"சட்ட விதிகளை மாற்றலாம்'

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஊடகங்களில் விமர்சிக்கப்படும்போது, வழக்கமாய் வருத்தமும் வேதனையும் அடைவதுண்டு. தங்களின் "வங்கிகளின் ராங்கித்தனம்' தலையங்கத்தைப் படிக்கும்போது, வழக்கத்துக்கு மாறாக, அவமானமும்,
"சட்ட விதிகளை மாற்றலாம்'
Published on
Updated on
1 min read

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஊடகங்களில் விமர்சிக்கப்படும்போது, வழக்கமாய் வருத்தமும் வேதனையும் அடைவதுண்டு. தங்களின் "வங்கிகளின் ராங்கித்தனம்' தலையங்கத்தைப் படிக்கும்போது, வழக்கத்துக்கு மாறாக, அவமானமும், வெட்கமுமே ஏற்பட்டன.

உண்மை. சில சமயங்களில் இப்படி மாணவ, மாணவியர் கணக்குத் தொடங்க படாதபாடு படுவதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். கல்வி உதவித்தொகைக்கான காசோலையை மாற்றுவதில் மட்டுமல்ல, மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கான காசோலைகளை அவை ரூ.1,500 என்ற போதிலும்கூட அவர்கள் மாற்றுவதும் கடினமான வேலையே. தனது தகுதிக்குக் கிடைத்த பரிசு என்ற பெருமிதத்தில் பள்ளிச்சீருடையில் வரும் 10-ம் வகுப்பு மாணவிக்கு, ரூ.500 போட்டு கணக்குத்தொடங்க வேண்டும் என்கிறபோது முகம் சுருங்கி, மனம் சுக்குநூறாய் வெடித்துப் போகிறது. கோபத்தில் அந்தக் கூலித் தொழிலாளி (அப்பா) செக்கைக் கிழித்துப்போடத் துணிகையில், அவரைச் சாந்தப்படுத்தி, குழந்தையை உற்சாகப்படுத்தி, தனிப்பட்ட முறையில் நான் ரூ.500 கொடுத்து, கணக்குத் தொடங்கி அனுப்பிவைக்க முடிந்தது.

சட்டம், விதிகள் எல்லாம் இருக்கின்றன. உண்மை தான். ஆனால், மாணவர்களின் இதுபோன்ற பரிதாப நிலையை எடுத்துச்சொல்லி, "தினமணி'யை மேற்கோள்காட்டியே "ஜீரோ பாலன்ஸ் அக்கவுண்ட்' வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தலாம் என்பதை வங்கி மேலாளர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்திப்பேசி, விதிமுறைகளை மாற்றலாம். சில வங்கிகளில் 10-ம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் முதல் 5 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியரைத் தேர்வுசெய்து அவர்கள் பெயருக்கு ரூ.1,000 போட்டு சேமிப்புக் கணக்கைத் தொடங்கி (குறிப்பு: எந்த அடையாள, முகவரிச் சான்றுகள் தரப்படாவிட்டாலும்) அந்தப் பள்ளிக்கே சென்று, காலையில் தொடங்கும் மாணவர்கள் பிரார்த்தனை நிகழ்வில் "பாஸ்' புத்தகத்தை வழங்கி, மேற்படிப்பு படிக்க கல்விக்கடன் வழங்க எங்கள் வங்கி உங்களுக்கு இப்போதே உத்தரவாதம் அளிக்கிறது என்று வங்கிக் கிளை மேலாளர்கள் கூறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள கிளை மேலாளர்கள் ஆங்காங்கே செய்கிறார்கள். பலர் வேலைப்பளுவைக் காரணம்காட்டி, செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவ்வளவாக ஆளாகாத, லஞ்சமற்ற துறைகளில் ஒன்றாகத்திகழும் வங்கித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மாணவர்கள் நலனையும் மனதில்கொண்டு கணக்குத் தொடங்குவதிலோ, கல்விக்கடன் வழங்குவதிலோ தாராளமாய்ச் செயல்பட வேண்டும் என்பதே வங்கி ஊழியரான எனது விருப்பம். இல்லையெனில், "என்புதோல் போர்த்த உடம்பு' எனகிற குற்றச்சாட்டுக்கு உள்ளாக நேரிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com