தமிழின் முறுக்கு மீசை

1882ம் ஆண்டு டிசம்பர் பதினொன்றாம் தேதி தமிழ் மொழிக்கு மீசை முளைத்தது! ஆம். அன்றுதான் மகாகவி பாரதி பிறந்தார். பாரதியின்
Published on
Updated on
6 min read

1882ம் ஆண்டு டிசம்பர் பதினொன்றாம் தேதி தமிழ் மொழிக்கு மீசை முளைத்தது! ஆம். அன்றுதான் மகாகவி பாரதி பிறந்தார். பாரதியின் வாழ்க்கையில் நமக்கு மகத்தான பாடங்கள் மறைந்துள்ளன. ஒரு மனிதன் எப்படி நடந்துகொள்ளவேண்டும், ஒரு குடும்பஸ்தன் எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது, ஒரு மகாகவி எப்படி இருப்பார்  – என்பதையெல்லாம் பாரதியின் வாழ்விலிருந்து தெரிந்துகொள்ளலாம்! பாரதியின் வாழ்க்கை வரலாற்றை காலக்கிரமப்படி சொல்லப்போவதில்லை. பாரதியிடமிருந்து நான் கற்றுக்கொண்டவற்றில் சிலதை உங்கள்முன் வைத்தால் உங்களுக்கும் அவை உதவலாம் அல்லவா? அதனால்தான் இக்கட்டுரை.

தோற்றம்

பாரதியார் நல்ல அழகு. ‘சுந்தர புருஷர்’. கம்பீரமான முகத்துக்கு ஏற்ற சற்றே நீண்ட மூக்கு. ‘செவ்வரி படர்ந்த செந்தாமரை’ போன்ற கண்கள். ‘அக்கினிப் பந்துகளைப்போல’ அவை பிரகாசித்தன. விசாலமான நெற்றி. ஆனால் தலை பாதிக்குமேல் ‘வழுக்கை’. அதை மறைக்கவே அவர் ‘சிரசில் முண்டாசு கட்டிக்கொண்டார்’. அடர்ந்த மீசை. அவர் அதை ‘ட்ரிம்’ செய்வது கிடையாது. எழுதாதபோது வலக்கை மீசையை முறுக்கிக்கொண்டிருக்கும். நடுநெற்றியிலே சந்திர வட்டத்தைப்போலக் குங்குமப்பொட்டு. பனியன், அதற்கு மேல் ஒரு சட்டை. அது அனேகமாகக் ‘கிழிந்தே இருக்கும்’. அதற்குமேலே ஒரு கோட்டு. அதிலொரு பொத்தான். அதன் துவாரத்தில் ஒரு மலர். ரோஜா, மல்லிகை இப்படி ஏதாவது.  இடது கையிலொரு புத்தகம், ஒரு நோட்டு, சில காகிதங்கள் அவசியம் இருக்கும். ‘கைக்கு அழகு புத்தகம்’ என்று அவர் எப்போதும் சொல்லுவார். சட்டைப்பையிலே ‘பெருமாள் செட்டி பென்சில்’ நீண்டு தென்படும். அவரது கையெழுத்து குண்டுகுண்டாய் இருக்கும். ‘சிறு குழந்தைகளும் அவரது எழுத்தை இலகுவில் வாசிக்கலாம்.’ அவர் ஹிந்தி பேசினால், ‘அவரைத் தமிழர் என்று யாரும் நினைக்கமுடியாது’, அவ்வளவு தெளிவான உச்சரிப்பு. முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை தவழும். அதில் ‘அழகும் அன்பும் ஒழுகும்’. நிமிர்ந்த நடை. ‘குனியாதே, உடல் குனிந்தால் உள்ளமும் குனிந்துபோம்’ (ஐயர், பக்கம் 48--50) என்று சொல்வார்! எவ்வளவு தீர்க்கதரிசனம்!

யார் மகாகவி

சாதாரண கவிஞனுக்கும், மகாகவிக்கும் என்ன வேறுபாடு? என் கேள்விக்கு பள்ளித்தமிழாசிரியர் சொன்ன பதில்: சாதாரண கவிஞன் யோசித்து எழுதுவான். ஆனால் மகாகவி யோசிப்பதில்லை. அருவி மாதிரி கவிதை வந்து கொட்டிக்கொண்டே இருக்கும்! Spontaneous overflow of powerful feelings என்று வொர்ட்ஸ்வொர்த் சொன்னமாதிரி. எவ்வளவு அழகான, சரியாத பதில்!

ஒரு நாள் பாரதிக்குக் கொஞ்சம் அரிசி கிடைத்தது. அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். வீட்டில் வறுமை ருத்ரதாண்டவமாடிக்கொண்டிருந்தது. அடுப்பில் வழக்கம்போலப் பூனைகள் கதகதப்பாகத் தூங்கிக்கொண்டிருந்தன. மனைவி செல்லாம்மாவும் மகளும் பசியால் வாடிக்கொண்டிருந்தனர். அந்த அரிசியைக் கொண்டுபோய்க் கொடுத்தால் ஒருவயிற்றுக் கஞ்சிக்காகும். ஆனால் வரும்வழியில் சின்னச்சின்னக் குருவிகளைப் பார்த்தார் பாரதி. அவ்வளவுதான். ‘ஜோஷ்’ வந்துவிட்டது. அரிசியையெல்லாம் அவைகளுக்கு இரைத்துவிட்டு, ‘காக்கைக் குருவி எங்கள் ஜாதி’ என்று பாட்டுப் பாடினார்!

இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்ததா என்று தெரியவில்லை. வீட்டில் கொஞ்சம் உணவே இருந்தாலும் அதைப் பறவைகளோடு பகிர்ந்துண்பதையே பாரதி விரும்பினார் என்று செல்லம்மா சொன்னதிலிருந்து நிச்சயமாக பாரதி அப்படிச் செய்திருக்கும் சாத்தியமுண்டு என்றே தோன்றுகிறது.

விளையும் பயிர்

காந்திமதி நாதன் என்ற புலவர் பாரதியைக் கிண்டல் செய்ய எண்ணி ‘பாரதி சின்னப்பயல்’ என்று முடியுமாறு ஒரு ஈற்றடி பாடச்சொன்னார். உடனே பாரதி, 

காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்

பார்-அதி சின்னப் பயல்!

என்று கூறி அவர் மூக்கை உடைத்தார்!

சாதாரண அனுபவங்களிலிலிருந்து அசாதாரண உண்மைகளை, அறிந்தவற்றிலிருந்து அறியாதவற்றை உணர்ந்து கொள்பவனே கவிஞன் என்பதை எனக்குப் புரியவைத்தவர் பாரதி. ‘தீக்குள் விரலை வைத்தால், உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்று பாரதியால் மட்டுமே பாடமுடியும். தீக்குள் விரலைவைத்தால் அது விரலைச்சுடும் என்பதுதான் நமது அனுபவம். ஆனால் அப்படிக்கூட நந்தலாலாவைத் தொட்டுப்பார்க்கமுடியும் என்பது ஒரு கவிஞானிக்கு மட்டுமே வாய்க்கக்கூடிய அனுபவம்.

மறவன் பாட்டு

வாழ்வின் எல்லா நேரங்களும், சூழ்நிலைகளும் கவிதைகள் ஊற்றெடுக்கும் வாய்ப்பாகவே இருந்திருக்கிறது பாரதிக்கு. ராமசாமி என்பவர் புதுச்சேரியில் பாரதியைச் சந்தித்து அவர் காலில்விழுந்தார். உங்களுக்கு என்ன வேண்டும் என்று வினவிய பாரதிக்கு ராமசாமி ஆங்கிலத்தில் பதில் சொன்னதும், இன்னும் எத்தனை காலம்தான் தமிழர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலத்தைப் பயன்படுத்தவேண்டும் என்று பாரதி கேட்டார். அதுகேட்டு ராமசாமி அழுத அந்தக் கணத்திலேயே பாரதி பாடியதுதான் மறவன் பாட்டு!

‘நாடு விடுதலை அடையுமுன் நரம்புகள் விடுதலை அடையவேண்டும். நாக்கு விடுதலை அடையவேண்டும். இலக்கியம் விடுதலை அடையவேண்டும். மொழி விடுதலை அடையவேண்டும்’ என்று பாரதி மிகச்சரியாகக் கூறினார்.

தமிழ் சுப்ரபாதம்

நண்பர் கண்ணன் வந்து காலை நான்கு மணிக்கு பாரதியை எழுப்பி, இருவரும் இரண்டு மைல் நடந்து குளத்துக்குப் போய் குளித்து வருவார்கள். ஒரு நாள் கண்ணன் வரவில்லை. அவரைத் தேடி அவர் வீட்டுக்கு பாரதி சென்றார். அவரது அன்னையிடம் கண்ணன் பாரதியை அறிமுகப்படுத்தியவுடன் சுப்ரபாதம் பாடும்படி அவரை அந்த அம்மா கேட்டார். அது என்ன என்று கண்ணனிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட பாரதி குளித்துவிட்டு வந்தவுடன் தமிழில் பாடிய சுப்ரபாதம்தான் ‘பொழுது புலர்ந்தது’ என்ற பாடல்!

நம் கருத்துக்களை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள் என்று ஒருநாள் கண்ணன் கேட்டார். அதற்கு பாரதி, ‘ஏனெனில் நம் கருத்துக்கள் இன்னும் நானூறு ஆண்டுகள் கழித்து சொல்லப்பட வேண்டியவை. இவர்களால் புரிந்துகொள்ள முடியாது’ என்றார். காலத்தைக் கடந்த சிந்தனையோடு இருக்கிறோம் என்ற தெளிவோடுதான் பாரதி வாழ்ந்திருக்கிறார்.

பகைவருக்கு அருள்வாய் நன்னெஞ்சே

புதுச்சேரியிலிருந்த பாரதியை ப்ரிட்டிஷ் போலீஸிடம் காட்டிக்கொடுத்து நன்மைபெற விரும்பிய நண்பரொருவர், பாரதிக்கெதிரான கைது உத்தரவுகெளெல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன என்று பொய்சொல்லி பாரதியை தமிழ்நாட்டுக்கு அழைத்துச் சென்றார். வழியில் அவரைச் சந்தித்த பாரதியின் மாமனார் உண்மையை எடுத்துச்சொல்லி மீண்டும் பாரதியை புதுச்சேரிக்குத் திருப்பிவிட்டார். ஆனால் பாரதிக்கு ஏற்கனவே உண்மை தெரியும் என்று துரோகி-நண்பருக்குத் தெரியவந்து அவர் அச்சத்தோடு பாரதியை நெருங்கியபோது, ‘பகைவருக்கருள்வாய் நன்னெஞ்சே, புகைநடுவில் தீ இருப்பதுபோல், பகைநடுவில் அன்புருவான பரமன் வாழ்கிறான்’ என்று பாடினார். அதுகேட்ட நண்பர் பாரதியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்.

குறும்பு

பாரதியாருக்கு (என்னை மாதிரி) குறும்பு அதிகம்! புதுச்சேரியில் ஒரு சத்திரத்தில் கதாகாலட்சேபம் நடந்துகொண்டிருந்தது. ஆனால் பாகவதர் சரியான அறுவை. எனவே மக்கள் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தனர். அடிக்கடி பாகவதர், ‘கோபிகா, ரமண ஸ்மரணம்’ என்று சொல்லுவார். உடனே ‘ஆடியன்ஸ்’ கோரஸாக ‘கோவிந்தா’ போடுவார்கள்! சத்திரத்தில் கோவிந்தன் என்று ஒரு பணியாள் இருந்தார். அவரிடம் சென்ற பாரதி, ‘கோவிந்தா என்று சப்தம் கேட்கும். நீ உடனே அங்கே போய் என்னை ஏன் கூப்பிட்டீர்கள் என்று கேள்’ என்று சொல்லியனுப்பினார். அவனும் அப்படியே செய்தான்! சபை சிரிப்பால் வெடித்தது. பாகவதர் பேஜாராகிக் கதாகாலட்சேபத்தை முடித்துக்கொண்டு கிளம்பினார்!

பாரதியாரின் குறும்புத்தனத்தில் குழந்தைத்தனமும் இருந்தது. ஒருமுறை தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு சிறுவன் ‘இளமையில் கல்’ என்று சப்தமாக ஆத்திச்சூடி படித்துக்கொண்டிருந்தான். அதுகேட்ட பாரதி உடனே, ‘முதுமையில் மண்’ என்று கூறினார்!

திருவனந்தபுரம் மிருகக்காட்சிச் சாலையில் இருந்த ஒரு சிங்கத்திடம் ‘சிங்கமே, நீ மிருகராஜன், நான் கவிராஜன். உனது வீரம் எனக்குத் தேவை. நாம் இருவரும் நேசர்’ என்று சொல்லி அதைத் தடவிக்கொடுத்தார். அபாரமான துணிச்சலும் கொஞ்சம் ‘அப்நார்மாலிடி’யும் கலந்திருந்திருந்தது பாரதி என்ற சிங்கத்திடம்.

வறுமை

கையிலே காசு கிடைத்தால் உடனே எதிரில் வரும் ஏழைக்குக் கொடுத்துவிடுவார். பெண்டாட்டி பிள்ளைகளின் வயிற்றைப் பசி கிள்ளுமே என்ற நினைப்பே அவருக்கு இருக்காது (ஐயர் 53). வீட்டுக்கார செட்டி வாடகை கேட்டு வருவார். ஆனால் கொடுக்க பாரதியிடம் எப்போதுமே பணமிருந்ததில்லை. ‘தாயே, என்னக் கடன்காரன் ஓயாமல் வேதனைப் படுத்திக்கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்’ என்று கேட்கமட்டுமே அவரால் முடிந்தது (ஐயர் 55).

ஆனால் பணம் வந்தபோதும் அவர் அதைக் குடும்பத்துக்காகப் பயன்படுத்தியதில்லை.

ஒருமுறை பாரதிக்கு சென்னையில் ஐநூறு ரூபாய் கொடுத்தார் எட்டயபுரம் மன்னர். அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை. வீட்டுக்குத் திரும்பியபோது பெரிய மூட்டையுடன் சென்றார் பாரதி. புடவையும் பாத்திரமுமாக இருக்கும் என்று செல்லம்மா நினைத்தார் பாவம். ஆனால் மூட்டைக்குள் அரிய தமிழ் ஆங்கில நூல்கள் இருந்தன! ‘இவையே அழியாச் செல்வம்’ என்று மனைவிக்கு அறிவுரை வேறு! திருமணமானபோது பாரதிக்கு பதினான்கு வயது. செல்லம்மாவுக்கு ஏழு! அறிவு முதிர்ச்சியுற்றிருந்த வயதில் திருமணம் செய்யக் கேட்டிருந்தால் ஒருவேளை பாரதி மறுத்திருக்கலாமோ என்னவோ.

காந்தியும் பாரதியும்

காந்தி சென்னை வந்தபோது ராஜாஜியின் வீட்டில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க விரும்பிய பாரதி விறுவிறுவென காவலை மீறி அவர்பாட்டுக்கு உள்ளே சென்றுவிட்டார். அதுமட்டுமா? உள்ளே சென்று காந்தி அமர்ந்திருந்த பஞ்சு மெத்தையில்போய் அவரும் அமர்ந்துகொண்டு, ‘மிஸ்டர் காந்தி, இன்று மாலை கடற்கரையில் கூட்டம். நான் பேசப்போகிறேன். அதற்குத் தலைமை வகிப்பீரா?’ என்று கேட்டார்! அருகே இருந்தவர்களுக்கு ஆச்சரியம். மறுநாள் வைத்தால் வருவதாக காந்தி சொன்னார். ஆனால் பாரதி, ‘நாளையா, அது முடியாது’ என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்! (ஐயர் 72).  வந்தவர் யார் என்று காந்தி கேட்டபோது ‘தமிழ்நாட்டின் தேசியகவி’ என்று பாரதியை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அஹிம்சை மகாத்மாவும் ரௌத்ர மகாத்மாவும் சந்தித்தால் அப்படித்தான் இருக்கும்போல!

துணிச்சல்

பாரதி ஆசிரியராய் இருந்து வெளிவந்த ‘இந்தியா’ பத்திரிகை மீது அதிகார அம்பு பாய இருந்தது. அவரைத் தேடி போலீஸ் பத்திரிக்கை அலுவலகத்துக்கே வந்துவிட்டனர். அவர் முதல் மாடியில் இருந்தார். ஆனால்  அதிகாரிகள் மாடிக்குப்போக அஞ்சினர். அந்தக்காலத்தில் புரட்சிக்காரர்கள் துப்பாக்கி வைத்திருந்தனர். பாரதியும் அப்படி ஏதாவது ஆயுதம் வைத்திருப்பாரோ என்று சந்தேகம். கீழே போலீஸ் வந்திருப்பதை பாரதி தெரிந்துகொண்டார். கொஞ்சம்கூடக் கவலைப்படாமல் அன்று பத்திரிகைக்கு எழுதவேண்டியதையெல்லாம் எழுதிமுடித்தார். பின்பு உடைமாற்றிக்கொண்டு கீழேவந்தார். பாரதியாரை அவர்கள் நேரில் பார்த்ததில்லை. யாருக்காகக் காத்திருக்கிறீர்கள் என்று அவர்களைக் கேட்டார். ‘ஓ, பாரதியாரா, அவர் மேலே எழுதிக்கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார்’ என்று சொல்லிவிட்டு சைதாப்பேட்டையில் ரயிலேறி ஃப்ரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரிக்குச் சென்று அங்கே பத்தாண்டுகள் இருந்தார்.

கார்ட்டூனிஸ்ட்

புதுச்சேரியில் நண்பர்கள் உதவியுடன் ‘இந்தியா’ பத்திரிகை மீண்டும் வெளிவந்தது. சுந்திரப்போராட்ட கால அரசியலில் பிரிட்டிஷாரோடு ஒத்துப்போய் பின்பு சுதந்திரம் பெறலாம் என்று நினைத்த மிதவாதிகளைக் கிண்டல் செய்து ஓவியம் வெளியிட்டார்.  அவ்வோவியத்தில் ஆந்தைகள் பொந்தில் ஒளிந்துகொண்டிருந்தன. அப்போது சூரியன் உதயமாகி ஒளிவீசிக் கொண்டிருந்தது. அதன் தலைப்பு: ‘சுதேசிய ஒளிக்கு அஞ்சும் ஆந்தைகள்’!

மறைவு

ஒருநாள் வழக்கம்போல பார்த்தசாரதி கோயில் யானைக்கு வாழைப்பழம் கொடுத்தார் பாரதி. மதம் பிடித்திருந்த அந்த யானை அவரைத் தும்பிக்கையால் தூக்கி தன் காலின் கீழே போட்டுவிட்டது. அது மிதிப்பதற்குள் நண்பர் குவளை கண்ணன் பாய்ந்து வந்து  பாரதியைத் தூக்கிக் காப்பாற்றினார். ஆனாலும் பயனில்லாமல் போய்விட்டது. 1921, செப்டம்பர் 11 பாரதி மறைந்தார். தமிழுக்கு மீசை மழிக்கப்பட்டதுபோல் ஆனது. அவர் மறைந்தபோது 39 வயதுகூட நிரம்பியிருக்கவில்லை. ஆனால் அவர் புகழுக்கும் தாக்கத்துக்கும் மறைவென்பதே கிடையாது.

பாரதி சில தகவல்கள்

  • பாரதிக்கு கணிதம் பிடிக்காது. (கவிஞர்களுக்கும் கணிதத்துக்கும் ஏன் இப்படி ஏழாம் பொருத்தம் என்று யாராவது கணிதவியலாளர்கள் ஆராய்ச்சி செய்யலாம்)!

  • பாரதி ஆங்கிலம் படித்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் அப்பா சின்னச்சாமியின் அவா. தமிழின்மீது ஆர்வம் காட்டியபோதெல்லாம் திட்டுவார்!

  • பாரதி ஆங்கில இலக்கியத்தை விரும்பிப் படித்தார். ஷெல்லி, கீட்ஸ், பைரன் ஆகியோரை ஆழமாகப் படித்தார். ஷெல்லிதாசன் என்ற பெயரில்கூட பாரதி எழுதியிருக்கிறார்!

  • மதுரை சேதிபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகக் மூன்று மாதம் வேலை.

  • சைவபிராமண குடும்பத்தில் பிறந்தாலும் குடுமியையும் பூணூலையும் பாரதி தரிக்கவில்லை. ஆனால் கனகலிங்கம் போன்ற தலித்துகளுக்கு பூணூல் அணிவித்து மகிழ்ந்தார்!

  • ரஷ்யப் புரட்சியை ஆதரித்த இந்தியர்களில் பாரதியும் ஒருவர்

  • ‘கேலிக் அமெரிக்கா’ என்ற அமெரிக்க புரட்சிப் பத்திரிகைக்கு சந்தா கட்டிய 13 இந்தியர்களில் பாரதியும் ஒருவர்.

  • ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற அவரது பாட்டுக்கு ஒரு கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசுதான் கிடைத்தது!

  • செஸ், சீட்டாட்டம் இரண்டிலும் பாரதிக்கு அதிக விருப்பம். ஆனால் சரியாக விளையாடத் தெரியாது!

  • காங்கிரஸ் கூட்டங்கள் துவங்குவதற்குமுன் பாரதியார் பாடல்கள் பாடப்படும்.

  • ‘கவிதை எழுதுபவன் கவிஞனல்ல. கவிதையாக வாழ்பவனே கவிஞன்” என்று பாரதி சொன்னார். நான் கவிதை எழுதுவதை விட்டுவிட்டதற்கு இதுதான் காரணமோ!

உதவிய நூல்கள்

1. தேசீய கவிராஜ சிங்கம் சுப்பிரமணிய பாரதியார்.எஸ்.எஸ். சுப்பிரமணிய ஐயர். ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை: 1962.

2. Bharati. Shanti Sivaraman. Prodigy. Chennai: 2008

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com