

நமது தமிழ்ச் சமுதாய பாரம்பரியத்தில் முதல் ஏழு வள்ளல்கள், இடையேழு வள்ளல்கள், கடையேழு வள்ளல்கள் இருந்ததாக வரலாறு உண்டு. குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை போத்திய பேகனும், கொழுகொம்பு இல்லாமல் தவித்த முல்லைச் செடிக்கு தேரீந்த பாரியும், அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமானும் நமக்கு எட்டாம் வகுப்புப் பாடப் புத்தக ஹீரோக்கள். நம்மை பெருமிதப் படவைக்கும் உண்மையான பெரிய மனிதர்கள்.
அவர்களில் எத்தனைபேர் உண்மையோ கற்பனையோ சொல்ல முடியாது. ஆனால், 21-ம் நூற்றாண்டில் உண்மையான பெரிய வள்ளல்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முதலில் பில்கேட்ஸ். இந்தத் தலைமுறையில் இப்படி ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை. 21-ம் நூற்றாண்டில் உலகத்தைத் தாக்கம் செய்தவர்கள் யார் யார் என்று பட்டியலிட்டால், முதல் பத்தில் பில்கேட்ஸ் எளிதாக வந்துவிடுவார். எப்படி?
1955-ல் அமெரிக்காவின் வடமேற்கு கோடியில் உள்ள சியோட்டலில் பிறந்து 20 வயதில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது நம் மொழி. கம்ப்யூட்டர் இருக்கும் இடமெல்லாம் மைக்ரோசாஃப்ட் இருக்கும் என்பது பில்கேட்ஸ் மொழி.
1955-லிருந்து 2009 வரை உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் பெரிதும் இவருக்கே முதலிடம். ஒரு சமயம் இவருடைய சொத்தின் மதிப்பு 101 பில்லியன். (ஒரு பில்லியன் 1000 மில்லியன் இவருடைய சொத்து 1,01,000 மில்லியன் அமெரிக்க டாலர். ஒரு டாலர் இன்றைக்கு | 45 என்று கொண்டால், தலைசுற்றுகிறதா?
மூன்று விஷயங்களில் பில்கேட்ஸ் முதன்மைச் சாதனை செய்துவிட்டார்.
இதற்குமுன், இவ்வளவு பெரிய பணம் யாருக்கும் சேரவில்லை. நமக்கு பழக்கப்பட்ட டாடா, பிர்லா, அம்பானி, ராக்கிபெல்லர், போர்டு மற்றும் கார்னகி எல்லாம் வரிசையில் எங்கோ நிற்கிறார்கள்.
மற்றவர்கள் எல்லாம் இரும்பு, பெட்ரோல் முதலிய கனமான பொருள்களைக் கொண்டு பணம் பண்ணியவர்கள். பில்கேட்ஸýக்கு மூளைதான் மூலதனம். அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கதை படித்திருப்பீர்கள். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் என்ற விளக்கை தேய்த்துத் தேய்த்து வெளியே வந்த பூதத்திடம் வேலை வாங்கி வாங்கி உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆகிவிட்டார்.
இதெல்லாம் பெரிதல்ல, மூன்றாவதாக சில ஆண்டுகளுக்கு முன் மைக்ரோ சாஃப்டில் தலைவர் பதவியிலிருந்து கீழிறங்கி தன் "முடியை' இறக்கிவைத்துவிட்டு தன்னுடைய சொத்தின் பெரும் பகுதியை (28 பில்லியன் டாலர்) உலகின் ஏழை மக்களுக்கு நோய் நொடியிலிருந்து விடுதலைகிட்ட தானமாய்க் கொடுத்துவிட்டார். மைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனத்தை உருவாக்க எந்த அளவு வேர்வை சிந்தியிருப்பேனோ, அந்த அளவு ஏழை மக்களுக்காக இனி பாடுபடுவேன் என்று துணிந்துவிட்டார் இந்த 21-ம் நூற்றாண்டு அசோகர்.
அவர் எடுத்து வைத்த அடுத்த அடி மிகத் திறமையானது. உலகின் இரண்டாவது அல்லது மூன்றாவது பணக்காரர் என்ற பெருமையில் இருப்பவர் வாரன் பப்பெட். இவர் ஸ்டாக் மார்க்கெட் புலி; பெரிய புள்ளி; பெரிய புள்ளியுள்ள புலி.
""தங்களுடன் ஒரு அரை மணிநேரம் விருந்து சாப்பிட விரும்புகிறேன்'' என்று வேண்டுகோள் விடுத்து அவருடன் விருந்து சாப்பிட்டார். அரை மணியல்ல, பல மணி நேரங்கள் சாப்பிட்டார்கள். பேசினார்கள்; பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். முடிவில் பப்பெட் ஒரு அறிக்கை விடுத்தார். தன்னுடைய சொத்தில் 99 சதவிகிதம் (கவனியுங்கள் ஒன்பது சதவிகிதமல்ல, 99 சதவிகிதம்) இனி உலக மக்களுக்கு என்று எழுதி வைத்துவிட்டார். இந்தப் பணம் ஆண்ப்ப் & ஙங்ப்ண்ய்க்ஹ எஹற்ங்ள் ஊர்ன்ய்க்ஹற்ண்ர்ய்-ல் கைகோத்து கங்கையும், காவிரியும்போல் இணைந்து உலகை வளமாக்கும் என்று அறிக்கை விட்டார்கள். செயலில் இறங்கினார்கள்.
குறிப்பாக ஆப்பிரிக்க ஆசிய நாடுகளில் பலர் மலேரியா, போலியோ போன்ற எளிதில் தடுக்கக்கூடிய ஆனால், காசில்லா கொடுமையால் தடுக்க முடியாமல்போகும் நோயால் அவதிப்படுகிறார்கள். சிறிய பள்ளிக்கூட வசதிகூடக் கிடையாது. இந்த அவலத்தை நீக்குவதுதான் முதல் நோக்கம்.
அடுத்தாற்போல் இன்னொரு அடி எடுத்து வைத்தார்கள். இரண்டு பேரும் சேர்ந்து. தெற்கு சீமையில் ஒரு வழக்கம் உண்டு. ஒருவர் புதிதாக ஒரு காய்கறிக் கடையோ அல்லது பாத்திரக் கடையோ வைப்பதாக முடிவு செய்து உறவினர்கள் நண்பர்களை எல்லாம் அழைப்பாராம். வந்தவர்கள் விருந்து உண்ட பின் இலையின் அடியில் நூறோ, ஐநூறோ அவரவர் வாசதிக்குத் தகுந்தாற்போல் "மொய்' வைத்துவிட்டுப் போவார்களாம். இதற்குப் பெயர் "மொய் விருந்து'.
அப்படி ஒரு "மொய் விருந்து' கடந்த மே 5-ம் தேதி நியூயார்க்கில் ராக்கிபெல்லர் மாளிகையில் நடந்தது. நடத்தியவர்கள் கேட்ஸýம் பப்பெட்சும்.
அமெரிக்காவின் எல்லா பில்லியனர்களையும் அழைத்ததில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு "ஈத்துவக்கும் இன்பம்' என்றால் என்னவென்று உணர்த்தப்பட்டது. குறிப்பாக பப்பெட் சொன்னதை - இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
சிறு வயதிலேயே பணம் சேர்ப்பதை, செல்வந்தராவதை உங்கள் பிள்ளைகளுக்கு சுட்டிக்காட்டி முயற்சி செய்ய ஊக்கம் கொடுங்கள். நேர்மையும் நாணயமும்தான் நீண்டதூரம் எடுத்துச் செல்லும். ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் தேவையே இல்லை. எல்லாவற்றையும்விட உங்கள் சந்ததிகள் உங்கள் சொத்தை உருப்படியாக ஏதேனும் செய்யும் அளவுக்குப் போதுமான சொத்தை விட்டுச் செல்லுங்கள்; ஒன்றும் செய்யாத சோம்பேறியாகும் அளவுக்கு - உருப்படாமல் போகும் அளவுக்கு நிறையச் சொத்தை விட்டுச் செல்லாதீர்கள்.
இந்த ர்ழ்ண்ங்ய்ற்ஹற்ண்ர்ய் ஸ்ரீர்ன்ழ்ள்ங் க்குப் பின் நிறையப் பேர் தன்னுடைய சொத்தின் சரிபாதியை உலக மக்களுக்குக் கொடுக்க முன்வந்து மொய் எழுதிச் சென்றார்கள்! அதில், முக்கியமானவர்கள் மைக்ரோசாஃப்டின் துணை நிறுவனர் பால் ஆலென், ஆரக்கிளின் கஹழ்ழ்ஹ் உப்ப்ண்ள்ர்ய் கூகிளின் செர்ஜி பிரயான், வால் மார்டின் வால்டன்.
கிட்டத்தட்ட 600 பில்லியன் டாலர் மொய்ப்பணம் சேர்ந்துவிட்டது.
அடுத்து, வாமன அவதாரம் எடுத்து மூன்றாவது அடியாக சீனாவிலும் இந்தியாவிலும் உள்ள செல்வந்தர்களிடமும் வருகிறோம் என்று புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் இந்தியாவில் இருக்கும் பேரரசர்களும் (அம்பானி, லக்மி, மிட்டல், மகிந்திரா) ஐ.டி. குறுநில மன்னர்களும் தாமாகவே முன் வந்து எத்தனையோ தரும காரியங்களில் இறங்கி உள்ளார்கள். குறிப்பாக இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், சுதா.மூர்த்தியும் நிறையக் கொடுத்திருக்கிறார்கள். விப்ரோ பிரேம்ஜி, மகிந்திரா வினித் நய்யார் முதலியோர் பெரு வள்ளல்கள். இவர்கள் எல்லாம் மலைக்க வைக்குமளவுக்கு ஹெச்சிஎல்லில், எஸ்.எஸ். நாடார் 530 கோடி ரூபாய் அள்ளி வழங்கியுள்ளார். ""தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு'' என்ற வள்ளுவர் வாசகம் உணர்ந்த தமிழ் வள்ளல் நம் நாடார்.
எஸ்.எஸ். நாடார் மிகப் பெருமைக்குரிய தமிழர் என்று ஆணித்தரமாகச் சொல்ல வேண்டும். காரணம், தமிழர்கள் பெரிதும் இரண்டாம் நிலையிலோ, மூன்றாம் நிலையிலோ இடப்பட்ட கட்டளையைச் செம்மையாகச் செய்துகாட்டும் இனம். தொழில் முனைவராக கத்திச் சண்டை போராட்டத்தில் கலந்துகொள்வதோ குறைவு. ஆனால், நாடார் நவயுக சாஃப்ட்வேர் துறையில் இறங்கி, முன்னால் நின்று வள்ளல் தன்மையிலும் முதலிடம் பெற்றுள்ளது தமிழ்ச் சமுதாயத்துக்கே பெருமை!
மா. இளங்கோ, மா.பாரதி,
வாஷிங்டன், அமெரிக்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.