மறைந்துவரும் மனிதநேயம்

முட்புதரில் வீசப்பட்ட முப்பது நாளான பெண் சிசு, தார் டிரம்மில் கிடந்த பெண் சிசு சடலம், வாரச்சந்தையில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு... இவையெல்லாம் அடுத்தடுத்த நாள்களில் நாளேடுகளில் வெளியான செய்திகளாகும்.
மறைந்துவரும் மனிதநேயம்
Published on
Updated on
2 min read

முட்புதரில் வீசப்பட்ட முப்பது நாளான பெண் சிசு, தார் டிரம்மில் கிடந்த பெண் சிசு சடலம், வாரச்சந்தையில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு...

இவையெல்லாம் அடுத்தடுத்த நாள்களில் நாளேடுகளில் வெளியான செய்திகளாகும். இந்த சிசுக்கள் கிடந்த இடங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போதோ அல்லது அடுத்தடுத்தோ நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியும், அவலமும் வெளிப்படும் அதேவேளையில் மனித நேயம் மரத்துப் போய்விட்டதோ என்றும் எண்ணத்தான் தோன்றுகிறது.

சமூக அவலமான இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தில்தான் தொட்டில் குழந்தைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஆயினும், இத்தகைய சம்பவங்கள் நடைபெறும்போது இப்படித்தானே எண்ண முடிகிறது. அதேவேளையில் அரசின் தொட்டில் குழந்தைத் திட்டம் பலன் தரவில்லையா அல்லது அதுபற்றிய விழிப்புணர்வு இல்லையா என்ற கேள்விகளும் எழுகிறது.

நம் நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தமடையச்

செய்வதாகும். இந்த சிசுக்கள் உயிரை இழக்காமல் மீட்கப்பட்டுள்ளதே என்று நாம் சற்று ஆறுதல் கொள்ளலாம். ஆனால், இச்சம்பவங்கள் சமூகச் சீரழிவுக்கு குறிப்பாக பெண் சமூகத்துக்கு ஊறு விளைவித்து வருவதாகும்.

இன்றுபோல் அன்று மருத்துவ வசதிகளோ, கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிந்துகொள்ளும் வசதிகளோ இருக்கவில்லை. இதனால் ஆணா, பெண்ணா என குழந்தை பிறக்கும்வரையில் எவரும் அறிந்திடுவதில்லை. பிறந்தது பெண் குழந்தை என்றால் வளர்ப்போம் என்ற மனநிலையைக் காட்டிலும் அதை இல்லாமற்செய்து விடுவதே மேல் என்ற மனநிலைதான் மேலோங்கி இருந்தது.

இதனால் சிசுக்கொலை சம்பவங்கள் நடந்து வந்தன. இச்சம்பவங்கள் கிராமங்கள், நகரங்கள் என்ற பாகுபாடின்றி பரவலாக நடந்து வந்தாலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிகமாகவே நடந்து வந்தது. இதனால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது எதிர்கால சமூகத்துக்குச் சவாலாக விளங்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும் எவராலும் கண்டுகொள்ளப்படவில்லை. ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிவுகளின் போதும் ஆண் பெண் விகிதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்து வருவதே இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

சிசுக்கொலை சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் முதன்முறையாக சேலத்தில் கடந்த 1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தைத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தால் சிசுக்கொலை சம்பவங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டாலும் வெகுவாகக் குறைந்தது எனலாம். இதையடுத்து 2001-ம் ஆண்டு மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கான பலனும் கிடைத்துள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட இம்மாவட்டங்களில் 2001-ம் ஆண்டைக்காட்டிலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தொட்டில் குழந்தைத் திட்டம் செயல்பாட்டில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இத்திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட சிசுக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் ஆண் சிசுக்களும் அடங்கும். இதில் தருமபுரி மாவட்டத்தில்தான் அதிகமான சிசுக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் 1,330 சிசுக்கள் ஒப்படைக்கப்பட்டு 69 சிசுக்களைப் பெற்றோர்களே மனம் மாறி பெற்றுக் கொண்டனர். ஆனால், சமீபகாலமாக தொட்டில் குழந்தை மையத்தில் ஒப்படைக்கப்படும் சிசுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று எனும் வேளையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டதா அல்லது சிசுக்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறதா என்ற கேள்விகளும் எழுகிறது.

சிசுக்களை ஒப்படைப்பதில் முன்பைவிட தற்போது சில விதிமுறைகள் பின்பற்றப்படுவதாலும், மையத்தில் உள்ளவர்கள் வழங்கும் ஆலோசனையின் பேரில் குழந்தையைத் தாங்களே வளர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் காரணமாகவும் மையங்களில் ஒப்படைப்பதற்கு மாறாக, அரசு மருத்துவமனை வளாகங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் அநாதையாகப் போட்டுவிட்டுச் சென்றுவிடுகின்றனர். சில இடங்களில் சிசுக்களை ரகசியமாக விற்பனை செய்துவிடுவதாகவும் தெரிகிறது.

மேலும் சிசுக்கொலை சம்பவங்கள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்புபோல் இல்லை. ஆனால், ஒப்படைக்கப்படும் சிசுக்களின் எண்ணிக்கை குறைந்துவருவதால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கண்காணிக்கப்படுவது, அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற நடவடிக்கைகள் தொய்வடைந்துள்ளன.

இந்நிலையில் இத்திட்டம் பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அன்றாடம் அறிவியல் மாற்றங்கள் நடைபெறும் வேளையிலும், எழுத்தறிவு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையிலும் அரசுத் தொட்டிலில் ஒப்படைப்பது, குழந்தையை உயிருடனோ அல்லது கொலை செய்தோ வீசிவிட்டுச் செல்வது போன்றவை எல்லாம் மக்களிடையே மனிதநேயம் மறைந்து வருவதைத்தானே காட்டுகிறது.

தொடரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வறுமையும், எழுத்தறிவின்மையும்தான் முக்கிய காரணங்களாகும். வறுமை நிலையில் உள்ள குடும்பத்தினர் ஆண் குழந்தை பிறந்தால் எதிர்காலத்தில் வருமானம் ஈட்டித் தருவதாகவும், முதலீடாகவும் கருதப்படுகிறது. அதேவேளையில் பெண் குழந்தை பிறந்தால் வறுமை நிலையில் பெண் குழந்தைகளுக்கு மரபு வழியாகச் செய்யப்படும் சடங்குகளுக்காக ஏற்படும் செலவினம் என்பது இயலாத காரியம் எனவும், அவை செலவினமாகவும் கருதப்படுகிறது.

மேலும் எழுத்தறிவின்மை காரணமாக ஆண் குழந்தை மீதான மோகம் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களிடையே மேலோங்கி வருகிறது. மருத்துவம் மற்றும் பொருளாதார வசதிகள் காரணமாக நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் பெண் குழந்தை என்றால் கருக்கொலை செய்து விடுகின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் உள்ள ஏழைப் பெண்கள் மருத்துவ சோதனைக்கான பொருளாதார வசதியில்லாத காரணத்தால் பிறந்தது பெண் என்றால் ஒப்படைக்கவும், சிசுக்கொலையில் ஈடுபடவும் செய்கின்றனர். அதனால் கிராம மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்க வேண்டும். அதிகமான சிசுக்கொலை சம்பவங்கள் நடப்பதாக கண்டறியப்படும் பகுதிகளில் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதும், அவர்களுக்கு எழுத்தறிவிப்பதும் இதற்கு தீர்வாக அமையக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com