
உலக சுகாதார அமைப்பு 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட தகவல்படி அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைவிட இந்தியாவில்தான் சாலை விபத்துகள் அதிகம்.
உலகில் ஓடும் வாகனங்களில் வெறும் 1 சதவீதம்தான் இந்தியாவில் இருக்கிறது என்றாலும் உலகில் நடைபெறும் சாலை விபத்துகளில் 6 சதவீதம் இங்குதான் நடக்கிறது.
ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 13 பேர் உயிரிழக்கின்றனர், 10 பேர் காயம் அடைகின்றனர். இந்தியாவில் நடைபெறும் விபத்துகளில் 70 சதவீதம் வாகன ஓட்டிகளின் தவறுகளால்தான் ஏற்படுகின்றன.
சாலைப் போக்குவரத்து தொடர்பாக கடுமையான விதிமுறைகளும் சட்ட திருத்தங்களும் தேவைப்படுகின்றன. பெரிய நகரங்களில் பாதசாரிகள் பாதுகாப்பாக நடக்க நடைமேடைகள் அவசியம். அவற்றில் சிறு வியாபாரிகள் கடைகளை நடத்துவதும் கட்-அவுட்டுகள் வைப்பதும், கிளி ஜோசியம், ஷூ பாலீஷ் போன்ற தொழில்கள் நடப்பதும் பாதசாரிகளை வீதிக்குள் விரட்டுகின்றன.
சாலை விதிகளை மீறுவோரை உடனுக்குடன் கண்டுபிடித்து தண்டிக்க எல்லா முக்கிய சிக்னல்களிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும். நகரங்களில் தெரு விளக்குகள் பிரகாசமாகவும் நிரந்தரமாகவும் இரவில் எரிவது அவசியம். கவனக்குறைவாகவோ அலட்சியமாகவோ வண்டியை ஓட்டி அடிக்கடி விபத்தில் சிக்குகிறவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட வேண்டும்.
சென்னை நகரில் உயர்நீதிமன்றம் அருகில் உள்ள பிராட்வே, ஏழுகிணறு, மண்ணடி பகுதிகளில் மாட்டு வண்டிகள், கனரக வாகனங்கள் நடமாட்டம் அதிகம். சரக்குகளை ஏற்றி இறக்க இவற்றை தங்கள் வசதிக்கேற்ப சாலை ஓரத்தில் நிறுத்திவிடுகின்றனர். இரும்புக் கடை வியாபாரிகள் தங்களுடைய சரக்குகளை வீதியிலேயே வைத்து அளப்பது, வெட்டுவது, வாகனங்களில் ஏற்றுவது போன்ற பணிகளைச் செய்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஒருவரை ஆம்புலன்ஸில் ஏற்றி இந்த இடங்கள் வழியாக அழைத்துச் செல்வது எவ்வளவு பெரும்பாடு என்று நேரில் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இப்பகுதிகளில் இரும்புக் கடைகளை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இவை நீடிக்கின்றன.
கனமான பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சாலை விதிகளை மதிப்பதே இல்லை. கூராகவும் நீட்டிய நிலையிலும் உள்ள நீளமான ராடுகள், கம்பிகள் போன்றவை நுனியில் சிவப்புத்துணிக் கூட கட்டப்படாமல் எடுத்துச் செல்லப்படுகின்றன. பல சரக்கு வாகனங்களின் பின்புறப்பகுதியில் எச்சரிக்கைக் குறி, ஒளி பிரதிபலிப்பான்கள் என்று எதுவுமே இருப்பதில்லை. மிதமான வேகத்தில் இந்த வாகனங்கள் செல்வதுமில்லை.
சாலை விபத்து ஏற்பட்டவுடனேயே காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிச் செய்தால் காவல் துறையால் தங்களுக்குப் பிரச்னை ஏற்படும் என்று பயந்து பலர் சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்துவிடுகின்றனர். இதனால் "பொன்னான நேரம்' வீணாகிறது.
விபத்தை நேரில் பார்ப்பவர்கள் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் பதிவு எண்ணை முதலில் குறித்துக்கொள்ள வேண்டும். வாகன எண் தெரியாமல் வழக்குப்போட இயலாது.
பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தவுடன் "விபத்து பதிவேட்டில்' மருத்துவர் பதிவு செய்வார். அதில் அடிபட்டவரின் பெயர், வயது, விபத்து ஏன், எங்கே, எப்படி ஏற்பட்டது, காயம் எத்தன்மை வாய்ந்தது என்பவை அதில் இடம் பெற்றிருக்கும். விபத்தில் சிக்கியவரின் நெருங்கிய உறவினர் அல்லது வாரிசுதாரர் இதன் நகலைப் பெற்றுக்கொண்டு, விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் பதிவுப்பத்திரம், ஓட்டுனர் உரிமம், வாகனத்துக்கான காப்பீடு, வாகனத்தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் காவல் நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கை, விபத்து நடந்த இடம் குறித்த வரைபடம் ஆகியவற்றின் நகல்களையும் கேட்டுப்பெறவேண்டும்.
விபத்தினால் இறந்தவர் சார்பாக சட்டப்பூர்வ வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இவை அவசியம். இறந்தவர் பெற்ற வருமானம் குறித்த நகல், வருமான வரி செலுத்தியதற்கான நகல்களை இணைத்து வழக்கு தொடரலாம். இறந்தவரின் வயது, அவர் செய்த தொழில், அவர் ஈட்டிய வருமானம், குடும்பச்சூழ்நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்கப்படும்.
வாகனத்துக்கு எப்போதும் முழு காப்பீடு எடுக்க வேண்டும். நண்பருக்கு வாகனத்தைச் சிறிது நேரம் ஓட்டக் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் விபத்துக்கு வாகன உரிமையாளர்தான் முழுப் பொறுப்பு ஏற்று பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதுவும் ஓட்டுனர் உரிமம் இல்லாதவருக்குத் தரப்பட்டிருந்தால் சிக்கல் அதிகம். குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து நிகழ்ந்தாலும் காப்பீடு நிறுவனம் பொறுப்பாகாது.
வாகனத்தை விற்க நேர்ந்திடின் விற்பவரும் வாங்குபவரும் சேர்ந்து எழுத்து மூலமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சாட்சிகள் முன்னிலையில் விற்பனை செய்வது நல்லது. ஒப்பந்த நகலை உடனே காப்பீட்டு நிறுவனத்துக்குத் தந்துவிட வேண்டும். வாகனம் விற்ற பிறகு விபத்து ஏற்பட்டு - இந்த நடைமுறை மேற்கொள்ளப்படாமல் இருந்தால் - பழைய உரிமையாளரே பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை வரும். விபத்து நஷ்ட ஈடு வழக்கு தொடுக்க அச்சப்படத் தேவையில்லை. விபத்து ஏற்படுத்திய வாகனத்துக்கு அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் காப்பீடு நிறுவனம்தான் நஷ்ட ஈடு வழங்கும். வாகன உரிமையாளருக்கு வழக்கு பற்றிய பயம் தேவையற்றது.
வாகனத்தில் குறிப்பிட்ட அளவு நபர்களைத்தான் ஏற்ற வேண்டும் என்பது விதி. இந்த விதியை மீறினாலும் நஷ்ட ஈடு பெறுவது கடினம்.
நன்கு பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு, வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவது நல்லது. வாகன ஒளிவிளக்கு முகப்பினில் கருப்புப் பொட்டு வைப்பது அவசியம். இரவில் வாகனம் பழுதாகி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டால், முன்னும் பின்னும் அதில் உள்ள விளக்கை எரியவிட்டு பிற வாகன ஓட்டிகளுக்கு வெளிச்ச எச்சரிக்கை விடுப்பது கட்டாயம். உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஒரு வழக்கில் கருணைமிகு மூன்று நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், டாக்டர் முகுந்தகம் சர்மா, கே.எஸ். ராதாகிருஷ்ணன் அடங்கிய அமர்வு பல முக்கிய விதிமுறைகளை வரையறுத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
அ.) விபத்தில் காயம் அடைந்தவர் யாராக இருப்பினும் அனைவருக்கும் நஷ்ட ஈடு தரப்பட வேண்டும்.
ஆ.) விபத்து ஏற்படுத்திய வாகனம் எது என்று தெரியாத நிலையில் பாதிக்கப்பட்டவருக்கான அரசு நிவாரணத் தொகையை அதிகப்படுத்த வேண்டும்.
இ.) இங்கிலாந்து நாட்டில் சாலை விபத்து ஏற்பட்டால் வழக்கு ஏதும் தொடுக்கப்படாமலேயே, காப்பீடு நிறுவனமே நஷ்ட ஈடு வழங்கிவிடுகிறது. அதை இந்தியாவிலும் பின்பற்ற முயற்சி மேற்கொள்ளலாம்.
ஈ.) விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் சென்ற அனைவருக்கும் நஷ்ட ஈடு கிடையாது. ஆனால் ஆப்பிரிக்காவில் இது வழங்கப்படுகிறது. இதற்காக வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பும் இடத்திலேயே சிறிய தொகையை வசூலித்து இதற்குப் பயன்படுத்துகின்றனர். இங்கும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
உ.) வாகன விபத்து வழக்குகளை சிவில் வழக்குகளைப் போல இழுத்தடிக்காமல், 6 மாதத்துக்குள் முடித்துவிட வேண்டும் என்ற யோசனைகளை நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.
விபத்து வழக்குகளை விரைந்து முடிப்பதற்காகவே "லோக் அதாலத்' என்ற மக்கள் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் காப்பீடு நிறுவனங்கள் குறிப்பிட்ட நஷ்ட ஈட்டுத் தொகைக்கு மேல் நியாயமாகக் கேட்டாலும் கொடுக்க சம்மதிப்பதில்லை. அத்துடன் வழக்கு விசாரணைகளையும் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றன. அரசு பஸ்கள் சம்பந்தப்பட்ட விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று தீர்ப்பளித்தால், போக்குவரத்துக் கழக மேலாளர்கள் அதை ஏற்க மறுத்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிக்கின்றனர். மக்கள் நீதிமன்றமாக இருக்க வேண்டியது அதிகாரிகளின் அதிகார மன்றமாகிவிடுகிறது.
இன்றைய சூழலில் கட்டட கொத்தனார் ஒரு நாளைக்கு ரூ.500 வருமானம் பெறுகிறார். அப்படிப்பட்டவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டால் "அவர் வருமானவரி செலுத்துகிறாரா, பிராவிடண்ட் பண்ட் பிடிக்கப்படுகிறதா?' என்றெல்லாம் கேட்டுவிட்டு, அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில் (அவருக்கு மாத ஊதியம் ரூ.4,500 தான் என்ற அடிப்படையில்) நஷ்ட ஈடு கணக்கிடப்படுகிறது. அதிலும் கூட பழைய விதிமுறைப்படி ஏற்கப்பட்ட ரூ.3,000 மட்டுமே மாத வருமானமாகக் கருதப்பட்டு ஏற்க வேண்டும் என்று கூறும் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன.
இதனால் விபத்தில் ஏற்பட்ட வலி,வேதனைகளோடு இந்த வேதனையும் சேர்ந்துகொள்கிறது. வழக்கு முடிந்த பிறகும் மனுதாரருக்கு பணம் கைக்குக் கிடைப்பதில்லை. அரசு வாகன விபத்துகளில் பல சமயம் ஜப்தி நடவடிக்கைகளை நீதிமன்றம் மேற்கொள்ள நேரிடுகிறது. விபத்து வழக்குகளில் தீர்ப்பு கூறப்பட்டால் அதை உடனே நிறைவேற்றியாக வேண்டும் என்று சட்டத் திருத்தம் செய்வது மிகமிக அவசியம். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவருக்கு உதவ சிறப்பு வழக்கறிஞர்களும் அரசின் முறையான சட்ட ஆலோசகர்களும் இருக்கின்றனர். அவர்களை விடுத்து இடைத் தரகர்கள், விவரமற்ற மூன்றாவது நபர்கள், நாணயமற்ற பேர்வழிகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை அணுகக் கூடாது.
விபத்துகளைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. அப்படி விபத்தில் சிக்க நேர்ந்தால் முறையான சட்ட ஆலோசனைகள் பெற்று நஷ்ட ஈடு கோரிப்பெறுவது அதைவிட நல்லது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.