மரித்துப் போகிறதா, மனித நேயம்?

பரந்து விரிந்த இந்த தேசத்தில் சிந்திக்கிற ஆற்றல் பெற்ற மனித சக்தியை மகத்தான சக்தி என்கிறோம். மனித மாண்பு வள்ளுவம் காட்டுகிற அன்பு, அறம், புகழ் என வாழ்வின் இலக்கை விரித்து தொடர்ந்து பேசியும் எழுதியும்
மரித்துப் போகிறதா, மனித நேயம்?
Published on
Updated on
2 min read

பரந்து விரிந்த இந்த தேசத்தில் சிந்திக்கிற ஆற்றல் பெற்ற மனித சக்தியை மகத்தான சக்தி என்கிறோம். மனித மாண்பு வள்ளுவம் காட்டுகிற அன்பு, அறம், புகழ் என வாழ்வின் இலக்கை விரித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்றோம்.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்றும் அன்பால் எதையும் வெல்லலாம் என்றும் கூறிக்கொண்டே வாழ்கிறோம்.

செல்வமும் வசதியும் கூடும் குறையும். நிலைத்த புகழே குன்றாது நிற்கும். எனவே, வாழ்வில் புகழ் வாழ்வுதான் உயர்ந்த வாழ்வு என்கிறோம். நிலையாமையை மிக ஆழமாக நம் பண்டைய வரலாறுகள், இலக்கியங்கள் காட்டுகின்றன. துறவி பட்டினத்தடிகள் "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே' என்றார்.

நான், எனது என்ற செருக்கு நீங்கி வாழவேண்டும். ஒரு குளக்கரை அருகே இரு செல்வந்தர்கள் பேசியபடி செல்லும்போது ஒருவர், "நான் 64 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருக்கிறேன். எனவே, எனக்கு சொர்க்கம் நிச்சயம்' என்றார். அடுத்தவர், "அனுதினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, எனக்குத்தான் சொர்க்கம் நிச்சயம்' என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டே விறகு சுமந்துவந்த விலைமாதோ, "நான்' போனால்தான் நீங்கள் வரலாம்' என்றாராம். இருவரும் திகைத்தனர். என்ன இப்படி, அதுவும் சமூகம் புறக்கணிக்கும் இழிசெயல்புரிகிற இவர் இப்படிச் சொல்கிறாரே என திகைத்து, "எதை வைத்து எங்களைவிட நீ சொர்க்கத்துக்கு முன் செல்வதாய் சொல்கிறாய்?' எனக் கேட்டனர். அதற்கு அவர் கூறினார்: பெருமைக்குரியவர்களே, "உங்களுடைய பணிகளை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பதற்கு இல்லை. ஆனால், நான் செய்தேன், நான் செய்தேன் என்ற அகந்தை போனால்தான் போகலாம் என்ற பொருள்படவே அவ்வாறு சொன்னேன்' என்றாராம்.

இந்நிலையில், இன்றைய நிலையற்ற மனித வாழ்வில் கோலோச்சும் புரிதலற்ற போக்கு சிலருக்கு உள்ளது. குடியிருப்பவர்கள் பல ஆண்டுகள் வாடகை கொடுத்து உறவுகளாய் அன்பு பேணி வாழுகிறார்கள். சமீபத்தில் இவ்வாறு வாடகை வீட்டில் குடியிருந்த ஒருவருக்கு சுகமில்லாமல் போக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உடல் நலமற்ற நிலையில் அவர் மரணமடைந்தார். செய்தி அறிந்ததும் குடியிருக்க வாடகைக்கு வீடு கொடுத்த வீட்டுக்காரர் எக்காரணம் கொண்டும் பிணத்தை வீட்டுக்குக் கொண்டு வரக்கூடாது என வீட்டுக்குப் பூட்டுப் போட்டுவிட்டார்.

மகன், மகள் இறுதிக் காரியத்துக்கு வரவேண்டும். வர ஓரிரு நாள் ஆகும் நிலை. மருத்துவமனை நிர்வாகம் சில மணி நேரங்களில் உடலை அப்புறப்படுத்த வேண்டுகிறது. சோகத்தில் ஆழ்ந்த குடும்பம் இடம் தேடுகிற அவலம்.

இப்படிப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ்களே கைகொடுக்கின்றன. குளிர்சாதன வசதி கொண்ட ஆம்புலன்ஸில் உடலை ஏற்றி உறவுகள் வரும்வரை ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடத்திலேயே வைத்து, உறவுகள் வந்ததும் அங்கிருந்து அடக்கம் செய்ய உதவுகிறார்கள். சில ஆயிரங்கள் செலவானாலும் திக்கற்றவர்களுக்கு இது ஒரு வடிகால் ஆகிறது. இறுதிச் சடங்குகளுக்கு மயான இடங்களே கைகொடுக்கின்றன.

இந்நிலைக்குத் தீர்வுதான் என்ன?

இறந்தவர் "சவம்' என, குடியிருக்க வீடு தந்தவர் மறுப்பது நியாயமா? வீட்டில் இருக்கும்போது இறந்திருந்தால் நிலைப்பாடு என்ன?

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பார்களே? நாளை நாமும் இறக்கப்போகிறவர்கள்தானே? நம் சவத்தை வீட்டிற்குள் வைப்பதா? வெளியில் போடுவதா?

ஆறாம் அறிவாகிய சிந்திக்கிற அறிவை இறைவன் தந்தது எதற்காக? அரிய பிறப்பு, உயரிய பிறப்பு என வாய் நிறையச் சொல்வதின் பொருள் என்ன? இறந்துபோன மனித உயிர் நேற்றுவரை நம்முன் வாழ்ந்தவர்தானே? இன்றைக்கு ஏன் இந்தப் பேதைமை?

இன்னும் கூட பல சிறு சிறு கிராமங்களில் இறந்தவர் சடலத்தை சில தடங்களில் எடுத்துச் செல்லக்கூடாது என பெரும் போராட்டங்கள் நடப்பது எத்தனை கொடுமை?

இதற்கு ஒரே தீர்வு, மனித மனங்கள் மாற வேண்டும். இறந்த பின் உள்ளே கொண்டு வரக்கூடாது என வாய்கூசாமல் கூறுவது பற்றி சிந்திக்க வேண்டும். இதுபோன்ற நிலைகள் நீடித்தால் மனிதநேயம் எப்படி மலரும்?

வளரும் தலைமுறைக்கு வழிகாட்டியாக வாழ வேண்டிய நாம் திசைதிருப்புபவர்களாக இருந்துவிடக்கூடாது. இன்னும் ஆழமாகச் சொன்னால், நம்மிடையே இணக்கமற்ற சூழலில் இருந்தவர்களே ஆனாலும் அவர்களில் யாராவது இறந்தால் நாம் அந்தக் குடும்பத்தாருடன் கூடியிருந்து ஆகவேண்டிய காரியங்களைச் செய்ய துணை நிற்பதே மனித வாழ்க்கையின் அர்த்தமாக அமையும். எனவே மனித நேயம் காக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவரிலும் தழைக்கட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com