மல்பெரி சாகுபடி

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட மறைந்த இந்திரா காந்தி அம்மையாரே காஞ்சிபுரம் பட்டு சேலையைக் கண்டு நெகிழ்ந்ததாக
Published on
Updated on
7 min read


இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட மறைந்த இந்திரா காந்தி அம்மையாரே காஞ்சிபுரம் பட்டு சேலையைக் கண்டு நெகிழ்ந்ததாக சொல்வார்கள். பட்டுத் தொழில் உற்பத்தியாளர் முதல் உபயோகிப்பாளர் வரை கோடிகளில் பணம் புரளும் தொழில். பட்டுத் தொழிலின் அடிப்படை பட்டு விவசாயி. சீனாவும் இந்தியாவும் இன்றளவிற்கு உலகின் முதல் தர பட்டு உற்பத்தி செய்து உலக சந்தைகளுக்கு தன் வியாபாரத்தை விரிவாக்கி செயல்படுகின்றது. இந்தியாவில் பட்டு வளர்ப்புக்கு ஏற்ற சூழலும், தொழில்நுட்பம் தெரிந்த விவசாயிகளும் இருப்பதால் பட்டுத் தொழில் பரவலாக காணப்படுகின்றது.

பட்டுத் தொழில் வேளாண்மை இரண்டு கட்டங்களைக் கொண்டது. முதலாவது செடி வளர்ப்பு. இரண்டாவது புழு வளர்ப்பு. செடி வளர்ப்புதான் பட்டு வளர்ப்பு தொழிலின் அடிப்படை அம்சம். பட்டுப் புழுக்களுக்கு உணவளிக்க முசுக்கொட்டை என அழைக்கப்படும் ‘மல்பெரி இலை’ தரும் செடியை வளர்க்க வேண்டும். மல்பெரி இலை உற்பத்தி வெற்றியடைய மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவை. முதலாவது மல்பெரி ரகம் இரண்டாவது மல்பெரி செடி வளர்க்கும் முறை. மூன்றாவது மல்பெரி பயிர் பாதுகாப்பு முறைகள். மல்பெரி ரகத்தை வெற்றிகரமான சாகுபடிக்கு ஏற்பதாக தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் மல்பெரி ரகம் நம் பருவகால சூழலுக்கு ஏற்றதாகவும், வேகமாக வளரக்கூடியதாகவும், நல்ல வேர்விடும் தன்மை, அதிக இலை மகசூல் கொஉக்கக் கூடியதாகவும், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை எதிர்த்து செழித்து வளரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதிக இலை விளைச்சல் என்பதுடன் தரமான சக்திமிகுந்த இலை மகசூலும் முக்கியம். தென் இந்தியாவில் பல்வேறு பட்டு வளர்ப்பு பகுதிகளுக்கு ஏற்ப பல்வேறு ரக மல்பெரி ரகங்கள் உள்ளன.

உள்நாட்டு மல்பெரி ரகத்தில் மைசூர் உள்நாட்டிலும் மைசூர் பகுதிகளில் திப்பு சுல்தான் காலத்திலிருந்து பாரம்பரியமாக நீண்ட காலமாக பயிரிடப்படுகின்றது. இவை குறைவான இலை மகசூலைக் கொடுத்த போதிலும் மானாவாரி மற்றும் இறவைக்கு ஏற்ற ரகம். குறைந்த இடுபொருள். குறைந்த பராமரிப்பில் சுமார் 3 லிருந்து 10 மெட்ரிக் டன் இலை மகசூல் கொடுக்கக் கூடியது. இந்த மைசூர் நாட்டினத்திலிருந்து M5 எனப்படும் ரகம் வெளி மகரந்த சேர்க்கை மூலம் உருவாக்கப்பட்டு இந்தியாவிலும், ஸ்ரீலங்கா, வங்காள தேசம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் போன்ற கிழக்காசிய நாடுகளிலும் பயிரிடப்படுகின்றது. பில்லாக்டினியா கோரிலியா எனும் பூஞ்சை காளான் விளைவிக்கின்ற சாம்பல் நோயை தாங்கும் திறனுடையதும்,தமிழகத்தின் அதிக வெப்ப நிலை நிலவும் பகுதி, மலைப் பகுதிக்கு ஏற்றதும் சிறப்பான வளர்ச்சி, நன்கு வேர் விடக் கூடிய தன்மை அதிக இலை மகசூல் தரும் இனம் MR-2 என்பதாகும்.

பல்வேறு பட்டு ஆராய்ச்சி நிறுவனங்களின் தொடர்ந்த ஆராய்ச்சியின் பயனாக பல்வேறு ரகங்கள் வெளியிடப்பட்டன S30, S36, S54, S13, விஸ்வா (DD) போன்றவைகளுடன் விக்டரி 1 எனப்படும் V1 எனப்படும் ரகமும் வெளியிடப்பட்டன. இன்னமும் மல்பெரி ரகத்தைப் பற்றியான ஆய்வுகள், கள ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் V1 எனும் விக்டரி 1 ரகம் நேராக அதி விரைவில் விரைவாக வளரக் கூடியது. இவை மடல்கள் அற்ற கரும் பச்சை வண்னமுடைய பெரிய இலைகளை உடையது. இலைகள் சாறு மற்றும் சதைப்பற்றும் 78% ஈரப்பதமும் உடையது. 90% வேர்விடும் திறனும், நல்ல முளைப்புத் திறனும் உடையது என்பதால் எளிதில் இனப்பெருக்கம் செய்யலாம். ஆண்டிற்கு ஏக்கருக்கு 25 மெட்ரிக் டன் அளவுக்கு இலை மகசூல் கொடுக்கக் கூடிய ரகம். இதன் இலைகளின் அதிக சத்து இருப்பதாலும், மேன்மையான தர இலை என்பதாலும், புழு வளர்ப்பு படுக்கையில் நீண்ட நேரம் வாடாமல் பசுமையாக இருப்பதால் பட்டுப் புழுக்கள் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கின்றது. ஆகவே நாட்டின் அனைத்து பட்டு வளர்ப்புப் பகுதியிலும் உள்ள விவசாயிகளால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பருவ மழையை மட்டும் நம்பி மானாவாரியில் பால்பெரி பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றது. வறட்சியை தாங்கும் இயல்பை உடைய உள்நாட்டினத்துடன் K2, செம்மண்ணுக்கு ஏற்ற S13, கரிசல் மண்ணுக்கு ஏற்ற S 34 அத்துடன் RFS 135, RFS 175 ஆகியவை மானாவாரிக்கு ஏற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.

மல்பெரி ஒரு பல்லாண்டு கால பயிர். இந்த பயிரை நன்கு திட்டமிட்டு ஆரம்ப காலத்தில் வளர்க்கவேண்டும். ஏனெனில் மகசூல் மல்பெரியின் நிர்மானத்திலும், நீடித்த வளர்ச்சியிலும் அடங்கியிருக்கின்றது. எந்த ஒரு வேளாண்மையையும் வெற்றியடைய பயிர் எண்ணிக்கை பராமரிப்பு, சரியா இடைவெளி இரண்டும் மிக முக்கியம். ஆரம்ப காலங்களில் சரியான நடை முறைகளைப் பின்பற்றி நடவு செய்யாவிட்டால் தோட்டங்களில் ஆங்காங்கே இடைவெளி தோன்றி விடுகின்றது. மல்பெரி செடியை தாய்செடிகளிலிருந்து குச்சிகளை வெட்டி நடவு செய்து வளர்க்கலாம். ஆனால் நேரடியாக நிலத்தில் மல்பெரி குச்சிகளை நடவு செய்து செடி வளர்ப்பதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. ஆகவே மல்பெரி ரகங்களை நாற்றாங்காலில் நடவு செய்து மல்பெரி நாற்றுக்கள் வளர்த்து தோட்டத்தில் நடவு செய்வதால் பல நன்மைகளை பெறலாம்.

நமக்கு தேவையான ரக மல்பெரி ரகத்தினை தேர்வு செய்து, செதில் பூச்சுகள் மற்றும் துக்ரோ வைரஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாக்காத செடியிலிருந்து 10 முதல் 15 மி.மீ பருமனுடைய, சுமார் 6 முதல் 8 மாதம் வயது குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும். தடித்த அடிப்பாகமோ மேல் பகுதியில் உள்ள பச்சை இளம் தண்டுப் பகுதிகளே ஏற்றதல்ல. மத்திய பகுதியில் உள்ள சீரான பருமனையுடைய தண்டுகள் மட்டுமே ஏற்றவை. 3 முதல்4 மொட்டுக்களை கொண்ட 15 செமீ முதல் 20 செமீ நீளமுள்ள விதைக் குச்சிகளை கூர்மையான கத்தி அல்லது சிக்கேச்சர் எனும் தண்டு வெட்டும் கைகருவி கொண்டுபிசிறு இல்லாமலும் விதைக்குச்சிகளின் பட்டை, தண்டு பகுதிகளுக்கு எந்தவித சேதாரமுமில்லாமல் சீராக வெட்டி சேகரிக்க வேண்டும்.

நாற்றாங்கால் நடவு செய்ய தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது, சமப்படுத்தி, களைச் செடிகளின் வேர்கள் இல்லாமல் பொறுக்கி எடுத்து சுத்தம் செய்து தேவையான உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்ட்ரீயம் போன்ற தொழு உரத்துடன் வேம் (VAM) எனப்படும் வேர் நுண் உட்பூசணத்தையும் கலந்து சிறு சிறு பாத்திகளாக பிரித்து கொள்ள வேண்டும். வரிசைக்கு வரிசை 1 அடியிலும் செடிக்கு செடி 4 அங்குல இடைவெளியிலும் நடவு செய்ய வேண்டும்.

விதை குச்சிகளைத் தயார் செய்த உடனடியாக நடவு செய்ய வேண்டும். விதை குச்சிகளை நடவு செய்யும் முன்னரே நாற்றாங்காலில் தண்ணீர் பாய்ச்சி, ஒரு கூர்மையான குச்சியால் விதைக் குச்சிகள் நடுவதற்கு ஏற்றபடி துளைகள் இட வேண்டும். பூஞ்சைக் காளான்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த 0.2 சதவிகித பெவிஸ்டின் கரைசலில் நனைத்து, ஒரு மொட்டு மட்டும் தரை மட்டத்திற்கு மேலாக ‘மேல் நோக்கி’ இருக்குமாறு நடவு செய்து விதைக் குச்சிகளைச் சுற்றி காற்றுப் புகாதவாறு மண்ணை இறுக்கமாக அணைக்க வேண்டும். நடவு செய்தவுடனே நீர்ப்பாசனம் செய்வது மிகவும் அவசியம். நிலத்தின் தன்மைக்கு ஏற்ப 4 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். நாற்றாங்கால் படுக்கையில் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். களை எடுக்கும்போது முளை கட்டியுள்ள குச்சிகளுக்கு இடையூறு நேரா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மல்பெரி நாற்றுகளில் இலைப்புள்ளி நோய் காணப்பட்டால் 0.1 சதமான பவிஸ்டின் மருந்தையும், இலைப்பேன்கள் (Thrips) காணப்பட்டால் 0.01% ரோகர் பூச்சி கொல்லியையும், சிலந்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்த 0.1% மெட்டாசிஸ்டாக்ஸ் பூச்சி கொல்லியையும் தெளிக்கலாம்.

மூன்று அல்லது நான்கு மாத வயதுள்ள மல்பெரி நாற்றுகள் தோட்டத்தில் நடவு செய்ய ஏற்றவை. எளிதாக நாற்றுகளைப் பிடுங்க நாற்றாங்காலுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாக தேவையான அளவு நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளைப் பிடுங்கும் முன்னர் கடப்பாரை அல்லது பிக்காசு கொண்டு மண்ணைத் தளர்த்திவிட்டு செடிகளின் வேர்கள் ஒன்றோடு ஒன்று பின்னாமல் ஒன்றன் பின் ஒன்றாகப் பிடுங்கி எடுக்க வேண்டும். நீண்ட தூரம் கொண்டு சென்று நடவு செய்ய நேரிட்டால் ஈர சணல் சாக்குகளை சுற்றி பச்சை இலைகளைக் கொண்டு மூடி இரவில் குளிர்ந்த நேரத்தில் கொண்டு சென்று விரைவாக நடவேண்டும்.

மல்பெரி ஒரு பல்லாண்டு காலப் பயிர். ஆகவே சரியான முறையில் தோட்டத்தில் நடவு செய்து விட்டால் நட்ட இரண்டாவது ஆண்டிலேயே முழு அளவில் இலை மகசூலை கொடுப்பதோடு 15 முதல் 20 ஆண்டுகாலம் வரை குறைவின்றி இலை மகசூலை கொடுக்கின்றது. மல்பெரி எல்லாவகையான மண்ணிலும் வளரக் கூடியது என்றாலும் அதிக காரத்தன்மை, களர்தன்மை, அமிலத்தன்மை உள்ள நிலங்களை ஜிப்சம் அல்லது சுண்ணாம்பு இட்ட நிலச் சீர்திருத்தம் மேற்கொண்டு மண்ணின் pH கார அமிலத்தன்மையை சமப்படுத்தி நடவு செய்வது ஏற்றது.

பருவ மழை துவங்கும் முன்னர் நிலத்தை 1 ½ அடி ஆழத்திற்கு இரண்டு மூன்று முறை உழவு செய்து புல், பூண்டு, களை, வேர்களை அகற்றி நிலத்தை சமப்படுத்த வேண்டும். ஏக்கருக்கு 10 மெட்ரிக் டன் நன்கு மக்கிய தொழு உரத்தை இட்டு மண்ணுடன் கலக்கி, மண்ணில் கட்டிகள் இல்லாமல் தேவைக்கும், தண்ணீர் பாய்ச்சலுக்கும் ஏற்ற பாத்திகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

மல்பெரி தோட்டத்தில் இரண்டு முறையில் நடவு செய்யலாம். முதலாவது சதுர முறை இதில் மண்ணின் வளம், தேர்வு செய்யப்பட்ட ரகத்திற்கு ஏற்ப 2 அடி X 2 அடி அல்லது 3 அடி X 3 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். அல்லது இணை வரிசை நடவு முறையில் வரிசைக்கு வரிசை 3 அடி இடைஎளியும், செடிக்கு செடி 2 அடி இடைவெளியும் வைத்து நடவு செய்யலம். செடிகளின் இடைவெளி என்பது தேர்வு செய்யப்பட்ட ரகம், மண்ணின் தன்மை, மழை அளவு, நீர்பாசன வசதி போன்றவற்றை அனுசரித்து மாறுபடும். சொட்டு நீர் பாசன அமைப்பு அமைக்கப்பட வேண்டும் என்றால் கயறு பிடித்து வரிசையில் நடவு செய்வது மிகவும் அவசியம்.

மண்ணில் உள்ள உரச் சத்துக்களை மல்பெரி செடிகள் பயன்படுத்திக் கொள்ள தேவையான அளவு நீர்பாசனம் செய்வது அவசியம். ஆதலால் மண்ணில் தன்மை, நீர் படித்து வைத்துக் கொள்ளும் குணம். வெப்பத்தின் அளவு, நீராவியாகும் வேகம் போன்ற சூழ்நிலைகளை அனுசரித்து அதற்கேற்ற இடைவெளியில் சீரான நீர்பாசனம் மிகவும் முக்கியம். நாற்றுகள் நட்ட 1 ½ மாத காலத்திற்குப் பின் முதல் களை எடுப்பும், மூன்றாவது மாதம் இரண்டாவது களை எடுப்பும் அவசியம். சுத்தமாக களை எடுப்பதும், களையின் வளர்ச்சியை அனுசரித்து குறித்து காலத்தில் செய்வதும் மிக அவசியம்.

நல்ல மண் வளம், சரியான நீர்பாசனம் உள்ள நிலங்களில் மல்பெரி நன்றாக வளர்க்கின்றது. பட்டுப் புழுக்களுக்கு முட்டை பொரிப்பிலிருந்து, கூடு கட்டும் பருவம் வரை செடியின் பல்வேறு இலைகளை தீவனமாக கொடுக்க வேண்டும். புழுக்களின் பருவத்திற்கு ஏற்ப இலைகளை உணவாகக் கொடுக்க வேண்டும். இலைகளை தேவைக்கு மேல் அறுவடை செய்து நீண்ட நேரம் சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். புதியதாக பறிக்கப்பட்ட இலைகளில் அதிக சத்தும் ஈரப்பதமும் இருப்பதால் அவைகளைப் பட்டுப் புழுக்களுக்கு உணவாக அளிக்கும் போது நன்றாக உண்டு நல்ல வளர்ச்சி அடைகின்றன.

மெகோனெல்லி காக்கஸ் என்கின்ற மாவு பூச்சியினால் மல்பெரியில் இலை சுருட்டு நோய் ஏற்படுகிறது. மாவு புச்சியானது துளிர்விட்டு வரும் மல்பெரி செடியின் கொழுந்து பகுதியைத் தாக்குகின்றது. இதனால் செடியின் இலை சுருண்டு தட்டையாகிவிடுகின்றது. செடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இலை மகசூலும், இலையின் தரமும் வெகுவாக குறைகின்றது.இந்த நோயானது எல்லா பருவங்களிலும் காணப்பட்டாலும் வெயில் காலத்தில் அதிகமாகவும், மழைக்காலத்தில் குறைந்தும் காணப்படுகின்றது. இலை சுருட்டு நோயை ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

1. இலைகளை கிள்ளி அழிக்கும் முறை -, பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி எடுத்து, நோய் பாதிக்கப்பட்ட இலைகளை பாலித்தீன் பைகளில் சேகரித்து எரித்து விடவேண்டும். நோய் தென்படும் போது இதை தொடர்ந்து செய்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

2. பூச்சி கொல்லிமருந்துகொண்டு கட்டுப்படுத்தும் முறை – டைக்குளோர்வாஸ் 0.2% கல்வையும் 5% சோப்பு கரைசலை கலந்து கவாத்து செய்தவுடன் அல்லது இல்லை அறுவடையானவுடன் ஒரு முறையும், 20 நாட்கள் கழிந்தபின் மீண்டும் ஒருமுறையும் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

3. உயிரியல் மூலம் கட்டுப்படுத்தும் முறை – இந்த மாவுப்பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் கிரிப்டோல்மஸ் மாண்டோசரி எனும் பொறிவண்டினைக் கொண்டு துக்ரோ நோயினை அழிக்க இயலும். ஒரு ஏக்கருக்கு 300 வண்டுகள் தேவைப்படுகின்றது. இந்த பொறிவண்டை மழைக்காலம் முடிந்தபின் தோட்டத்தில் விட்டு மாவுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

மல்பெரியில் வெள்ளை மற்றும் கத்திரிப்பூ நிற வேர் அழுகல் நோய் தென்படுகிறது. இந்த நோய் பூஞ்ச காளானால் ஏற்படுகிறது. இந்த நோயினால் தாக்கப்பட்ட செடிகள் பலமிழந்து காணப்படும். இலை மொட்டுகள் மிகவும் பலவீனமாக காணப்படும். மெதுவாக வளரும். இலைகள் உதிர்ந்து நாளடைவில் செடி இறந்துவிடும். நீர் தேங்கக் கூடிய இடத்தில் இந்நோய் அதிகமாகக் காணப்படும். பாதிக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி, வேர், தண்டு, இலைப் பகுதிகளை எரித்துவிட வேண்டும். டிரைகோடர்மா விர்டி எனும் நன்மை தரும் பூசணத்தை செடியை சுற்றி ஊற்றி கட்டுப்படுத்தலாம்.

மல்பெரி வேர்களில் முடிச்சுகளை உண்டாக்கி அங்கு நூற்புழு வாழ்கின்றன. Root Knot தாக்கப்படும் மல்பெரி வேர்கள் பலம் இழந்து குறைவான எண்ணிக்கையில் வேர்களை கொண்டிருக்கும். தாக்குதல் அதிகமானால் செடிகள் அழிந்து விடுகின்றன. இந்தப் புழுக்கள் குளிர்காலத்தில் முட்டை, புழு பருவங்களை அடைகிறது. மண்ணில் வெப்பம் அதிகரிக்கும் சமயங்களில் புழுக்கள் முட்டையிலிருந்து வெளிவந்து மண்ணினுள் சென்று மல்பெரி வேரை இந்த் நூற்புழுக்கள் தாக்குகின்றன. மல்பெரி நடவு செய்யும் முன்னர் நிலத்தில் வேப்பம்புண்ணாக்கு இடுவதன் மூலம் நூற்புழுக்களை வரவிடாமல் தடுக்கலாம். அல்லது நெமொடசைட் எனும் நூற்புழு கொல்லும் நஞ்சை பயன்படுத்தலாம்.

மல்பெரி செதில் பூச்சிகளை (Scale insects) செடியின் சாற்றினை உறிஞ்சுவதால் செடி அடிப்பாகத்திலிருந்து இறந்து வருகிறது. பாதிக்கப்பட்ட தண்டுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான செதில் பூச்சிகளைக் காணலாம். கோடை காலத்தில் செதில் பூச்சிகள் அதிக அளவு காணப்படும். கழிவு டீசல் எண்ணெய் மற்றும் சோப்பு கலவையை தண்டுப்பகுதியில் பூசினால் செதில் பூச்சிகளின் தாக்குதல் குறையும். 0.05 சதவிகித மாலத்தியன் தெளித்தும் செதில் பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

பட்டுத் தொழிலின் அடிப்படை மல்பெரி செடி வளர்ப்பு. செடியில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருள்தான் பட்டு புழு வளர்ப்பின் ஆதாரம். நல்லதொரு மல்பெரி தோட்டத்தை உண்டாக்கிவிட்டால் ‘புழு’ வளர்ப்பில் வெற்றியடைவது எளிது. அதென்ன புழு வளர்ப்பு? பளஅளக்கும் பட்டை உற்பத்தி செய்வது ஒரு புழு. அதற்கான தீவனம் தான் இந்த மல்பெரி. இனி அடுத்த வாரம் பட்டுப்புழு வளர்ப்பைப் பற்றிப் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com