நவீன தமிழ் உரைநடையின் முன்னோடிகள் என பாரதி, வ.வே.சு. ஐயர், மாதவையா போன்றவர்களைச் சொல்லலாம். அதற்கு அடுத்து தமிழ் உரைநடையை முன்னெடுத்துச் சென்றவர்களில் அதிமுக்கியமானவர்கள் கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, வ.ரா., புதுமைப்பித்தன். முப்பதுகள், நாற்பதுகளில் நடந்த இந்தத் தமிழ் உரைநடை மறுமலர்ச்சியில் பிரதானமான இடம் கு.ப.ரா.வுக்கே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். சிறுகதை, கட்டுரை, நாவல், மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் கு.ப.ரா. பிற்கால சந்ததியினருக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரை வெறும் சிறுகதை ஆசிரியராகவும், அதிலும் ஒரு குறிப்பிட்ட வகையை மட்டுமே எழுதினார் என பத்தோடு பதினொன்றாகவும் கருதுவது கு.ப.ரா.வின் மகத்தான பணிக்குச் செய்யும் நியாயம் ஆகாது.
கு.ப.ரா.வும் சிட்டியும் (பெ.கோ. சுந்தரராஜன்) இணைந்து1937-ல் ’கண்ணன் என் கவி : பாரதியின் கவிதையும் இலக்கிய பீடமும்’ என்ற 144 பக்க நூலை எழுதியிருக்கின்றனர். ஆறு அணா விலையுள்ள அந்த நூலை ‘சுதந்திரச் சங்கு காரியாலயம்’ பதிப்பித்துள்ளது. ‘இம்முயற்சிக்கு மூல காரணமாகிய வ.ரா. அவர்களுக்கு சமர்ப்பணம்’ என்று அதில் கண்டுள்ளது. அதன் முன்னுரையில் கு.ப.ரா. சொல்கிறார்:
‘நாங்கள் கையாளத் துணிவு கொண்ட வேலை மகத்தானது, புதியது; நவீன முறை இலக்கிய விமரிசனத்தில், அதிலும் பாரதி விமரிசனத்தில் முதல் ஏர் ஓட்டும் வேலை. நாங்கள் எண்ணின அளவு விஸ்தரிப்புடன் அதை நாங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதை அறிவோம். நாத்து நட்டு விட்டோம். நடவு தானாக நடக்கிறது. எங்கள் கருத்துக்களும் நாத்துக்கள் போல இந்த நாத்தாங்காலில் நெருங்கி இருக்கின்றன. காலம் வரும் பொழுது பிடுங்கி நட வேண்டும்.
ஆதியில் எங்களுக்கு உற்சாகமளித்து இக்கட்டுரைகளை எழுதுமாறு தூண்டியவர் வ.ரா. (வ.ராமஸ்வாமி அய்யங்கார்). அவை தினமணியிலும் சுதேசமித்திரனிலும் முறையே வெளிவந்தன. இப்பொழுது அவைகளை புத்தக உருவில் வெளியிட அனுமதி கொடுத்ததற்கு ஆசிரியர்கள் ஸ்ரீ டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கும் ஸ்ரீ ஸி.ஆர். ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். கு.ப.ரா., பெ.கோ.சு.’
உரைநடையில் சிறுகதை, நாவல் வடிவங்களைத் தவிர கட்டுரையில் பாரதிக்குப் பிறகான முன்னோடிச் சாதனையாளர் கு.ப.ரா. கட்டுரை இலக்கியம் பற்றி அவர் குறிப்பிடுகிறார்:
‘காவியம் இலக்கியத்தின் தலைச்சன் பிள்ளை என்றால் கட்டுரை அதன் கடைக்குட்டி. இடையே பிறந்தவை நாடகம், நவீனம், சரித்திரம் எல்லாம். கடைசியாகத் தோன்றினது என்ற சலுகையால்தானோ என்னவோ, இன்று கட்டுரை வசன நடையின் லட்சிய உருவமாக நின்று, இலக்கியத்தின் பரப்பு முழுவதையும் ஆக்கிரமிக்க முயலுகிறது. கட்டுரை மூலம் எதையும் சொல்லலாம் என்னும்படியாக இன்று அது அவ்வளவு வளர்ச்சி பெற்று விட்டது. வாழ்க்கையே இன்று கட்டுரை கட்டுரையாகச் சித்திரிக்கப்படுகிறது. கவிதையின் ஏகபோகமாக வெகுகாலம் இருந்து வந்த இயற்கை வர்ணனையும் செயற்கை அழகுச் சித்திரிப்பும் இப்பொழுது கட்டுரையில் கவர்ச்சியான உருவம் பெறுகின்றன. விஞ்ஞானமே தெளிவு கொள்வதற்குக் கட்டுரையின் உதவியை நாடுகிறது. நாடகமும் நவீனமும் தனிச்சிறப்புடன் கையாண்ட குணச் சித்திரமும் சந்தர்ப்பச் சித்திரமும் கட்டுரையில் கலையுருவம் பெற்றுக் களிப்பளிக்கின்றன. மேலும், பல இடைக்காட்சிகளும் நுணுக்க ஆராய்ச்சிகளும் கூடக் கட்டுரைகளே என்று சொல்லி விடலாம்.’
கட்டுரை என்ற தலைப்பில் மற்ற இலக்கிய வடிவங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு கட்டுரை வடிவம் முன்னணியில் நிற்பதற்கான காரணத்தை அதில் விளக்குகிறார் கு.ப.ரா. கட்டுரையைச் சிறப்பாகக் கையாண்டவர்கள் என ஜி.கே. செஸ்டர்ட்டன் (1874 – 1936), Hilaire Bellock (1870 – 1953), இ.வி. லூகாஸ் (1868 – 1938) ஆகியோரைச் சொல்லலாம். இந்த மூவரில் ஜி.கே.சி.யின் கட்டுரைகளை நான் கல்லூரிப் பருவத்தில் படித்திருக்கிறேன். இவர்களைப் பற்றி கு.ப.ரா. மிகத் துல்லியமாக எழுதுகிறார்.
ஜி.கே.சி. என்று அழைக்கப்படும் ஜி.கே.செஸ்டர்ட்டன் பற்றி:
‘செஸ்டர்ட்டன் தாம் எழுதிய நூற்றுக் கணக்கான கட்டுரைகளில் கையாளாத விஷயமே கிடையாது. அவர் எழுதுவதற்கு உதவியாயிருந்த உயிர்நாடிகள் இரண்டும் ஹாஸ்யமும் ஆழ்ந்த தத்துவ ஞானமும்தான். விபரீத அலங்காரம் என்று சொல்லக் கூடியதுதான் அவர் அதற்கு அளித்த மூச்சுக் காற்று. அர்த்தமற்றது என்பதை உயர்த்திக் கூறுவதிலிருந்து கடவுள் நம்பிக்கை என்பதை அறிவு மூலமாக உறுதி செய்வது வரை எல்லா விஷயங்களையும் வியக்கத்தக்க கூர்மையுடனும் ஆழத்துடனும் பத்து நிமிஷ நேரத்தில் (அதுதான் அசல் கட்டுரையின் வாசிப்புக் காலம்) ஓடுகிற ஓட்டத்தில் அவர் வர்ணிக்கிறார்.’
அடுத்து Robert Lynd (1879 - 1949), A.A. Mylne, ஆல்டஸ் ஹக்ஸ்லி பற்றி எழுதுகிறார். ‘ராபர்ட் லிண்ட், நூல் இழைகளைப் பிரித்தெடுப்பது போல், சிறுசிறு பகுதிகளை எடுத்து ஆராய்ந்து, அவற்றின் நுட்பமான அழகுகளையும் உண்மைகளையும் தெளிவாக்குகிறார். ‘லண்டன் வாசிகள்’ என்ற பிரசித்தி பெற்ற கட்டுரையில் லண்டன் நகரத்தில் வசிக்கும் பட்சிகளைப் பற்றி வெகு ருசிகரமாக எழுதுகிறார். நாம் இதுவரையில் அறிந்தும், முற்றிலும் உணர்ந்து அனுபவிக்காமல் விட்ட பல நுண்ணிய உணர்ச்சிச் சாயல்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறார். இந்த ‘ஞாபகப்படுத்தல்’தான் கலை என்றே சொல்லி விடலாம். அதுதான் கட்டுரையும்.’
‘ஏராளமான உதாரணங்கள் காட்டலாம். உள்ளத்தை வெட்டும் சோகத்தையும், வயிறு வெடிக்கச் செய்யும் ஹாஸ்யத்தையும் கொடுக்கும் இரண்டு உதாரணங்களை மட்டும் குறிப்பிடுகிறேன். கோல்ட் ஸ்மித் எழுதிய ‘இரவில் காணும் நகரம்’ என்ற கட்டுரை மகத்தான நாடகம் ஒன்று ஊட்டக் கூடிய சோக ரஸத்தை ஊட்டுகிறது. ஸ்டீபன் லீகாக் எழுதிய கிண்டல் கட்டுரைகள், ஹாஸ்யக் கதையும் ஹாஸ்ய நாடகமும் கூடக் கொடுக்க முடியாத நகைச்சுவை இன்பத்தைக் கொடுக்கின்றன.’
‘தமிழில் கட்டுரை இப்பொழுது கைக்குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. கட்டுரையை எடுத்துக் காட்டும் அம்சங்கள் இரண்டுதான்: கருத்து, நடை. ஒன்று அதன் உம்மிசம், மற்றொன்று அதில் பதிந்திருக்கும் ரத்தினம். ஒன்று இல்லாமல் மற்றொன்று எடுபடாது. தற்சமயம் தமிழில் கட்டுரை எழுதுகிறவர்களிடத்தில் இந்த இரண்டு அம்சங்களும் பரிபூரணமாகச் சேர்ந்து தென்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. டாக்டர் சாமிநாதய்யர், சிதம்பரநாத முதலியார், ‘கல்கி’ இவர்களுக்கு நல்ல நடை, எழுதும் வன்மை இருக்கிறது. ஆனால் கருத்து மிகவும் குறைவு. வ.ரா., பிச்சமூர்த்தி கூட்டத்தினர் நல்ல கருத்துக்களைக் கையாளுகிறார்கள். நடை இன்னும் அவர்கள் கையில் இஷ்டம் போல் வளைந்து கொடுத்துத் தெளிவாக ஓடும் தன்மை பெறவில்லை. இந்த இரண்டு அம்சங்களும் பாரதியிடம்தான் ஓரளவு சேர்ந்து தென்பட்டன. ஆனால் அவரும் கட்டுரையின் முழு உருவத்தைக் கடைசல் பிடித்து எடுக்கவில்லை.’
இதுதான் கு.ப.ரா. எப்பேர்ப்பட்ட மேதமை இருந்தால் மேற்கண்ட வாக்கியங்களை எழுத முடியும் என்று யோசித்துப் பார்க்கிறேன். அ. சதீஷ் தொகுத்துள்ள ‘கு.ப.ரா. கட்டுரைகள்’ என்ற தொகுதியில் ஐந்து குறுநூல்களும் 89 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ‘கண்ணன் என் கவி’ என்ற பாரதி பற்றிய சிறுநூலை பாரதி இறந்து பதினாறு ஆண்டு கழித்து எழுதுகிறார் கு.ப.ரா. அதாவது 1937-ல்.
‘சமீபத்தில் ஒரு சிநேகித கோஷ்டியிடையே பாரதியின் பேச்சு வந்தது. ‘நந்தனார் சரித்திரம் எழுதியிருக்கிறாரே அவர் தானே?’ என்று ஒரு படித்த நண்பர் (வக்கீல்) கேட்டார். ஒரு பானைச் சோறாகிய நமது பொதுஜன கலைஞானத்திற்கு இந்த ஒரு சோறு பதமல்லவா?’ என்று துவங்கும் இந்த நூலில் பாரதியை மகாகவி என்று காரண காரியங்களோடு நிறுவுகிறார் கு.ப.ரா.
1936-ல் காரைக்குடியில் வ.ரா. பாரதியின் ஒரு வரிக்கு நிகராக ஷேக்ஸ்பியரோ, ஷெல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசி அவரை மகாகவி என்று சொல்ல, பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கல்கி போன்றவர்கள் வால்மீகி, காளிதாஸன், ஷேக்ஸ்பியர், ஷெல்லி போன்றவர்கள்தான் மகாகவிகள்; பாரதி தேசிய கவி மட்டுமே என்று சொல்லி வ.ரா.வின் கூற்றை மறுத்தார்கள். இங்கே பாரதியின் சமகாலத்தவரான உ.வே.சாமிநாதய்யர் கூட பாரதியை நிராகரித்தவர் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுதான் கு.ப.ரா. எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற நூலின் பின்னணி.
‘தேசிய கீதங்களைப் பாடின பாவம்தான் பாரதியை தேசபக்த கவியாக்கி விட்டது போலும்! ஸ்ரீ ரவீந்திரரின் முதுமை நூலாகிய ‘கீதாஞ்சலி’ ஆங்கிலத்தில் முதலில் பிரசித்தி அடைந்ததால்தான் அவர் ஒரு ‘வேதாந்தக் கவி’ என்று முத்திரை போட்டு அலமாரியில் அடுக்கப்பட்டு விட்டார்! ஒருவருடைய கவிதையின் ஒரு அம்சம் மட்டும் பிரபலமடைவதால் அதில் அதற்கு மேற்பட்ட அம்சங்களும் இருக்கின்றன என்பது அறியப்படாமலே போகிறது.’
இப்படிச் சொல்லும் கு.ப.ரா.வும் பின்னாளில் அவரது சிறுகதைகளுக்காக மட்டுமே அறியப்பட்டது ஒரு நகைமுரண் என்றே சொல்லவேண்டும்.
பின்னர் அந்த நூலில் தேசிய கவி என்ற சொற்பிரயோகமே அடிப்படையில் தவறு என்று விளக்குகிறார் கு.ப.ரா. அந்த விளக்கம் கு.ப.ரா.வை ஒரு மகத்தான ஆளுமையாகவும் கால தேச எல்லைகளைத் தாண்டிய கலைஞனாகவும் காட்டுகிறது. தேசிய கவி என்ற பதத்துக்கு அர்த்தமில்லை என்பதன் காரணம், ‘கவியும், கவி வாக்கும் ‘நிரந்தரம்’ என்ற வகையில் எப்பொழுதும் காலதேச வர்த்தமானங்களுக்கு மீறிச் சென்றே இருக்கவேண்டும். அப்படியிருப்பதற்கு மொழி ஒருக்காலும் தடங்கலாகாது. கவிதையில் இந்த எல்லைகளுக்கு மீறிய ஒரு கொள்கையோ, அபிப்பிராயமோ இருந்து கொண்டுதான் அதற்கு எல்லையற்ற உயிரை அளிக்கிறது.
உதாரணமாக, இதுதான் ஆங்கிலக் கவி ஷெல்லியின் கவிதையில் ‘ஸ்பிரிட் ஆஃப் லைஃப்’ ஆகவும், ரவீந்திரரின் கவிதையில் ‘ஜீவன தேவதை’யாகவும் பாரதியின் கவிதையில் ‘சக்தி’யாகவும் பேருருக் கொண்டு பரவி நிற்கிறது. இந்தத் தத்துவத்தின் நோக்கிலிருந்து அவரவர்களுடைய எழுத்துக்களை ஒரே ஒரு தரிசனமாகக் காணலாம். எல்லா மகாகவிகளின் கிரந்தங்களிலும் இப்படிப்பட்ட ஒரு பேரெண்ணத்தை நிச்சயமாக நிர்ணயிக்கக் கூடும்.
இந்தத் தத்துவத்தின் பெயர் (நாமம்) கவிதை. உருவம் (ரூபம்) காவியம். இந்த நாமரூபத்தை அநேக கவிஞர்கள் அநேக விதமாக வரையறுத்திருக்கிறார்கள். கவிகளே அதை வர்ணித்திருக்கும் முறை அவரவர்களுடைய தனி அனுபவத்திற்கு ஒத்ததாகவே இருக்கிறது. உதாரணமாக, வோர்ட்ஸ்வர்த் என்னும் கவி, கவிதையை ‘உணர்ச்சி பொங்கியடங்கியபின் ஏற்படும் அமைதியில் திரும்பி அனுபவிக்கப்படும் ஒரு ரசப் பெருக்கு’ என்கிறார். ஷெல்லி, ‘மனிதனின் உள்ளத்தில் அடிக்கடி தோன்றும் வானக ஆவேசத்தை வாக்கில் நிரந்தரமாக்குவது கவிதை’ என்கிறார்.
மாத்யூ ஆர்னால்டு என்ற ஓர் அறிஞர் ‘வாழ்க்கையின் ஆராய்ச்சியே கவிதை’ என்கிறார். இம்மூன்று வகையிலும் கவிதைக்கு ஏற்படும் உருவமானது ஒரு சிறு காவியமாகவே இருக்கும். ஏனெனில் ஒரு ரசப்பெருக்கோ, ஆவேசமோ, அல்லது நிலையோ நீடித்திருக்க முடியாது. அது எப்பொழுதுமே தோன்றி மறையும் குணமுடையது. மகா காவியம் என்ற பெயருடையது இப்பேர்ப்பட்ட பல தனி சிறு காவியங்களின் இணைப்பே தவிர, எக்காலத்திலும் ஒரு நீண்ட மனோநிகழ்ச்சியாக இருக்கவே முடியாது. பெருக்கு வடியத்தான் வேண்டும். மின்னல் மறையாமல் நிலைக்குமா? மகா காவியத்தை அநேக தனிப்பாடல்கள் பதிந்த வசன அணியென்றும் சொல்லலாம். கதைப் பிணைப்பாகிய இந்த வசனத்தின் தங்க உம்மிசத்தில் பதிவு கொண்ட நவரத்தினங்கள். (இவ்விடத்தில் வசனமென்பது கவிதையுணர்ச்சியற்ற செய்யுட்களைக் குறிக்கிறது.)
இந்த முறையில்தான் ராமாயணம், ரகுவம்சம், கம்பராமாயணம், பேரடைஸ் லாஸ்ட், ப்ராமெத்யூஸ் அன்பவுண்ட், ஹைப்பீரியன், டைநாஸ்ட்ஸ் முதலியவை மகாகாவியங்கள்...’
இலக்கிய மாணவர்களுக்குப் பாடமாக வைக்கத்தக்க ‘கு.ப.ரா. கட்டுரைகள்’ என்ற தொகுப்பில் உள்ள முதல் நூலில் உள்ள ஆரம்பப் பக்கங்களே இப்படி இருக்கின்றன. அடுத்து, ஈ.ஜே. தாம்சனின் தாகூர் பற்றிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு ரவீந்திரர் பற்றி விளக்குகிறார். தாகூரையும் இன்னும் பல வங்காளி கலைஞர்களையும் மூல மொழியிலேயே படித்தவர் கு.ப.ரா. மட்டுமல்லாமல் பங்கிம் சந்த்ர சட்டர்ஜியின் துர்க்கேச நந்தினி, ஹிரண்மயி, மிருணாளினி, ராதாராணி ஆகிய நான்கு நாவல்களையும், ஹரி பிரஸாத சாஸ்திரி எழுதிய காஞ்சன மாலை என்ற நாவலையும் வங்காளத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். பங்கிம் சந்த்ர சட்டர்ஜிக்கு கு.ப.ரா. இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் என்ன? அவரே சொல்கிறார்: ‘பங்கிம் சந்திரர் 1838-ல் பிறந்து 1894-ல் மறைந்தவர். இந்திய நாவலின் தலைக்காலத்திலே தோன்றியவர். நவீன வசன இலக்கியத்தின் மூல புருஷர்களிலே ஒருவர். அவருக்குப் பிறகுதான் தாகூரும் சரத் சந்திரரும் வங்காளி இலக்கியத்தில் வசனத்தை அவ்வளவு சிறப்பு மிக்க கருவியாக்கினர்.’
மீண்டும் பாரதி பற்றிய கு.ப.ரா. நூலுக்குச் செல்வோம்.
‘பாரதியினுடைய கவிதையின், இடை பிங்களை என்ற இரண்டு நாடிகளாகச் சொல்லக்கூடிய, கருத்துருக்கமும் உவமைத் திறமையும், அவ்வளவும் அவருடையதேயானாலும் அவற்றின் அமைப்பில் பாரதியின் கண்முன் இரண்டு லட்சிய புருஷர்கள் இருந்திருக்கிறதாக எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் ஷெல்லி. மற்றொருவர் காளிதாசன். இவ்விருவர் நூல்களையும் பாரதி பாவ சுத்தத்துடன் படித்துப் போற்றியிருப்பது எல்லோருமறிந்த விஷயம். கருத்து உருக்கத்திற்குக் காரணமான ‘லிரிக்’ என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் தனிப்பாடலின் உருவம் நவீன இலக்கியத்தில் ஷெல்லியைப் போல யாராலும் கையாளப்படவில்லையென்பது ஆங்கில விமர்சகர்களின் அபிப்பிராயம்.
அவ்வுருவத்தை பாரதி அதிசய வேகத்துடன் கையாண்டிருக்கிறார். ‘ஊழிக் கூத்து’, அதனுடைய முடிமணிகளில் ஒன்று. ஷெல்லியின் ‘மேற்குக் காற்று’, தாகூரின் ‘ஊர்வசி’, பிரான்சிஸ் தாம்ஸனது ‘ஹ்வ்ண்ட் ஆப் ஹெவன்’ (Hound of Heaven) முதலியன அந்த ‘லிரிக்’ அமைப்பின் பூரணப் பொலிவிற்கு உதாரணங்கள். உவமையில் காளிதாசனுடைய சிறப்பும் புதுமையும் பாரதியின் கவிதையில் வெகு காலத்திற்குப் பிறகு மறுபடி இந்திய இலக்கியத்தில் இரண்டாவது தடவையாகத் தோன்றுகின்றன. முதல் தடவை ரவீந்திரரின் கவிதையில்.’
***
‘கு.ப.ரா. கட்டுரைகள்’ என்ற தொகுப்பில் அடுத்த சிறு நூலாக வருவது ஸ்ரீ அரவிந்த யோகி. இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றோடு இணைத்து அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார் கு.ப.ரா. அடுத்த நூல் ‘உலக ஒற்றுமை’. அதில் மார்க்ஸுக்கும் காந்திக்குமான வித்தியாசத்தை விளக்குகிறார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.