இந்தத் தொடரில் சுந்தர ராமசாமி பற்றி நான் எழுதுவது பலரது புருவத்தை உயர்த்தலாம். அவர்கள் மனத்தில் சுந்தர ராமசாமியின் நாவல்கள் பற்றி நான் எழுதிய விமரிசனங்கள் மட்டுமே பதிந்திருக்கின்றன. ஆனால் சுந்தர ராமசாமி ஒரு நாவலாசிரியர் மட்டுமே அல்லவே? சுந்தர ராமசாமி பற்றி ஒருவர் எழுதப் புகும்போது அவருடைய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றி மட்டுமே எழுதி முடித்து விட முடியாது. அக்டோபர் 2005-ல் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியின் இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நடக்க இருந்தபோது சென்னையில் உள்ள பல எழுத்தாளர்களும் நாகர்கோவிலுக்கு ரயிலேறினர். நவம்பர் 2005 உயிர்மை, சுந்தர ராமசாமி சிறப்பிதழாகவே வெளிவந்தது. அதில் மனுஷ்ய புத்திரன் எழுதியிருந்த கட்டுரையின் முதல் வாக்கியம் இன்னமும் என் நினைவில் தங்கியிருக்கிறது. சென்னையிலிருந்து நாகர்கோவில் புறப்பட்ட ரயில் முழுவதுமே சுந்தர ராமசாமியின் வாசகர்களால் நிரம்பியிருந்தது. இதே வார்த்தைகளில் இல்லை; இன்னும் கவித்துவமாக எழுதியிருந்தார்.
சுந்தர ராமசாமி மற்ற எழுத்தாளர்களைப் போல் வெறும் எழுத்தாளர் மட்டும் அல்ல; அவர் ஓர் இயக்கமாக இருந்தார். அவருக்கு முன்னால் அப்படி ஓர் இயக்கமாக இருந்தவர் சி.சு. செல்லப்பா மட்டுமே. சமகாலத் தமிழ் இலக்கியத்துக்கு க.நா.சு.வின் பணி மகத்தானது என்றாலும் அவர் இயக்கம் அல்ல; அவர் ஒரு கலைஞன், நாடோடி. கலைஞர்களாலும் நாடோடிகளாலும் இயக்கமாக முடியாது. இயக்கம் என்றால் தன்னையொற்றி ஒரு பெரும் இளைஞர் குழு உருவாகவேண்டும். செல்லப்பா அப்படி உருவாக்கினார். ந. முத்துசாமி, சி. மணி, தர்மு சிவராமு, வெங்கட் சாமிநாதன், எஸ். வைத்தீஸ்வரன் போன்ற பல எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் உருவாக்கிவிட்டு, அவர்களுக்கான களத்தையும் அமைத்துக் கொடுத்தார் செல்லப்பா. அதே போன்ற ஒரு பெரும் எழுத்தாளர் கூட்டத்தை உருவாக்கியவர் சுந்தர ராமசாமி.
1980-ல் நாகர்கோவிலில் அவர் வீட்டு மொட்டை மாடியில் மாதம் ஒருமுறை ‘காகங்கள்’ என்ற இலக்கியக் கூட்டம் நடக்கும். அப்போது நான் தில்லியில் இருந்தேன். ‘காகங்கள்’ கூட்டத்தில் ஒருமுறை கலந்து கொள்ள வேண்டும் என்பது என் கனவு என்று ‘கொல்லிப்பாவை’ என்ற இலக்கிய இதழில் கடிதம் எழுதியிருந்தேன். குறுகிய காலமே ஜீவித்து சிறுவயதிலேயே மரித்து விட்ட கனவு அது. சு.ரா.வின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவல் வெளிவந்தது. என் கனவும் கலைந்தது. தமிழகமே அந்த நாவலைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது அது ஒரு சராசரி படைப்பு என்று எழுதிய இரண்டு பேரில் அடியேனும் ஒருவன். (இன்னொருவர் தர்மு சிவராமு. ஆனால் சிவராமு சு.ரா.வின் மீது சொந்தப் பகை கொண்டிருந்தார். அவர் பகைமை பாராட்டுபவர்களைப் பாராட்டி எழுதமாட்டார். ஆனால் நான் சு.ரா.வின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன்.)
சுந்தர ராமசாமி நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்தார்; ஆசானாக இருந்தார்; உற்ற தோழராக இருந்தார். அவரோடு என்ன வேண்டுமானாலும் சகஜமாகப் பேசலாம் என்ற உரிமையை வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் எழுத்தே நூற்றுக் கணக்கான இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. ஜெயமோகனை சுந்தர ராமசாமியின் முதன்மையான வாரிசு என்று சொல்லலாம். அந்த வரிசையில் இன்னும் ஏராளமான பேரைச் சொல்ல முடியும். இவர்கள் அனைவருக்குமே சு.ரா.வின் மீது ஒரு தந்தையின் மீது மகனுக்கு உள்ள பாசமும் அன்பும் இருந்தது. இப்போதும் இருக்கிறது. அவர்களின் சொந்த வாழ்விலும் இலக்கிய வாழ்விலும் சுந்தர ராமசாமியின் இடம் ஒரு தந்தைக்கு உரியதாகவே இருந்தது.
ஆனால் நான் சுந்தர ராமசாமியின் பள்ளியைச் சாராதவன். கருத்து ரீதியாக அவருக்கு எதிர்நிலையிலேயே என்னால் யோசிக்க முடிந்தது. அவருடைய கட்டுரைகளில் ஒரு வாக்கியத்தைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அப்படியிருந்தும் என்னுடைய ஆளுமையை உருவாக்கியவர்களில் சு.ரா.வுக்கு முக்கியமான இடம் இருப்பதாகவே கருதுகிறேன். ஆளுமை என்பது இலக்கியத்தை விடவும் உயர்வானது. என் ஆளுமை முதலில் என்னாலேயே சிலாகிக்கப்படக் கூடியதாக இருந்தால்தான் மற்றவர்களைப் பற்றியே நான் யோசிக்க முடியும். ஆளுமை என்றால் என்ன?
அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்வதால் எனக்குப் பணத் தேவை அதிகம். ஆனால் அதற்காக நான் எனக்குப் பிடிக்காத ஒரு காரியத்தைச் செய்ய மாட்டேன். எந்நாளும் எந்தத் தருணத்திலும் ஆதாயத்துக்காக மனசாட்சிக்கு விரோதமாக நடக்க மாட்டேன். ஒருவர் எனக்கு உணவு அளிக்கிறார்; எனக்குத் தேவையானதைச் செய்கிறார். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையிலும் அவர் என்னிடம் எழுதிக் கொடுக்கும் ஒரு நாவலுக்கோ கவிதைத் தொகுதிக்கோ எந்தச் சலுகையும் அளிக்க மாட்டேன். அதில் நான் கறாராக இருப்பேன். உயிர் போகும் அவசரத் தேவையாக இருந்தாலும் குப்பையாக இருக்கும் ஒரு வேற்று மொழி நாவலைத் தமிழில் மொழிபெயர்க்க மாட்டேன். பணம் வருகிறது என்பதற்காக ஒரு மோசமான திரைப்படத்தைப் பாராட்டி எழுதமாட்டேன். இதன் பொருட்டு கமல்ஹாசன் போன்ற பல நண்பர்களை இழந்திருக்கிறேன். ஒரே வாக்கியத்தில் சொன்னால், பணத்துக்காகவோ, நட்புக்காகவோ வேறு எந்த ஆதாயத்துக்காகவோ விலை போகமாட்டேன்; சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
இதை நான் கற்றுக் கொண்டது சுந்தர ராமசாமியிடருந்துதான். எப்படி என்று சற்று விளக்கமாகச் சொல்லவேண்டும். 1976-ம் ஆண்டு நான் தஞ்சாவூரில் இருந்தேன். பகல் முழுவதும் சரஸ்வதி மகால் நூலகத்திலோ அல்லது அரசுப் பொது நூலகத்திலோதான் படித்துக் கொண்டிருப்பேன். மதிய உணவு கிடையாது. அப்போது தேநீர் குடிக்கும் பழக்கமும் இல்லை. இருந்தாலும் கையில் ஒரு பைசா இருக்காது. அந்த அரசுப் பொது நூலகத்தில்தான் ‘பிரக்ஞை’ என்ற ஒரு பத்திரிகை கிடைக்கும். ரவி ஷங்கர், ரவீந்திரன் போன்ற நண்பர்கள் குழு அந்தப் பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தது. அதுதான் முதல் முதலாக எனக்கு அறிமுகமான சிறு பத்திரிகை. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’ நாவலை விமரிசித்து அம்பை அதில் படு காட்டமாக கெட்ட வார்த்தையெல்லாம் போட்டு எழுதியிருந்தார். இந்த ‘பிரக்ஞை’க்கு வருவதற்கு முன்னால் ஒரு விஷயம்:
1976 வரை தமிழ் இலக்கியத்துக்கு ஞான பீடப் பரிசு கிடைத்ததில்லை. ஆனால் வங்காளி, மராத்தி, கன்னடம், மலையாளம், குஜராத்தி போன்ற பல மொழிகளுக்கும் ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை அந்தப் பரிசு கிடைத்துவிட்டது. 1976-லிருந்து இப்போது 2016 வரையிலான 40 ஆண்டுகளிலும் கூட நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 1976-ல் அகிலனுக்குக் கிடைத்தது. பிறகு ஜெயகாந்தனுக்கு. அதோடு சரி. ஆனால் இந்திக்கு ஒன்பதும், கன்னடத்துக்கு எட்டும், வங்காளம் மலையாளம் இரண்டுக்கும் தலா ஐந்தும் கிடைத்திருக்கிறது. மற்ற மொழிகளை விட்டுவிடுவோம். நமது பக்கத்து மொழி மலையாளத்தை எடுத்துக் கொண்டால் ஞானபீடம் பெற்றவர்கள் ஜி. சங்கர குரூப், பொற்றேகாட், தகழி சிவசங்கரன் பிள்ளை, எம்.டி. வாசுதேவன் நாயர், ஓ.என்.வி. குரூப். அதேபோல் கன்னட இலக்கியத்தின் மகத்தான படைப்பாளிகளான மாஸ்தி வேங்கடேச ஐயங்கார், புட்டப்பா, சிவராம காரந்த், யு.ஆர். அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னார்ட், சந்திர சேகர கம்பார போன்றவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழில் இதுவரை (அதாவது, 1965-ல் பாரதீய ஞானபீடப் பரிசு உருவாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை) இரண்டே இரண்டு பேருக்குத்தான் கிடைத்துள்ளது.
1965-ல் முதல் முதலாக ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டதே மலையாளத்துக்குத்தான் (ஜி. சங்கர குரூப்). தமிழில் கொடுக்கப்பட்ட இரண்டு பரிசுகளைப் பெற்றவர்களுமே இலக்கியவாதிகள் அல்லர். ஜெயகாந்தனுமா என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். சி.சு. செல்லப்பா, க.நா.சு., ஆ. மாதவன், எம்.வி. வெங்கட்ராம், ஆதவன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா., , சார்வாகன், கிருஷ்ணன் நம்பி, ந. சிதம்பர சுப்ரமணியன், ஆர். ஷண்முக சுந்தரம், ந.முத்துசாமி, சா. கந்தசாமி, அசோகமித்திரன் போன்றவர்களோடு ஒப்பிட்டால் ஜெயகாந்தன் எழுதியவை மிகவும் நடுத்தரம்தான். அகிலனைப் போல் குப்பை அல்ல என்றாலும் ஜெயகாந்தனுடையவை ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் ஜனரஞ்சகமாக வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்காக எழுதப்பட்டவை. சினிமாவில் பாலசந்தர் எப்படியோ அப்படித்தான் ஜெயகாந்தனும். பாலசந்தரின் சினிமாவை உலக சினிமா ரசிகர்கள் தரமான சினிமா என ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அகிலனோ இலக்கியத்தின் நிழல் கூடப் பட முடியாத, படக் கூடாத குப்பை. ஆக, நமது அண்டை மாநில மொழிகள் இந்தியாவின் பெரும்பான்மை மொழிகளால் பேசப்படும் இந்தி மொழியோடு போட்டி போட்டுக் கொண்டு ஞானபீடப் பரிசை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் போது தமிழுக்கு மட்டும் ஏன் இரண்டு? அதுவும் ஒன்று குப்பை, இன்னொன்று நடுவாந்தரம்! ஆனால் மலையாளத்திலும் கன்னடத்திலும் ஞானபீடப் பரிசு பெற்றவர்கள் அனைவரும் நாம் எல்லோரும் அறிந்தவர்கள்.
ஓர் உதாரணம் சொல்கிறேன். மோடி பதவிக்கு வந்தால் நான் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றார் அனந்தமூர்த்தி. அது உடனே சென்னையில் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் வந்தது. மோடி வென்றார். பிரதமரானார். உடனே அனந்த மூர்த்தி ஒரு விளக்கம் அளித்தார். அதுவும் சென்னையில் உள்ள ஆங்கில தினசரிகளில் முதல் பக்கத்தில் வந்தது. என் கேள்வி இதுதான். அசோகமித்திரன் இப்படி ஏதேனும் சொன்னால் பெங்களூரில் உள்ள ஆங்கில தினசரிகள் இருக்கட்டும், சென்னையில் உள்ள ஆங்கில தினசரிகளிலேயே செய்தி வருமா? வராது. ஏனென்றால், இங்கே உள்ள படித்தவர் யாருக்கும் இங்கே உள்ள இலக்கியவாதிகளின் பெயர் கூடத் தெரியாது. இப்படி பெயர் கூடத் தெரியாமல் யாருமற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய போற்றுதலுக்குரிய எழுத்தாளர்களை யார் பாரதீய ஞானபீடத்துக்குப் பரிந்துரை செய்வது? பரிந்துரை செய்யாவிட்டால் தில்லியில் உள்ளவர்களுக்கு அசோகமித்திரனை எப்படித் தெரியும்? கன்னடத்தில் கன்னடியர் யார் யாரையெல்லாம் அவர்களின் மகத்தான எழுத்தாளர்கள் எனக் கருதுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கிறது. கன்னட மக்கள் அதைச் சாதித்திருக்கிறார்கள். அந்த மகத்தான எழுத்தாளர்களைப் பற்றி தில்லிக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கே நான் மேலே குறிப்பிட்ட ஓர் எழுத்தாளரைப் பற்றியும் தில்லிக்கு எடுத்துச் சொல்ல ஓர் ஆள் இல்லை. யாருக்குமே யார் பெயரும் தெரியாது. பெயர் தெரிந்த என்னைப் போன்ற ஆட்கள் அறுபது வயதுக்குப் பிறகு தினமணியில் கட்டுரை எழுதுவார்கள். அப்படி எழுதும்போது அந்த மூத்த எழுத்தாளர்களில் முக்கால்வாசிப் பேர் காலமாகி இருப்பார்கள். மீதிப் பேர் சுயநினைவு இழந்த வயதை அடைந்திருப்பார்கள். என்ன பயன்? தயவுசெய்து யாரையும் பழிப்பதாக எண்ண வேண்டாம். இந்தச் சமூகம் செய்யத் தவறியது குறித்த வேதனையில் எழுதுகிறேன்.
30 ஆண்டுகளுக்கு முன்பே சி.சு. செல்லப்பா, க.நா.சு., ஆ. மாதவன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன் போன்றவர்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பே அசோகமித்திரன் போன்றவர்களுக்கும் ஞானபீடம் கிடைத்திருக்கவேண்டும். ஏனென்றால், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் படைக்கப்பட்ட சாதனைகளையெல்லாம் விடப் பல மடங்கு சாதனைகள் தமிழில் நடந்துள்ளன. ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, எஸ். சம்பத்தின் இடைவெளி, எம்.வி. வெங்கட்ராமின் காதுகள், தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள், அசோகமித்திரனின் தண்ணீர், பதினெட்டாவது அட்சக்கோடு, லா.ச.ரா.வின் ஜனனி, வேண்டப்படாதவர்கள் போன்ற படைப்புகள் இந்தியாவிலேயே இல்லை; உலக மொழிகளிலும் கம்மிதான். அப்படியானால் இந்தியாவிலேயே ஞானபீடப் பரிசு அதிகம் கிடைத்திருக்க வேண்டிய மொழி அல்லவா தமிழ்? ஆனால் ஏன் ஒரு குப்பைக்கும் ஒரு நடுத்தரத்துக்கும் கிடைத்தது? இது போன்ற ஒரு சூழல் உலகில் எந்தச் சமூகத்திலும் இருந்ததில்லை.
உலக இலக்கிய வரலாற்றில் மிகச் சில காலகட்டங்களில்தான் இலக்கியத்தில் பெரும் அதிசயங்கள் நடந்துள்ளன. தமிழில் சங்க காலமும் கிரேக்கத்தில் கிட்டத்தட்ட அதே காலகட்டமும் (கி.மு. 630-ல் பிறந்த Sappho என்ற லெஸ்பியன் கவியின் காலத்திலிருந்து கி.பி. 500 வரை நீள்கிறது) தமிழ் மற்றும் கிரேக்க மொழிகளின் பொற்காலம் எனச் சொல்லத் தக்கவை. அடுத்து நடந்தது ரஷ்ய இலக்கியப் பேரெழுச்சி. ஒரே காலகட்டத்தில் எத்தனை காவிய நாயகர்கள், எப்பேர்ப்பட்ட மேதைகள் வாழ்ந்திருக்கிறார்கள்! செகாவும் தல்ஸ்தோயும் ஒரே மேஜையில் அமர்ந்து உணவருந்தியவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? புஷ்கின், கொகோல், துர்கனேவ், தஸ்தயேவ்ஸ்கி, லெர்மெந்த்தோவ் என்று எத்தனை பேர்!
நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ருஷ்யாவில் நடந்தது போல் இந்த நூற்றாண்டில் மெக்ரிப் இலக்கியத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மொராக்கோ, அல்ஜீரியா போன்ற மெக்ரீப் நாடுகளிலும், லெபனான், சூடான், சிரியா, ஈரான், சவூதி அரேபியா - ஆம், சவூதி அரேபியாவில் தான் இந்த நூற்றாண்டின் இணையற்ற கதைசொல்லியான அப்துர்ரஹ்மான் முனிஃப் பிறந்து வளர்ந்தார்; சவூதி அரேபியா அவரை நாடு கடத்தியது - போன்ற நாடுகளில் அரபி மொழியில் முன்பு ருஷ்யாவில் நடந்தது போன்ற இலக்கிய அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. நோபல் பரிசு பெறத்தக்க 50 எழுத்தாளர்கள் இந்த நாடுகளிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போன்றதொரு பேரெழுச்சியே தமிழிலும் நடந்தது - ந.பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, க.நா.சு.விலிருந்து அது துவங்கியது. ஆனால் உலகில் எங்குமே நடக்காத இன்னொரு அதிசயமும் இங்கே நடந்தது. அதாவது, அதிசயத்தையே அறிந்து கொள்ளாத அதிசயம். இதற்குக் காரணம், உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஜனரஞ்சக எழுத்து இலக்கியமாகக் கருதப்படுகிறது.
இன்று, நான் நடைப் பயிற்சி செய்துவரும் பூங்காவில் ஒரு சம்பவம் நடந்தது. அவர் என் மதிப்புக்குரியவர். திருக்குறள், நாலடியார் போன்ற பழைய இலக்கியங்களிலிருந்து பல மேற்கோள்களைக் கூறி எனக்கு தினமும் ஞானத்தை வழங்கிக் கொண்டிருப்பவர். இன்று தேவன் பற்றிச் சொல்லி விட்டு நீங்கள் தேவனைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை என்றேன். உடனேயே அவர், நீங்களெல்லாம் எழுத்தாளர் என்றே சொல்லிக் கொள்ளக் கூடாது என்றார். எப்போதும் அவர் பேச, கேட்டுக் கொண்டிருந்த நான் இன்று அவருக்கு ஒரு மணி நேரம் பாடம் எடுத்தேன். படு காட்டமான பாடம். நீங்களெல்லாம் இந்த philistine சமூகத்தின் பிரதிநிதிகள் என்று நான் ஆரம்பிக்கும்போதே, ஃபிலிஸ்டைன் என்றால்... என்றார். மூடர்கள் என்று தொடங்கினேன்.
தேவனைப் படிப்பதில் தப்பில்லை. கல்கியைப் படிப்பதில் தப்பில்லை. ஆனால் அதை இலக்கியம் என்றால் தப்பு. இதை எனக்குக் கற்பித்தவர் சுந்தர ராமசாமி.
அதனால்தான் இவ்வளவும் எழுத வேண்டி வந்தது. அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்தபோது அகிலன் மலக் கிடங்கு என்றார் சுந்தர ராமசாமி.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.