
இயற்கையால் மனித குலத்துக்குக் கொடையாக வழங்கப்பட்டதுதான் இயற்கை வளங்கள். பழங்காலத்திலிருந்து இன்றுவரை மனிதன் இயற்கை வளங்களையே சார்ந்திருக்கிறான். இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தே நம் முன்னோர்கள் இயற்கையையே தெய்வமாக வழிபட்டனர்.
பூமியின் இயற்கை வளங்களான நீர், மண், வனங்கள், வன உயிர், புல்வெளிகள், தாதுக்கள் மற்றும் பிற மனித வாழ்வின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவற்றை அழியாமல் நிலைப்படுத்தவும் உதவுகின்றன. அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள்தொகைப் பெருக்கம் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளால், நீர் இல்லாத ஆற்றுப்படுகை, மாசடைந்த மண் போன்றவை ஏற்பட்டு இயற்கை வளங்கள் அழிந்து போகின்றன. வன உயிரினங்கள், விலங்குகள், தாவரங்கள் போன்றவையும் அழிந்து, அதனால் உணவுச் சங்கிலி, உணவு வலை பாதிக்கப்படுகின்றன. மற்றும் எதிர்காலத்தில் மொத்த உயிரினத் தொகுப்பும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உலகில் 5 மில்லியனிலிருந்து 100 மில்லியன் வரை உயிரினங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை 2 மில்லியன் உயிரினங்கள் மட்டுமே விஞ்ஞானிகளால் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களில் மனித உயிரினம் மட்டும் பெருகிக் கொண்டே வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் மற்ற விலங்கினங்கள், தாவர வகைகள் குறைந்தும், அரிதாகியும் வருகின்றன. இதில் 17,291 உயிரினங்கள் அழியும் தறுவாயில் உள்ளன. இந்தியாவில் 172 விலங்கினங்கள் அழியும் தறுவாய் இனங்களாக உள்ளதாக தேசிய வளங்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றுள் 53 விலங்கினங்கள், 69 பறவைகள், 23 ஊர்வன மற்றும் 3 நீர் - நில வாழ்வன ஆகியவையும் அடங்கும். மொத்தம் 3 லட்சம் தாவர இனங்களில் 2 ஆயிரம் இனங்கள் அழியும் தாவரங்களாக உள்ளன. கட்டுப்பாடற்று பாடிப் பறந்த சிட்டுக்குருவிகள் இயற்கையின் பாதிப்பால் அழிந்து வருகின்றன.
பல உயிரினங்கள் அவை இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிவதற்குள்ளாகவே அழிந்துவிடும் அபாய நிலையில் உள்ளன.
1900-ல் உலகிலுள்ள மொத்த காடுகள் பரப்பளவு 7,000 மில்லியன் ஹெக்டேர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 1975-ல் இது 2,980 மில்லியன் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் இந்தியாவின் வன இழப்பு 1.5 மில்லியன் ஹெக்டேர்களாகும்.
இந்தியாவில் 19 சதவீத நிலம் காடுகளாக உள்ளன. இவ்வாண்டில் (2012) இந்தியாவில் காட்டுப் பகுதி 30 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என அரசால் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 சதவீத நிலம் காடுகளாக உள்ளது. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி, மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துகின்றன, சீதோஷ்ண நிலையைச் சமன்படுத்துகின்றன.
நாட்டில் 3-ல் ஒரு பங்கு வனம் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதனால், வருடத்திற்கு 50 தினங்கள் பெய்ய வேண்டிய மழை, 20 தினங்களுக்கும் குறைவாகவே பெய்கிறது.
ஒரு மரம் 2-12 ரூபாய் மதிப்புள்ள பிராண வாயுவை உற்பத்தி செய்து, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மண் வளத்தைக் கொடுக்கிறது. வளரும் பயிர்களை வாழ்த்தி வரவேற்கும் வரவேற்பு வளையங்களாக மரங்கள் உள்ளன.
உலகில் பல்லுயிர்பெருக்கம் அழியக் காரணம் தட்பவெப்ப நிலை மாற்றம்தான். அடுத்த 75 ஆண்டுகளில் வெப்பம் 5.8 செல்ஷியஸ் அதிகரிக்கலாம். இதனால் 10 லட்சம் உயிரித் தாவரங்கள் அழியும் அபாயம் உள்ளது. அழுகிய தாவரங்கள், விலங்குகள், நெகிழி (பிளாஸ்டிக்) ஆகியவற்றைப் பயன்படுத்துதல், பாதை மாறிய விவசாய முறைகள், நில உபயோகத்தின் மாற்றம், காற்றை மாசுபடுத்தும் எரிபொருள்கள், தொழிற்சாலைகள் கக்கும் கரியமில வாயு கலந்த புகை, வெளியேற்றும் கழிவு நீர் ஆகியவை கார்பன்படை ஆக்சைடு, கொள்ளி வாயு எனப்படும் மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு முதலிய வாயுக்களை வெளியிட்டு, வெப்பத்தைத் தன்னுள் இழுத்து புவி மண்டலத்தை வெப்பமடையச் செய்கிறது.
புவிவெப்ப அளவானது 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் தற்போது 0.9 செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. உயரும் புவி வெப்பமானது அதிக வெள்ளப் பெருக்கையும், அதே அளவில் வறட்சியையும் ஏற்படுத்தும். மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பங்கீட்டு தகராறு முற்றிவரும் நிலையில், வேத காலத்திலிருந்தே ஓடும் ஆறுகள் அனைத்தும் - கங்கை உள்பட - தட்பவெப்ப நிலை மாற்றத்தால் சரியான நீர்வளமின்மையால் நீர்வரத்து குறைந்து மிகவும் பாதிப்படைந்து வருகின்றன. நதிகள் அனைத்தும் கழிவுகளைத் தாங்கும் பள்ளமாக மாறி வருகிறது.
பெரிய நகரங்களில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள், அவற்றின் கழிவு நீரை ஆறுகளில் கலக்கச் செய்வதால், பிராணவாயு குறைந்து விடுகிறது. அதனால் நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழிந்து விடுகின்றன. நகர விரிவாக்கத்தால், நகரங்களையொட்டிய கிராமங்களில் பெருமளவு மரங்கள் வெட்டப்படுவதால், மரங்களில் கூடுகட்டி வாழும் பறவை உயிரினங்கள், மற்றும் நிழலில் ஒதுங்கும் விலங்கினங்கள் இருக்க இடமின்றி அழிந்து வருகின்றன. கத்திக் கொண்டும், சிறகை அடித்துக் கொண்டும் இரைக்காக பழமரம் தேடிச் செல்லும் பறவைகள் நீண்டகாலமாகப் பழகிய மரங்களைக் காணாததால் இரைக்குப் பதிலாக இறப்பையே காணுகின்றன. கடுமையான வெப்பத்தைத் தணிக்க பசுமையான செடி, கொடி, மரங்களை வளர்ப்பது அவசியம்.
மனிதன் இப்பூவுலகில் உயிர்வாழ அவனது சக்திக்கு அப்பாற்பட்ட பல அற்புதங்களை இயற்கை நிகழ்த்தி வருகிறது. நாம் சுவாசிக்கும் காற்று முதல் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலப்பொருள்களையும் அளிப்பதும் இயற்கையே.
தண்ணீர், தாள்கள், மின்சாரம் மற்றும் எரிபொருள்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய தருணமிது. பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
சுற்றுலாத் தலங்களில் விலங்குகள், பறவைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் சுற்றுலாப் பயணிகள் செயல்பட வேண்டும்.
வருங்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், பயிர் நிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் ஆகியவற்றை அழிக்காமல் பாதுகாப்பது நமது கடமை. பசுமையை அழித்துவிட்டு வெறும் கல்லும், மண்ணும் இருந்தால் நாடே பாலைவனமாகி விடும்.
பாறப்புறத் இராதாகிருஷ்ணன், சென்னை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.