1978 - 1990 ஆகிய பன்னிரண்டு ஆண்டுகளில் நான் தில்லியில் இருந்த காலத்தில் நா.பார்த்தசாரதி தில்லி வரும்போது சந்தித்திருக்கிறேன். அவர் எழுத்தைப் படித்ததில்லை. படிக்கும் ஆர்வமும் இருந்ததில்லை. அதெல்லாம் இலக்கியம் அல்ல என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு இலக்கியம் தெரிந்திருந்தது. ஆனால் அதையெல்லாம் யாரிடமும் முகத்துக்கு நேராகவோ அல்லது கட்டுரையிலோ வெளிப்படுத்துவது தர்மம் அல்ல என்ற குறிக்கோளும் இருந்தது. இலக்கியவாதிகளோடு எத்தனையோ சம்வாதம் மல்யுத்தமெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் அதெல்லாம் இலக்கியவாதிகளோடு மட்டுமேதான். அந்த உரிமையை இலக்கியத்துக்கு வெளியே உள்ளவர்களுக்குத் தருவதில்லை. சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலைக் கடுமையாக விமரிசித்து எழுதினேன். ஆனால் நா.பா.வோடு எந்தச் சண்டையும் இல்லை. என் தாய் மாமா நா. பார்த்தசாரதியை அதிகம் படிப்பார். அவரது ‘குறிஞ்சி மலர்’ பற்றி அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் நான் ஜெயகாந்தனைப் பற்றித்தான் பேசுவேன். ஜெ.கே., நா.பா.வை விட இரண்டு வயது சிறியவர். இரண்டு பேருமே தங்கள் வாழ்நாளில் மிகச் செல்வாக்கான இடத்தைப் பெற்றிருந்தனர். இன்றைய தினம் ஓர் எழுத்தாளர் ஒரு முதல் மந்திரியைச் சந்தித்தால் எழுத்தாளர்தான் குழைய வேண்டும்; பணிய வேண்டும்; முதுகை ஒரு இஞ்ச்சாவது வளைக்க வேண்டும். இது எதுவுமே செய்ய விரும்பாத சிம்மமாக இருந்தாலும் ஓர் அசட்டுப் புன்னகையையாவது தவழ விடவேண்டும். ஆனால் ஜெ.கே., நா.பா. ஆகிய இருவரிடமும்தான் முதலமைச்சர்கள் பணிந்தார்கள், வணங்கினார்கள். ஜெயகாந்தன் கஞ்சா புகைத்தது உலகப் பிரசித்தம். எம்ஜியார் அதற்கெல்லாம் எதிரி. ஆனால் ஜெயகாந்தனை நெருங்காதீர்கள்; அவர் ஒரு கலைஞர்; கலைஞர்கள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்று அதிகாரிகளிடம் சொன்னார் எம்ஜியார். ஜெயகாந்தனைப் பின்பற்றியவர்கள் இலக்கியத்தின் பக்கமும் நா.பா.வைப் பின்பற்றியவர்கள் லட்சியவாதத்தின் பக்கமும் போனார்கள்.
எனக்கு நா.பா.வைப் பார்த்ததுமே பிடித்துப் போயிற்று. மிக வசீகரமான தோற்றம் கொண்டவர். ஆஜானுபாகுவாக சினிமா நடிகரைப் போல் இருப்பார். பாகவதர் கிராப். ஆனால் இப்போது இந்த நிமிடம்தான் தெரிகிறது, அவர் 55 வயது வரைதான் வாழ்ந்தார் என்பதும், இதய நோயால் இறந்து போனார் என்பதும். எனக்கு அவரைப் பிடித்துப் போனதற்கு இன்னொரு காரணம், அவரும் என்னைப் போலவே சாப்பாட்டுப் பிரியராக இருந்தார்.
நா. பார்த்தசாரதியின் ‘தீபம்’ இதழில்தான் ‘மணிக்கொடி’ வரலாறு, ‘சரஸ்வதி’ காலம், ‘எழுத்து’ வரலாறு, சிறுபத்திரிகை வரலாறு போன்ற தொடர்களெல்லாம் வந்தன. அவருடைய ‘தீபம்’ இதழில்தான் இந்திரா பார்த்தசாரதியின் பல நாவல்கள் தொடராக வந்தன. ‘தீப’த்தில்தான் ஆதவனின் ‘காகித மலர்கள்’ போன்ற புகழ்பெற்ற நாவல்கள் வந்தன. அப்போதெல்லாம் எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும், ஜனரஞ்சகமான லட்சியவாதக் கதைகளை எழுதும் ஒருவர் எப்படி இதுபோன்ற எழுத்துக்களையெல்லாம் தொடர்ந்து பிரசுரிக்கிறார், ஊக்குவிக்கிறார் என்று. இப்போது சி.சு. செல்லப்பா பற்றிய வெங்கட் சாமிநாதனின் கட்டுரையைப் படிக்கும்போதுதான் காரணம் புரிகிறது. நா.பா. எழுதியதை இலக்கியவாதிகள் இலக்கியமாக ஏற்காவிட்டாலும் அவர்தான் க.நா.சு., தி.ஜானகிராமன், கு. அழகிரிசாமி, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றோர்கள் சாகித்ய அகாடமி பரிசு பெற்றதற்குக் காரணமாக இருந்திருக்கிறார். இப்படி நா.பா.வை இந்தத் திசையின் பக்கம் நகர்த்தியவர் செல்லப்பா.
இப்படிப்பட்ட செல்லப்பாவுக்கு சாகித்ய அகாதமி பரிசைப் பெற்றுத் தந்துவிடவேண்டும் என்று நா.பா. உறுதியாக இருந்த போது, செல்லப்பா மிகக் கொடுமையான வறுமையில் உழன்று கொண்டிருந்தார். சாப்பாட்டுக்குக் கூட ஏதுமில்லாத நிலை. சாகித்ய அகாதமியின் 50000 ரூபாயை வேண்டாம் என மறுத்திருக்கிறார் செல்லப்பா. ஒரே காரணம்தான். சாகித்ய அகாதமியின் தேர்வுகளில் செல்லப்பாவுக்கு மரியாதை இல்லை. ஆள் பிடித்து வாங்குகிறார்கள் என்று நினைத்தார். ஆனால் அதே சமயத்தில் அமெரிக்காவிலிருந்து ‘விளக்கு’ பரிசு கிடைத்தபோது அதை ஏற்றுக்கொண்டார். ஏற்றுக்கொண்டதோடு ‘விளக்கு’ குழுவினர் கொடுத்த பணத்தைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் பி.எஸ். ராமையா பற்றி தான் எழுதிய ஒரு நூலை வெளியிடும் செலவுக்காகத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
செல்லப்பாவின் வாழ்வு பற்றி வெங்கட் சாமிநாதனின் நீண்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:
‘சென்னையில் செல்லப்பாவுக்கும் அவரது புத்தகக் கட்டுக்களுக்கும் கையெழுத்துப் பிரதிகளுக்கும் கிடைத்தது ஒரு ஒடுங்கிய நீண்ட அறை. நாலடிக்கு பத்தடி என்றிருக்குமா அது? ஒரு மின் விசிறி கூட இல்லாது சென்னைக் கோடை மாதங்களின் வெக்கையில் அந்த ஒடுங்கிய அறையில்தான், அடுக்கப்பட்ட புத்தகங்களிடையே, அவர் திருத்தித் திருத்தி சுதந்திர தாகம் நாவலை எழுதிக்கொண்டிருந்தார். ‘ஒரு மின் விசிறியாவது வைத்துக் கொள்ளுங்கள்,’ என்று உதவ வந்த ஒரு அன்பரின் வேண்டுகோளையும் நிர்தாக்ஷண்யமாக மறுத்து விட்டதாகச் சொன்னார்கள்.’

‘ஆரம்ப காலத்திலிருந்தே அவர் சம்பாத்தியத்துக்கு என்று எங்கும் வேலையில் இல்லாதிருந்த காலம்தான். எழுத்து நடத்தியபோதும். அது நின்று விட்டபோதும். சில வருஷங்கள் கழித்து அவர் எழுத்து பிரசுரம் நடத்திய போதுதான், அவற்றை நா.பா.வின் பாஷையில் தெருவில் புடவை விற்கிறவன் மாதிரி சுமந்து சென்றதில்தான் ஏதோ கொஞ்சம் பணம் பார்க்க முடிந்தது என்று சொல்லியிருக்கிறார். அந்த ஆரம்ப வருஷங்களில் அவர் கடைக்கு எடுத்துச் செல்ல ஒரு கூடையில் கத்தரிக்காய், வெண்டைக்காய் நிரப்புவது போல கிளி, குருவி என்று காகிதத்தில் பல வர்ணங்களில் பொம்மைகள் செய்து வைத்திருப்பார், பார்த்திருக்கிறேன். எங்கே எடுத்துச் செல்வார், எப்போது விற்பார் என்பது தெரிந்ததில்லை. நான் கேட்டதில்லை. வாடிக்கையாக ஒரு சில கடைகள் இருக்கும் என்று யூகிக்கிறேன்.’
‘(வத்தலக்குண்டுவிலிருந்து) திரும்ப சென்னைக்கே திரும்பினார். அதே பிள்ளையார் கோயில் தெருவில் ஒடுங்கிய ஒரு சந்தில். அந்த சந்தில் அவருக்குக் கிடைத்தது ஒரு ஒடுங்கிய அறை கொண்ட வீடு தான். அந்த ஒடுங்கிய அறையில்தான் அவரது கையெழுத்துப் பிரதிகளும், ‘சுதந்திர தாகம்’ புத்தகப் பிரதிகளின் கட்டுக்களும் அடங்கின.
அந்த வருடங்களில்தான் ஒரு முறை சென்னையில் அவரைப் பார்த்தபோது அதுவரை அவர் எழுதியிருந்த சிறுகதைகள் அத்தனையையும் ஏழு சிறு தொகுப்புகளாக வெளியிட்டிருந்தார். சிறு தொகுப்புகளாக வெளியிட்டது யாரும் உடன் சுலபமாகப் பணம் கொடுத்து வாங்கமுடியும் என்ற காரணத்தால். ஒரே தொகுப்பாக வெளியிட்டிருந்தால் அது நன்றாகவும் இருக்கும். அது தான் முறையும் கூட. மதிப்புடன் பார்க்கத் தோன்றும். ஆனால் அதன் விலை சுலபமாக வாங்கத் தடையாக இருக்கும். ‘இவ்வளவு கதைகள் எழுதியிருக்கிறீர்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது’ என்றோ என்னவோ அப்போது சொல்லிவிட்டேன். என் அளவில் அது எனக்குத் தெரிந்த உண்மை. அப்போது அவர் உடன் சொன்ன வார்த்தை அதிர்ச்சி தருவதாகவும் சோகம் நிறைந்ததாகவும் இருந்தது. அவர் சொன்னார், ‘நாம பண்ணலைன்னா இருந்த இடம் தெரியாம புல் முளைச்சுப் போயிடும்.’
சி.சு. செல்லப்பா மனம் கசந்து சொன்னது நடந்து விடாமல் தமிழ் உள்ளளவும் அவர் பெயரும் இருக்குமாறு அவ்வப்போது வெங்கட் சாமிநாதன், வெளி. ரங்கராஜன், கே. பெண்ணேஸ்வரன், சாரு நிவேதிதா, ஆர்.வி. சுப்ரமணியன் போன்ற செல்லப்பாவின் வாசகர்கள் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.
***
செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ்களை மின்நூலாகப் படிக்க விரும்பினால் அதற்கு ஒரு வழி செய்திருக்கிறார் ஆர்.வி. சுப்ரமணியன். வல்லிக்கண்ணன் தொகுத்த அந்த ‘எழுத்து’ இதழ்களின் தொகுப்பு இணைப்பு:
சி.சு. செல்லப்பா பற்றி சுந்தர ராமசாமி:
சி.சு. செல்லப்பா பற்றிய பகுதி நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

