மதுவிலக்குக் கொள்கையில் ஊசலாட்டமும் பாரபட்சமும்...

மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சொந்தத் தோப்பிலிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் தந்தை பெரியார். இப்போது பெரியார், அண்ணா வழியில் வந்ததாகப்
மதுவிலக்குக் கொள்கையில் ஊசலாட்டமும் பாரபட்சமும்...
Updated on
2 min read

மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சொந்தத் தோப்பிலிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் தந்தை பெரியார். இப்போது பெரியார், அண்ணா வழியில் வந்ததாகப் கூறிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி, மதுவிலக்குக் கொள்கையில் எந்தத் தெளிவும் இல்லாமல் உள்ளார். மதுக்கடைகள் மூலம் அதிக வருமானம் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் மறந்துவிட்டார் கருணாநிதி.

ஒரு காலத்தில் மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் உள்ளதா? என்று பார்த்தார்கள். இப்போது படித்த மாப்பிள்ளைகள் "பாரில்' அமர்ந்து குடிப்பதை நாகரிக கலாசாரமாகப் பார்க்கிறார்கள். குடித்துவிட்டு தெருவில் வீழ்ந்து கிடப்பதும், வீண் தகராறு செய்வதும் பண்பற்ற செயலாக இருந்த நிலைகள்மாறி இதையெல்லாம் இனி தடுக்க முடியுமா? என்ற கேள்விக்குள்ளாகியுள்ளது நமது சமுதாயம்.

குடி ஒரு வகையில் தனிமனிதப் பிரச்னையாக இருந்தாலும், இது தனி நபர் ஒழுக்கத்தையே சீரழித்து விடுகிறது. வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் மிகப்பெரிய சாதனையாளர்கள்கூட ஒரு காலத்தில் குடித்தே அழிந்துபோய் இருக்கிறார்கள். அரசும், ஆட்சியாளர்களும் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? கருணாநிதிக்கு கவலையெல்லாம் அரசுக்கு வருமானம் தரும் முக்கியமான வருவாய் ஆதாரம் மதுபானக்கடைகள், அவ்வளவுதான். தமிழகத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் ஆந்திரம், கர்நாடகம், பெங்களூர், சென்னை, புதுச்சேரி, மதுராந்தகம், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய இடங்களில் இருந்துதான் அனைத்து வகையான மதுபான பாட்டில்களும் வந்து சேர்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் உள்ளூரிலேயே உள்ள தென்னை, பனை மரங்களைப் பயன்படுத்தி ஏன் கள் இறக்கக்கூடாது என்ற புதிய குரல் இப்போது எழுந்துள்ளது. கள் இறக்குவதைக் குற்றமற்றதாக அறிவிக்க வேண்டுமென்றும், கள்ளை மதுபானப் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து இருக்கிறது. இதற்கு ஆதரவாக அண்மைக் காலங்களில் தென்னை, பனை மரத் தொழிலாளர்களால் பல போராட்டங்களும் நடந்துள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு அளித்துள்ளன.

இந்நிலையில் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டுமென்று தென்னை, பனைத் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் கருணாநிதியும் முடிந்தவரை சமாளித்துப் பார்த்துவிட்டு வேறு வழி இல்லாமல், இந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கேட்டறியும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.பி. சிவசுப்ரமணியம் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். இந்தக்குழு தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தென்னை, பனைத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவு விவசாயிகள் சங்கத்தினரிடமும் நேரடியாகக் கருத்துக் கேட்டு அறிந்துள்ளது. இதுபற்றி இந்தத் தொழிலாளர்களைக் கேட்டால் இந்தியாவிலுள்ள 8 கோடி பனை மரங்களில் தமிழகத்தில் மட்டும் 5 கோடி உள்ளன என்கின்றனர். இதைத்தவிர தென்னை மரங்கள் 4.5 கோடி உள்ளன என்று புள்ளிவிவரம் சொல்கின்றனர். இவைகள் மூலம் கள் இறக்கி மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தால் அதிக அளவில் அந்நியச் செலாவணி கிடைக்குமென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு நிற்காமல் இதனால் விவசாயிகளின் வருமானம் பெருகும். அரசின் வருவாய் உயரும். கிராமப்புற பொருளாதாரம் பலப்படும் என்று சொல்கின்றனர். எனவே, தமிழக அரசு தயவுதாட்சண்யம் இன்றி நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி கலப்படமில்லாத வகையில் கள் தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று பல்வேறு விவசாயிகள் சங்கத்தினரும் இவர்களுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அரசு அனுமதியோடு "டாஸ்மாக்' கடைகளும் "பார்'களும் ஜொலிக்கும்போது பல்லாயிரக்கணக்கான தென்னை, பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களைப் பாதுகாக்க, உடலுக்கு ஆரோக்கியமான போதை குறைவாக உள்ள கள் இறக்கவும், விற்கவும் அரசு ஏன் அனுமதி அளிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நம்மைப் பொறுத்தவரையில் மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். அந்தப் புரிதலோடு ஒரு பொது விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் கருணாநிதி ஊசலாட்டமும் பாரபட்சமும் இல்லாமல் மதுவிலக்குக் கொள்கையில் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com