
இருபது வருடங்களுக்கு முன்பு செல்போன் என்ற ஒரு கருவி உலகையே ஆட்டிப்படைக்கப் போகிறது என்று யாராவது விளையாட்டுக்காகக் கூறியிருந்தால்கூட அதை யாரும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். இன்று மக்களை இது அடிமைப்படுத்திவிட்டது. உலகின் எந்த மூலையில் யார் இருந்தாலும் அவர்களோடு நேரடியாக மணிக்கணக்காக பேசும் வசதி இருப்பதால் இது மிகவும் இன்றியமையாத சாதனமாகிவிட்டது.
செல்போன் (கைப்பேசி) பயனுள்ள சாதனம் என்பதில் இருவேறு கருத்துகள் கிடையாது. கல்வி, தொழில், வியாபாரம், அரசு அலுவலகங்களுடன் தொடர்பு, சேவைகள் ஆகியவற்றைப் பெறவும் உறவினர்கள், நண்பர்களுடனான தொடர்புக்கும் இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
ஆனால் இதைப் பயன்படுத்துவதில்தான் மக்களிடையே சுய கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. செல்போனில் தொடர்ந்து நீண்ட நேரம் பேசுவது கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளாக்கும் என்ற மருத்துவ எச்சரிக்கையைப் பலர் மனதிலேயே கொள்வதில்லை. அதே சமயம் அவசியத் தேவைகளுக்கு மட்டும் சுருக்கமாகப் பேச வேண்டும் என்ற இங்கிதம் தெரியாமல் மணிக்கணக்காகப் பேசி தங்களுடைய நேரத்தையும் வீணடித்து எதிராளியின் நேரத்தையும் வீணடிக்கும் வேலையைச் செய்கின்றனர்.
வீட்டில் நோயாளிகளைக் கவனிக்க வேண்டியவர்கள், சமையல் வேலையைத் தொடர வேண்டியவர்கள், அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கட்டளைப்படி அவருக்கு உதவி செய்ய வேண்டியவர்கள், சாலைகளில் வாகனங்களில் செல்வோர், வெளியூர் பயணங்களுக்குத் தேவைப்படும் பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருப்போர், குறிப்பிட்ட வேலை நேரத்துக்குள் அலுவலகங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் சென்று தங்களுக்குத் தேவைப்படுவதை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியவர்கள் என்று பலர் எதிர் முனையில் இருக்கலாம்.
தாட்சண்யம் கருதியோ, வம்பு வளருமே என்று அஞ்சியோ அவர்கள் தங்களுடைய அடுத்த வேலையைச் சொல்லாமலும் இருக்கலாம். நம்மைப் போலவே அவரும் வெட்டியாகத்தான் இருக்கிறார் என்று நினைத்து பேச்சை வளர்த்துவது வீணான செயல் மட்டுமல்ல மறைமுகமான வன்முறையுமாகும்.
பள்ளி, கல்லூரிகளில் ஜூனியராக இருப்போர், அலுவலகங்களில் நமக்குக் கீழே வேலை பார்ப்போர், கட்சி அல்லது அமைப்புகளில் நம்முடைய தயவை நாடுவோர், புதிதாகத் திருமணமாகிவந்த மணப்பெண் என்று இளைத்தவர்கள் பலரை ஆதிக்கம் செலுத்தும் வகையில் பலர் இப்படிப் பேசுவது உண்டு.
இன்னும் சில வசதியான வீட்டுப் பெண்மணிகள் தங்களைவிட வசதிக் குறைவான உறவுப் பெண்களை செல்போனில் அழைத்து சொந்த பந்தங்களைப் பற்றிய "லேட்டஸ்ட்' தகவல்களைச் சொல்லச் சொல்லி துருவித்துருவி கேட்கும் அநாகரிகங்களும் உண்டு.
அக்கம் பக்கத்தில் குடியிருப்போர், அலுவலகத்தில் வேலை செய்வோர், உறவினர்கள் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து வம்பு பேசும் வழக்கத்துக்கும் செல்போன் பயன்படுத்தப்படுகிறது. யாரோ சொன்ன ஆதாரமற்ற வதந்திகளை மீண்டும் மீண்டும் பலரிடம் சொல்லி அதை உண்மைபோல சித்திரிப்பதற்கும் செல்போன் பயன்படுகிறது.
கட்சிகளின் தலைவர்கள், முன்னணி நடிகர்கள் போன்றவர்களின் உடல் நிலை குறித்து அடிக்கடி திடுக்கிடும் எஸ்.எம்.எஸ். தகவல்களும் செல்போன் மூலம் பரவுகிறது.
அழைத்துப் பேசுவது நாம்தான் என்பதால் கட்டணச் சுமை நமக்குத்தானே எதிரில் இருப்பவர் சும்மாதானே பேசுகிறார் என்றும் பலர் நினைப்பது உண்டு. வம்பு பேசுவதற்கான கட்டணத்தை அவர் செலுத்தினாலும் எதிர்முனையில் இருப்பவர் தன்னுடைய விலைமதிப்பற்ற நேரத்தை அல்லவா இழக்கிறார்?
சில சந்தர்ப்பங்களில் இயற்கையின் அழைப்புக்குச் செல்லக்கூட முடியாத நிலையில் எதிர் முனையில் இருப்பவரை இழுத்துவைத்துப் பேசும் சித்திரவதைகளும் உண்டு.
வீட்டுவேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வெடுப்போர், உடல் நலமில்லாததால் மாத்திரை சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க நினைப்போர் எதிர் முனையில் இருக்கக்கூடும். இதைக்கூட அனுமானிக்க முடியாமல் மணிக்கணக்கில் பேசுவதை என்னவென்று சொல்வது?
பேசுவதற்கென்று சில பண்பான முறைகள் இருக்கின்றன. வழக்கமாகப் பேசுகிறவர்களாக இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது நல்லது. புதியவர்களாக இருந்தால் அழைத்தவர் தன்னுடைய பெயர், ஊர், தொழில் ஆகியவற்றைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்ட பிறகு, தான் தொடர்பு கொள்ள விரும்புகிறவர் பெயர், ஊர், தொழில் போன்றவற்றைச் சொல்லி விசாரிப்பதே பண்பாடு.
மிகவும் அந்தரங்கமான விஷயமாக இல்லாமல் அலுவலக வேலை தொடர்பானது என்றால், இன்ன விஷயத்துக்காகத் தொடர்பு கொண்டேன் என்று கோடி காட்டிவிட்டால் செல்போன் அழைப்பை ஏற்கும் குடும்பத்தார் அதைத் தங்களுடைய குடும்பத் தலைவருக்குச் சொல்லி உரிய நேரத்தில் கவனிக்கப்பட உதவிகரமாக இருக்கும். "அவர் இல்லையா, சரி அப்புறம் பேசிக்கொள்கிறேன்' என்றால் அழைப்பு வீணாகிவிடும்.
செல்போனை இனி கையில் எடுக்கும்போதே என்ன பேச வேண்டும், எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொள்வது நல்லது.
அலுவலகத்தாருடன் பேசுவதாக இருந்தாலும் கடைகளில் அல்லது சேவை அமைப்புகளிடம் சேவையைப் பெற விரும்பினாலும் முதலில் நமக்குத் தேவைப்படும் விடைகளுக்கு ஏற்ப வரிசையாகக் கேள்விகளைக் குறித்துக் கொண்டு பேசுவதும் நல்ல பலனைத் தரும். இதை மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று நினைக்கக்கூடாது.
செல்போனைத் தொடர்ந்து நெடுநேரம் கன்னத்தோடு வைத்துக்கொண்டு பேசினால் அந்தப் பகுதியில் புற்றுநோய் வரும் என்கிறார்கள். அத்துடன் அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தால் கண்களும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர்.
செல்போனைக் கூடியவரை குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தாமலே இருப்பது என்ற முடிவை இப்போது எடுப்போம், அதைச் செயல்படுத்துவோம். சுருக்கமாகச் சொன்னால் "வார்த்தைச் சிக்கனம் செல்போனின் இலக்கணம்'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.