இ
ந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது யார் என்று ஒரு பள்ளி மாணவனைக் கேட்டால் சட்டென்று மகாத்மா காந்தி என்று பதில் வரும். அது சரியான பதிலா என்றால் சரிதான், ஆனாலும் சரியில்லை என்பதுதான் சரி! மகாத்மாவின் தியாகத்தையும் சேவையையும் குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்ற திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில்தான் மகாத்மா, நேரு போன்றவர்களெல்லாம் வருகிறார்கள். அவர்களுக்கு ரொம்பகாலத்துக்கு முன்பே எத்தனையோ மகாத்மாக்கள் நம் நாட்டுக்காக வீரத்துடன் போராடி இன்னுயிரை இழந்திருக்கிறார்கள் என்பதும் வரலாறு.
ஆனால் அந்தப் போராட்டமெல்லாம் பரங்கியர் என்று குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு ஆதிக்க சக்திகளுக்கு எதிராக மட்டும் நடக்கவில்லை. நம்மை நாமே அடித்துக்கொண்டோம், கொன்றுகுவித்தோம். அதுவும் வெள்ளைக்காரனுக்காக. அல்லது ப்ரெஞ்சுக்காரனுக்காக. நமது வீரமும் தியாகமும் அந்நிய ஆதிக்க சக்திகளுக்கு உறுதுணையாக பயன்படுத்தப்பட்டன. இந்தியா நம் நாடு, நாமனைவரும் ஒன்றுபடவேண்டும் என்ற அறிவு அப்போது நமக்கு வரவில்லை. மறவர் சீமையை எதிர்த்து நவாபும், நவாபை எதிர்த்து நிஜாமும், நிஜாமை எதிர்த்து ஹைதரும் சண்டையிட்டுக்கொண்டனர். ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி இந்திய ஆட்சியாளர்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாற்றி நாட்டைக் கொள்ளையடிக்கும் வேலையை பல நூற்றாண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துமுடித்தது. ‘மத்திய அரசு’, ‘ஒன்றுபட்ட இந்தியா’ ஆகிய கருத்துக்களெல்லாம் முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில்தான் உருவானது என்று இந்திய வரலாற்றை எழுதிய வின்சண்ட் ஸ்மித் ஏன் சொன்னார் என்று இப்போதுதான் புரிகிறது.
பரங்கி
விஷயம் ரொம்ப சீரியஸாகப் போகிறது. அதற்குமுன் வெளிநாட்டு ஆதிக்க சக்தியினருக்கு ‘பரங்கி’ என்ற பெயர் ஏன் வந்ததென்று பார்த்து கொஞ்சம் ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்ளலாம்! பாரசீக, உருது மொழிகளில் உள்ள ’ஃபிர்’ என்ற சொல்லுக்கு ‘வேறு’ என்றொரு பொருளுண்டு. ‘ரங்க்’ என்றால் ‘நிறம்’. ‘ரங்கி’ என்றால் ‘நிறத்தவர்’. ‘ஃபிர் ரங்கி’ என்றால் ‘வேறு நிறத்தவர்’! ‘மதுரை’, ‘மதுர’யாகி, பின் ‘மருத’வானதுபோல ‘ஃபிர்-ரங்கி’ என்பது சுருங்கி ‘பரங்கி’யானது! எனவே இந்திய நிறமற்ற, வேறு நிறம்கொண்ட ஆங்கிலேயர், ஃப்ரெஞ்ச், போர்ச்சுக்கீஸ், டச் அனைவருமே பரங்கியர்தான்! இனி ‘மருதநாயகம்’ என்று அறியப்பட்ட மதுரை நாயகன் யூசுஃப் கான்சாஹிபின் வீர வரலாற்றினைக் கொஞ்சம் பார்க்கலாம்.
பிறப்பும் மார்க்கமும்
1725ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு அருகிலிருந்த பனையூரில் ஒரு தையல் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். அவர் பிறப்பால் இந்து, பின்னாளில் முஸ்லிமானார் என்று விக்கியும் சில வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர். அவர் தமிழ் மண்ணைச் சார்ந்த முன்னோர்களின் வழிவந்த முஸ்லிம் என்று அவரின் ஆதாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றை எழுதிய எஸ்.சி. ஹில் தனது Yusuf Khan, The Rebel Commandant என்ற நூலின் ஐந்தாவது பிற்சேர்க்கையில் அடித்துக் கூறுகிறார் (ஹில் 286, நத்தர்சா 58). கான்சாஹிப் பற்றிய கதைப்பாடலிலும் ‘ஆலிம் குலம் விளங்க வரும் தீரன்’ என்று அவர் வர்ணிக்கப்பட்டுள்ளதிலிருந்து அவர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர் என்பதை அறியலாம் (நத்தர்சா 60). கும்மந்தான் சாஹிப், கம்மந்தான் சாஹிப், நெல்லூர் சுபேதார், மருதநாயகம் என இவருக்குப் பல புகழ்ப்பெயர்களுண்டு.
ராணுவ மேதை
மருதநாயகத்துக்கு பள்ளிக்கூடக் கல்வியில் நாட்டமில்லை. வாழ்க்கைப் பாடங்களையே அவர் விரும்பினார். சிறுவயதிலேயே பாண்டிச்சேரி சென்று கொஞ்சகாலம் படகோட்டியாகப் பணிபுரிந்தார். ஃப்ரெஞ்சு ராணுவ வீரர் ஜாக்வில்லா என்ற நண்பர் மூலமாக போர்ப்பயிற்சி பெற்றார்.
இந்தியாவில் இருந்த இரண்டு ராணுவமேதைகளில் ஒருவர் ஹைதர்அலி, இன்னொருவர் மருதநாயகம் என்று மேஜர் ஜெனரல் சர் ஜான்மால்கம் சொன்னதற்குக் காரணம் போர்த்திறம் அவருடைய மரபணுவிலேயே இருந்ததுதான். கான்சாஹிபின் ரத்தத்திலேயே ஊறிக்கிடந்த ராணுவத் திறமைகள் ஜாக்வில்லாவைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. வாள் வீச்சு, குதிரைச்சவாரி, பீரங்கி, துப்பாக்கி போன்றவற்றைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் மூன்றரை ஆண்டுகள் பயிற்சி பெற்றார்.
பிரண்டன் என்ற ஆங்கிலேய அதிகாரியிடம் பணியாற்றியபோது ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, போர்ச்சுக்கீசிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றார். ப்ரண்டனின் வளர்ப்புப் பிள்ளை என்று சொல்லுமளவுக்கு அவருக்கும் ப்ரண்டனுக்குமான உறவு இருந்தது. ஆனால் பின்னாளில் ப்ரண்டனையே எதிர்த்து அவர் போர் புரிய வேண்டியிருந்தது. கொஞ்ச காலம் தஞ்சை மன்னர் பிரதாபசிங்கிடமும் பணிபுரிந்தார். அங்கிருந்து நெல்லூருக்குச் சென்றார். அங்கே தண்டல்காரர், ஹவில்தார், சுபேதார் என பல உயர் பதவிகளை வகித்தார்.
ஆற்காடு நவாபும் கான்சாஹிபும்
அப்போது ஆற்காடு நவாபாக சந்தாசாஹிப் என்பவர் இருந்தார். ஆனால் அவர் முந்தைய நவாபின் மகனல்ல. நவாபின் உண்மையான வாரிசு முஹம்மதலி நவாப் பதவி தனக்குரியது என்று போர்க்கொடி உயர்த்தினார். சந்தாசாஹிப் ஃப்ரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார். முஹம்மதலிக்கு ஆங்கிலேயர்கள் உதவினர். யார் உண்மையான வாரிசு என்பதுபற்றி பரங்கியருக்குக் கவலையில்லை. அவர்களுக்கேற்ற தலையாட்டி பொம்மை எது என்பதுதான் அவர்களுக்கு முக்கியம்.
ஆரம்பத்தில் சந்தாசாஹிபுக்கு வெற்றி. முஹம்மதலி தப்பித்து திருச்சி மலைக்கோட்டையில் ஒளிந்துகொண்டார். அவரை அங்கிருந்து துரத்த ஃப்ரெஞ்சுப் படைகளுடன் திருச்சிக்கு விரைந்தார் சந்தாசாஹிப். ஆனால் திடீரென்று ராபர்ட்கிளைவின் தலைமையில் ஆற்காடு தாக்கப்பட்டது. ஆற்காட்டை மீட்க பத்தாயிரம் பேர்கொண்ட படையுடன் ரஸாசாஹிப் என்பவரை நவாப் ஆற்காட்டுக்கு அனுப்பினார். ரஸாவுக்கு உதவிசெய்த நெல்லூர் ராணுவத்தின் சுபேதாராக இருந்தவர் மருதநாயகம்! சந்தாசாஹிபும் அவரது மகனும் கொல்லப்பட்டபின் முஹம்மதலி ஆற்காடு நவாபாக அரியணையேற்றப்பட்டார்.
ஆங்கிலேயர்களுக்கும் ஃப்ரெஞ்சுக்காரர்களுக்குமான பதவிச்சண்டையில் மருதநாயகத்தின் வீரமும் திறமையும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன. 1752ல் காவேரிப்பாக்கத்தில் ஃபிரெஞ்சுக்காரர்களுக்கெதிராக ஆங்கிலேயர் நடத்திய இரண்டு சண்டைகளில் ஆங்கிலேயர்களுக்கு பெருவெற்றி கிடைக்க உதவியது மருதநாயகம்தான். ‘எனது வெற்றிக்கு நான் கான்சாஹிபையே பெரிதும் சார்ந்திருந்தேன்’ என்று அதுபற்றி ராபர்ட்கிளைவுக்கு தளபதி டால்டன் கடிதம் எழுதினார் (நத்தர்சா, 68).
கான்சாஹிப் ஓர் ‘அற்புதமான வீரர். அவருக்கு இந்த நாடு முழுவதும் நன்றாகத் தெரிந்திருக்கிறது... உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்படும் பிறவி வீரர். அவரைப்போன்ற ஒருவரை நான் இந்த மண்ணில் கண்டதேயில்லை’ என்று புகழ்ந்துரைக்கிறார் ஆங்கிலப் படைத்தளபதி லாரன்ஸ் (ஹில் 14, நத்தர்சா 68). ராபர்ட்க்ளைவின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக கான்சாஹிப் திகழ்ந்தார்.
மதுரை நாயகன்
1756ல் ஆங்கிலேயே நிர்வாகம் மதுரை, திருநெல்வேலி பகுதிகளின் ராணுவ அதிகாரியாக கான்சாஹிபை நியமித்தது. ஆனால் அப்பகுதிகளை ஆளும் உரிமையை நவாபு ஆங்கிலேயர்களிடமிருந்து 1751லேயே பெற்றிருந்தார். யாருக்கு யார் உரிமை கொடுப்பது? எவ்வளவு கேவலம்! கான்சாஹிபுக்கு உயர்பதவிகள் கொடுப்பது நவாபுக்குப் பிடிக்கவில்லை. மதுரை நிர்வாகத்தை அவரிடம் ஒப்படைக்கவேண்டாம் என்று தன் எதிர்ப்பை பலமுறை தெரியப்படுத்தினார். ஆனால் கம்பனி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை! (கம்பனி, ‘கும்பனி’ என்பதெல்லாம் கிழக்கிந்தியக் கம்பனியைக் குறிக்கும்).
கான்சாஹிபின் நிர்வாகத்தில் மதுரை சீரடைந்து புதுப்பொலிவு பெற்றது. கானின் செல்வாக்கும் அதிகரித்துக்கொண்டே போனது. நவாபின் பொறாமைத்தீயை அது தூண்டிவிட்டது. நவாபின் எதிர்ப்பை மீறி ஓராண்டுக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை கம்பனி கான்சாஹிபுக்கு வழங்கியது. இறுதிவரை ஆற்காடு நவாபுக்கும் கான்சாஹிபுக்கும் இடையில் கசப்பான உறவே இருந்தது.
ஆங்கிலேயர்களின் ஆணையைமீறி நவாபால் ஏன் ஒன்றும் செய்யமுடியவில்லை? தன் ஆடம்பர வாழ்க்கைக்கும் கேளிக்கைகளுக்காகவும் அவர்களிடமிருந்து கடன்வாங்கியிருந்த பணத்துக்காகவும், வட்டிக்காகவும் பல லட்சம் டாலர் மதிப்புள்ள ரூபாய்களை அவர்களுக்கு அவர் ஆண்டுதோறும் வழங்க வேண்டியிருந்தது! அதோடு, அவர் ஆளுகையிலிருந்த பல பகுதிகளின் வரி வசூலிக்கும் உரிமையை, பல சலுகைகளை, சமயங்களில் அப்பகுதிகளையும் ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்கவேண்டியிருந்தது! அவர் ஆங்கிலேயர்களோடு செய்துகொண்ட உடன்பாடுகளெல்லாம் ‘தான சாசனமாக’ இருந்தன என்கிறார் வரலாற்றாசிரியர் கமால்.
காவிரியின் காவலன்
காவிரி நதியின் கால்வாய்கள், அணைக்கட்டுகள் அனைத்தையும் உடைத்துவிட்டு தமிழக விவசாயத்தைக் கெடுக்க டூப்ளக்ஸ் தலைமையிலான ஃப்ரெஞ்சுப்படை திட்டமிட்டது. அதை முறியடித்து காவிரிக்கரையைக் காக்கும் பொறுப்பு ஆங்கிலேயரால் மருதநாயகத்திடம் ஒப்படைக்கப்படது. முத்தரசநல்லூரில் முகாமிட்டு, எதிரிகள் நடவடிக்கையைக் கண்காணித்து காவிரைக்கரையை பாதுகாத்தார் கான்சாஹிப்.
கான்சாஹிபும் ஹைதர் அலியும்
ஃப்ரெஞ்சுக்காரர்கள் திருச்சியை முற்றுகையிட்டபோது அதை மீட்க ஆற்காடு நவாபு ஹைதர் அலியின் உதவியை நாடினார். பதிலுக்கு திருச்சியை ஹைதருக்கே விட்டுக்கொடுப்பதாகவும் வாக்களித்தார். அதை நம்பி ஹைதரலியின் படையும் ஆங்கிலப்படையும் சேர்ந்து ஃப்ரெஞ்சுப்படைகளை விரட்டியடித்தன. நவாபுக்கு வெற்றி. ஆனால் வாக்களித்ததுபோல் நவாபு திருச்சியை ஹைதருக்குத் தரவில்லை. பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தார் ஹைதர். கான்சாஹிப் மதுரையில் இல்லாத நேரம் பார்த்து தன் படையுடன் திண்டுக்கல் வந்து சோழவந்தான்கோட்டையைக் கைப்பற்றினார்.
செய்தியறிந்த கான்சாஹிப் தன் படையுடன் விரைந்துவந்து ஹைதரின் படையுடன் மோதி அவர்களை திண்டுக்கல்லுக்கு விரட்டியடித்தார். ஹைதர்அலியும் மருதநாயகமும் ஒன்று சேர்ந்திருந்தால் வரலாறு திசைமாறியிருக்கும் என்பது வரலாற்று ஆசிரியர்களின் சரியான கணிப்பு. ஆனால் அப்படி நடக்காதது துரதிருஷ்டமே.
புலித்தேவரும் கட்டபொம்மனும்
தென்தமிழகத்தின் தன்னிகரில்லா வீரனாக புலித்தேவர் இருந்தார். ஆனால் மருதநாயகமும் புலித்தேவரும் இறுதிவரை எதிரிகளாகவே இருந்ததும் துரதிருஷ்டமே. புலித்தேவரின் ஊரான வாசுதேவநல்லூரில் நடந்த சண்டையில் புலித்தேவரிடம் தோற்றுப் பின்வாங்கினார் கான்சாஹிப்! வரலாற்றில் அவருக்குக் கிடைத்த ஒரே தோல்வி அதுதான்!
நம் வீரபாண்டியக் கட்டபொம்மனின் தாத்தா பொல்லாப்பாண்டிய கட்டபொம்மனின் ஆட்களை அவர் செலுத்தவேண்டிய வரிபாக்கிக்காக வெள்ளையர்கள் பிணையாகப் பிடித்து வைத்திருந்தனர். நிர்வாகத்தை சமாதானப்படுத்தி, பிணையாட்களை மீட்டு கட்டபொம்மனிடமே திருப்பி அனுப்பினார் கான்சாஹிப்.
சதியும் விதியும்
கான்சாஹிபின் கூட இருந்தவர்களே அவருக்குக் குழிபறித்தனர். மூன்று முறை அவரைக் கொல்ல சதி நடந்தது. இரண்டுமுறை தோற்ற சூழ்ச்சி மூன்றாம் முறை வெற்றிபெற்று அவரது உயிரைப் பறித்தது. ஆங்கிலேயர்களிடம் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்த புண்ணியப்பன் என்பவன் மைசூர்க்காரர்களோடு சேர்ந்து கான்சாஹிபுக்கு எதிராக சூழ்ச்சி செய்தான். திருச்சிக்கு துரோகம் செய்தால் வெகுமதி கொடுப்பதாக மைசூர்க்காரர்கள் மருதநாயகத்துக்கு எழுதியது போன்ற போலிக்கடிதம் ஒன்று வெள்ளையர்களிடம் கிடைக்க ஏற்பாடு செய்தான். அதன் விளைவாக கான்சாஹிப் முதலில் காவலில் வைக்கப்பட்டார். விசாரணையில் உண்மை வெளிவர, புண்ணியப்பட்டன் பீரங்கியின் வாயில் வைத்துக் கொல்லப்பட்டான்! இரண்டாவது முறை கான்சாஹிப் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரைக் குத்திக்கொல்ல உமர்தீன் என்ற குதிரைவீரன் முயன்றான். ஆனால் சரியான நேரத்தில் விழித்துக்கொண்ட கான்சாஹிப், அவனைக் கொன்றார்.
மூன்றாவது முறையாக சூழ்ச்சி இரண்டு பேரால் செய்யப்பட்டது. ஒருவன் ஃப்ரெஞ்சுக்காரன் மர்ச்சந்த். ஏற்கனவே மருதநாயகத்திடம் கசையடி பெற்றவன். இன்னொருவன் கானின் தலைமை அமைச்சராக இருந்த சீனிவாசராவ்! அது ரமலான் மாதம். கான்சாஹிப் காலைத்தொழுகைக்காக தன் உடைவாளை சுவரில் மாட்டிவிட்டுப் பணிந்தார். அந்த நேரத்தில் அவர்மீது சீனிவாசராவும் மர்ச்சந்தும் பாய்ந்து அவர் கையைப் பின்புறமாகக் கட்டி அவரை நவாபிடம் ஒப்படைத்தனர். கானின் மனைவியையும் குடும்பத்தாரையும் திருச்சி சிறையில் தள்ளினார் நவாப்.
1764 அக்டோபர் 15 அன்று மதுரை சம்மட்டிபுரத்தில் ஆற்காடு நவாப் முஹம்மதலிகானின் உத்தரவுப்படி மாலை ஐந்து மணிக்கு ஒரு மாமரத்தில் கான்சாஹிப் தூக்கிலிடப்பட்டார். ஒருமுறையல்ல, மூன்று முறை! ஏன்? இரண்டு முறை தூக்கிலிட்டும் அவர் சாகவில்லை! கயிறு அறுந்து உயிருடன் கீழே விழுந்து சிரித்துக்கொண்டே எழுந்தார்! அதிலிருந்துதான் அவர் ‘மதுரை நாயகன்’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்! அவர் அணிந்திருந்த தாயத்தை நீக்கியவுடன் உயிர் பிரிந்தது என்றும் சொல்லப்படுகிறது. ‘கர்ணனை கவசகுண்டலம் காத்தது போல இவரைத் தாயத்து காத்தது போலும்’ என்கிறார் புதுவைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வேங்கட சுப்பிரமணியன்!
ஆனால் இறந்த மருதநாயகத்தின் உடலை ஆங்கிலேயர் சின்னாபின்னப் படுத்தினர். தலையைத் திருச்சியிலும், கைகளைப் பாளையங்கோட்டையிலும், கால்களைப் பெரியகுளத்திலும் புதைத்தார்கள்! ஒருசேரப் புதைத்தால் மீண்டும் உயிர்பெற்று வந்துவிடுவார் என்று அஞ்சி அப்படிச் செய்திருக்கலாம்! சம்மட்டிபுரத்தில் உள்ள கல்லறையில் தலை, கைகள், கால்களற்ற உடல் மட்டும் புதைக்கப்பட்டது!
மருதநாயகம் என்ற புகழ்ப்பெயர் கொண்ட கான்சாஹிப் மதுரை நாயகன் பற்றிய இன்னும் சில முக்கிய தகவல்கள்:
ஏழாண்டுகளுக்கும் மேல் மதுரையை ஆட்சி செய்தார்
தாமிரபரணிமீது நதியுண்ணி அணைக்கட்டு கட்டினார்
திருநெல்வேலியில் மேட்டுக் கால்வாய் வெட்டினார்
சௌராஷ்டிர நெசவாளிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்தார்
மீனாட்சி கோயிலைச் சீர்செய்து மானியம் வழங்கினார்
திருப்பரம் குன்றம் மலைமீது சிக்கர் துல்கர்னைன் தர்கா இவரால் கட்டப்பட்டது
மதுரையிலிருந்து திருநெல்வேலி, பாளையங்கோட்டை, உத்தமபாளையம், பெரியகுளம், கம்பம் முதலிய ஊர்களுக்கு சாலைகள் போடப்பட்டன
கொடைக்கானலுக்குச் செல்லும் வண்டிப்பாதையைத் தொடங்கிவைத்தார்
தொண்டி, வைப்பாறு, மணப்பாடு, தூத்துக்குடி துறைமுகங்களை மதுரையுடன் இணைக்க புதிய அகல சாலைகளை உருவாக்கினார்
ஆட்சியாளர்களுக்காக வசூலித்த வரிப்பணத்தை குடிமக்களுக்காகவே செலவிட்டு புரட்சி செய்தார்
மதுரையில் கான்சாமேட்டுத்தெரு, கான்பாளையம், கான்சாபுரம், திருநெல்வேலியில் கான்பாளையம், கடையநல்லூரில் கான்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மம்சாபுரம், சிதம்பரத்தில் உள்ள கான்சாகிப் வாய்க்கால் போன்றவை கான்சாஹிபின் புகழ்ப்பெயரைத் தாங்கியுள்ளன.
கான்சாஹிப் வாழ்ந்த காலத்தில் அவருக்கு ஆங்கிலேயர்களே தங்கப்பதக்கம், யானை, வைர மோதிரம் போன்ற பரிசுகளை வழங்கி கௌரவித்துள்ளனர்! கான்சாஹிப் மருதநாயகத்தின் வாழ்வு ஒரு ‘வீர காவியம்’ என்று புகழ்ந்துரைக்கிறார் வரலாற்றாசிரியர் மஹதி. அவர் சொல்வது உண்மைதானே?
உதவிய நூல்கள்: 1. Yusuf Khan The Rebel Commandant. S.C.Hill. Longmans. London: 1914 2. மதுரை நாயகன் மாவீரன் கான்சாகிப். ஹ.மு.நத்தர்சா. சுடர் பதிப்பகம், காரைக்கால்: 1997 3. விடுதலைப்போரில் முஸ்லிம்கள். வி.என்.சாமி. பாவலர் பதிப்பகம், மதுரை:2009 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.