

அலைக்கற்றை ஊழலையே பார்த்துவிட்ட நமக்குச் சின்னச்சின்ன ஊழல்கள் எல்லாம் ஊழலாகவே கண்ணுக்குத் தெரிவதில்லை; சொல்லப்போனால் அவற்றை நாம் ஊழலாகவே "மதிப்பதில்லை'.
பொங்கல் விழா நாள்களில் காணும் பொங்கல் என்பதும் ஒரு விழாவாகும். அதைக் கரிநாள் என்றும் சொல்வார்கள். அதன் நோக்கம், ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில், அவர்களும் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் பணம் காசு கொடுப்பதாகும். அதுகூட நாமே விரும்பிப் பிறருக்குக் கொடுப்பதாகும். அப்படி பணம் காசு பெறுவது, மது குடித்து மயங்குவதற்குத்தான் பயன்படுகிறது. காணும் பொங்கல் நாளில் கடற்கரையில் கூட்டம் திரள்கிறதோ இல்லையோ, மதுக்கடைகளில் மக்கள் கூட்டம் புரள்கிறது; உருள்கிறது.
இந்த நாளில், அரசு அலுவலக ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், அஞ்சல் துறை ஊழியர்கள், இப்போது கம்பெனி ஆகிவிட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள், மின்துறையினர், நகராட்சிப் பணியாளர்கள் போன்றவர்களும் வீடுவீடாக வந்து பணம் வசூல் செய்து வருகின்றனர்.
மேலே குறிப்பிட்ட துறையைச் சார்ந்தவர்கள் எல்லோரும் பல ஆயிரங்கள் மாதச் சம்பளமாகப் பெறுகிறவர்கள். நிரந்தர வேலையில் இருப்பவர்கள், வேலையை விட்டு ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியம் பெறத் தகுதி உடையவர்கள். அவ்வப்போது பணத்தேவையின்போது அரசுக்கடன் பெற்றுப் பயன் அடைபவர்கள். அரசின் பல சலுகைகளையும் அனுபவித்து வருகிறவர்கள்.
அதுமட்டுமல்லாமல், அவர்கள் செய்கிற வேலைக்கு அரசிடமிருந்து சம்பளமாகப் பணம் பெற்றாலும், கிம்பளமாக மக்களிடத்தில் பணம் வாங்கிக் கொண்டுதான் அரசுப் பணியைச் செய்கின்றனர். இதில் விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கால அதிசயங்களாக சில நல்லவர்கள் இருக்கின்றனர். அவர்களை நாம்தான் பாராட்ட வேண்டும். மற்றவர்கள் அவர்களைப் பைத்தியக்காரர்களாகத்தான் பார்க்கின்றனர். உடன் பணியாற்றும் ஊழியர்களோ அவர்களைப் பகைவர்களாகப் பார்க்கின்றனர்.
காணும் பொங்கல் நாளில் காசு பணம் கேட்டு வசூல் செய்யும் அரசுப் பணியாளர்களைப் பற்றி மேலும் ஆராய்வோம்.
நிரந்தரப் பணியிலும் போதுமான வருமானத்திலும் வாழும் இவர்கள், யாரிடத்தில் போய் இனாம் கேட்கிறார்கள்? பெரும்பாலும் இவர்களைவிட பல பொருளாதாரப் படிக்கட்டுகளில் கீழே உள்ளவர்களிடத்தில்தாம் கையேந்துகின்றனர்.
குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழையிடத்தில் தபால்காரர் கட்டாயமாக ரூ.20 கேட்டு வாங்குகிறார். அவ்வாறு தரவில்லை என்றால் தபால்கள் ஒழுங்காக வராது. தவறான முகவரியில் டெலிவரி செய்யப்படும். ஆண்டுக்கு ஒருநாள்கூட ஒருதபால்கூட வராத வீட்டில் உள்ளவர்களும் தபால்காரருக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்பது என்ன நியாயம்? பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு வந்த கடிதங்களை அப்படியே பாதுகாத்து, பொங்கல் அன்றுதான் நமக்குத் தருவார்கள். இதில் ஒரு "தொழில் ரகசியம்' உண்டு. இனாமுக்காக வந்ததுபோல் தெரியாமல், ஏதோ தபால் கொடுக்க வந்ததுபோல் காட்டிக்கொண்டு, இனாம் எதிர்பார்த்துப் "பொங்கல் பொங்கிச்சா' என்று கேட்டு, கௌரவப் போர்வையில் வசூலைச் சுருட்டுவதற்குத் தோதாகத்தான், ஒரு வாரமாக வந்த தபால்களைச் சேமித்துப் பொங்கல் அன்று பட்டுவாடா செய்கிறார்கள்.
மின்சார வாரிய ஊழியர்கள் தயவு எல்லாருக்கும் தேவை. அவர்களின் அருள் இல்லாவிட்டால் நம்வீடு முழுவதும் இருள்தான். நம் வீட்டில் கரண்ட் இல்லாவிட்டால், மின்வாரிய அலுவலகத்தில் புகார் புத்தகத்தில் எழுதி வைத்தாலும் உடனே வந்து பார்க்க மாட்டார்கள். இரண்டு மூன்று முறை மின்சார அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டும். அப்புறமாக வருவார்கள். அவர்கள் செய்யும் கடமைக்கு நம்மிடத்தில் இருந்து ரூ. 50-க்கு குறையாமல் வாங்கிக் கொள்வார்கள். இவர்கள் எந்த வேலையையும் இனாமாகச் செய்ய மாட்டார்கள். ஒரே வேலைக்குச் சம்பளமும் கிம்பளமுமாக இரட்டை வருமானம் பெறுகின்றனர். இவர்கள்தாம் காணும் பொங்கல் நாளில் வந்து நம்மிடம் இனாம் கேட்கின்றனர். தம்மால் இயன்ற அளவுக்குக் கொடுக்கும் பணத்தை வாங்க மறுக்கின்றனர். இவ்வளவு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இனாம் நிர்ணயம் செய்கின்றனர்.
நீதிமன்ற ஊழியர்களாவது நீதியாக நியாயமாக நடந்து கொள்கிறார்களா என்றால்... "இல்லை' என்பதுதான் நியாயமான பதில்.
காவல் துறையினரின் கதை தெரியுமா? இனாம் வசூலிப்பதில் எல்லாத் துறையினரையும்விட இவர்களுக்கே முதல் இடம்.
கித்தான் சாக்கு விரித்து கொய்யாப் பழத்தைக் கூறுகட்டி விற்கும் குடுகுடு கிழவிமுதல் நான்கு அடுக்கு மாளிகையில் நகை வணிகம் செய்யும் பணமுதலைகள் வரை எல்லாரிடத்திலும் "இனாம் வசூல் கெடுபிடி' செய்பவர்கள் போலீஸ்காரர்கள்தாம்.
காவல் துறையினருக்கு என்ன குறை? அதிகாரம் இருக்கிறது, நிரந்தரப் பணி இருக்கிறது, போதிய சம்பளமும் கிடைக்கிறது. "போதும் போதும்' என்ற நிலை இருந்தாலும் "போதாது போதாது' என வாங்கி அமுக்கும் கிம்பளமும் இருக்கிறது. ஏழைகளிடத்தில்... இயலாதவர்களிடத்தில் இவர்கள் ஏன் மிரட்டி பணம்பெற வேண்டும்? காவல் துறையினர் "தொப்பை'யும் வளர்க்கிறார்கள்; தப்பையும் வளர்க்கிறார்கள். காவல் துறையில் கண்ணியமானவர்கள். கடமை தவறாதவர்கள். கடைசிவரை நேர்மை பிறழாதவர்கள் உண்டு. அவர்களைப் போற்றுவோம்; புகழ்வோம்.
இதேபோல்தான். தொலைபேசித் துறையினரும் நகராட்சிப் பணியாளர்களும் வசூல் கோலோச்சுகின்றனர்.
ஒரு காணும் பொங்கல் நாளில் என் வீட்டுக்கு வந்து உரிமையோடு அழைப்பு மணியைத் தொடர்ச்சியாக அழுத்தினார். உள்ளிருந்து வாசல்வரை நான் வரக்கூட கால அவகாசம் கொடுக்க விரும்பாத அந்த நபர்... சத்தமாகக் குரல் கொடுத்ததோடு வாசல் இரும்பு கேட்டை "அப்படி இப்படி' என இடித்து "அபசுரம்' எழுப்பினார்.
வெளியே ஓடிவந்து பார்த்தேன்.
""தெரு பெருக்குறவுங்க'' என்றார்.
""நான் உங்களைப் பார்த்ததே இல்லையே'' என்றேன்.
""பாக்காட்டா இன்னா? எங்க ஆளுங்கதான் இங்கே பெருக்குறாங்க, வசூலுக்கு வந்திருக்கேன். சீக்கிரம் குடு, டைம் ஆவுது''
பிறகுதான் தெரிந்தது. நகராட்சியில் இவர்தான் துப்புரவு ஊழியர். ஆனால் இவர், குறைந்த சம்பளத்தில் இன்னொருவரை வேலைக்கு அமர்த்த வேலை வாங்கிக் கொள்கிறார். சம்பளமும் வாங்கிக் கொள்கிறார் என்ற விஷயம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இத்தகைய அரசு ஊழியர்கள் இனாம் கேட்டு வரும்போது, வீடு பூட்டி இருந்தாலோ... கடை சாத்தி இருந்தாலோ... அதோடு நாகரிகமாக விட்டுவிட மாட்டார்கள். மறுநாள் அல்லது அதற்கு அடுத்த நாள் என்று தொடர்ந்து வந்து, வசூல் வழிப்பறி செய்துவிடுவார்கள். ஆமாம்... எடுத்த சபதத்தை முடித்தே தீருவார்கள்.
எனவே, இனாம் என்பது கூட ஒருவகை ஊழல்தான். சின்ன ஊழலோ பெரிய ஊழலோ குற்றத் தன்மை ஒன்றேதான்! குற்ற மனப்பான்மையும் ஒன்றேதான்!
வருமானம் மிக்க அரசு ஊழியர்களே இனாம்கேட்டு வீடுவீடாக அலைவது. பிச்சை எடுப்பதற்குச் சமம். அதிலும் ஏழை எளிய மக்களிடத்தில் இனாம் கேட்பது, அவமானத்தின் எல்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.