ந. முத்துசாமி

மூத்த எழுத்தாளர்களில் நான் யார் மீதாவது உணர்வுபூர்வமான உறவு வைத்திருக்கிறேன் என்றால் அது ந. முத்துசாமியின் மீதுதான்
Published on
Updated on
5 min read


மூத்த எழுத்தாளர்களில் நான் யார் மீதாவது உணர்வுபூர்வமான உறவு வைத்திருக்கிறேன் என்றால் அது ந. முத்துசாமியின் மீதுதான். ஒருமுறை என்னுடைய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தேன். ஏழெட்டு ஆண்டுகள் இருக்கலாம். அவர் பேசியபோது ஒரு விஷயம் சொன்னார். ‘பல ஆண்டுகளுக்கு முன்பு சுபமங்களாவின் ஆண்டு விழாவில் பேசும்போது சாரு என்னைப் பற்றிக் கிண்டலாகப் பேசினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் இந்த விழாவுக்கு நான் வந்திருக்கிறேன்.’

அதைக் கேட்டதும் எனக்குத் தோன்றிய முதல் உணர்வு, ஆச்சரியம். ‘நாமெல்லாம் ஒரு உதவாக்கரை. நாம் பேசியதைப் போய் இவர் ஞாபகம் வைத்திருக்கிறாரே!’ பிறகு நான் பேசியபோது முத்துசாமிக்குப் பதில் கூறினேன். நான் உங்களை என் தந்தையை விடவும் மேன்மையான இடத்தில் வைத்திருக்கிறேன். அந்த வகையில் என் அப்பனைத் திட்டவும் கிண்டல் செய்யவும் எனக்கு உரிமை இருக்கிறது என்றே நினைக்கிறேன். காரணம், எழுத்தால் ஜீவித்துக் கொண்டிருக்கும் நான், எழுத்தையே வாழ்க்கையின் அர்த்தமாகக் கொண்டிருக்கும் நான், என் எழுத்தின் மொழியை எடுத்துக்கொண்டது உங்களிடமிருந்து. மொழியை மட்டுமல்ல; எழுத்தின் உயிரையும்தான். என்னுடைய மொழி உங்களுடைய மொழி என்பதால் நீங்கள் என் தகப்பன். உங்களைப் புண்படுத்தியிருந்தால் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.’

சுபமங்களா விழாவில் நடந்தது என்னவென்றால், நவீன நாடகம் என்ற பெயரில் மக்களுக்குப் புரியாமல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பொதுவாகப் பேசினேன். மக்களுக்குக் கூட வேண்டாம்; பல உலக நாடகங்களைப் பார்த்திருக்கும் எனக்கே உங்களுடைய நாடகங்கள் அந்நியமாக இருக்கின்றன. இதுவே என் பேச்சின் சாரம். இதில் நான் குறிப்பிட்டது கூத்துப் பட்டறையின் நாடக ஆக்கங்களையே தவிர முத்துசாமியின் நாடகப் பிரதிகளை அல்ல. ஆனால் என் பேச்சில் இந்தத் தெளிவு இருந்திருக்காது என்பதால் முத்துசாமியின் வருத்தம் நியாயமானதுதான். நாடகம் என்ற பெயரில் ஏதோ காமா சோமா என்று அசட்டுத்தனம் நடந்து கொண்டிருக்கும் சபா நாடகத் தமிழ்ச் சூழலில் முத்துசாமியின் நாடகப் பிரதிகள் தான் முதல் முதலாக நாடகம் என்றால் இதுதான் என்று தமிழுக்கு அறிமுகப்படுத்தியவை. அவரது நாடகப் பிரதிகள் உலகில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நாடகப் பிரதிகளுக்கு நிகரானவை. ஆனால் இது பற்றியெல்லாம் விரிவாகப் பேசாமல் நவீன நாடகங்கள் பார்வையாளர்களிடமிருந்து அந்நியமாக இருக்கின்றன என்பதை மட்டுமே கவனத்தில் வைத்துப் பேசிவிட்டேன். மேலும், சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ள இளைஞர்கள் கூத்துப் பட்டறையை சினிமாவில் சேர்வதற்கான ஒரு பயிற்சிப் பள்ளியாகப் பயன்படுத்துவதும் எனக்குள் சோர்வை ஏற்படுத்தியிருந்தது. முத்துசாமியின் நாடகங்களுக்கு நாம் பின்னால் வருவோம்.

இப்போது முத்துசாமியின் சிறுகதைகள். பொதுவாக முத்துசாமியின் பெயர் நாடகத்தோடு மட்டுமே சேர்த்துப் பேசப்படுவது வழக்கம். ஆனால் அவர் உலகின் மிக மேன்மையான சிறுகதையாளர்களுக்கு நிகரான சிறுகதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். அதில் முக்கியமானது ‘நீர்மை’. 1972-ல் ‘கசடதபற’ இதழில் வெளிவந்தது அந்தக் கதை. பிறகு ‘நீர்மை’ என்ற தலைப்பிலேயே தொகுப்பாக 1984-ல் க்ரியா வெளியீடாக வந்தது. அந்தத் தொகுப்புக்கு நடேஷ் வரைந்த முகப்புக் கோட்டோவியத்தில் தெரியும் முத்துசாமியின் முகத் தோற்றம் அதியற்புதமான ஒன்று. எனக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் ஆதிமூலம் தீட்டிய காந்தியின் சித்திரம் நினைவு வரும்.

***

25 ஆண்டுகளுக்கு முன்பு முத்துசாமி வாலாஜா ரோட்டில் பாரகன் டாக்கீஸுக்கு அருகில் குடியிருந்தார். எதிரே கலைவாணர் அரங்கம். இப்போது பாரகன் டாக்கீஸ் இருந்த இடத்தில் பனிரண்டு மாடிக் குடியிருப்பு உள்ளது. சமீபத்தில் கூட பத்தாவது மாடியிலிருந்து இரண்டு வயதுக் குழந்தை கீழே விழுந்து இறந்தது. முத்துசாமியின் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ஒருநாள் இந்தப் பாரகன் டாக்கீஸில் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். பார்ப்பதற்கு மைலாப்பூரிலிருந்த கபாலி தியேட்டர் மாதிரி இருக்கும்.

முத்துசாமியின் வீடு முதலாவது மாடியில் இருந்தது. மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் மிகவும் குறுகலாகவை. வளைந்து வளைந்து ஏற வேண்டும். அந்த வீட்டில் முன்பு க.நா.சு. குடியிருந்ததாகவும் பிறகு அவர் தில்லிக்குக் குடிபெயர்ந்த சமயத்தில் முத்துசாமியைக் குடியமர்த்தியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பிறகு நான் சின்மயா நகருக்குக் குடிபோனதும் நான் இருந்த வீட்டுக்கு இரண்டு தெரு தாண்டி நடேசன் நகரில் முத்துசாமியின் வீடு இருந்தது. வாலாஜா ரோட்டிலேயே பழக்கம் என்பதால் முத்துசாமியின் மனைவியை அம்மா என்றுதான் அழைப்பேன். அவரும் என்னுடன் வாஞ்சையாகப் பேசுவார். என்னை ஒருமையில் அழைக்கும் ஒருசில பெண்மணிகளில் அவர் ஒருவர்.

சின்மயா நகர் வீடு கருங்கல் வீடு. சென்னையில் நான் பார்த்த ஒரே கருங்கல் வீடு முத்துசாமி வீடுதான். அதில் ஒரு புராணிகத் தன்மை தெரியும். ஏதோ ஒரு ரிஷியின் குடில் போல் தோற்றம் தரும். வாசலில் ஓர் ஊஞ்சல் தொங்கும். நடேஷ் வரும் வரை அந்த ஊஞ்சலில் ஆடுவது என் வழக்கம். (நடேஷைப் பார்க்கத்தான் போவேன்.) நடேஷ் வந்த பிறகும் என் ஊஞ்சலாட்டம் தொடரும். அப்போதெல்லாம் முத்துசாமி என்னை எதிர்கொள்வது எப்படி இருக்கும் தெரியுமா? உங்கள் மகனின் வகுப்புத் தோழன் மகனைப் பார்க்க வரும்போது நீங்கள் அவனை எப்படிப் பார்ப்பீர்களோ அதே போன்ற வாத்ஸல்யம் அவரது பார்வையிலும் பேச்சிலும் இருக்கும். முத்துசாமியிடம் எப்போதுமே கர்வம் இருக்காது. எல்லோரையும் சமமாக பாவித்தே பேசுவார். அது அந்தக் காலத்து எழுத்தாளர்களின் பழக்கம். அந்தப் பழக்கத்தின் கடைசி வாரிசு என்றே என்னைப் பற்றி நினைக்கிறேன். அதனால்தான் என்னை எல்லோரும் பெயர் சொல்லியே அழைக்கிறார்கள். நான் முத்துசாமியை ஒருநாளும் சார் என்று அழைத்ததில்லை. முத்துசாமிதான். ரொம்ப சரளமாக வரும். அவரும் அதை மிக இயல்பாக எடுத்துக் கொள்வார். எனக்கும் நடேஷுக்கும் பதினைந்து ஆண்டு வித்தியாசம் இருந்தாலும் நாங்கள் பள்ளித் தோழர்கள் போலவே பழகுவது வழக்கம்.

***

உலகில் பிராமண குலத்தைப் போல் பெண்களை வதை செய்த வேறு குலம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐந்து வயதில் திருமணம் நடக்கும். அப்போது ‘கணவனின்’ வயது எட்டு இருக்கும். அவளுக்கு ஆறு வயது ஆகும்போது ‘கணவன்’ இறந்து விடுவாள். இவள் ஆறு வயதிலேயே விதவையாகி விடுவாள். அதோடு அவள் வாழ்வு அவ்வளவுதான். எத்தனையோ பக்கங்கள் இந்த வேதனைக் கதைகளை எழுதியிருக்கிறார் க.நா.சு. கணவன் போனதுமே தலையை மொட்டையடித்து, சமூக விலக்கு கொடுத்து விடுவார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு பிராமண வீடுகளிலும் வாசல் திண்ணையிலோ ஆளோடியிலோ ஒரு வயதான பாட்டி படுத்திருப்பார். வயது நூறை நெருங்கிக் கொண்டிருக்கும். கணவன் இறந்து அரை நூற்றாண்டு ஆகியிருக்கும். மொட்டையடித்து காவிப் புடவையைக் கொடுத்து விடுவார்கள். புடவையால் தலையை மூடிக் கொள்ள வேண்டும். அந்தப் பெண் எதிரே வந்து விட்டால் காரியம் விளங்காது. ஊரே மொட்டைப் பாப்பாத்தி என்று கரித்துக் கொட்டும்.

அப்படி ஒரு ‘மொட்டைப் பாப்பாத்தி’யின் கதைதான் ‘நீர்மை’. கதையின் அடிச்சரடு காமம்தான். மறுக்கப்பட்ட காமம். காமத்தின் இல்லாமை. ‘அவள் தன் பத்தாவது வயதில் வீணானவள். இறக்கும்போது அவளுக்கு வயது தொண்ணூற்றுக்கு மேல். அப்போது எனக்குப் பதினைந்து வயது...’

‘அடுப்பங்கரை தயிர் கடையும் தூணில் முடிந்திருக்கும், மத்து இழுக்கும் கயிற்றை நாங்கள் அம்மாவுக்குத் தெரியாமல் விளையாட அவிழ்த்துக் கொண்டு வந்து விடுவோம். அது நாள்பட்டு, இழுபட்டு, வெண்ணெய்க் கை பட்டு, திரித்தது என்பதை விட, பயிரானது என்று இருக்கும். அதை இவன் (கதைசொல்லியின் தம்பி) கழுத்தில் போட்டு அக்குளுக்கடியில் முதுகுப்புறம் மடக்கிப் பிடித்துக்கொண்டு அவனை வண்டி மாடாக ஓட்டுவது எங்கள் விளையாட்டு. அவன் எட்டுக் குளம்புப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஓடுவான். முடிவில் மாடாகிக் களைத்துப் போவான்.’

கதைசொல்லி அப்போது கால்சட்டை கூடப் போடாத பொடியன். அதனால் அவனை அவள் ‘கண்டாமணி’ என்றுதான் அழைப்பாள். காரணம், இயற்கையாகவே அவனுக்கு அது கொஞ்சம் பெரிதாகத் தொங்கிற்று. வெகுநாள் கழித்து அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான் பருவ இயல்புக்குச் சுருங்கிற்று. இதே சொல்லை, வாக்கியமாக்காமல், ஓடும்போது அவளைச் சந்திப்பது ஒத்துக் கொண்ட போதெல்லாம் சொல்லிவந்தாள். அவள் அப்போது சந்தோஷப்பட்டிருப்பாள். சிரித்துக் கூட இருக்கலாம்.

‘சிறுகச் சிறுக மாறி வந்த அவள் முகத் தோற்றத்தை ஊர் காண முடியாமல் போய்விட்டது. நினைவில் இருப்பது எந்த வயதின் சாயலென்றும் தெரியவில்லை. பிறர் நினைவில் எந்தச் சாயலில் இருக்கிறாள் என்பதை எப்படி ஒத்துப் பார்ப்பது? அவள் பொதுவில் பெயராக மிஞ்ச ஆரம்பித்து விட்டாள்.’

கதைசொல்லி கால்சட்டை போட ஆரம்பித்த பிறகு அவள் அவனை கண்டாமணி என்று அழைப்பதை நிறுத்தி விடுகிறாள். ஊராருக்கு அந்தப் பெண் ஆச்சரியமற்றவளாக மாறியிருந்தாள்.

கதைசொல்லியின் பெயர் கண்ணன். நடேசய்யர் மகன். ஊர் புஞ்சை. பத்து வயதில் வீணானவளின் பிறந்த வீடும் புஞ்சைதான். புகுந்த ஊரில் வாழ்ந்த அனுபவம் இல்லாமல் பிறந்த வீட்டிலேயே வயதாகிக் கிழவியானவள். கண்ணனின் பாட்டிக்கும் அவளுக்கும் சம வயது. முப்பது ஆண்டுகள் வீட்டை விட்டு வெளியிலேயே வரவில்லை. அவளுடைய நாற்பதாவது வயதில் தந்தை இறந்து போன போதுதான் வெளியே வருகிறாள். யாரையும் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. யாருக்கும் அவளை அடையாளம் தெரியவில்லை.

‘அவள் வெளியில் வந்ததும் தவிர்க்க முடியாமல் நேர்ந்ததுதான். அவளுடைய தந்தை இறந்த தினத்தன்று அவள் வெளியில் வந்தாள். பிரேதம் எடுத்துக்கொண்டு போன பிறகு கூட்டத்திலிருந்து மிரண்டு பயந்து அழுது ஓடிப் போய்ச் சாலைக்குளத்திலே விழுந்தாள். அவளைக் கரையேற்றி காவிரிக்கரைக்குக் கொண்டுபோக பெரும்பாடு பட்டார்களாம். அவளை அணைத்து அழைத்துப் போனவர்களில் எங்கள் பாட்டி ஒருத்தி. துக்கத்தினால் அன்றி, தொடு உணர்ச்சிக்கே அஞ்சியவளாக, பாட்டியை அடையாளம் காணாதவளாக மிரண்டு பார்த்திருக்கிறாள் அவள்.’

கண்ணனின் அம்மாவிடம்தான் தினம் வந்து பாலோ தயிரோ வாங்கிக் கொண்டு போவாள். அந்தக் காட்சி முத்துசாமியின் வார்த்தைகளில்:

‘அவள் சாலைக்குளத்திலிருந்து கரையேறிய வேகத்தில் வந்திருப்பாள். ரேழி வாயிற்படியைத் தாண்டி தாழ்வாரத்தின் முனையில் சின்னத் திண்ணையில் ஓரமாய் நிலைப்படியில் சாய்ந்து கொண்டு காத்து நிற்பாள்....

அவள் நிற்கும் இடம் தண்ணீரும் தெரு மணலும் சேர்ந்து குழம்பிப் போயிருக்கும். எண்ணெய்ப் பிசுக்கும் நீர்க்காவியும் ஏறிய பழைய நார்மடிப் புடவையோடு தவிர்க்க முடியாமல் தெரு மண்ணையும் பாதங்களில் அப்பிக் கொண்டு வந்திருப்பாள். நின்ற சந்தர்ப்பத்தில் புடவையின் நீர் வடிந்து கால் மண்ணைக் கழுவி விடும். மண் சிமெண்டுத் த்ரையில் தங்கி நீர் பிரிந்து முற்றத்திற்கு ஓடும்.’

கணவனைப் பத்து வயதில் இழந்து, அதற்குப் பிறகு வீட்டை விட்டே வெளியில் வராமல், நாற்பது வயதில் தகப்பனை இழந்து, அதிலிருந்து தான் சாகும் வரை எப்போதும் குளத்திலேயே பாசியைப் போல் வாழ்ந்து செத்துப் போன ஒரு பெண்ணைப் பற்றிய கதை ‘நீர்மை’. கதையில் ஒரு வார்த்தையில் கூட அவளுடைய தேகத்தின் வாதை எழுதப்படவில்லை என்றாலும் கதையின் அடிச்சரடாக இருப்பது அவள் தேகத்தின் விவரிக்க முடியாத காமம்தான். பத்து வயதில் விதவையானவள். நாற்பது வயது வரை அந்நியர்களையே பார்த்திராதவள். அப்படிப்பட்டவளுக்குக் காமம் என்றாலே என்னவென்று புரிந்திருக்காது. தன் தேகம் என்ன சொல்கிறது என்பதைக் கூட அவளால் அனுமானித்திருக்க முடியாது.

அவளைத் தண்ணீர்ப் பிசாசு என்றே ஊரார் சொல்கிறார்கள். ஒரே ஒரு நாள் கண்ணனும் அவனை ஒத்த பிள்ளைகளும் அவளை அவளுடைய வீட்டில் காண நேர்கிறது. கதையில் வரும் அந்த இடத்தின் அமானுஷ்யத் தன்மை உலக இலக்கியத்திலேயே அபூர்வம்...

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com