கடமையை நினைவுபடுத்த வேண்டுமா?

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் இக்காலத்தில் எழுந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் அதில் ஐயமில்லை. சமீபகால தொலைக்காட்சி விளம்பரத்தில் "பெற்றோரைக் காப்போம்' என்ற விளம்ப
கடமையை நினைவுபடுத்த வேண்டுமா?
Published on
Updated on
2 min read

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் இக்காலத்தில் எழுந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் அதில் ஐயமில்லை. சமீபகால தொலைக்காட்சி விளம்பரத்தில் "பெற்றோரைக் காப்போம்' என்ற விளம்பரத்தைப் பார்த்த உடனேயே மனம் அதிர்ந்து போனது. என்ன ஒரு நிலை? பத்து மாதம் சுமந்து, பல கடமைகளைக் கடந்து, தான் பெற்ற குழந்தைக்கு ஏதேனும் ஒன்று என்றால், கண் உறங்க மறுத்து எதையும் எதிர்பாராமல் தனக்கு உணவு இல்லையென்றாலும் தன் பிள்ளைகளுக்குக் கொடுத்து மகிழும் பெற்றோரை, அவர்களது முதுமையில் அவர்களைக் காக்க வேண்டும் என்ற கடமையை பாசத்தை இயல்பாகவே ரத்தத்தில் கொண்டிருந்த இந்தியருக்கும் இன்று தொலைக்காட்சி மூலம் சொல்ல வேண்டிய நிலையை எண்ணும்போது எண்ணமெல்லாம் சோகத்தை தருகிறது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கற்பிக்கப்பட்டது போய் ஆங்கிலமே மோகம் என கொண்டதன் விளைவா? அல்லது பிஞ்சுகளிடம் பாசம் பொழிய வேண்டிய காலத்தில் அவர்களைக் காப்பகத்தில் விட்டுவிட்டு, காசுதான் காலம் என நினைக்க வைக்கும் காலத்தின் கட்டாயமா? இளமையில் தங்களைக் காப்பகத்தில் விட்ட பெற்றோர்களை அவர்களின் முதுமையில் அவர்களையும் காப்பகத்தில் விடுவதுதானே கடமை என குழந்தைகள் நினைக்கிறார்களா?

கூட்டுக் குடும்பமாய், பாசத்தால் பின்னப்பட்ட இணைப்புகள் போய், வசதிகள் பெற வேண்டி, பிள்ளைகளின் வளத்தை நினைத்து, அவர்களுக்கு அனைத்து வசதிகளும் நமக்கு

கிடைக்காததெல்லாம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றங்களைப் பிரிகிறோம். இருவரும் சம்பாதித்தால்தான் வசதியாக இருக்க முடியும் என எண்ணுகிறோமே தவிர, எது உயர்ந்தது? வசதியா, மனநிம்மதியா என எண்ண மறுக்கிறோம்.

இளமையில் நம் ஆரோக்கியத்தைத் தியாகம் செய்து பணம் சேர்க்க உழைக்கிறோம். பின்னர் முதுமையில் ஆரோக்கியத்தை மீட்க சேர்த்த பணத்தையெல்லாம் இழக்கிறோம்.

எதையும் அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவதால்தான் இத்தகைய சூழ்நிலைகளுக்கு தள்ளப்படுகிறோமா என்று எண்ணத் தோன்றுகிறது. பந்தங்களைத் துறக்கிறோம். பாசத்தை தொலைக்கிறோம். பணத்தையே குறி வைக்கிறோம். ஆனால், இன்றைய உலகம், உலகத்தின் நிலைப்பாடு எது என்று நினைக்கும்போது காலத்தின் மறு சுழற்சியாலேயே இதை மாற்ற முடியும் என மனம் எண்ணுகிறது.

இறைவனை, இயற்கை சக்தியை என்றும் நம்புகிற தேசம் இந்தியா. அதனால், அந்த இறைவனும் இயற்கையுமே நம்மை அறிவியல் வளர்ச்சி கொண்ட பாச, அன்பு வறட்சி இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.

பாசமும் பரிவும் பண்பும் அன்பும் நிறைந்த நாடு; பழைமையான நாடு; அமைதியான நாடு; பரந்து வளர்ந்த நாடு; பல வளங்களைக் கொண்ட நாடு என்றெல்லாம் பெருமை பெற்ற நாடு நம் இந்திய நாடு. இத்தகைய பெருமைகளை நமக்கு கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். நம்மால் வளர்க்க முடியாவிட்டாலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். நாகரிகம் வளர்ந்துவிட்டது. கலாசாரம் காலத்தால் மாற்றப்பட்டுவிட்டது. கடமைகளைக் கற்பிக்க வேண்டியுள்ளது.

எல்லாம் இருக்கட்டும். ஆனால், எது வளர்ந்தாலும் தாய், தகப்பன், பிள்ளைகள் என்ற உறவு மட்டும் மாறவில்லையே? அது மாறாதபோது, அவர்களிடையே இருந்த பாசப்பிணைப்பு மட்டும் மாறிப்போனதே? அதுதான் பிள்ளைகளின் கடமையையும் பெற்றோரின் பொறுப்புகளையும் நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்துக்கு நம்மைத் தள்ளியுள்ளது. எது வளர்ந்தாலும் எது மாறினாலும் அன்பும் பாசமும் உறவும் அரவணைப்பும் மாறக்கூடாது இறைவா என கடவுளிடத்தில் கண்ணீரோடு கைகூப்பும் காலத்தில் நாம் நிற்கிறோம் என நினைக்கும்போது மனது கனக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com