நம்பிக்கையாளர்களின் தளபதி

குறைவாக உண்பது ஆரோக்கியம். குறைவாகப் பேசுவது ஞானம். குறைவாகத் தூங்குவது வணக்கம் – என்று வெகுஅழகாகச் சொன்ன அவர் யார்?
Published on
Updated on
6 min read

குறைவாக உண்பது ஆரோக்கியம். குறைவாகப் பேசுவது ஞானம். குறைவாகத் தூங்குவது வணக்கம் – என்று வெகுஅழகாகச் சொன்ன அவர் யார்?

ஆடு மேய்த்தவர், மல்யுத்த வீரர், முன்கோபி, கடுமையானவர், மென்மையானார், நீதிமான், பரம எதிரி, உற்ற நண்பர், உறவினர். இறுதித்தூதர் முஹம்மது நபியின் உயிரை எடுப்பேன் என்று கிளம்பியவர், முஹம்மதுவுக்காக உயிரைக்கொடுப்பேன் என்று மாறியவர். 

எல்லாவற்றுக்கும் மேலாக அவர் உலகம் புகழும் உன்னத ஆட்சியாளர்.  ராணுவமேதை. ஈராக், பாரசீகம், ஜெருசலேம், அலெக்சாண்ட்ரியா, எகிப்து, சிரியா என அவருடைய காலத்தில்தான் இஸ்லாம் அரேபியாவைத் தாண்டி உலகளாவப் பரவத்தொடங்கியது. ரோமானிய பைசாந்திய, பாரசீகச் சக்கரவர்த்திகளையெல்லாம் அவர் வென்றார்.

அவரது வீரத்தைப் போற்ற ஒரு நூலே எழுதலாம். ஆனால் அவர் எப்படிப்பட்ட உயர்ந்த முன்மாதிரி மனிதர் என்றுசொல்ல பலநூல்கள் எழுதவேண்டும். அவரது குணாம்சங்கள், நீதி, நேர்மை, எளிமை, அறிவாற்றல் எல்லாம் அப்படிப்பட்டவை. அவை பற்றி ஊறுகாய் மாதிரி கொஞ்சம் தொட்டுகொண்டு சுவைக்க இக்கட்டுரை.

அந்த மேதையின் பெயர் உமர். முழுப்பெயர் உமர் இப்னு ஹத்தாப் (577-644). இஸ்லாமியப் பேரரசின் இரண்டாம் கலீஃபா (ஆட்சியாளர்). மதினாவைத் தலைநகராகக்கொண்டு பத்தாண்டுகளும் ஆறு மாதங்களும் ஆட்சி புரிந்தார்.

ஜெருசலத்தில் நடந்தது என்ன?

 கிபி 637/638ல் கிழக்கத்திய ரோமானியர்களின் (பைஸாந்தியர்களின்) கையிலிருந்த ஜெருசலேம், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு புனிதநகரமாக இருந்த ஜெருசலம், உமரின் காலடியில் வீழ்ந்தது. உமரின் தளபதி அம்ரிப்னில்ஆஸ் என்பவரின் வீரத்தாலும் விவேகத்தாலும் நகரம் கைப்பற்றப்பட்டது. ஆனால் நகரத்தை ஒப்படைத்து சரணடைய நகரப்பொறுப்பாளராகவும் பாதிரியாராகவும் இருந்த சொஃப்ரானியஸ் ஒரு நிபந்தனை விதித்தார். மதினாவிலிருந்து கலீஃபாஉமர் நேரில் வந்தால்தான் நகரத்தின் சாவியை ஒப்படைப்போம் என்றார்.

ஒத்துக்கொண்டு கலீஃபாவும் மதினாவிலிருந்து ஜெருசலம் நோக்கிக் கிளம்பினார். மதினாவுக்கும் ஜெருசலத்துக்குமிடையே 9753 கிமீ தூரம் என்கிறது கூகுள்! கிட்டத்தட்ட பத்தாயிரம் கிலோமீட்டர்கள் பாலைவன வெயிலில் ஒட்டகப்பயணம்! ஆனால் வந்திறங்கிய கலீஃபாஉமரைப் பார்த்த சொஃப்ரானியூஸ் அசந்துபோய் நின்றுவிட்டார். ஒட்டுப்போட்ட ஆடையும், தோலறுந்த காலணியுமாக ஒரு சக்கரவர்த்தி!

எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கலீஃபாஉமர் போட்ட வேஷமல்ல அது. இயற்கையிலேயே அவர் அப்படித்தான்! உள்ளத்தை நெகிழவைத்த சின்ன வரலாற்று நிகழ்ச்சியை இங்கே சொல்லவிரும்புகிறேன். கலீஃபாஉமர் எப்படிப்பட்டவர் என்பதை அது தெளிவாக அடையாளம் காட்டும். ஜெருசலம் நிகழ்ச்சியோடும், உமரின் அடிப்படை குணாம்சத்தோடும் தொடர்பு கொண்டது அது.

கலீஃபாவின் கடிதத்துக்கு என்ன பதில்?

தன்னுடைய மாதச்சம்பளம் போதவில்லை, நூறு தினார்கள் கடனாகக்கொடுத்தால் அடுத்த மாதம் திருப்பித் தருவேன் என்று கலீஃபாஉமர் தன் கருவூலக் காப்பாளருக்கு கடிதம் அனுப்பினார்! (வருமானத்துக்குமேல் சொத்துசேர்க்கும் ஆட்சியாளர்கள், அபராதத் தொகையாக மட்டுமே பலகோடி கட்டுபவர்கள் மட்டுமல்ல, அப்படிப்பட்டவர்களுக்கு வாக்களிப்பவர்களாகிய நாமும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் அது). கலீஃபாவின் கடிதத்துக்கு காப்பாளர் எழுதிய பதில் மனிதர்களால் மறக்கமுடியாதது: ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நூறு தினார்கள் பொதுக்கருவூலத்திலிருந்து கடனாகத் தருகிறேன். ஆனால் அடுத்த மாதம்வரை நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் என்று எனக்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமானால் தருகிறேன்’!

அந்தக் பதிலைக்கண்ட கலீஃபாஉமர் அழுதார். கடன் வாங்கவில்லை! அப்படிப்பட்ட உமர் அவ்வளவு எளிமையாக வந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் ஜெருசலத்தில் செய்த காரியத்திலும் நமக்கானதொரு செய்தியுள்ளது.

உயிர்த்தெழுதல் தேவாலயத்தில் நடந்தது என்ன?

கலீஃபாஉமரை ஜெருசலம் நகரத்தின் முக்கியமான இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினர் பாதிரியார். ‘உயிர்த்தெழுதல் தேவாலய’த்தில் (Church of Resurrection) அவர்கள் இருந்தபோது ‘அசர்’ (பிற்பகல்) தொழுகைக்கான நேரம் வந்தது. ‘நீங்கள் விரும்பினால் இந்த தேவாலயத்திலேயே தொழுகையை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்’ என்று சொஃப்ராயினியூஸ் கூறினார்.

ஆனால் அதை மறுத்த கலீஃபா, ‘முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் தொழலாம். பூவுலம் முழுவதும் வணக்கஸ்தலமாக எங்களுக்கு ஆக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் எனது செயல் ஒரு முன்மாதிரியாகி, பிற்காலத்தில் உங்கள் சமுதாயத்தாருக்கு அதனால் இன்னல் வந்துவிடக்கூடாது என்று அஞ்சுகிறேன்’ என்று கூறினார்! புதிதாக மஸ்ஜிதுகள் கட்டப்பட்டன. ஆனால் எந்த தேவாலயமும் இடிக்கப்படவில்லை. உமரின் உத்தரவு அப்படி!

கிறிஸ்தவர்களோடு அவர் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி அவர்கள் தங்கள் மதநம்பிக்கையின்படி நடக்கவும், வாழவும் சுதந்திரம் அளிக்கப்பட்டனர். அவர்களது உயிருக்கும், உடமைக்கும், சிலுவைகளுக்கும், தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதேபோல எழுபது யூதக்குடும்பங்கள் மீண்டும் பாலஸ்தீனப் பகுதியில் குடியேறுவதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

கவர்னர்களை நியமித்ததும் நீக்கியதும் எப்படி?

வெற்றிகொள்ளப்பட்ட பல நாடுகளுக்கு தன் பிரதிநிதியாக கவர்னர்களை நியமித்தார் கலீஃபாஉமர். சில கவர்னர்களை பதவிநீக்கமும் செய்தார். அதிலும் நமக்கான செய்தி உள்ளது. இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஒருமுறை ஒருவரை கவர்னராக நியமனம்செய்ய கலீஃபா உத்தரவு பிறப்பித்தார். நியமனம்செய்யப்பட இருந்தவர் உத்தரவைப் பெற்றுக்கொள்ள கலீஃபாவிடம் வந்தார். அப்போது கலீஃபாவின் இளையமகன் ஓடிவந்து அவர் மடியில் அமர்ந்துகொண்டான். கலீஃபா அவனைக் கொஞ்சினார். அதைக்கண்ட அந்த மனிதர், ‘கலீஃபா அவர்களே, உங்கள் மகன் பயமில்லாமல் உங்கள் மடியில் வந்து அமர்கிறாரே! என் மகன் என் அருகில் வர பயப்படுகிறான்’ என்றார். அதுகேட்ட கலீஃபாஉமர்  நியமன உத்தரவை உடனே ரத்துசெய்யும்படிக் கூறினார். அதற்கான காரணத்தையும் அவரே சொல்கிறார், கேளுங்கள்:

‘உங்கள் குழந்தைகளே உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்றால் பொதுமக்கள் இன்னும் அதிகமாக அல்லவா அச்சப்படுவார்கள்? அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் உங்களைப் போன்றவர்முன் தங்களது புகார்களைக் கொண்டுவர அச்சப்படுவார்கள். எனவே கவர்னராகும் தகுதி உமக்கில்லை’ என்று கூறிவிட்டார்!

காலித் இப்னு வலீத். உலக வரலாற்றை தலைகீழாகப் புரட்டிய சில போர்ப்படைத் தளபதிகளின் பெயர்களில் இதுவும் ஒன்று. ‘இறைவனின் வாள்’  என்று காலிதுக்கு இன்னொரு பெயருண்டு. ஏழாம் நூற்றாண்டில் அவரது பெயரைக்கேட்டு நடுங்காத  அரசுகள் இல்லையென்றே சொல்லலாம். பல இஸ்லாமியப் போர்களில் முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தவர். கலீஃபாஉமருடைய காலத்தில் அவர் சிரியாவின் கவர்னராக இருந்தார். அவர் பதவிநீக்கம் செய்யப்படுவதாகவும், அவருக்கு பதிலாக உபைதா என்பவர் தளபதியாக நியமிக்கப்படுவதாகவும், காலித் உடனே மதினா திரும்பவேண்டும் என்றும் முகாமிலிருந்த காலிதுக்கு கலீஃபாவின் கடிதமொன்று வந்தது! காரணம் எதுவும் சொல்லப்படவில்லை! உடன்படமறுத்து அவர் எதிர்ந்திருந்தால் இஸ்லாமிய வரலாறு வேறுமாதிரி திரும்பியிருக்கலாம். ஆனால் காலித் அப்படி எதுவும் செய்யவில்லை. கடிதம் சொன்னபடியே செய்துவிட்டு மதினா திரும்பினார்.

மதினா வந்த காலித் கலீஃபாவைச் சந்தித்தார். இருவரும் கட்டித்தழுவிக்கொண்டனர். நீண்டநாள் நண்பர்கள் அல்லவா! கடைசியாக, தான் ஏன் விலக்கப்பட்டேன் என்று காலித் வினவினார். அதற்கு கலீஃபா உமர், ‘உங்களது வீரமும் வெற்றியும் பொதுமக்களின் கண்ணை மறைப்பதைக் கண்டேன். இறைவனைப் புகழவேண்டிய மக்களின் நாவுகள் உங்களைப் புகழ்வதைக் கேட்டேன். என்னைப்போன்ற சாதாரண மனிதனால் பதவி நீக்கிவிடக்கூடிய சாதாரண மனிதர்தான் காலித் என்பதை பொதுமக்களுக்கு உடனடியாக உணர்த்தாவிட்டால், நிலைமை விபரீதமாகிவிடுமென அஞ்சினேன். எனவே உங்களை பதவியிலிருந்து நீக்கினேன். பொதுமக்களையும், உங்களையும், என்னையும்கூட புகழ் என்ற போதையிலிருந்து காப்பாற்றிவிட்டதாகக் கருதுகிறேன்’ என்றார்!

அதிகாரிகளுக்கான உத்தரவுகள்

ஒவ்வொருமுறை ஒரு அதிகாரியை நியமிக்கும்போதும் கலீஃபாஉமர் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை அவரிடம் வாங்கிக்கொள்வார்:

உயர்தரமான துருக்கிக் குதிரைகளின்மீது பயணிக்கக் கூடாது

அழகிய, மிருதுவான ஆடைகளை அணியக்கூடாது

மிருதுவான மாவைக்கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை உண்ணக்கூடாது

யாரையும் வாயில் காப்போனாக நிறுத்தி வைக்கக்கூடாது

பொதுமக்கள் எளிதில் அணுகும் வண்ணம் வீட்டு வாசல் கதவு எப்போதும் திறந்திருக்கவேண்டும்

அளவுக்கு அதிகமாக சொத்து அதிகாரியால் சேர்க்கப்பட்டிருந்தால், அது பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்க கஜானாவில் சேர்க்கப்படும்!

கலீஃபாவுக்கு இளைஞரின் கேள்வி

வெள்ளிக்கிழமை கூட்டுத்தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தனர். கலீஃபாஉமர்தான் தொழுகைக்கு முன்னர் சொற்பொழிவாற்றுவார். அவர் சொற்பொழிவாற்றத் துவங்கிய உடனேயே ஒரு இளைஞர் எழுந்தார். ‘கலீஃபா அவர்களே! நீங்கள் என் கேள்விக்கு உரிய விளக்கம் கொடுக்கும்வரை உங்கள் சொற்பொழிவை நாங்கள் கேட்கமாட்டோம்’ என்றார்.

கொஞ்சநேரம் அமைதி நிலவியது. இந்தியப் பிரதமமந்திரி பேசுமுன் ஒரு பிரஜை எழுந்து இப்படிக் கேட்டால் எப்படி இருக்கும்? அமெரிக்க ஜனாதிபதி பேசுமுன் ஒரு குடிமகன் எழுந்து இப்படிக்கேட்டால் எப்படி இருக்கும்? (அப்படியெல்லாம் கேட்கமுடியாது என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது).

கலீஃபா அமைதியாக உங்கள் கேள்வி என்ன என்று வினவினார். அந்த இளைஞர் சொன்னார்: ‘சில நாட்களுக்கு முன்பு பொதுநிதியிலிருந்து நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு துணி பெற்றோம். ஆனால் இன்று நீங்கள் மட்டும் இரண்டு துணிகளை அணிந்துள்ளீர்கள். இது எப்படி? சாதாரண முஸ்லிமைவிட இரண்டு மடங்கு பெறுவதற்கு கலீஃபாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?’

கலீஃபாஉமர் விளக்கமளிக்க வாயெடுத்தார். அதற்குள் அவரது மகன் அப்துல்லாஹ் முந்திக்கொண்டு, ‘சகோதரரே, உங்களைப்போல நானும் என் தந்தையும் பொதுநிதியிலிருந்து ஒவ்வொரு துணிதான் பெற்றுக்கொண்டோம். என் தந்தையின் உயரத்துக்கு அந்தத்துணி போதவில்லை. அதனால் நான்தான் என் துணியையும் அவருக்குக் கொடுத்தேன்’ என்றார்!

நீதிபதிக்கு கண்டிப்பு

ஒருமுறை கலீஃபா உமருக்கும் உபை இப்னு க’அப் என்பவருக்கும் ஒரு வழக்கு நடந்தது. வழக்குக்காக இருவரும் நீதிமன்றம் சென்றனர். கலீஃபாவைப் பார்த்த நீதிபதி முகமன்கூறி அவரை வரவேற்றார். கோபம் வந்துவிட்டது கலீஃபாவுக்கு. ‘வழக்கு மன்றத்தில் விசாரணைக்காக வரும் ஒரு பிரதிவாதிக்கு தனிமரியாதை செய்யும் நீங்கள் உண்மையான நீதிபதியாக முடியாது. உங்களிடமிருந்து எப்படி எதிர்தரப்பினர் நீதியை எதிர்பார்க்க முடியும்?’ என்று கண்டித்துவிட்டு வாதி க’அபோடு சேர்ந்து சாதாரண இடமொன்றில் போய் உட்கார்ந்துகொண்டார்.

கவர்னரின் மகனுக்கு சாட்டையடி

எகிப்தின் கவர்னராக இருந்த அம்ரிப்னில்ஆஸ் என்பவரின் மகன் ஒருநாள், கவர்னரின் மகன் என்ற திமிரில், ஒரு எகிப்தியரை சாட்டையால் அடித்துவிட்டார். மதினா வந்த அந்த எகிப்தியர் கலீஃபாஉமரிடம் அதுபற்றி முறையிட்டார். கவர்னரின் மகனும் சாட்சிகளும் எகிப்திலிருந்து வரவழைக்கப்பட்டனர். விஷயம் உண்மைதான் என்பது நிரூபணமானதும் எகிப்தியரிடம் சாட்டையைக் கொடுத்து, ‘உன்னை அவர் எத்தனை அடி அடித்தாரோ, அதை இவருக்குத் திருப்பிக்கொடு’ என்று உத்தரவிட்டார் உமர்! உத்தரவு நிறைவேற்றப்பட்டதும் கலீஃபா சபையோரை நோக்கி, ‘நாட்டின் குடிமக்கள் நாட்டை ஆள்வோரின் அடிமைகள் அல்ல. தாயின் கர்ப்பப்பையிலிருந்து வெளிப்பட்ட குழந்தையைப்போல ஒவ்வொருவரும் சுயேச்சையும், சுதந்திரமும் கொண்ட கண்ணியவான்களாகும்’ என்றார்!

இரவு நகர்வலம்

இரவில் ஊரை வலம் வந்து மக்கள் குறைகளை அவர்களறியாமலே தெரிந்துகொண்டு அதைத் தீர்க்கும் சேவையை கலீஃபா உமர் தொடர்ந்து செய்துவந்தார். ஒருநாள் அப்படி வந்தபோது ஒரு கிழவியும் ஓரிளம்பெண்ணும் பேசிக்கொண்டிருந்தனர். பாலில் தண்ணீர் கலந்து விற்கலாம் என்று கிழவி சொன்னாள். அது கலீஃபாவின் உத்தரவுக்கு எதிரானது, தவறு என்று இளம்பெண் சொன்னாள். கலீஃபாவுக்குத் தெரியவா போகிறது என்று கிழவி கேட்டாள். கலீஃபாவை ஏமாற்றலாம், ஆனால் மறுமையில் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்று சொல்லி அந்த இளம்பெண் மறுத்துவிட்டாள். மறுநாள் அவளை வரவழைத்த உமர் தன் மகன் ஆஸிமுக்கு அவளை மணமுடித்துத் தன் மருமகளாக்கிக் கொண்டார்!

இன்னொரு முறை நள்ளிரவில் சந்தித்த ஏழை வெளியூர்க்காரனுக்காக, கூடாரத்துக்குள் பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருந்த அவன் மனைவிக்காக, தன் மனைவியை அழைத்துவந்து பிரசவம் பார்க்க வைத்தார். ‘கலீஃபா அவர்களே, உங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது’ என்று உமரின் மனைவி சொன்னபிறகுதான் அவர் கலீஃபா என்றே அவனுக்குத் தெரியவந்தது!

உமர் சில தகவல்கள்

சிறுவயதில் ஒட்டகம் மேய்க்க தந்தையால் அனுப்பப்பட்டார். அசதியாக ஓய்வெடுத்தால் தந்தையார் சாட்டையால் அடித்து விரட்டுவார்.

மக்காவில் எழுதப்படிக்கத் தெரிந்த பதினேழு பேரில் உமரும் ஒருவர்.

மல்யுத்த வீரர். ஆண்டுதோறும் கூடும் உக்காஸ் என்ற சந்தையில் மல்யுத்தம் செய்வார்.

அடிமைத்தொழிலை அடிப்படை வருமானமாகக்கொண்ட அரேபியாவில், கலீஃபா ஆனவுடன், அரேபியாவில் யாரும் அடிமை கிடையாது என்று ‘இமான்சிபேஷன் ப்ரொக்லமேஷன் டிக்லார்’ செய்து ஆபிரஹாம்லிங்கனுக்கு அடித்தளமிட்டவர் கலீஃபாஉமர்தான் என்றால் மிகையாகாது!

முஸ்லிம்களின் தொழுகைக்கான அழைப்பொலி, ஹிஜ்ரி காலண்டர் முறை, குர்’ஆன் நூல்வடிவில் தொகுக்கப்பட்டது – எல்லாம் உமருடைய முயற்சியின் நல்விளைவுகளாகும். 

இறக்கும் தருவாயில் கலீஃபாஉமருக்கு 86,000 திர்ஹம்கள் கடனிருந்தது. தன் சொத்தை விற்று அதைத் தீர்த்துவிடும்படி அவர் கூறினார்.

அதிகாலத் தொழுகையில் உமர் இருந்தபோது ஒரு கயவன் கத்தியால் குத்தி அதனால் கொஞ்சநாட்களில் உமர் மறைந்தார். முஹம்மது நபி (ஸல்)அவர்களின் அடக்கஸ்தலத்துக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

‘அல்ஃபுராத் நதிக்கரையோரம் ஒரு நாய் பட்டினியால் செத்துப்போனால்கூட என் கடமையிலிருந்து நான் தவறியவனாவேன்’ என்றார் உண்மையான நீதியரசர் கலீஃபா உமர்(ரலி). உமரைப் போன்ற ஒருவர் வசம் இந்தியா ஒப்படைக்கப்படுமானால் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்து நாடு வளம்பெறச் செய்துவிடுவார் என்று மகாத்மா நம்பிக்கை தெரிவித்தார். ‘அமீருல் மூமினீன்’ என்று உமர் அறியப்படுகிறார். ‘நம்பிக்கையாளர்களின் தளபதி’ என்று அதற்குப் பொருள். சரிதானே?

உதவிய நூல்கள்:

1. The Caliphate, Its Rise, Decline and Fall. William Muir.

2. Umar Ibn Al Khattab. His Life and Times. Dr Ali Muhammad As-Sallabee. Vol 1&II.

3. கலீஃபாக்கள் வரலாறு. சாஜிதாபுக்செண்டர், சென்னை, 2010.

4. மின்னொளிகள். எம்.எம்.பக்கர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com