சுந்தர ராமசாமி - பகுதி 2

சென்ற அத்தியாயத்தில் ‘பிரக்ஞை’ என்ற இலக்கியச் சிற்றிதழ் பற்றிக் குறிப்பிட்டேன். அந்த இதழில் வெளிவந்த கட்டுரைகள் மிகவும் அடர்த்தியாக இருக்கும்.
Published on
Updated on
5 min read

சென்ற அத்தியாயத்தில் ‘பிரக்ஞை’ என்ற இலக்கியச் சிற்றிதழ் பற்றிக் குறிப்பிட்டேன். அந்த இதழில் வெளிவந்த கட்டுரைகள் மிகவும் அடர்த்தியாக இருக்கும். உதாரணமாக, அதில் பொலிவியாவைச் சேர்ந்த Jorge Sanjines என்ற இயக்குநரின் நீண்டதொரு நேர்காணல் வெளிவந்திருந்தது. யோசித்துப் பாருங்கள், அந்த நேர்காணல் வந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு. பொலிவியா என்றால் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் தினமணியில் ஏ.என். சிவராமனின் கட்டுரைகளைப் படிக்கவேண்டும். அவர்தான் உலக நாடுகளின் சரித்திரத்தைப் படமெல்லாம் வரைந்து கட்டுரைகளாக எழுதுவார். வேறு எந்த வழியும் இல்லை. இதில் பொலிவிய இயக்குநர் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது? அதிலும் அவருடைய நேர்காணல்? அந்த அளவுக்குத் தேடல் மிகுந்தவர்களாக இருந்தார்கள் அந்தக் காலத்து இலக்கியவாதிகள். இப்போது நாம் கைபேசியின் மூலமே அந்த இயக்குநரின் பெயரை ஹோர்ஹே சான்ஹினேஸ் என்று உச்சரிக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தெரிந்துகொண்டு விடலாம். அவருடைய படங்களையும் கைபேசியிலேயே பார்த்து விடலாம். ஆனால் 1976-ல்?

சி.சு. செல்லப்பா, க.நா.சு.வின் அடிச்சுவட்டில் தீவிரமான இலக்கியம் ஏகப்பட்ட சிறுபத்திரிகைகளின் மூலம் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் சுஜாதா என்ற ஒரே மனிதரின் அசுர பலத்தினால் வெகுஜன எழுத்துக்கு மட்டுமே தமிழகத்தில் இடம் உண்டு என்ற நிலை ஏற்பட்டது. இதையெல்லாம் சுஜாதா ஒன்றும் திட்டமிட்டுச் செய்யவில்லை. அவரும் இலக்கியத்துக்குச் சத்ரு அல்ல; அவரது அசுர பலத்தினால் அப்படி நிகழ்ந்தது. அவ்வளவுதான். இங்கே நான் ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விட விரும்புகிறேன். எனக்கு சுஜாதாவின் எழுத்து பிடிக்கும். ஜனரஞ்சக எழுத்துக்கு நான் எதிரி அல்ல. எல்லாச் சமூகத்திலும் அவ்வகை எழுத்துக்கு அவசியம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஜனரஞ்சக எழுத்தே காட்டாற்று வெள்ளமாக மாறி இலக்கியத்தை முற்றிலுமாக அடித்துச் சென்றுவிட்டது. இலக்கியத்தின் இடத்தை ஒற்றை ஆளாகப் பிடித்துக்கொண்டு விட்ட குற்ற உணர்வினாலோ என்னவோ சுஜாதா தன் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு இலக்கியவாதியை அறிமுகம் செய்து கொண்டேயிருந்தார். அதிலெல்லாம் எந்த இலக்கிய மதிப்பீடும் இருந்ததில்லை என்ற போதிலும். உதாரணமாக, மனுஷ்ய புத்திரனும் கவிஞர், பழமலயும் கவிஞர். இலக்கியத்தில் அப்படி ஓர் அத்வைதி அவர். சுஜாதாவின் எழுத்தினால் சுவாரசியமான எழுத்தே இலக்கியம் என்ற நம்பிக்கை வேரூன்றியது. வாரத்தில் ஏழு நாட்களும் ஏழு வார இதழ்களில் ஏழு தொடர்கதைகள் எழுதிய ஒரே எழுத்தாளர் அவர் மட்டுமே. நகுலன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற அனைவரும் முன்னூறு பேருக்கான எழுத்தாளர்களாக மாறினர். முன்னூறு என்றதன் காரணம், அப்போதெல்லாம் சிறுபத்திரிகைகள் முன்னூறு பிரதிகள்தான் அச்சடிக்கப்பட்டன. அதில்தான் இவர்களெல்லாம் எழுதினர். கணையாழியும் தீபமும் மட்டும் கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் வந்திருக்கலாம். சுஜாதாவுக்கு முன்னே இந்த நிலை இல்லை. ஏனென்றால், வெகுஜன வாசிப்புக்கு சவாலாக இருக்கக் கூடிய உ.வே. சாமிநாதய்யர் எழுதிய ‘என் சரித்திரம்’ ஆனந்த விகடனில்தான் தொடராக வந்தது.

மேலும், சுஜாதா என்றால் அது ஒரு சுஜாதா இல்லை. அவர் சிறுபத்திரிகைகளில் புழங்கிக் கொண்டிருந்தபோது, கணையாழியில் ‘கடைசிப் பக்கங்கள்’ எழுதிக் கொண்டிருந்தபோது இருந்த சுஜாதா வேறு; ‘சொர்க்கத் தீவு’ எழுதின சுஜாதா வேறு. ‘கடைசிப் பக்கங்களி’ல் அனல் வீசும்; அதில் கண்ணதாசனின் பாடலையும் சிவாஜியின் நடிப்பையுமே கிண்டல் செய்திருப்பார். அவருடைய கிண்டலுக்கு ஆளாகாதவரே அதில் இல்லை. ஆனால் ஜனரஞ்சக வெளியில் அப்படி எழுத முடியுமா? அங்கே வந்த பிறகு ‘எந்திரன்’ ஷங்கர் உலகத் தரமான இயக்குநராகி விட்டார். ஏனென்றால், சிறுபத்திரிகைகளின் மதிப்பீடுகளும் அடிப்படைகளும் வேறு; ஜனரஞ்சக எதிர்பார்ப்புகள் வேறு.

சுந்தர ராமசாமி பற்றிய கட்டுரையில் ஏன் சுஜாதா பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றால், ஒட்டு மொத்த சமூகமே பைங்கிளி எழுத்தை (மலையாளத்தில் ஜனரஞ்சக எழுத்தைப் பைங்கிளி எழுத்து என்று அழைப்பார்கள்) இலக்கியம் என்று நம்பிக்கொண்டு கலாச்சார வறுமையில் உழன்று கொண்டிருந்தபோது ஒற்றை மனிதராக அந்த அசுர அதிகாரத்தை எதிர்கொண்டு போராடினார் சுந்தர ராமசாமி. அவர் செய்தது ஒரு யுத்தம். சி.சு. செல்லப்பாவுக்குப் பிறகு அவர் செய்த பணியை - மலினமான எழுத்தையும், மலினமான கலாச்சார மதிப்பீடுகளையும் எதிர்த்துப் போராடும் பணியைத் - தன் கையில் எடுத்துக் கொண்டார் சு.ரா. இந்திரா பார்த்தசாரதிக்கு ஒருமுறை தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்தபோது குஷ்புவோடு சேர்ந்து அதை வாங்க மாட்டேன் என்று மறுத்தார் அல்லவா இ.பா.? தமிழ்நாட்டின் கலாச்சார வறுமையின் அடையாளம்தான் இ.பா.வுக்குக் கலைமாமணி விருது வழங்கிய செயலாகும்.

இப்போது மீண்டும் ‘பிரக்ஞை’க்குப் போகலாம். அதில் 1976-ம் ஆண்டு சு.ரா. எழுதிய கட்டுரை ‘போலி முகங்கள் - சந்தர்ப்பம் : ஞானபீடப் பரிசு’. அந்தக் கட்டுரைதான் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு - அப்போது எனக்கு சி.சு. செல்லப்பா தெரியாது - இலக்கியத்துக்கும் ஜனரஞ்சக, பைங்கிளி எழுத்துக்குமான வேறுபாடு பற்றிக் கற்பித்தது. ஒரு பைங்கிளி எழுத்தாளனாக ஆகியிருக்கக் கூடிய என்னை அந்த வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றியது அந்தக் கட்டுரைதான். செல்லப்பா தன் ஆயுள் முழுவதும் போராடிய கருத்துக்களம் அது. சு.ரா.வின் அந்தக் கட்டுரை இலக்கியப் போலிகளுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள வித்தியாசம் பற்றி எங்களுக்குச் சொன்னது. போலி இலக்கியம் எப்படி ஒரு சீரிய கலாசாரத் தளத்தை அதிகாரத்தின் துணை கொண்டு வீழ்த்துகிறது என்பதை விளக்கியது. இலக்கியத்தையும் இலக்கியம் போல் தோற்றம் கொள்ளும் போலிகளையும் இனம் காணும்போது தயவு தாட்சண்யம் எல்லாம் பார்க்க வேண்டியதில்லை என்று எங்களுக்குக் காண்பித்தது.

அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்ததை வாழ்த்தித் தமிழறிஞரான நாரண. துரைக்கண்ணன் எழுதியதை சு.ரா. அந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டுகிறார்: ‘இளவல் அகிலனின் ‘சித்திரப் பாவை’ நாவலை வைத்து மட்டும் பிற மொழியாளர்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளின் தரத்தையோ தகுதியையோ எடை போட்டுப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.’ ஆக, நாரண துரைக்கண்ணனுக்கே அந்த நாவலின் தகுதி பற்றித் தெரிந்திருக்கிறது. இருந்தாலும் தமிழுக்குக் கொடுத்தார்களே என்ற மகிழ்ச்சி! இதுதான் இலக்கிய மதிப்பீடுகளின் சீரழிவு என்றார் சு.ரா.

சு.ரா. கூறியுள்ள ‘சித்திரப் பாவை’யின் கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம். நாயகன் ஓர் ஓவியக் கலைஞன் (சிவாஜி. ஓவியக் கலைஞன் என்பதால் எம்ஜியார் ஒத்து வர மாட்டார்). ஆனால் இவனை ட்ராயிங் மாஸ்டர் என்று மட்டுமே சொல்ல முடியும். ஓவியக் கலை பற்றிய நுட்பமான கருத்துக்களை அகிலன் அந்தக் கால வணிகப் பத்திரிகைகளில் படம் வரைந்து கொண்டிருந்த ரெஸாக், சாமா, வர்ணம் போன்றவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டிருப்பார் என்று நக்கலடிக்கிறார் சு.ரா. இவனைப் பணம் ஈட்டும் தொழிலில் ஈடுபடுத்த விரும்புகிறார் தந்தை (சுப்பையா). இவனோ கலைதான் உயிர் என்கிறான். இவனுக்கு முதிர்ந்த ஓவியர் ஒருவரின் (ரங்காராவ்) நட்பு கிடைக்கிறது. ‘வழக்கம் போல் அவருக்கு ஒரு மகள் (சரோஜாதேவி) இருக்கிறாள். வழக்கம் போல் நல்ல அழகி. கலையுள்ளம் படைத்தவள். அதோடு அழகான கதாநாயகிகளின் எப்போதும் சாதுவான அப்பாக்கள் போல் இவரும் கல்மிஷம் கிஞ்சித்துமின்றித் தன் பெண்ணை ஓவியக் கலைஞனுடன் பழக விடுகிறார்.’ நாயகனுக்கும் நாயகிக்கும் வழக்கம் போல் காதல் மலர்கிறது. நடுவில் நாயகனின் அண்ணன் (பாலாஜி) வில்லனாகக் குறுக்கிட்டு சரோஜாதேவிக்கு முத்தம் கொடுத்து விடுகிறான். மீண்டும் சு.ரா.வின் வார்த்தைகளில்: ‘எச்சிலாக்கப்பட்ட நாயகி, தன்னை மேற்கொண்டு காதலனுக்கு அளிப்பது பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டாதவளாய், எச்சில் படுத்தியவனே மேலும் எச்சில் படுத்தும்படி, அவனையே வலுக்கட்டாயமாக மணந்து கொள்கிறாள்.’ பிறகு சிவாஜி நகை நட்டுக்கு ஆசைப்படும் ஒரு சராசரிப் பெண்ணை மணக்கிறார். ஆனால் கலைஞனான சிவாஜியால் அந்தப் பெண்ணின் லௌகீக ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால் அந்தப் பெண் சைக்கிளில் சென்று மயிலாப்பூரில் உள்ள கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள். வில்லன் பாலாஜியிடம் மாட்டிய சரோ அவனிடம் அடி உதை பட்டு வாழ, இங்கே சிவாஜி தன் காதலியை நினைத்து அவளை ஒரு ஓவியமாக வரைகிறார். (அதுதான் சித்திரப் பாவை!) ராப்பகலாக வரைந்து வரைந்து அவர் கை காலெல்லாம் வீங்கி விடுகிறது. கடைசியில் சரோஜாதேவி பாலாஜியைப் பிரிந்து சிவாஜியிடமே வந்து சேர்கிறார். இந்தப் ‘புரட்சிகரமான’ முடிவுக்காகத்தான் ஞானபீடம் கிடைத்ததோ?

சு.ரா.வின் அந்த முக்கியமான கட்டுரை ‘ஆளுமைகள் மதிப்பீடுகள்’ என்ற தொகுப்பில் வந்துள்ளது. (காலச்சுவடு பதிப்பகம்) அதை எனக்கு அனுப்பி வைத்த விமலாதித்த மாமல்லனுக்கு நன்றி. பிறகுதான் அந்தக் கட்டுரை ‘காற்றில் கலந்த பேரோசை’ என்ற தொகுப்பிலும் இருப்பதைக் கண்டேன். சு.ரா.வின் இந்தக் கட்டுரை ஏதோ ஒரு நூலுக்கு எழுதப்பட்ட மதிப்புரை அல்ல; அல்லது, ஏதோ ஒரு இலக்கியப் பரிசை எதிர்த்து எழுதப்பட்ட சர்ச்சைக் கட்டுரையும் அல்ல. இலக்கியம் என்றால் என்ன என்பதை நமக்குப் புரிய வைக்கும் கட்டுரை. அதில் சு.ரா. சொல்கிறார், ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்யும் கரிச்சட்டைப் பையன்கள் காரை இயங்க வைத்ததும் ஓ என்று கத்தும்போது எனக்கு ஏற்படும் சிலிர்ப்பு வால்ட் விட்மனின் கவிதைகளிலிருந்து கிடைத்தது.

மேலும், அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தது பற்றிப் பாராட்டி எழுதிய வல்லிக்கண்ணன், தி.க.சி. ஆகிய இருவரது இலக்கிய மதிப்பீடுகளையும் கேள்விக்குட்படுத்துகிறார் சு.ரா. (இதனால்தான் அந்த இருவரின் வாழ்நாள் பூராவுமான விமரிசனங்களை நான் ஒரு வார்த்தை கூட இதுவரை படித்ததில்லை.) மேலும் சொல்கிறார் சு.ரா.: ‘அகிலன் பரிசு பெற்றதைப் பத்திரிகைச் சக்திகளும் சக கேளிக்கையாளர்களும் கொண்டாடுவது இயற்கையான காரியம். ஜிப்பா தேசிய உடையாவதை ஜேப்படித் திருடர்கள் வரவேற்பது மாதிரி இது. சீரழிந்த மதிப்பீடுகள் ஒன்று மற்றொன்றைத் தழுவி முத்தமிட்டுக் கொள்ளும்.’

வார்த்தைகளின் கடுமையைக் கவனியுங்கள். இதையெல்லாம் கற்றுக் கொண்டு வந்த ஒரு தலைமுறை இப்போதைய அவசரமான வணிக எழுத்தினாலும் முகநூல் மோஸ்தர்களாலும் மீண்டும் பழைய இடத்துக்கே செல்வதை நான் பார்க்கிறேன். ஒட்டு மொத்த சமுதாயமே எனக்கு சுஜாதாவை மட்டுமே தெரியும் என்று சொல்லும்போது நான் அவர்களிடம் உங்களுக்கு அசோகமித்திரனைத் தெரியுமா என்று கேட்கிறேன். உலக சினிமா அறிந்த என் நண்பர் ஒருவர் சுஜாதாவைப் படித்து மேனி சிலிர்க்கிறார். என்னவென்று சொல்வது? சுஜாதா முன் வைத்த மதிப்பீடுகள் என்ன? ஆயுள் முழுவதும் வணிகப் பத்திரிகைகளின் கேளிக்கைத் தேவைகளுக்குத் தீனி போட்டதுதான். (அவரது ‘நகரம்’, ‘கனவுத் தொழிற்சாலை’ போன்ற ஒன்றிரண்டு எழுத்துக்களையும், இலக்கிய அறிவே இல்லாத ஒரு philistine சமூகத்துக்கு mass educator-ஆக விளங்கியதையும் நான் மதிக்கிறேன். ஆனால் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி, மௌனி, புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், சா. கந்தசாமி, அசோகமித்திரன் என்று யாரையுமே தெரிந்து கொள்ளாமல் சுஜாதா ஒருவரை மட்டுமே படித்த வாசகக் கூட்டத்தை என்னவென்று சொல்வது? சுஜாதாவின் மரணத்துக்குப் பிறகு இந்த வாசகக் கூட்டம் தாய் தந்தையை இழந்த அனாதைகளைப் போல் ஆனதையும் நான் அவதானித்தேன்.)

ஒருமுறை எஸ். ராமகிருஷ்ணன் சுபமங்களா பத்திரிகையில் ரஜினிகாந்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ரஜினி சார் என்று எழுதியிருந்தார். (எஸ்.ரா. சினிமாவில் நுழைந்திருந்த சமயம்). அப்போது நான் சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதனுக்கு நாம் என்ன ரமணர் சார், மார்க்ஸ் சார், பாரதி சார் என்றா அழைக்கிறோம் என்று கேட்டு ஒரு கடிதம் எழுதினேன். என் கடிதம் பிரசுரமாகவில்லை. ஆனால் அதே ரீதியில் சு.ரா. எழுதிய கடிதம் வந்திருந்தது. ரமணர் சார், பாரதி சார் என்றா அழைக்கிறோம்? பெயர்கள் கூட அதேதான். எங்களைப் போன்றவர்கள் சு.ரா.விடம் பயின்றது அதைத்தான். ஆனால் நிலைமை இப்போதும் திருந்தவில்லை. சமீபத்தில் ஜெயமோகன் ஒரு பேட்டியில் ரஜினியை தலைவர் என்று குறிப்பிட்டிருந்தார். என்னைப் பலரும் சினிமாவுக்கு ஏன் வசனம் எழுதுவதில்லை என்று கேட்பதுண்டு. அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான்: ஓர் அலுவலகத்தில் போய் வேலை செய்து கொண்டு மீதி நேரத்தில் எழுதுவது போல் அல்ல அது. ஒரு மருத்துவரின், ஓர் ஆசிரியரின் வேலை போல் அல்ல அது. படப்பிடிப்புத் தளத்தில் நீங்கள் ரஜினி என்று பேச முடியாது. தலைவர் என்றே பேச வேண்டும். அதேதான் நம்முடைய கட்டுரையிலும் பேட்டியிலும் வரும். அப்படியானால் கலைஞர் என்றும், புரட்சித் தலைவி என்றும்தான் சொல்லியாக வேண்டும். தலைவரின் நீட்சிதானே இதுவும்?

இத்தகைய சூழலில் சுந்தர ராமசாமியின் முக்கியத்துவம் கூடுகிறது. இலக்கியத்தை, இலக்கிய உத்திகளைக் கற்பிக்க இங்கே இரண்டு டஜன் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இலக்கியத்தின் மூலம் நாம் கண்டடைய வேண்டிய மதிப்பீடுகள் குறித்து அக்கறை கொண்டார் சு.ரா.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com