1940-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தின் மாயவரத்தில் பிறந்தவர். இளம்பருவம் பூம்புகாரிலும் சாயாவனத்திலும் கழிந்தது. காவிரி கடலோடு கலக்கும் ஊர் பூம்புகார். மாயவரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிற்றூர், சாயாவனம்.
கந்தசாமியின் முதல் நாவலான ‘சாயாவனம்’ 1964-ல் எழுதப்பட்டது. கதை நடக்கும் காலம் இன்றைக்குச் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால். கதையில் ஓர் இடத்தில் பிபின் சந்திரபால் சென்னைக் கடற்கரையில் பேசிய பேச்சு பற்றிய விபரம் வருகிறது. சுதந்தரப் போராட்டத்தில் காந்திக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர் பிபின். அப்போது மூன்று தலைவர்களை Lal Bal Pal என்று இணைத்து சொல்வார்கள். லாலா லஜபதி ராய், பால் கங்காதர திலக், பிபின் சந்திர பால். நாவலில் இன்னொரு இடத்தில் வரும் குறிப்பு இது:
‘ஒரு வாட்டி தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை, கூறைநாடு சண்முகப் படையாச்சி, நாகப்பட்டினம் அப்துல் காதர், எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதி எல்லாரும் இந்த வழியாத்தான் போனா. அவாளுக்கு ஒரு பெரிய மாலை போட்டோம்.’
சாயாவனம் முதல் வாசிப்பில் ஒரு வாசகரை ஏமாற்றி விடக் கூடிய தன்மை கொண்டது. தி. ஜானகிராமனைப் போன்ற ஆடம்பரமான வர்ணனைகளையோ, லா.ச.ரா.வைப் போன்ற கவித்துவமான நீரோடைகளையோ கொண்டதல்ல சாயாவனத்தின் மொழி. மேல்பார்வைக்குக் கொஞ்சம் தட்டையாகவே தெரியும். ஆனால் அதன் உள்ளே நீறு பூத்த நெருப்பாக இருப்பது ஒரு மகத்தான தத்துவம். அதுதான் இந்த நாவலின் சிறப்பு. இன்று உலகம் பூராவும் விவாதிக்கப்பட்டு வரும் சுற்றுப்புறச் சூழலியல், கானுயிர்ப் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளைக் குறியீடாகக் கொண்டு இயங்கும் நாவல், சாயாவனம். அந்த வகையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாகவே சாயாவனத்தைக் கருதவேண்டும். நாவலில் ஒரு மரம் செடி கொடியின் பெயரோ அல்லது பட்சியின் பெயரோ இல்லாத ஒரு வாக்கியத்தைக் கூட காண முடியவில்லை. சாயாவனத்தில் வரும் தாவரங்களைப் பற்றி ஓர் ஆய்வே செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தப் பூமியின் இருப்பே அதன் தாவர உயிர்ப்பைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதை மேற்குலகம் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தியர்கள் விலங்குகளையும், விருட்சங்களையும், காற்று பூமி ஆகாயம் அக்னி போன்ற பஞ்ச பூதங்களையும் வணங்குவதைப் பரிகசித்த மேலை நாட்டினர் இன்று காடு மற்றும் காட்டுயிர்களின் பாதுகாப்புதான் மனித வாழ்வின் ஆதாரம் என்கிறார்கள். ஒரு யானை தினமும் முப்பது கிலோமீட்டர் நடக்கிறது. அதன் கழிவுதான் சில வனவுயிரிகளின் உணவாக இருக்கிறது. அதன் கழிவுதான் விருட்சங்களின் விதைகளை வனத்தில் ஒவ்வொரு இடமாக எடுத்துச் செல்கிறது. யானை இல்லையேல் வனம் இல்லை. ஓநாய் குலச் சின்னம் நாவலில் மங்கோலியர்களின் குலச்சின்னமாக ஓநாய் விளங்குவதன் காரணம், ஓநாய் இல்லையேல் மங்கோலிய இனமே இல்லை என்கிறார் அதன் ஆசிரியர். ஓநாய்கள் இல்லையேல் பனிக்காடான மங்கோலியாவில் மிக அரிதாகவே உருவாகும் புல்வெளிகளை ஆயிரக் கணக்கில் பெருகும் மான் கூட்டமே தின்று தீர்த்து விடும். அப்படி ஆகாமல் அந்தப் பிராந்தியத்தின் சமநிலை (eco balance) கெடாமல் இருக்க ஓநாய்கள் காரணமாக இருக்கின்றன. நாவலின் இறுதியில் ஓநாய்கள் அழிக்கப்பட்டு அங்கே மனிதக் குடியிருப்புகள் தோன்றும்போது அதன் இயற்கையான உயிர்ப்புத்தன்மை மறைந்து கட்டடக் கலாசாரம் ஆரம்பமாகிறது. அதுதான் apocalypse என்று சொல்லப்படும் பேரழிவு. இதையேதான் 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட சாயாவனமும் பேசுகிறது.
‘வேளாண்மை என்பது ஒரு வாழ்க்கை. அது தொழில் அல்ல. காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் வாழ்க்கையே வேளாண்மையாக இசைந்து போகிறது. பல நூற்றாண்டுகளாக இழையறாமல் இருந்து வந்த அந்த முறை சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் தன் நிலையை இழக்க ஆரம்பித்தது’ என்று முன்னுரையில் சொல்கிறார் சா. கந்தசாமி. 25 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சை மாவட்டம் முற்றிலுமாக தன் ஜீவனை இழந்து, நதிகளை இழந்து வறண்ட பாலையாகிவிட்டது. உதாரணமாக, நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் வரும் வெட்டாறு கடலில் கலக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அந்த வெட்டாறில் நாவலின் நாயகனான சிதம்பரம் குளித்து நீச்சலடித்து மூழ்கி விளையாடுகிறான். இக்கரையிலிருந்து அக்கரை போகிறான். ஆனால் என் காலத்திலேயே (அறுபதுகள்) அந்த வெட்டாறு வெறும் ஓடையாகக் குறுகிவிட்டது. இப்போது வெறும் மணல் காடாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பேரழிவின் ஆரம்பத்தைச் சொல்கிறது சாயாவனம்.
வனங்களையும் வனவுயிர்களையும் அழிப்பதன் மூலம், தான் வாழும் பூமிக்கே அழிவைக் கொண்டு வரும் மனித வாழ்வின் அவலத்தைக் குறியீடாக வைத்திருக்கிறது சாயாவனம். நாவல் முழுவதுமே வனமும் வனத்தை அழிக்கும் நான்கைந்து மனிதர்களும்தான். நாவல் இப்படித் துவங்குகிறது: ‘புளியந்தோப்பின் முகப்பில் நின்று வானத்தை ஊடுருவி நோக்கினான் சிதம்பரம். ஒரு மடையான் கூட்டம் தாழப் பறந்து சென்றது. ஒரு தனி செம்போத்து. இரண்டு பச்சைக்கிளிக் கூட்டங்கள்.
சற்றைக்கெல்லாம் வானம் நிர்மலமாகியது.
சிதம்பரம் குத்துக் குத்தாய் வளர்ந்திருக்கும் காரைச் செடிகளைத் தள்ளிக் கொண்டு, நாயுருவி கீற, ஒற்றையடிப் பாதைக்கு வந்தான்.’
‘பெரிய சாலையிலிருந்து கிளிமூக்கு மாமரம் வரையில் ஒரு கொடிப்பாதை. ஆலமரத்திலிருந்து முனீஸ்வரன் தூங்குமூஞ்சி மரம் வரையில் ஒரு பாதை. அப்புறம் இலுப்பை மரத்திலிருந்து கொய்யா மரம் வரையில் இன்னொரு பாதை... நொச்சியையும் காரையையும் தள்ளிக் கொண்டு புல்லிதழ்களைத் துவைத்தவாறு நடக்க வேண்டும்.’
நாவலில் சோட்டான் என்று ஒரு வார்த்தை வருகிறது. இது தஞ்சை மாவட்டத்துக்கு மட்டுமே உரிய வார்த்தையா அல்லது மற்ற இடங்களிலும் உண்டா என்று தெரியவில்லை. புளியங்காயை நாங்கள் சோட்டான் என்று சொல்லுவோம்.
‘சிவனாண்டித் தேவர் கைக்கு எட்டிய கிளையைப் பிடித்து உலுக்குவார். புளியம்பழங்கள் சடசடவென உதிரும். அங்குமிங்கும் சிதறிக் காரையிலும் கருநொச்சியிலும் சிக்கிக் கொண்டிருக்கும் சோட்டான்களைப் பொறுக்கி மரத்தடியில் போட்டு விட்டுப் போய் ஆட்படைகளோடு திரும்பி வருவார்.’
‘காட்டாமணக்கு இலையைக் கிள்ளி, பாலை உதறி விட்டுக் கொண்டு, புன்னையும் கொய்யாவும் நிறைந்த மேட்டுப் பூமியில் ஏறினார் சாம்பமூர்த்தி. சற்றே உயர்ந்த பூமி. அங்கிருந்தபடி வனம் முழுவதையும் பார்க்க முடியாவிட்டாலும், முன்னே இருக்கும் மரஞ்செடி கொடிகளைப் பார்க்கலாம். விண்ணுக்கும் மண்ணுக்கும் சரஞ்சரமாய்ப் பச்சைக் கயிறு பிடித்தாற்போலப் புளியமரத்தையும், இலுப்பை மரத்தையும், பலா மரத்தையும் மீறிக் கொண்டு நெட்டிலிங்க மரங்கள் வளர்ந்திருந்தன.’
‘அக்காக் குருவி பரிதாபமாகக் கூவிக் கொண்டு தலைக்கு மேலே பறந்து சென்றது.’
‘நான்கைந்து நாரைகள் படபடவென்று சிறகை அடித்துக் கொண்டு வந்து மரக்கிளையில் வந்து அமர்ந்தன.’
‘ஒரு மடையான் கூட்டம் பறந்து சென்றது. சாம்பமூர்த்தி ஐயர் வண்டியில் ஏறி உட்கார்ந்தார்.’
‘மெல்ல நகர்ந்து செல்லும் வண்டியைப் பிடித்துக் கொண்டு சிவனாண்டித் தேவரும் கணக்குப் பிள்ளையும் சென்றார்கள். பூவரசு மரத்தைத் தாண்டி, கூந்தல் பனை மறைவில் உள்ள ஐயனாரைக் கடக்கும் வரையில் யாரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.
வண்டி காத்தவராயன் இலுப்பை மரத்தைத் தாண்டியதும் கணக்குப் பிள்ளை, ‘மாமாவுக்கு ரொம்பக் கோபம்’ என்றான்.’
‘காய்ந்த சருகுகள் படபடத்தன. யாரோ வேகமாக ஓடி வருவது போல இருந்தது. உன்னிப்பாகப் பார்த்தான். நரி ஒன்று எதிரே வந்து நின்று, தலைதூக்கிப் பார்த்து விட்டு, ஒரே பாய்ச்சலில் ஓடி மறைந்தது.’
நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குப் பக்கத்தில் இருந்த வனத்தில் நரிகளெல்லாம் இருந்திருக்கின்றன. 1970 வரை எங்கள் ஊரிலும் நரிகள் இருந்தன. இப்போது அங்கே காடுகளுக்குப் பதில் பிளாஸ்டிக் கழிவுகள் தான் மலைமலையாகக் குவிந்திருக்கின்றன.
‘அவன் மேலே பார்த்தான். ஆகாயமே தெரியவில்லை. பச்சைப் பசுந்தழைகளால் மூடப்பட்டிருந்தது. வானமே வனமாகி விட்டது போல ஒரு காட்சி - மேலும் கீழும் பச்சை; திசையெங்கும் பச்சை. இயற்கையின் சௌந்தர்யம் மிகுந்த வனத்திற்குள் அவன் மெல்ல மெல்லப் பிரவேசித்துக் கொண்டிருந்தான்.
பூவரசு மரத்தை மூடி மறைத்துக்கொண்டு கோவைக் கொடி தாழப் படர்ந்திருந்தது. அநேகமாக பூவரசு மரமே தெரியவில்லை. வெள்ளைப் பூக்களுக்கிடையில் கருஞ்சிவப்பாக அணில் கொய்த பழங்கள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மேலே இன்னும் போகப் போகப் பலவிதமான கொடிகள்! நெட்டிலிங்க மரத்தில் குறிஞ்சாக் கொடி உச்சி வரையில் சென்றிருந்தது.’
‘சிதம்பரம் ஒவ்வொரு கொடியாக, கைக்கு எட்டிய கோவைக்கொடி, குறிஞ்சாக்கொடி, காட்டுப் பீர்க்கு, பிரண்டை எல்லாவற்றையும் அறுத்தெறிந்தான்.’
‘நான்கடிகள் பின்னுக்குச் சென்று தீவிரமான நோக்கோடு தன்னுடைய வேலையைத் தொடங்கினான் சிதம்பரம். சீமை காட்டாமணக்கு முதன்முதலாக வெட்டுண்டு சாய்ந்தது. அதைத் தொடர்ந்து வெள்ளைப் பூ பூக்கும் எருக்கு, மேகவண்ணப் பூ பூக்கும் நொச்சி - இவைகளை ஒரே மூச்சில் வெட்டித் தள்ளிக் கொண்டு காரைப் புதரில் நுழைந்தான்.
அநேகமாக வனம் முழுவதும் வளர்ந்து இருப்பது காரைதான். தண்ணீர் இல்லாத பிரதேசத்திலேயே செழித்து வளரும் காரை நீர் நிறைந்த பகுதியில் மதமதவென்று வளர்ந்திருந்தது.’
நாவல் முழுவதுமே இப்படியாகத்தான் செல்கிறது. கரும்பு ஆலை வைப்பதுதான் சிதம்பரத்தின் நோக்கம். அவன் அந்த ஊரைச் சேர்ந்தவன் அல்ல. அவன் அம்மா அந்த ஊரை விட்டுப் பஞ்சம் பிழைப்பதற்காக இலங்கைக்குச் சென்ற போது அவன் இரண்டு வயதுக் குழந்தை. இலங்கையிலும் பிறகு சிங்கப்பூரில் இருந்துவிட்டு அம்மாவின் ஊர்ப்பக்கம் திரும்பியவன் சிதம்பரம். அந்தப் பெரிய காட்டை விலைக்கு வாங்கி அதை அழித்து கரும்பு ஆலை வைப்பது அவன் நோக்கம். அதற்காகவே அதன் ஒவ்வொரு செடியையும் கொடியையும் மரத்தையும் வெட்டி அதன் உள்ளே நுழைந்து பிறகு அத்தனை பெரிய காட்டையும் தீ வைத்து எரிக்கிறான்.
குறியீட்டுக்குள் குறியீடாக வருகிறது புளியமரம். ‘ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஒவ்வொரு குடும்பத்திற்குப் புளி. தெற்கே இருக்கிற தித்திப்புப் புளியமரத்திலிருந்து புளி சாம்பமூர்த்தி ஐயர் வீட்டிற்கு. குட்டை மரத்திலிருந்து பெரிய பண்ணைக்கு. தென்கிழக்கு காத்தவராயன் மரத்துப் புளி பதஞ்சலி சாஸ்திரி வீட்டிற்கு. நெட்டை மரத்துப் புளி பார்த்தசாரதி ஐயங்கார் வீட்டிற்கு. ஒவ்வொரு மரத்தையும் தனித்தனியாக உலுக்குவார். ஒரு மரத்துச் சோட்டானோடு இன்னொரு மரத்துச் சோட்டான் கலக்காது.’
‘ஊர் முழுவதற்கும் புளி கொடுத்துக் கொண்டிருந்த மரங்கள் அவை. பல தலைமுறைகளாக மனிதர்களின் வாழ்க்கை வியக்கத்தக்க முறையில் அதனோடு பிணைக்கப்பட்டிருந்தது. மென்மையான அந்த உறவு யாரும் எதிர்பாராத விதமாகத் தீப்பட்டுப் பொசுங்கி விட்டது.’
கரும்பு ஆலையில் வேலை செய்பவர்களின் உதவிக்காக ஒரு மளிகைக் கடை வைக்கிறான் சிதம்பரம். ஊர்ப் பிரமுகர்களுக்குப் புளி அனுப்புகிறான். காட்டில் விளைந்ததல்ல. சீர்காழி, திருவெண்காடு, காவேரிப்பட்டினம் - இங்கெல்லாம் சென்று வாங்கியது.
ஆனால் அந்தப் புளி ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எல்லாப் புளியும் திருப்பி அனுப்பப்பட்டது. பல்வேறு ரகம் - தித்திப்புப் புளி, புளிப்புப் புளி எல்லாம் ஒன்றாகக் கலந்திருந்தது. செங்காயையும் அடித்துக் கலந்திருந்தார்கள். அரிந்து கொட்டையெடுத்துக் கோது நீக்கியபோது பாதிக்கு மேல் குறைந்து போயிற்று. செட்டியார் வீட்டுக்குப் போன ஐந்து தூக்குப் புளி மறுநாளே திரும்பி வந்தது.
நாம் வாழும் இந்தப் புவிக்கு மனித இனத்தால் நேர்ந்த பேரழிவு நாவலின் கடைசிப் பக்கத்தில் இவ்வாறு சித்திரிக்கப்படுகிறது.
‘ஆச்சி காவிரிக் கரையில் சிதம்பரத்தைப் பார்த்ததும், ‘ஏண்டாப்பா, புண்ணியவானே! புளியெ வாயிலே வைக்க முடியல்லே!’ என்று குறைபட்டுக் கொண்டாள்.
தான் ஊருக்குள் காலடியெடுத்து வைத்த அன்று நிறைந்திருந்த புளிய மரங்கள் நினைவில் படர்ந்தன.
‘பாத்து நல்ல புளியா அனுப்பறேங்க, ஆச்சி.’
‘அதான் எல்லாத்தியும் கருக்கிட்டியே! இன்னமே எங்கேயிருந்து அனுப்பப் போறே?’
ஆச்சி பட்டுப் புடவையைப் பிழிது தோளில் போட்டுக் கொண்டு பிள்ளையார் கோவிலுக்குள் சென்றாள்.
சிதம்பரம் ஆச்சி போவதையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.’
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.