‘ராஜகோபாலன் நல்ல சிவப்பு, குள்ளம், மெலிந்த பூஞ்சை உடல். பூ மாதிரி இருப்பார். முழுசாக பத்து கிலோ எடை இருப்பாரா என்று சந்தேகம் வந்து விடும். சாப்பாடு கூட கொறிப்புதான். ‘இரண்டு இட்லி சாப்பிட்டேன்’ என்று இரண்டு விரல்களைக் காண்பித்து, கண்ணை அகட்டிக் கொண்டு சொல்வார் - ஏதோ இரண்டு பானை சோற்றைச் சாப்பிட்டது போல.
பல பெரியவர்களுக்குக் கிட்டுகிற ‘தனிப்பட்ட முக அமைப்பு’ அவருடையது. தலையில் பாதி வழுக்கை. கண்ணுக்கு தடிக் கண்ணாடி. கண் சதையை அரிந்த பின்பு அணியும் பூதக் கண்ணாடி. அதற்குப் பின்னால் இரண்டு கண்களும் இரண்டு மடங்கு பெரிதாகத் தெரியும். சிந்தனையில் ஆழ்ந்த கண்கள். அவருடைய உடலில் பெரிதாக இருந்தது கண் ஒன்றுதான். உலகத்தைப் பார்ப்பதுதான் பிழைப்பு என்று சொல்வது போல அந்தக் கண்ணாடியும் கண்களைப் பெரிதாக்கிக் காட்டும்.
ராஜகோபாலனுக்குத் தீவிரமாக சிந்திக்கும் ஆற்றல் இருந்தது. அது முகத்தில் தெரியும். எப்போது எழுதுவார் என்று எங்களுக்குத் தெரியாது. நட்டநடுநிசிக்கு வெகு நேரத்திற்குப் பிறகு எங்களை அனுப்பி விட்டுத்தான் அவர் எழுதியிருக்க வேண்டும். தீவிரமான சிந்தனையுடன் வேகமாக, குறுகிய நேரத்தில் செய்து விடுவார் என்று தோன்றுகிறது. மறுநாள் இரவு சந்திக்கும் பொழுது, எழுதி வைத்ததை, கதையையோ விமர்சனத்தையோ காண்பிப்பார். அடித்தல் திருத்தலின்றி, ஒரு முடிவான உணர்வோடு எதையும் எழுதியிருப்பார். செட்டாக, தெளிவாக எழுதியிருப்பார். ஒரு நேர்மையும் துணிச்சலும் பளிச்சென்று தெரியும் எழுத்து. அந்த நேர்மையிலும் துணிச்சலிலும் சத்தம், ஆர்ப்பாட்டம் ஏதும் மருந்துக்குக் கூட தொனிக்காது. கண்டிப்பான, பட்டுத் தெறித்த எழுத்து. அதே சமயம் மென்மையும் கண்யமும் அடக்கமும் நிறைந்த எழுத்து.
அது அவருடைய இயல்பு. பேசுவதும் மிக மென்மையான பேச்சு. சற்று தள்ளி உட்கார்ந்தால் காதில் விழாது. அபிப்பிராயங்களை அழுத்தமாக, உறுதியாகச் சொல்வார். நகைச்சுவையுடன் சொல்வார். புண்படுத்தாமல் சொல்வார்.’
கு.ப.ரா. பற்றிய தி.ஜானகிராமனின் சொற்சித்திரம் இது. கு.ப.ரா. பற்றி சிட்டி இப்படி எழுதுகிறார்:
‘கு.ப.ரா.வும் ந. பிச்சமூர்த்தியும் கும்பகோணத்தில் இருந்தார்கள். இருவரும் ‘மணிக்கொடி’க்கு அனுப்பிய எழுத்துக்கள் மூலம் சென்னையில் வ.ரா.வைச் சுற்றி இயங்கிய என் போன்றவர்களுக்குப் பரிச்சியமானார்கள். அவர்களிடமிருந்து தபாலில் கதையோ, கவிதையோ வரும் பொழுதெல்லாம் ஒரு பரபரப்பு ஏற்படும். புதுமைப்பித்தன், ராமையா போன்ற படைப்பாளிகளுடன் நெருங்கிப் பழகிக் கொண்டிருந்த எனக்கு இந்த கும்பகோணம் இரட்டையர்களைப் பார்க்க வேண்டும் என்று ஆவல்... அப்போது பிச்சமூர்த்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னை வந்திருந்த பிச்சமூர்த்திக்காக ராமையா ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்து கொண்ட எங்களில் சிலருக்கு டாகூரையே சந்தித்த ஒரு பிரமை ஏற்பட்டது. தாடியுடன் கம்பீரமாகத் தோன்றிய பிச்சமூர்த்தியைப் பார்த்த பிறகு அவருடைய ஜோடியான ராஜகோபாலன் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்வதே எனக்கு ஒரு மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருந்தது. சில மாதங்களுக்குள் நான் கும்பகோணம் சென்ற போது ராஜகோபாலனைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றேன். தோற்றத்தில் பிச்சமூர்த்தியை விட முற்றிலும் வேறுபட்டவராகக் காணப்பட்டது மட்டுமல்ல அதிர்ச்சிக்குக் காரணம், அழகு சொட்டும் கவிதைகளையும் கலைத்திறன் நிறைந்த கதைகளையும் எழுதிய ராஜகோபாலன், அன்று, நான் முதல் முதலில் சந்தித்த போது தம்முடைய பார்வையை இழந்திருந்தார்.’
அப்போது கு.ப.ரா.வுக்குக் கண்களில் சதை வளர்ச்சியால் பார்வை தடைபட்டிருந்தது. அவர் சொல்லச் சொல்ல அவரது சகோதரி கு.ப. சேது அம்மாள்தான் எழுதியிருக்கிறார். சேது அம்மாளும் அப்போது சிறுகதைகள் எழுதி பிரபலமாக இருந்திருக்கிறார். ‘மிகச் சிறிய வயதிலேயே கு.ப.சேது அம்மாள் கணவனை இழந்துவிட்டார். இது கு.ப.ராஜகோபலனைச் சங்கடம்கொள்ளச் செய்தது. 1943ஆம் ஆண்டு கு.ப.ரா. முயற்சிக்குப் பின் கு.ப. சேது அம்மாளுக்கு மறுமணம் நடைபெற்றது. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த பிறகு விரைவிலேயே சேது அம்மாள் காலமானார். கு.ப.ராஜகோபாலனுடைய பல கதைகள் சேது அம்மாளின் இளவயது வாழ்க்கையுடன் தொடர்புடையவை’ என்று எழுதுகிறார் தளவாய் சுந்தரம். கு.ப.ரா.வின் வாழ்க்கை பற்றிய இவரது அருமையான கட்டுரை ‘அழியாச் சுடர்கள்’ இணைய இதழில் கிடைக்கிறது.
மேலும் கு.ப.ரா. பற்றி சிட்டி:
‘பிள்ளையார் கோவில் தெருவில் பிச்சமூர்த்தியின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வசித்து வந்த கு.ப.ரா.வுடன் சில நாட்கள் தங்கியிருந்தது எனக்கு ஒரு அபூர்வ அனுபவமாக அமைந்தது. கீழே சாப்பிட்டு விட்டு மாடியில் அவருடைய அறைக்குப் படியேறிச் செல்லும் பொழுது நான் கு.ப.ரா.வைக் கை பிடித்து அழைத்துச் செல்வது வழக்கம். உண்மையில் அவர்தான் எனக்கு வழி காட்டினார். பல ஆண்டுகள் அவர் ஏறி இறங்கிப் பழகிய படிகள் எனக்குத்தான் புதியவை. அத்துடன் அவருக்கு அகக்கண் துணையும் இருந்தது. மாடி அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒருமுறை அவர் கூறியதைக் கேட்டு வியப்படைந்தேன். அந்த மாடியில் ஒரு ஜன்னல் வழியாக எதிர்ப்புறத்து புழக்கடைகளில் தோன்றிய செடி கொடிகள் மற்றும் குடும்ப நடவடிக்கைகள் முதலியவற்றைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென்று கு.ப.ரா. சொன்னார்.
‘ரொம்ப சுவாரஸ்யமான காட்சிகளைப் பார்க்கலாம். இந்த ஜன்னல் ஒரு மாயாலோகத்தையே நமக்கு எடுத்துக் காட்டும்.’
நான் கண்ணால் கண்டு ரசித்ததை கண் பார்வை இழந்த கு.ப.ரா. அறிந்து விளக்கம் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து ஆங்கிலக் கவிஞன் கீட்ஸின் ‘Ode to a Nightingale' என்ற கவிதையிலிருந்து
Magic casements opening on the foam
Of perilous seas in feary lands forlorn
(தனிமை சூழ்ந்த மாயாலோகங்களில், மர்மச் சாளரங்களினூடே காணப்படும் அலைகடல் காட்சி)
என்று அவர் தம்முடைய மென்மையான குரலில் பாடிய போது அவருடைய திருஷ்டியின் அழகு நிறைந்த தன்மை எனக்குப் பளிச்செனப் பட்டது.’
நினைத்துப் பார்க்கிறேன். முன்கூட்டியே சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று ஒருவர் சென்னையிலிருந்து கும்பகோணத்திலிருக்கும் இரண்டு எழுத்தாளர்களைச் சந்திக்க கிளம்பிப் போகிறார். இருவரும் பக்கத்துப் பக்கத்து வீடு. ஒருவர் வெளியூர் போயிருக்கிறார். இன்னொருவருக்குக் கண்களில் சதை வளர்ச்சியால் பார்வை போயிருக்கிறது. யாராவது கைப்பிடித்துத்தான் நடத்திச் செல்ல வேண்டும். அந்த நிலையில் அந்த சென்னைக்காரர் கண் பார்வை போய் விட்ட எழுத்தாளரின் வீட்டில் சில தினங்கள் தங்கி விட்டு வருகிறார்.
மேலே சிட்டி விவரித்துள்ள காட்சிகளை மீண்டும் மீண்டும் தியானித்துப் பார்க்கிறேன். கு.ப.ரா. என் கண் முன்னே கீட்ஸின் அந்தக் கவிதையைத் தன் மென்குரலால் பாடுகிறார்.
நான் கும்பகோணம் சென்றதில்லை. ஒருமுறை அங்கே சென்று அந்தப் பிள்ளையார் கோவில் தெருவை தரிசித்து வரலாம் போல் இருக்கிறது. அந்தத் தெருவில்தானே கு.ப.ரா.வும் பிச்சமூர்த்தியும் புழங்கியிருப்பார்கள். பிச்சமூர்த்தி கு.ப.ரா.வை விட இரண்டு வயது மூத்தவர். தி. ஜானகிராமனும் எம்.வி. வெங்கட்ராமும் அந்த இரட்டையரை விட பதினெட்டு பத்தொன்பது வயது இளையவர்கள். அடுத்த தலைமுறை. ஆனாலும் பழகியிருக்கிறார்கள். அவர்களும் அந்தப் பிள்ளையார் கோவில் தெருவில் நடந்திருப்பார்கள்.
தி. ஜானகிராமன் சொல்கிறார்:
‘நாங்கள் ராஜகோபாலனோடு பழகியது அவருடைய கடைசி காலத்தில்தான். அதாவது, ஒன்றரை வருட காலம். 1942 கடைசியிலிருந்து 1944 ஏப்ரல் வரை. நாங்கள் என்று என்னையும் கரிச்சான் குஞ்சுவையும் சொல்லிக் கொள்கிறேன். இன்னும் சற்று அதிக காலம் பழகியவர்கள் சாலிவாஹனன், திருலோக சீதாராம், அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆகியவர்கள். சிட்டி, பிச்சமூர்த்தி என்று அவரோடு வெகு காலமாக நெருக்கமாக இருந்தவர்கள் திருச்சியிலும் செட்டிகுளத்திலும் இருந்தார்கள். இந்த ஒன்றரை வருட காலம் பழகியதும் கும்பகோணத்தில். அப்பொழுது ராஜகோபாலன், கண் பார்வையே போய் விடும் நிலையிலிருந்து சிகிச்சையால் மீண்டு, கும்பகோணத்தில் வசித்து வந்தார். ‘கிராம ஊழியன்’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு திருலோக சீதாராம் அவரைக் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில்தான் நாங்கள் நேரில் பரிச்சயமானோம். அதற்குச் சில காலம் முன்பு என்று ஞாபகம். நான் தற்செயலாக ஆனையடி கோவிலுக்கு முன் அவரைச் சந்தித்து நானாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனக்கு இருபத்திரண்டு வயது அப்பொழுது. ‘ஹீரோ வொர்ஷிப்’பில் ஈடுபட்டுள்ள இளைஞன் பாணியில்தான் பேசினேன். சுமார் ஐந்து ஆண்டுகளாக அவர் கதைகளை வாசித்து ஏற்பட்ட பிரமிப்பையும், இலக்கிய உற்சாகத்தையும் பற்றிச் சொன்னேன். எல்லாம் மூன்று நிமிடங்களில் முடிந்து விட்டது. வீட்டுக்கு வாருங்களேன் என்று நேரம் சொன்னார். அன்று மாலை தொடங்கிய பேச்சு, நாள்தோறும் - இல்லை, இரவு தோறும் - சராசரி ஏழு மணி எட்டு மணி நேரம் நடந்து கொண்டேயிருந்தது.
ராஜகோபாலனோடு வம்பு பேச முடியாது. இலக்கியம்தான் பேச முடியும். வம்பு கூட இலக்கிய சம்பந்தமாகத்தான் இருக்கும். இலக்கியம் படைப்பவர்களின் குடும்பம், வரும்படி, தனி குணங்கள் - இவற்றைப் பற்றி இராது. ராஜகோபாலன் வெற்றிலை, புகையிலை நிறைய போடுவார். ஒன்பது மணிக்குச் சாப்பிட்டுத் தொடங்குகிற பேச்சு, நள்ளிரவு கடந்து, விடியற்காலை மூன்று மணி, நான்கு மணி வரை இழுத்துக் கொண்டே போகும். வெற்றிலை தீர்ந்து விட்டால் மூலையில் கிள்ளியெறிந்த வெற்றிலைக் காம்புகளை எடுத்து அவற்றில் சுண்ணாம்பைப் பூசிப் போட்டுக் கொள்வார். எனக்குக் கல்யாணம் ஆன புதிது அப்பொழுது. ஒரு சமயம் மேனாட்டு ஊராக இருந்திருந்தால், ஒரு நாளைப் பார்த்தாற்போல் விடியற்காலை நேரத்திலேயே வீடு திரும்பி வரும் காரணத்திற்காக விவாகரத்து வழக்குக் கூட நடந்திருக்கும்.’
***
கும்பகோணத்தில் கர்ண கம்ம என்ற தெலுங்கு பிராமண குடும்பத்தில் 1902-ல் பிறந்தார் கு.ப.ரா. தந்தை பட்டாபிராமய்யர். தாய் ஜானகி. தாயார் தெலுங்கு மொழியிலும் இசையிலும் புலமை படைத்தவர். கு.ப.ரா.வின் தமக்கை ராஜம்மாள். தங்கை சேது அம்மாள். ஆறு வயதில் குடும்பம் திருச்சி சென்றது. அங்கே உள்ள கொண்டையம்பேட்டை பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார் ராஜகோபாலன். ‘பிராப்தம்’ என்ற சிறுகதையில் அது பற்றி இப்படி எழுதுகிறார்:
மாதுவுக்கு ஆறு வயசான பொழுதே அவரைத் திருச்சிக்கு மாற்றி விட்டார்கள். ஆகையால் அவனுக்கு நல்ல நினைவு வந்த நாள் முதல், திருச்சி கொண்டையம்பேட்டை என்ற அக்கிரகாரத்தில்தான் வாசம். அது பட்டிக்காடும் அல்ல, பட்டினவாசமும் அல்ல. பெரிய தோப்புக்குள் அமைந்தது போல எப்பொழுதும் குளுமையாக இருக்கும். இரண்டு சிறகுகளுக்குப் பின்னும் வாய்க்கால்கள். கிட்டே, திருமஞ்சனக் காவேரி என்ற பெரிய வாய்க்கால்; திருவானைக்காவலுக்கு அடுத்தது; கோட்டைக்கும் ஸ்ரீரங்கத்திற்கும் நடுவு என்பது போல அமைந்தது.
1918-ல் மெட்ரிகுலேஷனில் தேர்ச்சி பெற்று திருச்சி நேஷனல் காலேஜில் இண்டர்மீடியட் படித்தார் கு.ப.ரா. பதினெட்டு வயதில் தந்தை இறந்ததால் குடும்பப் பொறுப்பு அவர் மீது விழுந்தது. ஆனாலும் படிப்பை நிறுத்தி விடாமல் இண்டர்மீடியட்டில் தேறினார். பிறகு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. சேர்ந்தார். சிறப்புப் பாடம் சம்ஸ்கிருதம். கல்லூரி முதல்வர் சாரநாதன், ஆங்கிலப் பேராசிரியர் ஏ. ராமய்யர் இருவரது வழிகாட்டலில் ஆங்கில, சம்ஸ்கிருத இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
ஒருமுறை தாகூர் கும்பகோணம் கல்லூரிக்கு வந்து கவிதை வாசித்ததைக் கேட்டு, வங்க மொழியில் புலமை பெற்றிருந்த தனது ஆசிரியர் ஏ. ராமய்யரிடம் வங்க மொழியைக் கற்றார். பிற்காலத்தில் வங்க மொழியிலிருந்து நேரடியாக சில படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பதற்கு இது அவருக்கு உதவியாக இருந்தது.
ஆர்.வி. கிருஷ்ணமாச்சாரியார் என்ற சம்ஸ்கிருத அறிஞரோடு சேர்ந்து ‘காளிதாசர்’ என்ற மாத வெளியீட்டை ஆரம்பித்தார். ஷேக்ஸ்பியர் சங்கம் என்ற இலக்கிய அமைப்பைத் தனது சக மாணவர்களோடும் ஆங்கிலப் பேராசிரியரான எஸ். நரசிம்மையங்காரோடும் சேர்ந்து துவக்கினார். அதில் இருபது இருபத்தைந்து அங்கத்தினர் இருந்தார்கள். அந்தச் சங்கம் ஞாயிற்றுக்கிழமை தோறும் கூடியது. சிலர் சொந்தமாக கதை கட்டுரை எழுதி வந்து படிப்பார்கள். சிலர் ஷேக்ஸ்பியரிலிருந்து நாடகப் பகுதிகளைப் படித்தும் நடித்தும் காட்டுவார்கள். கு.ப.ரா. அதில் தான் எழுதிய கவிதைகளைப் படிப்பார்.
அக்காலத்தில் கு.ப.ரா.வின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ந. பிச்சமூர்த்தி. ‘இரட்டையர்கள் என்று என்னையும் கு.ப.ரா.வையும் ஸ்ரீ வ.ரா. குறிப்பிடுவது வழக்கம். எங்கள் ஊரில் கூட எங்களை ராம - லக்ஷ்ஹ்மணர்கள் என்று சொல்வது வழக்கம்’ என்றும். கும்பகோணத்தில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் ராஜகோபாலன். படிப்புக்காக வெளியூர் போன போதிலும் திரும்ப விடுமுறைக்கு வரும் நாட்களில் என்னுடனேயேதான் காணப்படுவான். அவன் உத்தியோகம் பார்த்த காலத்திலும் கூட கும்பகோணம் வரும் போது எப்போதும் எங்கள் இருவரையும் சேர்ந்துதான் பார்க்க முடியும். இருவரும் ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுத ஆரம்பித்தோம்’ என்றும் கு.ப.ரா.வுக்கும் தனக்குமான நட்பு பற்றிக் கூறுகிறார் ந. பிச்சமூர்த்தி. இருவரும் சேர்ந்து கும்பகோணத்தில் ‘பாரதி சங்கம்’ என்ற அமைப்பையும் நிறுவியிருக்கின்றனர்.
இருபத்து நான்காம் வயதில் கு.ப.ரா.வுக்குத் திருமணம் நடந்தது. அதாவது, 1926-ம் ஆண்டு. அந்தக் காலத்து வழக்கப்படி திருமணம் ஆவதற்கு இது அதிக வயதுதான். ஏன் இத்தனை தாமதம் என்று அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் காண இயலவில்லை. மனைவி பெயர் அம்மணி அம்மாள். திருமணத்துக்குப் பிறகு மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் தாலுகா அலுவலகத்தில் கணக்கராகச் சேர்கிறார் கு.ப.ரா. இது பற்றி ‘புனர்ஜன்மம்’ என்ற கதையில் குறிப்பிடுகிறார்.
இணைப்பு:
கு.ப.ரா. பற்றி தளவாய் சுந்தரம் http://azhiyasudargal.blogspot.in/2008/09/blog-post_2265.html
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.