'கார்'காலம்

ஆன்மிகத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒருவர் புது ஃபோர்டு காரொன்றை ஓட்டிக்கொண்டு சென்றார். திடீரென்று கார் நின்றுவிட்டது. என்ன செய்தும் கார் நகரவில்லை. என்ன
Published on
Updated on
6 min read

ஆன்மிகத்தில் ஒரு கதை சொல்வார்கள். ஒருவர் புது ஃபோர்டு காரொன்றை ஓட்டிக்கொண்டு சென்றார். திடீரென்று கார் நின்றுவிட்டது. என்ன செய்தும் கார் நகரவில்லை. என்ன செய்வதெனத் தெரியாமல் நடுத்தெருவில் தனியாக நிற்கிறார். அப்போது அவருக்கெதிரில் இன்னொரு புதிய ஃபோர்டுகார் வந்து நிற்கிறது. அதிலிருந்து கோட்டுப்போட்ட ஒருவர் இறங்கி என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, நான் முயன்று பார்க்கவா என்று கேட்டு, ஓடாத காரில் ஏறி ஏதேதோ செய்கிறார். சற்றுநேரத்தில் கார் சரியாகி ஓடத்தயாராக உறுமுகிறது. நீங்கள்யார் என்று தெரிந்துகொள்ளலாமா என்று நன்றியுடன் கேட்கிறார் நின்ற காரின் சொந்தக்காரர். அதற்கந்த ஆபத்பாந்தவர், 'நான்தான் ஹென்றிஃபோர்டு' என்று சொல்லி கைகுலுக்கிவிட்டுச் செல்கிறார்! காரைச்செய்தவன் அவன். காரில் என்ன பிரச்சனை வரும், அதை எப்படிச் சரிசெய்வது என்றெல்லாம் அவனுக்குத்தான் தெரியும். அதைப்போல, உனக்கொரு பிரச்சனை வந்தால், உன்னைச்செய்த இறைவனிடம் ஒப்படைத்துவிடு என்பதற்காக இந்தக்கதை!

அழகான இந்தக்கதைசொல்வதுதான் எவ்வளவு உண்மை! ஒரு பெரிய கம்பனியைத் தொடங்கி, மக்களுக்கு மகத்தான சேவை செய்து, அதன் விளைவாக கோடிகோடியாகச் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு ஹென்றிஃபோர்டின் வாழ்க்கை வரலாறு கொடும்பசியில் இருப்பவனுக்கு மட்டனுடன் பிரியாணி போட்டமாதிரி! வாருங்கள் கொஞ்சம் பிரியாணி சுவைக்கலாம்!

1863 ஜூலை 30ல் அமெரிக்காவின் மிச்சிகன் என்ற ஊரில் ஒரு பண்ணையில் பிறந்தார் ஹென்றிஃபோர்டு. ஸ்பேனர், சிசர்ஸ், சுத்தியல் என அவரது விளையாட்டுப் பொருள்களெல்லாம் மெகானிக் வைத்திருக்கும் கருவிகளாகவே இருந்தன. ஆனால் அக்கருவிகள் ஒவ்வொன்றையும் பொக்கிஷமாகக் கருதினார் அவர்.

மகன் பண்ணை விவசாயியாக வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம். ஆனால் இயந்திரங்களே மகனின் மந்திரங்களாக இருந்தன. அதற்கும் காரணம் ஒருவகையில் அப்பாதான். ஒரு 'பாக்கட் வாட்ச்'சை முதன்முதலில் மகனுக்குப் பரிசளித்தவர் அவர்தான். அதிலிருந்துதான் ஃபோர்டின் மனம் இயந்திரங்களை விரும்ப ஆரம்பித்தது.

பன்னிரண்டு வயதிருந்தபோது கதிரடிக்கும் இயந்திரங்களைச் செலுத்த உதவிய ஒரு இயந்திரத்தைப் பார்த்தார். அதில் வைக்கப்பட்டிருந்த 'கியர்' மூலம் இயந்திரத்தை நிறுத்தமுடிந்தது. அதைப்போல சாலைகளில் மனிதர்களை ஏற்றிக்கொண்டு ஓடக்கூடிய ஒரு இயந்திரத்தைச் செய்யவேண்டும் என்ற ஆசையை அது தூண்டியது.

பதிமூன்று வயதில் முதன்முறையாக ஓடாத வாட்ச்சை ஓடவைத்தார். பதினைந்து வயதானபோது வாட்ச்களை 'ரிப்பேர்’ செய்வதில் 'எக்ஸ்பர்ட்’ ஆனார். வாட்ச்களில் அவர் செய்யமுடியாத காரியமே இல்லை என்றானது. அவரது இரவுகள் வாட்ச் ரிப்பேரிலேயே கழிந்தன. ஒரு கட்டத்தில் ரிப்பேர் செய்யவேண்டிய வாட்ச்சுகள் அவனிடம் 300 இருந்தன! ரயில்வே நேரத்தையும் சாதாரண நேரத்தையும் காட்டவல்ல இரண்டு டயல்கள் கொண்ட வாட்ச்சை அவர் வடிவமைத்தார்! அவரது பகுதியில் அது அவரை பிரபலப்படுத்தியது. வாட்ச் தயாரிக்கும் கம்பனி தொடங்கலாமா என்றுகூட நினைத்தார். ஆனால் வாட்ச் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் அவசியமான பொருளல்ல என்று அவருக்குப் பட்டது. சின்ன வயதிலேயே பிஸினஸ் மூளை!

அதன்பின் ரோடு என்ஜின்களை ரிப்பேர் செய்யும் வேலை செய்தார். பின்  குதிரைகளுக்கும் ட்ராக்டர்களுக்கும் பதிலாக சாலையில் ஓடக்கூடிய எடைகுறைந்த நீராவிக்காரை செய்தார். அதிலிருந்த சில அபாயங்களை பற்றி இரண்டாண்டுகள் யோசித்துவிட்டு, அது சரியாக வராது என்று அந்த 'ஐடியா’வைக் கைவிட்டார்.

தாமஸ் ஆல்வா எடிசனின் டெட்ராய்ட் எலக்ட்ரிக் கம்பனியில் மாதம் 45 டாலர் சம்பளத்துக்கு வேலை பார்க்கும்போது ஒவ்வொரு நாள் இரவும், ஞாயிறுகளில் முழுநாளும், பெட்ரோலால் ஓடக்கூடிய கார் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார்.

1892ல் நான்கு குதிரையாற்றல் கொண்ட, இரண்டுபேர் அமர்ந்து போகக்கூடிய முதல் காரை வடிவமைத்தார். மணிக்கு பத்து மைல், இருபது மைல் என இரண்டுவிதமான வேகங்களில். ஆனால் அவற்றி ரிவர்ஸ் கியர் இல்லை. பின்னால் போகமுடியாது. மொத்த காருமே 500 பவுண்டு (கிட்டத்தட்ட 227 கிலோ) எடைதான். ரொம்ப குண்டான ஒரு ஆளின் எடை என்று வைத்துக்கொள்ளலாம்!

1893லிருந்து 1921வரை,  இருபத்தெட்டு ஆண்டுகளில் ஃபோர்டு கம்பனி 50 லட்சம் கார்களைச்செய்து விற்றிருந்தது! இறுதியாக ஒருகோடியே ஐம்பதுலட்சத்து ஏழாயிரத்து முப்பத்துநான்கு கார்கள் விற்றன!

அடுத்த 50 ஆண்டுகளில் வேறு எந்தக் கார் கம்பனியாலும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை. கையில் கட்டும் ஒன்றை சரிசெய்ய ஆரம்பித்த ஹென்றிஃபோர்டு கையால் கட்டுப்படுத்தப்படும் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கிய மேதையாக உயர்ந்தார். கோடு போட்டால் ரோடு போடுவேன் என்று நாம் நகைச்சுவையாகச் சொல்கிறோம். இன்று உலகில் ரோடுகள் இருப்பதற்கு முக்கியக்காரணமே ஹென்றி ஃபோர்டுதான் என்று சொன்னால் அது மிகையாகாது! அவருக்கு எல்லாக்காலமும் ‘கார்’ காலம்தான்!

காரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரல்ல அவர். அவருக்கு முன்னர் கார்கள் இருக்கத்தான் செய்தன. ஆனால் உறுதியான, அதேசமயம் எடைகுறைந்த மிகமலிவான கார்களை பெரிய அளவில் அறிமுகப்படுத்தி புரட்சி செய்தவர் ஃபோர்டு.

ஆரம்பகாலப் பிரச்சனைகள்

டெட்ராய்ட் நகரில் ஓடிய ஒரே கார் ஃபோர்டின் ‘மாடல்-டி’ கார்தான். ஆனால் அது ஊர் மக்களுக்கு ஒரு பிரச்சனையாகிப் போனது! ஏன்? காரிலிருந்து அவ்வளவு சப்தம்! குதிரைகளை அது பயமுறுத்தியது. போக்குவரத்தை நிறுத்தியது! எங்காவது காரை ஒரு நிமிடம் வைத்துவிட்டுப் போனாலும் ஆர்வக்கோளாறினால் யாராவது அதை ‘ஓட்ட’ முயற்சித்துவிடுவார்கள்! அதனால் அதை எங்கு நிறுத்தினாலும் கோயில் வாசலில் செருப்புக்குச் செயின் போட்டுக் கட்டுவதுபோல, காரையும் கட்டி வைத்துவிட்டுப் போகவேண்டியிருந்தது! ஒராண்டுக்கு அந்தக்காரை ஓட்டியபிறகு சார்லஸ்ஐன்ஸ்லீ என்பவருக்கு இருநூறு டாலருக்கு அந்தக்காரை ஃபோர்டு விற்றார். அதுதான் அவரது முதல் விற்பனை!

அந்தக்காரை அவர் பரிசோதனைக்காகத்தான் தயாரித்திருந்தார். இன்னொருகார் தயாரிக்க விரும்பியதாலும், முன்னதை வாங்க சார்லஸ் விருப்பம் தெரிவித்ததாலும் அது விற்கப்பட்டது.

ரேஸ் கார்கள் இரண்டு

999 மற்றும் Arrow என்று இரண்டு ரேஸ் கார்களை முதலில் செய்தார். ஏனெனில் அப்போதெல்லாம் ரேஸ்கார்களுக்குத்தான் சந்தை. முதல் காரை ரேஸில் பரிசோதித்துப் பார்த்தார். ஆனால் காரை அவர் ஓட்டவில்லை! அந்தக் காரின் நாலு சிலிண்டர்களின் சப்தமே ஒரு மனிதனைப் பாதி கொல்லப் போதுமானதாக இருந்ததாம்! மணிக்கு 80கிமீ வேகத்தில் செல்லக்கூடிய கார் அதுவரை தயாரிக்கப்படவில்லை. அதை பயமறியாத பார்னிஓல்டுஃபீல்டு என்பவர் ஓட்டி சாதனை செய்தார். அந்தக்காரில் ஸ்டியரிங் வீல் கிடையாது, இரண்டு கைப்பிடிகள் மட்டும்தான்! அந்த வெற்றிக்குப் பிறகுதான் ஃபோர்டு கார் கம்பெனி உருவாக்கப்பட்டது. அதன் வைஸ் பிரசிடன்ட், டிசைனர், மாஸ்டர் மெகானிக், சூப்பிரண்ட், ஜெனரல் மேனேஜர் எல்லாமே ஹென்றி ஃபோர்டுதான்! முதல் ஆண்டு 1708 கார்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன.

ஃபோர் ட்வெண்ட்டி

தன் கார்களைப் பற்றி ஃபோர்டு ஒருவிஷயத்தைப் பெருமையாகச் சொல்கிறார். என்ன நடந்தாலும் அவை ஓடிக்கொண்டே இருக்கும். 420 என்ற அவரது தயாரிப்பு ஒன்று பல கைகள் மாறி, எங்கெங்கோ மோதி, எதெல்லாமோ கழன்று, கடைசிவரை ஓடிக்கொண்டிருந்தது. அதுபற்றிக் குறிப்பிடும்போது ‘போர்டு காரை பாகம்பாகமாக வெட்டிப் பார்க்கலாம். ஆனால் கொல்ல முடியாது’ என்று கூறுகிறார் ஹென்றிஃபோர்டு! 420 என்று பெயர்வைக்கப்பட்டாலும் ஃபோர்டு கார் ஏமாற்றுவதில்லை!

மிகக்குறைந்த விலை 600 டாலர்கள், மிக அதிகவிலை 750 டாலர்கள். அந்த ஆண்டு முந்திய ஆண்டைவிட ஐந்து மடங்கு அதிகமாக, 8423 கார்கள் விற்றன! ஒரு நாளைக்கு நூறு கார்களை அவர்களால் விற்பனை செய்யமுடிந்தது! பணம் பெற்றுக்கொண்ட பிறகு கார்கள் நேரடியாக கஸ்டமரிடமே ஒப்படைக்கப்பட்டன.

செல்டன் உரிம வழக்குப் பிரச்சனை

திடீரென்று செல்டன் என்ற கம்பனி நாங்கள்தான் கார் செய்ய உரிமம் பெற்றிருக்கிறோம். வேறு யாரும் கார் தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என்று வழக்குத் தொடர்ந்தது. அதில் முதல்கட்டமாக அவர்கள் வெற்றியும் பெற்றனர். ஃபோர்டு கார் வைத்திருப்பவர்களெல்லாம் ஜெயிலுக்குப் போகவேண்டி வரலாம் என்ற அச்சத்தை உருவாக்க முயன்றனர். ஆனால் பாதுகாப்பு அளிப்பதாகவும், பத்திரம் கொடுப்பதாகவும் ஹென்றிஃபோர்டு விளம்பரம் செய்தார். அதன் விளைவாக அந்த ஆண்டு முந்தைய ஆண்டைவிட 18000 கார்கள் அதிகமாக விற்றன! ஃபோர்டு காருக்கு மிகப்பெரிய விளம்பரமாக ஆகிப்போனது அந்த வழக்கு! வழக்கிலும் வியாபாரத்திலும் ஃபோர்டுதான் வெற்றி பெற்றார்.

வனாடியம்

‘லக்சுரி காரி’ல் உள்ள எதுவுமே ஃபோர்டு காரில் இருக்காது. என்றாலும் ஒரு நாளைக்கு நூறு கார்கள் வீதம் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. ஆனால் ஒருநாளைக்கு ஆயிரம் கார்கள் தயாரிப்பதே தன் நோக்கம் என்று சொல்லி அனைவரையும் அசத்தினார் ஃபோர்டு. நிறைய வருமானம் வந்துவிட்டது, அவர் இனி ஒதுங்கி ஓய்வெடுக்கலாம் என்று எல்லாரும் நினைத்தபோது, இனிமேல்தான் உண்மையான, இன்னும் சிறப்பான சேவை செய்யவேண்டும் என்று ஃபோர்டு ஆசைப்பட்டார். அதற்காகத் திட்டமிடவும் செயல்படவும் ஆரம்பித்தார். அவருடைய ஆசையெல்லாம் கார் உறுதியாக இருக்கவேண்டும் ஆனால் எடை மிகவும் குறைவாக இருக்கவேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட ஒரு பொருளை அவர் தேடிக்கொண்டிருந்தார்.

1905ல் அவருடைய கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு வந்தது. ஒரு ரேஸில் ஒரு ஃப்ரெஞ்சுக்கார் மோதி நசுங்கியது. அதிலிருந்து உடைந்து விழுந்துகிடந்த சின்ன வால்வு ஒன்றை ஃபோர்டு எடுத்துப்பார்த்தார். அது மிகக்குறைந்த எடைகொண்டதாகவும் அதேசமயம் மிக உறுதியானதாகவும் இருந்தது. அந்த மாதிரிப் பொருள்தான் தன் கார்களைச் செய்யத்தேவை என்று உணர்ந்து கொண்டார். அதுபற்றி விசாரித்தார். யாருக்குமே ஒன்றும் தெரியவில்லை. தன் உதவியாளரிடம் அதைக்கொடுத்து அதுபற்றிய முழுத்தகவல்களையும் திரட்டச் சொன்னார். அது ஒரு ஃப்ரெஞ்சு ஸ்டீல் என்றும் அதனுள் வனாடியம் என்ற உலோகம் இருந்தது என்றும் தெரியவந்தது. அதிலிருந்து ஃபோர்டு கார்கள் வனாடியம் உலோகத்தில் செய்யப்பட்டன.

அதுவரை உருவாக்கப்பட்ட கார்களின் பயன்படுத்தப்பட்ட உலோகத்தின் உறுதி 70,000 பவுண்டு ஸ்டென்சில்கள்வரைதான் இருந்தது. ஆனால் வனாடியத்தின் உறுதியோ 1,70,000 பவுண்டு ஸ்டென்சில்கள் வரை சென்றது! ஃபோர்டு காரில் பயன்படுத்தப்பட்ட இருபது வகையான ஸ்டீல்களில் பத்துவகை வனாடியமாக இருந்தது. எங்கெல்லாம் உறுதியும் எடைகுறைவும் தேவைப்பட்டதோ அங்கெல்லாம் வனாடியம் பயன்படுத்தப்பட்டது.

மாடல்-ட்டி

மாடல் மாடலாக வெளியிட்டுக்கொண்டிருக்காமல் ஒரே மாடல், அது ‘யுனிவர்சல் மாட’லாக இருக்கவேண்டும். மேலும் மாற்றவேண்டிய அல்லது சிறப்பாக்கவேண்டிய அவசியமில்லாததாக இருக்கவேண்டும் என்ற உறுதியான எண்ணத்தில், பன்னிரண்டாண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் இறுதியாக உருவானதுதான் மாடல்-டி. அதற்கு முன்னர் எட்டு மாடல்களை உருவாக்கியிருந்தார் ஃபோர்டு.

1911ல் அவரிடம் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர், பதினான்கு கிளைத் தொழிற்சாலைகள் இருந்தன. இனிமேல் மாடல்-டி கார் மட்டும்தான் தயாரிக்கப்படும், அதுவும் கறுப்புக்கலர் மட்டுமே என்று 1901ல் ஃபோர்டு அறிவித்தார்!

போர்டு தொழிலாளர்கள்  எப்படிப்பட்டவர்கள்?

தன் தொழில்பற்றி ஃபோர்டு எவ்வளவு யோசிப்பார் என்று ஒரு சாம்பிள் பார்க்கலாமா? அவருடைய கார் தொழிற்சாலையில் ஒரு காரைச் செய்வதில் ஏறத்தாழ 7882 வகையான வேலைகள் இருந்தன.

அவற்றில் 949 கடினமான வேலைகள்

3338 அவ்வளவு கடினமல்ல

3595 வேலைகளுக்கு உடலுழைப்பே தேவையில்லை. பெண்களும் குழந்தைகளும்கூட அவ்வேலைகளைத் திறம்படச் செய்யலாம்;

அதிலும் 670வகை வேலைகளை காலில்லாதவர்களால் செய்யமுடியும்;

2637வகை வேலைகளை ஒருகால் உள்ளவர்கள் மட்டுமே செய்யமுடியும்;

இரண்டு வகையான வேலைகளை கைகளில்லாதவர்கள் செய்யமுடியும்;

715வகை வேலைகளை ஒருகை மட்டும் உள்ளவர்களால் செய்யமுடியும்; 

பத்து வகை வேலைகளைக் கண்பார்வையற்றவர்களாலும் செய்யமுடியும் – என்று அவர் கூறுகிறார்!

அவருடைய கம்பனியில் பணிபுரிந்தவர்களில்:

123பேர் கைகள் ஊனமானவர்கள்,

நால்வர் பார்வையற்றவர்கள்,

253பேர் ஒருகண்பார்வை இழந்தவர்கள்,

37பேர் செவிடு ஊமையானவர்கள்,

60பேர் வாதமடித்தவர்கள்,

நான்கு பேர்கள் கால்களற்றவர்கள்,

234 பேர் ஒருகால் மட்டுமே இருந்தவர்கள்,

மற்றவர்களுக்கு வேறு சில உடல் பிரச்சனைகள் இருந்தன!
 

ஃபோர்டு கார் ஓட்டாத ஃபோர்டு

சந்தையில் எந்தப் புதுக்கார் வந்தாலும் அதிலொன்றை ஃபோர்டு வாங்கிவிடுவார். எதற்கு? அதை ஓட்டிப்பார்த்து, தன் காரில் இல்லாதது அதிலிருக்கிறதா என்றுபார்த்து, இருக்குமானால் அதையும் சேர்த்துக்கொள்ளத்தான்! ஆனால் அவர் அப்படி ஓட்டியபோதெல்லாம் பத்திரிக்கையாளர்கள் படம் பிடித்து, ‘ஃபோர்டு கார் ஓட்டாத ஃபோர்டு’ என்று தலைப்பு கொடுப்பது வழக்கம்!

1947ல் 83 வயதில் ஃபோர்டு இறந்து போனார். அவரது பெயரில் இருந்த இடுகாட்டிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டார். ஒருமணி நேரத்துக்கு 5000 பேர் வீதம் அவரது உடலைப் பார்த்து இறுதி மரியாதை செய்துசென்றதாக விக்கி கூறுகிறது.

ஹென்றி ஃபோர்டு சில தகவல்கள்

  • சர்வாதிகாரி ஹிட்லர் ஹென்றிஃபோர்டின் ரசிகன்! அவரது பெரிய ஒளிப்படைத்தை தன் மேஜையில் வைத்திருந்தான்!

  • ஹென்றிஃபோர்டு ஒரு ஏரோப்ளேன் கம்பனியும் வைத்திருந்தார்

  • லேபர் யூனியன், யூதர்கள் மற்றும் உலகமகா யுத்தங்களுக்கு எதிரானவராக இருந்தார்

  • 1914ல் அவர் கொடுத்த ஐந்துடாலர் ஒருநாள் சம்பளம் இன்றைய தேதியில் 120 அமெரிக்க டாலர்களுக்குச் சமம்

  • ஒவ்வோராண்டும் காரின் தரம் உயரஉயர, விலையைக் குறைத்துக்கொண்டே சென்றார்

  • இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்கா என உலகம் முழுவதும் அவரது கார் கம்பனிகள் இருந்தன.

‘பணத்தின் பின்னால் ஓடுவதற்குப் பெயர் வியாபாரமல்ல…பணத்தின்மீது பேராசைகொள்வதானது பணம் கிடைக்காததற்குரிய நிச்சயமான வழி. சேவைக்காக மட்டுமே சேவைசெய்வது நமது நோக்கமாக இருந்தால் பணம் நம்மைநோக்கி அபரிமிதமாக வர ஆரம்பிக்கும்… சேவையின்  இயற்கையான விளைவுதான் பணம்’ என்று கூறுகிறார் உலகின் ஆகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஹென்றிஃபோர்டு. இதுதான் சத்தியம். இதுதான் செல்வ மனநிலை. கார் விற்றாலும் சரி, மோர் விற்றாலும் சரி.    

                                     ***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com