உண்மையை நேசித்த உன்னதம்!

தன் தலையை தூணில் மோதி உடைத்துக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்! ஏன்? தலை உறுதியானதா தூண் உறுதியானதா
Published on
Updated on
6 min read


வினோதப்பிறவி

தன் தலையை தூணில் மோதி உடைத்துக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்! ஏன்? தலை உறுதியானதா தூண் உறுதியானதா என்று பரிசோதிக்கத்தான்! இப்படிக்கூட இருப்பார்களா என்று தோன்றலாம். என் தங்கையின் மகன்கூட இப்படித்தான் இருந்தான். பள்ளிக்கூடத்தில் எதிலிருந்தோ குதித்து நெற்றியில் வெட்டுக்காயமேற்பட்டு ரத்தம் ஓடியது. பயந்துபோன ஆசிரியை, ‘டேய், எப்படிடா ஆனது?’ என்று கேட்டிருக்கிறார். உடனே இவன் ஒரு நாற்காலியின் மீது ஏறி, சுவரில் மண்டை மோதுமாறு குதித்து, மறுபடியும் நெற்றியில் அடிவாங்கி, ‘இப்படித்தான் டீச்சர்’ என்றான்! ஏண்டா இப்படிச் செய்தாய் என்று நான் அவனைக் கேட்டபோது அவனது பதில் ஒரு சிரிப்பு மட்டுமே!

நம்ம கட்டுரை நாயகனும் அப்படிப்பட்டவன்தான். ரொம்பவே வித்தியாசமானவன். தூணில் தலையை மோதிய நிகழ்ச்சியைவிட மோசமானது அடுத்து நான் சொல்லவிருப்பது! ஒரு நாள் பறவைகள் பறப்பதைப் பார்த்தான் சிறுவன். நாமும் ஏன் இப்படிப் பறக்கக்கூடாது என்று ‘யோசித்து’ இரண்டாவது மாடிக்குச்சென்று  கைகளை சிறகுகள்போல விரித்து வீசிப்பறக்க முயன்றான்! கீழே விழுந்து பதினெட்டு மணிநேரம் உணர்வின்றிக் கிடந்தான்! நல்லவேளை உயிர்போகவில்லை. இல்லையென்றால் நமக்கு மேதையும் ஞானியுமான ஒருவர் கிடைத்திருக்கமாட்டார்!

மேதையா? ஞானியா? ஆச்சரியமாக உள்ளதா? ஆமாம். அவர் ஒரு எழுத்தாளர். மேதை. ஞானி. எல்லாமாக இருந்தவர். எல்லா வினோதமான கிறுக்குத்தனங்களும் மேதையின் துவக்கமாக இருந்துள்ளதையே வரலாறு காட்டுகிறது. (என் தங்கையின் மகனும் மேதையாகும் வாய்ப்புள்ளது)!

அந்தக் கிறுக்குச் சிறுவன் வேறுயாருமல்ல உலகப்புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரும் ஆன்மிகவாதியுமான லியோ டால்ஸ்டாய்தான்!

குடும்பமும் செல்வமும்

டால்ஸ்டாயின் குடும்பம் ரஷ்யப் பிரபுக்களின் குடும்பமாகும். அவர் பிறந்து வளர்ந்த யாஸ்னாயா பால்யானா கிராமத்து பிரம்மாண்டமான வீட்டில் இருந்த அறைகள் மட்டும் நாற்பத்திரண்டு! அந்த கிராமமே டால்ஸ்டாய் குடும்பத்துக்குச் சொந்தமானது! மூன்று வயதில் தாயையும் ஒன்பது வயதில் தந்தையையும் இழந்தார் டால்ஸ்டாய். அத்தையால் வளர்க்கப்பட்டார். பள்ளிக்கூட வாழ்வின்போது ஃப்ரெஞ்சு, ஜெர்மன், அரபி போன்ற மொழிகளைக் கற்றுக்கொண்டார். அவர் அமர்வதற்கென உயரமான இருக்கை போடப்பட்டிருக்கும். அவர் நடந்துபோகும்போது பின்னால் பறக்கும் அங்கியைப் பிடித்துக்கொண்டு ஒரு ஊழியர் பின்னாலேயே போவார்!

டால்ஸ்டாயின் டயரிகள்

டால்ஸ்டாயின் முக்கிய படைப்புகளில் முதன்மையானதாக அவரது நாட்குறிப்புகளைத்தான் நான் சொல்வேன். அவற்றில்தான் அவர் தன்னைப்பற்றிய உண்மைகளை ஒளிவுமறைவின்றி எழுதிவைத்தார். அப்படி அவர் என்னவெல்லாம் செய்தார்?

என்னவெல்லாம் செய்யவில்லை என்றுதான் கேட்கவேண்டும்! மது, மாது, சூது என்று புகுந்து விளையாடியிருக்கிறார். தனக்கு மனைவியாக வர இருந்த சோஃபியா என்ற சோன்யாவிடம் தன் நாட்குறிப்பைப் படிக்கக் கொடுத்திருக்கிறார். அவருக்கும் ஒரு வேலைக்காரிக்குமான கள்ளஉறவில் மகன் பிறந்ததைக்கூட அதில் குறித்துவைத்திருந்தார்! அவரை மணக்க இருந்த சோன்யா அதைப்படித்துவிட்டு என்ன நினைத்திருப்பார்! ஆனால், அதுதான் டால்ஸ்டாய்! நாட்குறிப்பு எழுதுவதில் ஒரு நேர்மையும் அசாத்திய துணிச்சலும் இருந்தது. அதேசமயம் மனைவியின் டயரியை அவரும் அவரது டயரியை மனைவியும் ரகசியமாகப் படித்துப்பார்க்கும் பழக்கமும் இருந்தது! ஆஹா, என்ன பொருத்தம்!

நினைப்பதையெல்லாம் செய்துவிடுகின்ற துணிச்சல் அவரிடமிருந்தது. ஆனால் செய்ததை நினைத்து பிறகு மிகவும் வருந்துவார். இனி இப்படிச் செய்வதில்லை என்று உறுதிஎடுத்துக்கொள்வார். ஆனால் அந்த பிரதிக்ஞைகள் எதுவும் வென்றதில்லை. எல்லாமே பிரசவ வைராக்கியம் மாதிரி கொஞ்சகாலத்துக்குத்தான் இருந்தது!

நடந்ததை எண்ணி வருந்தும் மனிதனே

வருந்துவதை எண்ணி

எப்போது வருந்தப்போகிறாய்

என்று ஒரு கவிதையில் கேட்கிறார் பாரசீகக் கவிஞானி மௌலானா ஜலாலுத்தீன் ரூமி! ஆனால் டால்ஸ்டாயின் வாழ்நாளில் பெரும்பகுதி நடந்ததை எண்ணி  வருந்தும்படி இருந்ததுதான் சோகம்! கட்டுப்படுத்த முடியாத தன் கையாலாகாததனத்தால் அவரும் கஷ்டப்பட்டு, அவரை நம்பியிருந்த மனைவி மக்களையும் கஷ்டப்படுத்தினார்!

முரண்பாடுகளின் மொத்த உருவம்

முரண்பாடுகளாலும் வேறுபாடுகளாலும் ஒரு மனிதனைச் செய்யமுடியுமென்றால் அது டால்ஸ்டாயாகத்தான் இருக்கும்! முரண்பாடுகளின் சங்கமமாக தன்னை டால்ஸ்டாய் ஆக்கிக்கொண்டார் என்றால் மிகையில்லை. அவரது சிறுவயது eccentricity வாழ்நாள் பூராவும் தொடர்ந்ததோ என்று நினைக்கும்வகையில் மிகவும் வினோதமானவையாக இருந்தன.

பல பெண்கள்மீது டால்ஸ்டாய் காதல் கொண்டார்! தன் ஒன்பதாவது வயதில் பதினோறு வயதுப் பெண்ணொருத்தியைக் ‘காதல்’ செய்து, அந்தக் ‘காதல் வேகத்தில்’ அவளை மாடியிலிருந்து கீழேதள்ளிவிட்டுக் கொஞ்சகாலம் நொண்டியாக அலையவிட்டார்!

‘ஒரு நாளைக்கு ஒரு நன்மையாவது செய்யாவிட்டால் என்னை நானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வேன்’ என்று ஒருமுறை உறுதிமொழி எடுத்தார்! மறுநாள் குதிரைமீது சென்றவர் தான் பார்த்த முதல் ஆளுக்குக் குதிரையை தானமாகக் கொடுத்துவிட்டு நடந்து வீடு திரும்பினார்!

ஆறுவாரங்கள் பல்வலியால் அவதிப்பட்டபோதும் பல்மருத்துவரிடம் போகவில்லை. அப்படிப் போவது சரியா தவறா என்ற முடிவுக்கு வரமுடியாததால் செல்லவில்லை!

ஒருமுறை அவர் ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றிருந்தார். அங்கு ஒருவர் பாட்டுப்பாடிப் பிச்சைக் கேட்டார். சுற்றியிருந்தவர்களெல்லாம் வேடிக்கையாகப் பார்க்க, டால்ஸ்டாய் மட்டும் அவரை அழைத்துவந்து விருந்தளித்தார்! சமயங்களில் கஷ்டம் வரும்போது சீட்டுக்கட்டுகளை வைத்து சகுனம் பார்ப்பார்!

விவசாயம் செய்தார், கால்நடைகளை வளர்த்தார், உயர்தரமான செம்மறியாடுகளையும், ஜப்பான் நாட்டுப் பன்றிகளையும் விரும்பி வளர்த்தார்! வேட்டையாடுவதில் மிகுந்த பிரியம் அவருக்கு. ஒருமுறை ஒரு முயலை வேட்டையாட குதிரையில் வேகமாகத் துரத்திச் சென்று பள்ளத்தில் விழுந்து உணர்வற்றுக் கிடந்தார்!

பதிமூன்று குழந்தைகளுக்குத் தந்தையானபோதும் ஒரு குழந்தையைக்கூட அவர் முத்தமிட்டதோ அணைத்துக்கொண்டதோ கிடையாது! அதற்காக அவர் அன்பற்றவர் என்று சொல்லிவிட முடியாது. அன்பை வெளிப்படுத்த அவருக்கு தெரியவில்லை அல்லது விரும்பவில்லை. தன் மூத்த மகனுக்கு கிரேக்க மொழியில் பாடம் நடத்துவதற்காக ஆறே வாரங்களில் ஹோமரின் காவியத்தை விளக்கும் அளவுக்கு கிரேக்க மொழியில் பாண்டித்தியம் பெற்றார்!

தற்கொலை செய்துகொள்ள பலமுறை தீவிரமாக யோசித்துள்ளார்! உணர்ச்சி வேகத்தில் தற்கொலை செய்துவிடுவோமென்று பயந்து வேட்டைக்குச் செல்லும்போது துப்பாக்கியை எடுத்துச் செல்வதில்லை! கயிற்றைக் கண்டால் தூக்குப் போடும் எண்ணம் தோன்றும் என்று கருதி வீட்டில் இருந்த கயிறுகளையெல்லாம் எரித்துப்போட்டார்! ’அப்சசிவ் டிஸார்டர்’ ஏற்பட்ட மனநோயாளிபோல பல நேரங்களில் நடந்துகொண்டார்.

எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக செருப்புத்தைப்பவனை தன் வீட்டுக்கு வரச்செய்து அவனிடம் அத்தொழிலைக் கற்றுக்கொண்டு தன் செருப்புகளைத் தானே செய்து அணிந்துகொண்டார்! தான் செய்த காலணிகளைத்தான் அணிய வேண்டும் என்று தன் மகள்களையும் வற்புறுத்தினார்! எளிமையான வாழ்வை நோக்கி இவ்வளவும் செய்த அவர் திடீரென்று தனக்காக மாஸ்கோவில் ஒரு வீடு வாங்கிக்கொண்டார்!

பெரும் பணக்காரராக, அதேசமயம் எளிமை வாழ்வை மேற்கொண்டவராக, ஒரு சூஃபியைப் போல முரட்டுத் துணியில் ஆடை தைத்துக்கொண்டவராக, தன் வருமானங்களை  தன் கிராமத்துக்கு குடியானவர்களுக்காக  அள்ளியள்ளிக் கொடுத்தவராக, குடிகாரராக,  சூதாடுபவராக, விபச்சாரம் செய்பவராக, தர்மப்பிரபுவாக, பள்ளி, கல்லூரிகளில் ஒழுங்காகப் படிக்காதவராக, குடியானவர்களின் குழந்தைகளுக்காக பதிமூன்று பள்ளிக்கூடங்களைக் கட்டி நடத்தியவராக, ‘நான் ஒரு ஆபாசக் குப்பை’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டவராக, குடும்பஸ்தராக, குடும்பத்தைத் துறந்தவராக, போரில் பணியாற்றியவராக, அமைதியையும் அன்பையும் விரும்பியவராக, தன்னை எதிர்ப்பவர்களை மற்போருக்கு அழைப்பவராக, தன் எழுத்தின்மூலம் பல லட்சங்களைச் சம்பாதித்தவராக, தன் சொத்தில் தனக்கு எந்தப்பங்கும் வேண்டாம் என்று ஒதுங்கியவராக  - இப்படி  முரண்பாடுகளின் மொத்த உருவமாகவே அவர் இருந்தார்!

‘இவ்வாறு டால்ஸ்டாய்க்கு விரோதமாகவே டால்ஸ்டாய் வாழ்ந்தார்’ என்று அழகாகச் சொல்கிறார் வரலாற்று ஆசிரிரும் மூத்த எழுத்தாளருமான மறைந்த அப்துற்றஹீம்!

உலகப் புகழ்பெற்ற படைப்புகள்

ஏதேதோ செய்துபார்த்த டால்ஸ்டாய் கடைசியில் தனது ஆன்மா எழுத்தில் இருப்பதைக் கண்டுகொண்டார். முதன்முதலில் ‘குழந்தைப் பருவம்’ என்ற நாவலை எழுதினார்.  அதையும் நான்குமுறை திருப்பித்திருப்பி எழுதி சரிசெய்துகொண்டார். ஆனாலும் தன் பெயரைப் போடுவதற்குத் தயங்கி சுருக்கமாக ‘எல்.டி’ என்று மட்டும் போட்டு அனுப்பினார். ஆனால் நாவல் அருமையாக இருப்பதாகவும் அவர் தன் முழுப்பெயரையும் போடலாம் என்றும் பத்திரிக்கையாளர் கேட்டுக் கொண்டதற்குப் பின்னர்தான் லியோ டால்ஸ்டாய் உலகுக்குத் தெரிய ஆரம்பித்தார்! அவருடைய முதல் படைப்பான  ‘குழந்தைப் பருவம்’ 1852ல் வெளிவந்தது. 

மிகச்சிறந்த படைப்புகள்

’போரும் அமைதியும்’, ’அன்னா கரினினா’ ஆகிய நாவல்களுக்காகவே உலகெங்கும் டால்ஸ்டாய் பேசப்படுகிறார். இரண்டு நாவல்களுமே ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்களுக்கும் மேல்! திருமணமான நான்காண்டுகள் வரை டால்ஸ்டாய் எதுவும் எழுதவில்லை. அதன்பிறகு ஏழாண்டுகள் தொடர்ந்து எழுதினார். ஒவ்வொரு நாளும் (என்னைப்போலவே) இரவு இரண்டு மணிவரை! உதிப்பு வந்ததும் மகளையோ மனைவியையோ அழைத்து எழுதச்சொல்வார். வாக்கியங்கள் அவர் வாய்வழி பிரவகித்துக் கொண்டிருக்கும்! சமயங்களில் ஒரேவிஷயத்தை நாலைந்து விதமாகத் திருப்பித்  திருப்பிக் கூறி அடித்துத் திருத்தி எழுதச் சொல்வார்.

அவரது மிகச் சிறந்த நாவல்களுக்கு இந்த உலகம் அவருக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறதோ அதேபோல அவரது மனைவி சோன்யாவுக்கும் கடன்பட்டிருக்கிறது. ஆம். சோன்யாவின் உற்சாகமும் உழைப்பும் அற்புதமானவை. டால்ஸ்டாயின் கையெழுத்து கண்றாவியாக இருக்கும். ஒன்றுமே புரியாது. ஆனால் சோன்யாவுக்கு மட்டும்தான் அது புரியும். இரவில் வெகு நேரம் வரை அழகிய கையெழுத்தில் அவள் அவருடைய படைப்புகளை பிரதி எடுத்துக் கொண்டிருப்பாள். சமயத்தில் அவளுக்கும் புரியாது. தவிர்க்க முடியாத அந்த சமயங்களில் கணவரிடம் சந்தேகம் கேட்பாள். உனக்கு என்ன புரியவில்லை என்று உறுமுவார் டால்ஸ்டாய். அவரிடம் தாள் கொடுக்கப்படும். அப்புறம்தான் அவருடைய கையெழுத்து தற்கால மனிதர்கள் படிக்க முடியாத கற்கால லிபியில் இருப்பது அவருக்கே புரியும்!

அதோடு விட்டாரா? பிரதியெடுத்துவந்து காட்டியவற்றில் ஆயிரக்கணக்கான திருத்தங்கள் செய்து மீண்டும் பிரதி எடுக்கச் சொல்வார்! அவருடைய ‘போரும் அமைதியும்’ என்ற மெகா நாவலை ஏழு முறை பிரதி எடுத்திருக்கிறார் சோன்யா! ஆனால் சோன்யா அவர் மீது கொண்ட பிரியத்தின் காரணமே அவரது எழுத்துதான். அவருடைய எழுத்தில் ஆங்காங்கே வரும் அருமையான வாக்கியத் தொடர்களையும் வர்ணனைகளையும் கண்டு அவள் கண்ணீர் விடுவாள்! ஆஹா, அதுவல்லாவா நோபல் பரிசு!

ஆனால் டால்ஸ்டாய்க்குத் திருப்தி ஏற்பட்டதே இல்லை. அவர் எந்நேரமும் களங்கமற்ற பரிபூரணத்தை நோக்கிய பயணத்திலேயே இருந்தார். அச்சுக்குப்போனபிறகும் இந்த வார்த்தையை மாற்று, அந்த வார்த்தையை மாற்று என்று அச்சகத்தாருக்கு தந்தி கொடுப்பார்!

‘சந்தோஷப்படும்போது மட்டும் எல்லாக் குடும்பங்களும் ஒரேமாதிரியாகத்தான் உள்ளன. ஆனால் துன்பப் படும்போது மட்டும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது’  என்று தொடங்குகிறது அன்னா கரினினா நாவல்! ‘அன்னா கரினினா’ எழுத அவர் எடுத்துக்கொண்டது  இரண்டு மாதங்கள்தான். ஆனால் அதைத்திருத்தி எழுத அவர் எடுத்துக்கொண்டது மூன்றாண்டுகள்!

எழுதிகிடைத்த வருமானத்தால் பெரும் பணக்காரரான ஒருவர் அந்தக்காலத்திலேயே உண்டென்றால் அது டால்ஸ்டாய்தான்.  ஆறுலட்சம் ரூபிளுக்குமேல் சம்பாதித்தார். ஒரு பக்கத்து இவ்வளவு பணம் என்ற ரீதியில் அவருக்குத் தரப்பட்டது! ‘இருளின் வலிமை’ (The Power of Darkness) என்ற அவருடைய நாடகம் மூன்றே நாளில் மூன்றுலட்சம் பிரதிகள் விற்றன! அதுமட்டுமல்ல. ஒரு எழுத்தாளராக அவருக்குக் கிடைத்த புகழ் இந்த உலகில் எந்த படைப்பாளிக்கும் கிடைக்காதது. பொறாமையை ஏற்படுத்தவல்லது. அவருடைய மாஸ்கோ வீடு உலகமக்கள் வந்து அவரை தரிசிக்கும் கோவிலாக மாறியது!

ஆன்மிகவாதி

பல மதங்களை ஆழமாகப் படித்துப் புரிந்துகொண்ட டால்ஸ்டாய் கடைசியில் உண்மையையும் அன்பையும் மட்டும் போதிக்கின்ற ஆன்மிகவாதியானார். அவருடைய அமைதி இயக்கம் உலகெங்கும் பரவியது. மகாத்மாகாந்தி அவருடைய மானசீக சீடரானார். A Letter to a Hindu என்ற டால்ஸ்டாயின் கட்டுரையில் அஹிம்சைப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் உபநிஷதம், கிருஷ்ணரின் சொற்களை மேற்கோள் காட்டினார். ‘பிறர்க்கின்னா’ என்று தொடங்கும் திருக்குறளையும் மேற்கோள் காட்டுகிறார். இந்தியர்கள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்தது குடிகாரர்கள் மதுவிற்பவர்களிடம் அடிமையானதைப் போன்றது என்றார். அவர் பேரில் ‘டால்ஸ்டாய் பண்ணை’யை தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார் காந்தி!

துறவும் பிரிவும்

இதற்குமேல் குடும்பத்தோடு இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தார் டால்ஸ்டாய். சொத்துக்காக சோன்யா அவரோடு நிறைய சண்டை போட்டுவிட்டாள். ‘நான் இறந்து போய்விட்டதாக நினைத்துக்கொண்டு சொத்தை நீங்களே பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு மனைவிக்கு ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இரவோடிரவாக வீட்டைவிட்டுக் கிளம்பி ரயிலில் சென்றபோது அவருக்கு வயது 82.

உடம்புக்கு ரொம்ப முடியாமல் போகவே, ஆஸ்டபோ என்ற அறியப்படாத சின்ன ஊரில் இறங்கினார். அவர் பொருட்டால் அந்த ஊர் மெட்ரோபாலிஸானது! அவரைத் தெரிந்து கொண்ட மக்களனைவரும் தங்கள் தொப்பியைக் கழற்றி மரியாதை செய்தார்கள். அவருக்காக தந்திகள் வந்து குவிந்தன. ஊரின் தெருக்களில் ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டார்கள். பொதுமக்கள், பத்திரிக்கையாளர்கள், மாநில ஆளுநர் என ஊரே அமர்க்களப்பட்டது. கடைசிக்கணங்களில்தான் சோன்யா வந்துபார்க்க அனுமதிக்கப்பட்டார். ‘உண்மையை நேசிக்கிறேன்’ என்ற சொற்களுடன் அவர் உயிர் பிரிந்தது.

How Much Land Does a Man Need என்று டால்ஸ்டாயின் சிறுகதையொன்று. அதில் மனைவியின் தொல்லையால் இருப்பதையெல்லாம் விற்று சொந்தமாக நிலம் வாங்க பஷ்கீர்கள் என்பவர்களிடம் செல்வான் விவசாயியான பாஹோம். சூரியோதயத்தில் தொடங்கி அது மறைவதற்குள் அவன் சுற்றிவரும் நிலப்பகுதி அவ்வளவும் அவனுக்கே. விலையும் ஆயிரம் ரூபிள்கள்தான். ஆனால் சூரியன் அஸ்தமிப்பதற்குமுன் வந்துவிடவேண்டும் என்பது அவர்களின் நிபந்தனை. பேராசையில் படுவேகமாகச் சென்று நிறைய நிலப்பகுதியை வளைத்து நடந்து சூரியன் அஸ்தமிப்பதற்குமுன் வெற்றிகரமாகத் திரும்பும் பாஹோம் களைப்பின் உச்சத்தில் கீழே விழுந்து செத்துப்போவான். ஒரு குழியில் புதைக்கப்படுவான். ‘தலைமுதல் கால்வரை அவனுக்குத் தேவைப்பட்ட நிலமெல்லாம் ஆறடிதான்’ என்று முடிப்பார் டால்ஸ்டாய்!

வாழ்வின் அடிப்படை உண்மையைப் புரிந்து மகானால்தான் இப்படியொரு கதையை எழுத முடியும்.  உண்மையை நேசித்தேன் என்று அவர் உதிர்த்த கடைசிச்செய்திதான் எவ்வளவு உண்மை!

=======

உதவியநூல்: ரஷ்யஞானி லியோடால்ஸ்டாய். அப்துற்-றஹீம். யுனிவர்சல்பப்ளிஷர்ஸ். சென்னை, 2005.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com