திரும்பித்தான் பார்ப்போமே...

எப்படி என்னதான் இருக்கிறது நகரத்தில்?' என்று கேட்டுப்பாருங்கள். உடனே பதில் வரும், ""கிராமத்தில் இருக்க "போர்' அடிக்கிறது. பரபரப்பாக உள்ள நகர வாழ்க்கைக்குள் நாங்கள் பின்னிப் பிணைந்துவிட்டதால் கிராமத்தி
திரும்பித்தான் பார்ப்போமே...
Updated on
2 min read

எப்படி என்னதான் இருக்கிறது நகரத்தில்?' என்று கேட்டுப்பாருங்கள். உடனே பதில் வரும், ""கிராமத்தில் இருக்க "போர்' அடிக்கிறது. பரபரப்பாக உள்ள நகர வாழ்க்கைக்குள் நாங்கள் பின்னிப் பிணைந்துவிட்டதால் கிராமத்தில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை'' என்று!

கிராமத்திலிருந்து பல நல்ல பழக்க வழக்கங்கள், பண்பாடுகளுடன் நகரத்தில் குடியேறியவர்கள்கூட தங்களுடைய நல்ல பழக்க வழக்கங்கள், பண்பாடுகளிலிருந்து மாறி, நகரவாசிகளின் பழக்க வழக்கங்களுக்கேற்ப ஒத்து ஊத ஆரம்பித்துவிட்டனர். தன் சொந்த ஊரான கிராமத்துக்குப் போனால்கூட அங்கே ஓரிரு நாள்கள்கூடத் தங்கப்பிடிக்காத மனநிலை இப்போது நகரவாசிகளிடம் கொடிய நோய்போலப் பரவிவருகிறது.

குளிர்ச்சியை வாரி வழங்கும் மரங்கள் அடர்ந்த சோலை நடுவே, நான்கைந்து பேர்களோடு பேசிக்கொண்டு, ஆரோக்கியமான உணவு உட்கொண்டு, கயிற்றுக் கட்டிலில்படுத்து இயற்கைக் காற்றை சுவாசித்து, நிம்மதியாக ஓரிரு நாள்கள்கூட தங்க மனம் இல்லையாம்! அடுக்குமாடிக் குடியிருப்பில் பூட்டிய வீட்டுக்குள், ஏ.சி. அறையில், வீட்டில் இருக்கும் உறவுகளோடும் பேசாமல் தொலைக்காட்சியைப் பார்ப்பதும், கணினியில் வேலை செய்வதும், செல்போனைத் திருகுவதும்தான் பிடித்திருக்கிறதாம்! இதுதான் நிம்"மதி'யான ந(ர)கர வாழ்க்கை என்று எண்ணுகிறார்கள்.

முன்பெல்லாம் பெரியோர்கள் சொல்வார்கள், ""தூரத்தில் இருக்கும் உறவுகளை விட அக்கம் பக்கத்தில் இருப்போர்தான் நமக்கு மிகச்சிறந்த நல்ல உறவு'' என்று! அக்கம் பக்கத்து வீட்டாருடன் மனம்விட்டுப் பேசிப்பழக வேண்டும். ஊருக்குச் சென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் செல்ல வேண்டும். வீட்டில் வயதானவர்களைத் தனியாக விட்டுச் சென்றாலும் சொல்லிச் செல்ல வேண்டும். நல்லது கெட்டதுகளில் கலந்துகொண்டு உறவை, நட்பை பலப்படுத்த வேண்டும். ஆபத்தில் கைகொடுப்பவர்கள் அக்கம் பக்கம் வீட்டார்கள்தான். ஆனால், நகரத்தில் எல்லாமே தலைகீழாகப் போய்விட்டதே!

பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் தன் வீட்டுத் தாழ்ப்பாளைத் திறக்காமல் "லென்ஸ்' வழியாக எட்டிப்பார்க்கும் நபர் எத்தனை பேர்? சொன்னால் எண்ணிக்கையில் அடங்காது. இப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தகவல் தொடர்பு இல்லாமல், கூட்டு வாழ்க்கை வாழாமல் நடைபிணமாக வாழும் மனிதர்கள் பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும் என்பதற்கு ரஷியாவில் நடந்த - மனதை உலுக்கிய நிகழ்ச்சி ஒன்று உதாரணம்.

ரஷியாவில் வசித்த, பிரோஸ்கோவியா என்ற மூதாட்டிக்கு 67 வயது. தனியாக வீட்டில் இருந்த அவர், சோஃபாவில் சற்று இளைப்பாறலாம் என்று அமர, அப்படியே தூங்கிவிட்டார். அந்தத் தூக்கமே அவரது நிரந்தரத் தூக்கமாகிவிட்டது.

மூதாட்டி வீட்டு ஜன்னல் கதவுகள் திறந்திருந்ததால், அவரது உடல் அழுகும் நாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே பரவத்தொடங்கியிருக்கிறது. ஆனால், அதைக் கூட அக்கம் பக்கத்தார் கவனிக்கவில்லை. பக்கத்து வீட்டில் இருப்போர்க்கு அந்த மூதாட்டி இறந்துவிட்டது தெரியாது. தனியாக இருப்பதும் தெரியாது. வெளியூருக்குப் போயிருப்பார் என்று வழக்கம் போல இருந்தனர். வீட்டைத் தட்டிப் பார்ப்போம் என்றோ, போலீசுக்குப் போவோம் என்றோ தோன்றவில்லை.

நாள்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளாயின. அந்த மூதாட்டி இறந்து, கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக அந்த வீட்டிலேயே பிணமாகக் கிடந்திருக்கிறார். அதுகூடத் தெரியாமல் அக்கம் பக்கத்து வீட்டார் இருந்துள்ளனர்.

வீடு மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்து, பல ஆண்டுகளாகப் பூட்டிக்கிடந்த அந்த வீட்டை செப்பனிடுவதற்காக அரசு பராமரிப்புக் குழுவினர் வந்து கதவைத் தட்டி யாரும் திறக்காத நிலையில், காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்ததும்தான் இந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

"குளிர்ப்பிரதேசம் என்பதாலும், குளிர்காலங்களில் இறந்துபோனால் உடல் உறைந்துபோய், அந்தக் கெட்ட வாடை வெளியே எழாது என்பதாலும் இது வெளிச்சத்துக்கு வரவில்லை' என்று கூறியுள்ளனர் காவல் துறையினர்.

இதே போல கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்த ஓர் இளைஞன், சமையல் அறையில் உட்கார்ந்த நிலையிலேயே இறந்துபோனதும், 6 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததும் பத்திரிகைச் செய்திகளில் பரபரப்பாகப் பேசப்பட்டவை. தனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்தால் வெளியே சொல்லக்கூட முடியாமல் தனிமையில் வசிப்பவர்களுக்கும், அடுக்குமாடிக் குடியிருப்பில் கூண்டுக் கிளியாக வசிப்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கும் இது எச்சரிக்கை!

நவீன தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் சிக்குண்டு கிடக்கும் மக்கள், இப்போது செல்போன் மட்டும் இருந்தால் போதும், வேறு தொடர்பே தேவையில்லை என்று மதிமயங்கி, ஆபத்துக்கு உதவும் அக்கம் பக்கத்து உறவுகளைச் செல்லரிக்கச் செய்துவிட்டு, நல்வாழ்வு வாழ்வதாக நினைக்கிறார்கள். இப்படி வாழும் மனிதர்கள், இந்த பூமியில் விட்டுச் செல்லும் எச்சம்தான் என்ன? திரும்பிப் பார்ப்பதற்குள் நம் வாழ்வின் பக்கங்கள் எப்படியெல்லாமோ புரட்டிப் போடப்படுகின்றன.

இதிலிருந்து மீள என்னதான் வழி? அடுக்குமாடிக் குடியிருப்பில் தனிமையில் வசிப்பவர்கள் அக்கம் பக்கம் வீட்டாரிடம் நட்புறவோடு பழகி, தங்கள் உறவுகளின் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் கொடுத்து வைக்க வேண்டும்.

திடீரென தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், அவர்கள் உறவுக்காரர்களிடம் தெரிவிப்பார்கள். இது ஒன்றுதான் வழி. அதிகரித்துவிட்ட மக்கள் தொகையால் அனைவருக்கும் இருப்பிடம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு நாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளை நாட வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

அதற்காக, அக்கம் பக்கத்தாருடன் நட்பு பாராட்டாமலும், தானுண்டு தன் வேலையுண்டு என்று தனிமைப்பட்டு வாழ வேண்டும் என்று யார் சொன்னது?

தனித்தனி வீடுகளிலும், தெருக்களிலும் வாழ்வதைவிட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்பவர்கள் ஒற்றுமையாகவும், ஒருவரோடு ஒருவர் இணைந்து பழகி மகிழவும் சந்தர்ப்பமும் வசதியும் அதிகம். அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகிறோமே...

நகரங்களில் வசித்தாலும் வருடத்துக்கு ஒரு தடவையாவது விடுமுறை எடுத்துக்கொண்டு கிராமங்களில் வாழும் சொந்த பந்தங்களை சந்தித்துவிட்டு வாருங்கள். உங்கள் மனப்போக்கே மாறிவிடும். வந்த வழியைக் கொஞ்சம் திரும்பித்தான் பார்ப்போமே..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com