யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கொள்கையில் நம்பிக்கை உள்ளவன் நான். நான் மட்டும் அல்ல; எழுத்தாளர் என்றாலே அப்படித்தான் இருப்பார்கள் என்றும் நம்புகிறேன். ஞானிகளுக்கும் துறவிகளுக்கும் தேசம், இனம், மொழி, ஜாதி, மதம் என்றெல்லாம் இருக்கமுடியுமா என்ன? ஆனால் இந்த விஷயத்தைச் சற்றே உணர்ச்சிவசப்படாமல் எட்டத்திலிருந்து அணுகவேண்டும். ஒவ்வொரு ஊர் மண்ணுக்கும் ஒரு விசேஷமான குணம் உண்டு. ஆம்பூர் பிரியாணிக்கு ஏன் அத்தனை ருசி என்றால் அது அந்த ஊர் நீரின் ருசி. அந்த நீரிலிருந்து விளையும் பயிரைத் தின்று வளரும் ஆடுகளின் இறைச்சி ருசியில் ஆம்பூர் நீரும் தாவரமும் கலந்திருக்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு ஒவ்வொரு இனக்குழுவுக்கும் என்று பிரத்தியேகமான உணவு, மொழி, கலாசாரம் எல்லாம் இருக்கிறது. அப்படி இல்லை; எல்லாம் ஒன்று எனச் சொல்வது பொய். இதில் உயர்வு தாழ்வுதான் கூடாதே ஒழிய வித்தியாசம் என்பது இருக்கத்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் நெருங்கிய உறவினர்களான சி.வி. ராமனும், சந்திர சேகரும் ஒரே துறையில் நோபல் பரிசு பெற்றிருக்க முடியாது.
என் மனைவி அவந்திகா ஸ்ரீவைஷ்ணவ குலம். நான் கலவை. மைலாப்பூரிலும் மாம்பலத்திலும் குடியிருக்க வீடு பார்த்தபோது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசதியாகக் கிடைத்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். அங்கே இருந்த எல்லாக் குடும்பங்களுமே பிராமணர்கள். நான் அங்கே போய் இருந்துகொண்டு மீனும் இறைச்சியும் சமைத்தால் அவர்கள் நிம்மதி கெட்டு விடும். அதே சமயம் என்னாலும் அசைவம் உண்ணாமல் வாழமுடியாது. பேசாமல் ஓட்டலில் சாப்பிட்டு விடேன் என்றாள் அவந்திகா. ஓட்டலில் அசைவம் சாப்பிடுவதை விட அசைவத்தையே விட்டு விடலாம்; அது டாஸ்மாக்கில் மது அருந்துவதைப் போல என்று சொல்லிவிட்டுக் கடைசியில் இஸ்லாமியர் அதிகம் வாழும் ஒரு தெருவில் தனி வீட்டுக்கு வந்துவிட்டோம். ஆனால் அவந்திகாவுக்கு வருடத்தில் ஒரே ஒருநாள் மட்டும் பிரச்னை. பக்ரீத் அன்று மட்டும் வீட்டை விட்டு வெளியில் தலை காட்ட மாட்டாள்.
என் தந்தையின் பூர்வீகம் ஆந்திரா. அதனால்தானோ என்னவோ எனக்கு ஆந்திர உணவு என்றால் அப்படிப் பிடிக்கும். அக்கார அடிசிலுக்கும் மாகாளிக் கிழங்கு ஊறுகாய்க்கும் எப்படி நான் அடிமையோ அதேபோல கோங்குரா சட்னிக்கும். எண்பதுகளில் நான் தில்லியில் இருந்தபோது ஆந்திரா செல்லும் என் அலுவலக சகாக்கள் திரும்பி வரும்போது ஒரிஜினல் கோங்குரா சட்னியை எனக்காக எடுத்து வருவார்கள்.
இதற்கும் கு.ப.ரா.வுக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் பிராமண இனக்குழுவைச் சார்ந்தவர் என்றால் - இன்றைய தினம் அப்படிப்பட்ட இனக்குழு அடையாளங்களை நாம் பெரும்பாலும் இழந்துவிட்டோம் என்ற போதிலும் - உங்கள் முன்னோர் எப்படியெப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் வாசிக்க வேண்டியது கு.ப.ரா.வும் க.நா.சு.வும். ‘எனக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லை; அதைவிட்டு நான் வெளியே வந்துவிட்டேன்’ என்று ஒருவர் சொல்லலாம்; அப்படித்தான் சொல்லவும் வேண்டும். ஆனாலும் அமெரிக்காவில் வாழ்ந்த அலெக்ஸ் ஹேலே என்பவர் தன் மூதாதையரைத் தேடி ஆஃப்ரிக்கா செல்கிறார். ஏழு தலைமுறைகளுக்கு முன்னே - பதினெட்டாம் நூற்றாண்டில் - காம்பியா என்ற தேசத்தில் கிந்த்தா குந்த்தே என்ற பதினேழு வயது இளைஞன் - மிருகங்களை வேட்டையாடிப் பிடிப்பது போல் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடிமையாக விற்கப்படுகிறான். வட அமெரிக்காவில் வசிக்கும் கருப்பின மனிதர்களின் வரலாற்றில் ஒரு மின்னல் தோற்றத்தைக் கொடுக்கும் நாவல் ‘வேர்கள்’ என்ற தலைப்பில் வெளியாகி உலக அளவில் பிரபலமானது.
அதே போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்களாகத் திகழக் கூடியவை கு.ப.ரா. மற்றும் க.நா.சு.வின் எழுத்துக்கள். சென்ற நூற்றாண்டின் பிராமண சமூகம் எப்படி வாழ்ந்தது என்பது பற்றிய ஆவணம் மட்டுமல்லாது சர்வதேச இலக்கியத் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன மேற்கண்ட இருவரின் எழுத்துக்களும்.
‘ராஜகோபாலனைப் போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுதவேண்டும் என்று எனக்கு வெகுகால ஆசை. அது நிறைவேற மறுத்துக் கொண்டேயிருக்கிறது. அவருடைய எழுத்துக்களைப் படிக்கும்பொழுது ஒரு பிரமிப்புத்தான் ஏற்படுகிறது. பட்டுப் போன்ற சொற்களிலும், பத்துப் பக்கங்களுக்கு மேற்படாத கதைகளிலும் எப்படி இவ்வளவு பெரிய கலை வடிவங்களையும் உணர்ச்சி முனைப்பையும் வடிக்கிறார் அவர்! இந்தத் தொகுப்பிலேயே உள்ள ‘மூன்று உள்ளங்கள்’, ‘படுத்த படுக்கையில்’, ‘சிறிது வெளிச்சம்’, ‘தாயாரின் திருப்தி’ - இவைகளை மீண்டும் மீண்டும் படிக்கும்போது ஒரு பிரமிப்பே மிஞ்சுகிறது. இத்தனை சிக்கனத்தை எப்படி இவர் சாதிக்கிறார் என்ற பிரமிப்பு. ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் வரிக்குள்ளும் எத்தனை ஒளிகள், கோர்வைகள்! எழுதியதை விட எழுதாமல் கழித்ததே முக்கால்வாசி என்று தோன்றுகிறது. ஆடம்பரம் இல்லாத எளிய சொற்களுக்குக் கூட, உணர்ச்சி முனைப்பாலும், ஒரு கூட்டுச் சக்தியாலும் ஒரு புதிய பொருளும் வேகமும் கிடைக்கின்றன. சாதாரண சொற்களுக்குக் கூட ஒரு புதிய வீர்யத்தை ஏற்றிய பாரதியின் வெற்றியைத்தான், ராஜகோபாலனின் கதைச் சொற்கள் கண்டிருக்கின்றன. அதனாலேயே சத்தமில்லாத வேகமும், சிக்கனமும் கைகூடி அவர் கதைகள் அடர்த்தியும், இறுக்கமும் நிறைந்த சிற்ப வெற்றிகளாகத் திகழ்கின்றன. இத்தனை வெற்றிகள் திணித்த கதைகளை தமிழில் யாரும் இதுவரை எழுதவில்லை. உண்மையாகவே மௌனங்கள் நிறைந்த சிறுகதைகளை அவர் ஒருவர்தான் எழுதியிருக்கிறார்.’
கு.ப.ரா. பற்றி இப்படிச் சொல்லியிருப்பவர் தி.ஜானகிராமன். கு.ப.ரா.வின் ஒவ்வொரு கதையைப் படிக்கும்போதும் தி.ஜா. சொல்வதைப் போலவே நானும் உணர்ந்தேன். கூடவே ஒரு வேதனையும் ஏற்பட்டது. தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லி; இந்தியாவிலேயே ஆகச் சிறந்த நாவல்களை எழுதியிருப்பவர் என தி.ஜானகிராமனை தமிழ்ப் படைப்புலகம் கொண்டாடுகிறது. என்னுடைய கருத்தும் அஃதே. அப்படிப்பட்ட ஒருவர், தமிழில் இதுவரை யாராலும் விஞ்ச முடியாதவர் என கு.ப.ரா. பற்றிச் சொல்லியும் யாரும் கு.ப.ரா.வைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லையே? சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றிய எந்தக் கட்டுரையை எடுத்தாலும் அதில் புதுமைப்பித்தன் தான் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகன் எனக் குறிப்பிடுகிறார்கள். இல்லாவிட்டால் மௌனி. ஒரே காலகட்டத்தில் எழுதிய கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி ஆகிய நால்வரையும் அதே வரிசையில்தான் நான் வகைப்படுத்துவேன். கு.ப.ரா. பற்றி தி.ஜா. சொல்வதே சரி. கு.ப.ரா. தான் தமிழ்ச் சிறுகதையின் மகுடம். அதற்கு அடுத்தது தான் மற்றவர்களெல்லாம். புதுமைப்பித்தனின் படைப்புலகில் இருக்கும் பன்முகத்தன்மை (versatality) கு.ப.ரா.விடம் இல்லை என்பதால் - நனவோடை, மிகை எதார்த்தம், மாய எதார்த்தவாதம் போன்ற பல வகைகளில் (genre) கு.ப.ரா. எழுதவில்லை என்பதாலேயே அவரைப் பத்தோடு பதினொன்றாக, புதுமைப்பித்தன் விட்ட இடைவெளிகளை நிரப்பியவராக வைத்துவிடமுடியாது. ஏனென்றால், புதுமைப்பித்தனால் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று வர்ணிக்கப்பட்ட மௌனி தன் வாழ்நாள் முழுக்கவும் எழுதியது 24 சிறுகதைகள். அந்த 24 சிறுகதைகளிலும் ஒரே கருதான். ஒரே கதையைத்தான் அவர் மாற்றி மாற்றி வேறுவேறாக எழுதிப் பார்த்தார். ஆனால் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகர் என எல்லா விமரிசகர்களாலும் அழைக்கப்படும் புதுமைப்பித்தன் மௌனியைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று சொல்கிறார்; ஆக சிறுகதையின் திருமூலரே ஒரே கதையை மாற்றி மாற்றி வாழ்நாள் முழுவதும் எழுதுகிறபோது ஆண் - பெண் உறவின் சிடுக்குகளைப் பற்றி மட்டுமே பேசிய கு.ப.ரா.வை எப்படி பத்தோடு பதினொன்றாகச் சொல்லலாம்? இதுபோன்ற இலக்கிய மதிப்பீடுகளில் நாம் கொஞ்சம் நம்முடைய தனிப்பட்ட ரசனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சர்வதேச இலக்கியப் பார்வையோடு கொஞ்சம் பொதுவான நிலையிலிருந்து அவதானிக்க வேண்டும்.
அப்படி அவதானிக்க முடியாமல் போனதற்குக் காரணம், எந்தக் காலத்திலுமே ஆண் - பெண் உறவு என்று வருகிற போது அது ஒரு பேசக் கூடாத பொருளாகவும், அப்படியே பேசினாலும் அது மற்றவைகளையெல்லாம் விட அற்ப விஷயமாகவுமே கருதுவதால்தான் கு.ப.ரா. பத்தோடு பதினொன்றாகவும் இடைவெளிகளை நிரப்புபவராகவும் தோன்றுகிறார்.
‘வழிகாட்டி’ என்ற கட்டுரையில் தி. ஜானகிராமன் தனக்கும் கரிச்சான் குஞ்சுவுக்கும் வழிகாட்டியாக விளங்கிய கு.ப.ரா. பற்றி இப்படி எழுதுகிறார்:
‘நாங்கள் (தி.ஜா.வும் கரிச்சான் குஞ்சுவும்) சற்று அதிகமாக அவரைப் பற்றியே பேசியதற்குக் காரணம் ஒரு கோபம். ‘செக்ஸ்’ கதைகளை எழுதி அவர் தீட்டுப்பட்டு விட்டது போலவும், இலக்கிய நெறியிலிருந்து குப்புறச் சரிந்து விட்டதாகவும் சில விமரிசகர்கள் அந்தக் காலத்தில் (முப்பதுகளில்) எழுதிக் கொண்டிருந்தார்கள். கற்பிழந்து ‘அந்தத்’ தெருவுக்குக் குடி போய் விட்ட பெண் பிள்ளை பற்றிப் பேசுவது போல் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர் மறுப்போ, பதிலோ எழுதிய ஞாபகம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களோடு பல நாட்கள் அதைப் பற்றிப் பேசியிருக்கிறார். ‘இதைப் படிக்கிறபோது, தன் பெண்டாட்டியைப் பற்றி எழுதுகிறானோ என்று கவலைப்படுகிறார்களோ?’ என்று இயல்பான மெல்லிய குரலில் பதில் அடங்கிய கேள்வி ஒன்றை அவர் எங்களிடம் கேட்டது ஞாபகம் இருக்கிறது.’
‘சிறிது வெளிச்சம்’ என்ற கதையில் ஓர் இளம் எழுத்தாளர் சென்னையில் ஒரு வீட்டு ரேழி உள்ளில் ஒண்டுக் குடித்தனம் இருக்கிறார். கல்யாணமாகாதவர். உள்ளே ஒரே ஒரு குடித்தனம். கோபாலய்யர், சாவித்திரி. திருமணம் ஆனபோது சாவித்திரியின் வயது பதினைந்து. இப்போது பதினெட்டு இருக்கும். கோபாலய்யருக்கு எங்கோ ஒரு வங்கியில் வேலை. பகல் முழுவதும் வீட்டில் இருக்க மாட்டான். இரவில் வீட்டில் இருப்பதாகப் பெயர். சாப்பிட்டு விட்டு வெளியே போவான். இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டுவான். எழுத்தாளர் கூச்ச சுபாவம் உள்ளவராதலால் கோபாலய்யர் அலுவலகத்துக்குப் போகும் முன்பே முற்றத்திலிருக்கும் குழாயை உபயோகித்துக் கொள்வார். கோபாலய்யரின் மனைவி சாவித்திரி யாருடனும் வம்பு பேச மாட்டாள். வெளியிலும் வருவதில்லை.
ஒருநாள் கோபாலய்யர் இரவு இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டும் போது சாவித்திரி கதவைத் திறக்கவில்லை; தூங்கி விட்டாள். எழுத்தாளர்தான் கதவைத் திறக்கிறார். உள்ளே போனவன் உறங்கிக் கொண்டிருந்த சாவித்திரியை எழுப்பி உதைக்கிறான். புருஷன் பெண்சாதி கலகத்தில் பிற மனிதன் தலையிடக் கூடாது என்று சும்மா இருந்து விடுகிறார் எழுத்தாளர்.
மறுநாள் அவள் விழித்திருந்து கதவைத் திறந்தும் அடி விழுகிறது. எழுத்தாளர் அவனைத் தட்டிக் கேட்கிறார். போலீஸுக்குத் தகவல் கொடுப்பேன் என்கிறார். கோபாலய்யர் வீட்டை விட்டு வெளியே போய் விடுகிறான்.
சாவித்திரி உள்ளே போய்க் கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள். இனி கு.ப.ரா.:
‘தூக்கம் வரவில்லை. சாவித்திரியின் உருவம் என் முன் நின்றது. நல்ல யௌவனத்தின் உன்னத சோபையில் ஆழ்ந்த துக்கம் ஒன்று அழகிய சருமத்தில் மேகநீர் பாய்ந்தது போலத் தென்பட்டது. சிவப்பு என்று சொல்கிறோமே, அந்த மாதிரி கண்ணுக்கு இதமான சிவப்பு. இதழ்கள் மாந்தளிர்கள் போல இருந்தன. அப்பொழுதுதான் அந்த மின்சார விளக்கின் வெளிச்சத்தில் கண்டேன். கண்களுக்குப் பச்சை விளக்கு அளிக்கும் குளிர்ச்சியைப் போன்ற ஒரு ஒளி அவள் தேகத்திலிருந்து வீசிற்று.
அவளையா இந்த மனிதன் இந்த மாதிரி...!
தாழ்ப்பாள் எடுபடும் சத்தம் கேட்டது.’
சாவித்திரி எழுத்தாளரின் வீட்டுக்குள் வருகிறாள். தன் இருண்டு போன வாழ்வைப் பற்றிச் சொல்கிறாள். புருஷனிடம் வந்த சில மாதங்கள் பெண் புதிதாக இருக்கிறாள். பிறகு புதிதான பானம் குடித்துத் தீர்ந்த பாத்திரம் போலத்தான் அவள்...
தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறாள். முடியவில்லை. இடையில் எழுத்தாளர் உன் புருஷன் வந்து ஏதாவது தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறான் என்று எச்சரிக்கிறார். ‘இனிமேல் என்ன செய்ய முடியும்? கொலைதானே செய்யலாம்? அதற்கு மேல்?’ என்கிறாள் சாவித்திரி.
எழுத்தாளர் சாவித்திரியைத் தன்னுடன் வாழ வருமாறு அழைக்கிறார். அவளுக்கு நம்பிக்கை இல்லை. ‘என் புருஷனைப் போல் என்னிடம் பல்லைக் காட்டின மனிதன் இருக்க மாட்டான். நான் குரூபியல்ல, கிழவியல்ல, நோய் கொண்டவள் அல்ல. இதையும் சொல்லுகிறேன்... மிருக இச்சைக்கு பதில் சொல்லாதவளும் அல்ல. போதுமா?’
‘சாவித்திரி, உன் உள்ளத்தில் ஏற்பட்ட சோகத்தால் நீ இப்படிப் பேசுகிறாய். என்றாவது நீ சுகம் என்பதை ருசி பார்த்திருக்கிறாயா?’
‘எது சுகம்? நகைகள் போட்டுக் கொள்வதா? என் தகப்பனார் நாகப்பட்டினத்தில் பெரிய வக்கீல். பணக்காரர். புடவை, ரவிக்கை நான் அணியாத தினுசு கிடையாது. சாப்பாடா, அது எனக்குப் பிடிக்காது. வேறென்ன பாக்கி. சரீர சுகம் நான் ஒருநாளும் அடையவில்லை இதுவரையில்.’
‘அதாவது...’
‘என் புருஷன் என்னை அனுபவித்துக் குலைத்திருக்கிறான். நான் சுகம் என்பதைக் காணவில்லை.’
மேலும் சற்று நேர சம்பாஷணைக்குப் பிறகு அவளைத் தன் படுக்கையில் படுக்க வைக்கிறார் எழுத்தாளர்.
அவ்வளவு ரகஸ்யங்களை ஒரேயடியாக வெளியே கொட்டிய இதழ்கள் ஓய்ந்து போனது போலப் பிரிந்தபடியே கிடந்தன.
திடீரென்று, ‘அம்மா, போதுமடி!’ என்று கண்களை மூடியவண்ணமே முனகினாள்.
‘சாவித்திரி, என்னம்மா?’ என்று நான் குனிந்து அவள் முகத்துடன் முகம் வைத்துக்கொண்டேன்.
‘போதும்!’
‘சாவித்திரி, விளக்கு...’
அவள் திடீரென்று எழுந்து உட்கார்ந்தாள்.
‘ஆமாம், விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக் கொள்ளுங்கள். சற்று நேரம் இருந்த வெளிச்சம் போதும்!’ என்று எழுந்து நின்றாள்.
‘சிறிது வெளிச்சம்’ என்ற இந்தச் சிறுகதை ‘கலாமோகினி’யில் வெளிவந்த ஆண்டு 1943!
***
‘ஆண் பெண் உறவையே முக்கியமான விஷயமாகக் கையாண்டதால் அவன் (கு.ப.ரா.) எழுத்தில் ஏதோ பச்சையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். பெண் மனம் இப்படியா இருக்கிறது என்று நினைக்க இஷ்டப்படாதவர்கள் - உண்மையைப் பார்க்க, பேசப் பயந்தவர்கள் - கூறும் பேச்சு இது. அவர்கள் மறுப்பதே அவன் எழுத்தின் உண்மைக்கு அத்தாட்சி. பச்சையாக இருந்தால் அது அவன் குற்றமன்று. ஆண் பெண் உறவு இப்பொழுது நிலவி வரும் முறையின் குற்றம்’ என்று ந. பிச்சமூர்த்தி கூறுகிறார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.