோ டயட்டால் இந்தளவு பலன் இருக்குமா என்று பலருக்கும் ஆச்சர்யம்'.

என்னுடைய டயட் இதுதான்:

காலையில் 5.30 மணிக்கு ஒரு டம்ளர் பால்

7.30 மணிக்கு 100 எண்ணிக்கைகள் கொண்ட பாதாம். தானியம் சாப்பிடக்கூடாது என்பதால் காலையில் தோசை, இட்லியைத் தவிர்த்து நட்ஸ் சாப்பிட்டேன்.

மதியம் - கீரைப்பொரியல் அல்லது வெஜிடபிள் சாலட். கூடுதலாக ஒரு கப் தயிர்.

மாலை வேளையில் சில சமயங்களில் மட்டும் சர்க்கரை இல்லாத காபி.

இரவில் வெஜிடபிள் சூப் கட்டாயம் உண்டு. கூடவே பனீர் மஞ்சூரியன். காலிஃபிளவர் மஞ்சூரியன் அல்லது காய்கறி பொரியலையும் (கேரட், வெண்டைக்காய், புடலை) அவ்வப்போது சேர்த்துக்கொள்வேன். இரவு வேளையில் பனீரைத் தினமும் எடுத்துக்கொண்டேன். சமையலுக்கு நல்லெண்ணைய் மற்றும் நெய் பயன்படுத்தினோம்.

6 நாள்கள் தீவிரமாக பேலியோ டயட்டைக் கடைப்பிடிப்பேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு கப் சாதம் சாப்பிடுவேன். அமாவாசை, கிருத்திகை தினத்தன்றும் அதேபோல ஒரு கப் சாதம். இந்த உணவுமுறையால் தூக்கம் வருமா என்று சந்தேகம் இருந்தது. ஆனால் டயட்டின் முதல் வெற்றியே நல்ல தூக்கம்தான்.

பேலியோ டயட் என்றால் இவ்வளவுதானே, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆரம்பித்தால் சரியாக வராது. ஆரம்பத்தில் நிறைய கேள்விகள், சந்தேகங்கள் எழும். எனவே பேலியோ டயட் ஃபேஸ்புக் குழுமத்திடம் ஆலோசனைகள் பெற்று டயட்டைப் பின்தொடர்வது நல்லது. குழுவைச் சேர்ந்த நண்பர் சிவராம் ஜெகதீசன் சொன்ன அறிவுரையின் பேரில் இப்போது உடற்பயிற்சிகள் செய்ய ஆரம்பித்துள்ளேன். எனக்கே நம்பமுடியவில்லை. எடைக்குறைப்பு, உடற்பயிற்சி எல்லாம் சேர்த்து 10 வயது குறைந்ததுபோல தோற்றம் அடைந்துள்ளேன். முதலில் என்னால் வாக்கிங் போகவே முடியாது. பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரத்தை 14.2 நிமிடங்களில் கடந்தேன். இப்போது 9.5 நிமிடங்களில் ஒரு கிலோ மீட்டரைக் கடக்கமுடியும்.

பேலியோ டயட்டால் வாழ்க்கை குதூகலமாக உள்ளது. சரியான மனநிலையுடனும் சுறுசுறுப்பாகவும் உள்ளேன். தற்போது ஒத்த கருத்துடைய பேலியோ நண்பர்கள் வாட்ஸாப் குழு ஒன்றைத் தொடங்கி டயட் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறோம்.

எழுத்தாளர் என். சொக்கனும் சைவ பேலியோ டயட்டைப் பின்பற்றுபவர். அவரிடம் ஒரு மினி பேட்டி:

பேலியோ டயட்டுக்கு எப்படி வந்தீர்கள்?

வெண்பா எழுதிவந்தேன்  வேடிக்கை அல்ல, நிஜமாகதான். க்ரீன் டீயைப் பாராட்டி நான் ஒரு வெண்பா எழுத, அதைப் படித்த நண்பர் ஒருவர் என்னை உடல்நலத்தில் அக்கறையுள்ளவன் என்று நினைத்து பேலியோ குழுமத்துக்கு அழைத்துவந்தார். கொஞ்சம் சந்தேகத்துடன் உள்ளே நுழைந்து அங்குள்ள விவரங்களை வாசிக்கத் தொடங்கினேன். ஒவ்வொன்றாக முயன்று பார்த்து எனக்குப் பிடித்தவற்றை, இயன்றவற்றைப் பின்பற்றத் தொடங்கினேன்.

பேலியோ டயட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?

பேலியோ பெரும்பாலும் மாமிச டயட்டாகவே அறியப்பட்டிருந்தாலும், முட்டை, மாமிசம் சாப்பிடாத நானும் அதனை ஓரளவு மாற்றிப் பயன்படுத்திக்கொள்ள இயன்றது. புரதக்குறைபாட்டைமட்டும் சரி செய்ய இயலவில்லை.

எடைக்குறைப்புக்காக நான் தொடர்ந்து சாப்பிட்டவை: புல்லட் ப்ரூஃப் காஃபி, ஊறவைத்த பாதாம், காய்கறிக் கூட்டு/ பொரியல்/ கீரை, பனீர், சீஸ், வால்நட், முந்திரி, தயிர், நெய், கொய்யாக்காய், ஃப்ளாக்ஸ் சீட் தூள், நீர்த்த காய்கறி சூப், தேங்காய் அதிகமுள்ள முற்றிய இளநீர், எப்போதாவது க்ரீன் டீ.

பேலியோவில் எடைக்குறைப்பு நேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே பழமான அவகோடா எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. வேர்க்கடலை பேலியோவில் இல்லை என்றாலும் விரும்பி எடுத்துக்கொண்டேன்.

எடைக் குறைப்பைத் தாண்டி வேறு நன்மைகள் ஏதாவது?

முக்கியமாகக் களைப்பு இல்லாமல் நாள்முழுக்கச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற இயன்றது, அடுத்து, இடுப்பளவு, எடை குறைந்தது. ஆனால் தொப்பை குறையவில்லை, அதற்கான உடற்பயிற்சிகளைக் கண்டறியவேண்டும்.

சுற்றுப்பயணம் செய்யும்போதும் உறவினர் வீடுகளுக்குச் செல்லும்போதும் ஏற்படும் சிரமங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

ஊர் சுற்றும்போது முந்திரி அல்லது பாதாம் வறுத்து எடுத்துச் சென்றுவிடுவேன், அப்புறம் இருக்கவே இருக்கின்றன தயிர் பாக்கெட், சர்க்கரை போடாத காபி, இளநீர் போன்றவை. உறவினர்களிடமும் இதையே சொல்லிவிடுகிறேன், 'கொஞ்சம் பொரியல், கூட்டு எக்ஸ்ட்ராவா கொடுங்க' என்று முன்னாலேயே சொல்லிவிட்டால் மகிழ்ச்சியோடு செய்கிறார்கள்.

***

சைவ பேலியோ டயட்டில் என்ன சாப்பிடலாம்?

காலை உணவு: 100 பாதாம் பருப்புகள் (வறுத்தது அல்லது நீரில் 12 மணிநேரம் ஊற வைத்தது). பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் பட்டர் டீ உட்கொள்ளலாம்.

மதிய உணவு: பேலியோ காய்கறிகளில் ஏதாவது ஒன்று, 1/2 கிலோ. நன்றாக நெய் விட்டு வதக்கலாம். தேங்காய் சேர்த்துக்கொள்ளலாம்.

இரவு: பனீர் மஞ்சூரியன், பனீர் டிக்கா

சைவ பேலியோ டயட்டால் நல்ல கொலஸ்டிரால் எனப்படும் எச்டிஎல் அதிகரிக்கும், உடல் எடை குறையும், ரத்த அழுத்தம் சீராகும், சர்க்கரை வியாதி கட்டுக்குள் வரும்.

சைவ பேலியோ டயட்டின் சவால்கள்

மனிதனின் ஆரோக்கியம், புலாலில் மட்டுமே கிடைக்கும் சிலவகை வைட்டமின்கள், மினரல்களை நம்பியுள்ளது. சைவ உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு அசைவர்களுக்கு வராத சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அவற்றை எப்படிச் சமாளிப்பது? பார்க்கலாம்.

புரதம்

சைவர்களின் முதல் சவாலே புரதம்தான். இந்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரப்படி 30% இந்தியர்கள் புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த முப்பது சதவிகிதத்தில் 46% பேர் பள்ளிக் குழந்தைகள். இவர்கள் எல்லாருமே சைவர்கள் எனச் சொல்லமுடியாது. இந்தியாவில், அசைவராலுமே முட்டை, இறைச்சி போன்ற புரதம் மிகுந்த உணவுகளை அன்றாடம் உண்ண முடியாது. எனவே புரதக் குறைபாடு இந்தியா முழுவதையும் பாதிக்கும் விஷயம் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும்.

மற்ற வைட்டமின்களை போல புரதத்தை உடலால் தேக்கி வைக்க முடியாது. அன்றாடத் தேவைகளுக்கான புரதத்தை அன்றாட உணவின் மூலமே அடையவேண்டும். ஏதோ ஒருநாள் இரு மடங்கு புரதம் எடுத்துக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.

இந்திய அரசின் நெறிமுறைகளின்படி சராசரி ஆண் 60 கிராம் புரதம் எடுக்கவேண்டும். பெண்ணுக்கு 55 கிராம் புரதம் தேவை. கடும் உடற்பயிற்சி, மகப்பேறு, பாலூட்டுதல் போன்றவற்றால் புரதத் தேவைகள் இன்னமும் தேவைப்படும். இதிலும் தாவரப் புரதங்கள் முழுமையாக நம் உடலில் சேர்வது கிடையாது. மிருகப் புரதங்களே நம் உடலில் முழுமையாகச் சேர்கின்றன. உதாரணமாக முட்டையில் இருக்கும் புரதம் 100% அளவில் நம் உடலுக்குள் செல்கிறது. ஆனால், கோதுமையில் உள்ள புரதத்தில் 30% அளவே நம் உடலில் சேர்கிறது. பீன்ஸ், பருப்பு போன்ற சைவ உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளன. ஆனால், அவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் முழுமையாக இல்லாததால் பாதிக்கும் மேலான பீன்ஸின் புரதங்கள் நம் உடலில் சேராமல் கழிவாக சிறுநீரகத்தால் வெளியேற்றபடுகின்றன. (அமினோ அமிலங்கள் உடலின் மிக முக்கியமான வகை அமிலங்கள். புரதங்களைக் கட்டமைக்கும் தன்மை கொண்டவை. மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் சில வகை அமினோ அமிலங்கள் மட்டுமே பீன்ஸ், பருப்பில் உள்ளன.) 

சைவர்கள் பேலியோ உணவில் தினமும் 100 கிராம் அளவுக்குப் பாதாம் எடுத்தால் 23 கிராம் புரதம் கிடைக்கும். 500 கிராம் பனீரில் 20 கிராம் புரதம் உள்ளது. இந்த இரண்டையும் சாப்பிட்டால் மொத்தம் 43 கிராம் அளவே புரதம் உடலைச் சேரும். தேங்காய், காய்கறிகளில் உள்ள புரதத்தை குத்துமதிப்பாக ஒரு ஏழெட்டு கிராம் என்று வைத்துக்கொண்டாலும் சைவ பேலியோவால் மொத்தம் 50 - 55 கிராம் அளவே புரதம் கிடைக்கிறது. இது அரசு பரிந்துரைக்கும் அளவை விடவும் குறைவு. எனினும் உடல்நலனைப் பாதிக்கும் அளவு பிரச்னைகளை உண்டுபண்ணாது. பேலியோ அல்லாத சைவ உணவில் பலரும் இதை விட குறைந்த அளவு புரதத்தையே அடைகிறார்கள். அப்படிப் பார்க்கும்போது சைவ பேலியோ உணவுமுறை மேலானது.

வைட்டமின் ஏ

தாவர உணவு எதிலும் வைட்டமின் ஏ கிடையாது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். வைட்டமின் ஏ ஏராளமாக இருப்பதாகப் பலராலும் நம்பப்படும் கேரட், கீரை போன்றவற்றில் துளி கூட வைட்டமின் ஏ கிடையாது என்பதே உண்மை.

வைட்டமின் ஏ-வில் இருவகை உண்டு. ரெடினால் (Retinol) மற்றும் பீடா காரடின் (Beta carotene). இரண்டில் ரெடினாலே உடலில் சேரும் தன்மை கொண்ட வைட்டமின். இதுவே கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் பலன் அளிக்கும் தன்மை கொண்ட வைட்டமின் ஏ ஆகும்.

ஆட்டு ஈரல், மீன் தலை, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை உண்ணும்போது அதில் உள்ள ரெடினால் எளிதில் நம் உடலில் சேர்ந்து விடுகிறது. பதிலாக கேரட், கீரையைச் சாப்பிட்டால் அதில் உள்ள பீடா காரடினை ரெடினால் ஆக மாற்றியபிறகே நம் ஈரலால் அதை வைட்டமின் ஏ-வாகப் பயன்படுத்தி உடலுக்கு நன்மையளிக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், தைராய்டு சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கு பீடா காரடினை ரெடினாலாக மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் கிலோ கணக்கில் கேரட்டைச் சாப்பிட்டாலும் அவர்களது ஈரலால் அதை ரெடினால் ஆக மாற்ற முடியாது. இதனால் மாலைக்கண் வியாதி, கண்பார்வை குறைபாடுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.

ரெடினால் உள்ள உணவுகளான நெய், பால், சீஸ், பனீர் போன்றவை சைவர்களுக்கு உதவும். ஆனால் பாலில் உள்ள கொழுப்பில் மட்டுமே ரெடினால் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் நம் மக்கள் கொழுப்பு இல்லாத பாலை வாங்குவதில்தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். பாலில் உள்ள கொழுப்பை அகற்றினால் அதில் உள்ள ரெடினாலையும் நாம் சேர்த்தே அகற்றிவிடுகிறோம். பிறகு பாலில் என்ன சத்து இருக்கும்?

நெய், வெண்ணெய் போன்ற பேலியோ உணவுகளை அதிகம் உண்ணுவதால் அதில் உள்ள ரெடினாலின் பயனை சைவர்கள் அடைகிறார்கள். அவர்களின் வைட்டமின் ஏ அளவுகள் அதிகரிக்கின்றன. எனவே சைவ பேலியோவைப் பின்பற்ற எண்ணுபவர்கள் தினமும் அரை லிட்டர் பால் அல்லது பனீரை தவறாமல் எடுத்துக்கொள்வதுடன் தினமும் அதிக அளவிலான நெய், வெண்ணெய் போன்றவற்றையும் சமையலில் பயன்படுத்தவேண்டும்.

பி12 வைட்டமின்

பி12 என்பது முக்கியமான பி வைட்டமின்களில் ஒன்றாகும். பி12 வைட்டமின் குறைபாட்டால் நமக்கு மாரடைப்பு, ஆஸ்துமா, மலட்டுத்தன்மை, மன அழுத்தம் போன்ற பலவகை வியாதிகள் ஏற்படுகின்றன.

துரதிர்ஷ்டவசமாக பி12 வைட்டமின் எந்தத் தாவர உணவிலும் இல்லை. பி12 - புலால், மீன், முட்டை, பால் போன்ற மிருகங்களிடமிருந்து கிடைக்கும் உணவுகளிலேயே காணப்படுகிறது. சைவர்கள் பால், பனீர் போன்றவற்றை உண்பதன் மூலம் பி12 தட்டுப்பாடு ஏற்படாமல் காத்துக்கொள்ளமுடியும். அதே சமயம் ஒரு நாளுக்கு தேவையான பி12-ஐ அடையவேண்டும் என்றால் தினமும் ஒன்றே கால் லிட்டர் பாலை அருந்தவேண்டும். இது நம்மால் முடியாது அல்லவா! இதன்படி, பால் மட்டுமே உண்ணும் சைவர்களுக்கு பி12 தட்டுப்பாடு உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம்.

முட்டை சாப்பிடும் சைவர்களால் இதைச் சமாளிக்க இயலும். அவர்களின் புரதத் தேவையும் முட்டை உண்பதால் பூர்த்தி அடையும். ஆனால் பெரும்பாலான சைவர்கள் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அவர்கள் பி12 அளவுகளை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளவேண்டும். பி12 அளவுகள் உடலில் குறைவாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் பி12 ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்.

பதிலாக பி12 அளவை அதிகரிக்க பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளையோ, வைட்டமின் மாத்திரைகளையோ உண்பதால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் மாத்திரைகளில் உள்ள வைட்டமின்கள் செயற்கையாக தொழிற்சாலைகளில் தயாராகுபவை. முட்டை, பாலில் உள்ளதுபோல தரமாகவும், எளிதில் ஜீரணிக்கப்படும் வைட்டமின்களாகவும் அவை இருப்பதில்லை. ஊசி வடிவில் பி12 எடுத்துக்கொண்டால் ஓரளவு அந்த வைட்டமின் உடலில் சேரும் வாய்ப்பு உள்ளது. அது நேரடியாக ரத்தத்தில் கலக்கும் என்பதால்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com