தொற்றில்லா நோய்கள் தொடராமல் செய்வோம்

பணக்காரர்களின் வியாதி, உடல் உழைப்பற்றவர்களின் வியாதி என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும் இன்று எல்லா தரப்பினரிடையேயும் காணப்படுகிறது.
தொற்றில்லா நோய்கள் தொடராமல் செய்வோம்
Published on
Updated on
2 min read

பணக்காரர்களின் வியாதி, உடல் உழைப்பற்றவர்களின் வியாதி என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும் இன்று எல்லா தரப்பினரிடையேயும் காணப்படுகிறது.

அதிகாலை எழல், அமைதியான தியானம், எளிமையான - இயற்கையான உணவு, இனிமையான பேச்சு, நிதானமான செய்கை, அளவான உழைப்பு, தேவையான ஓய்வு என்று இருந்த வாழ்க்கை மாறிவிட்டது. விளைவு உடலும் மனதும் பழுதுபட்டு வியாதிகள் வருகின்றன.

சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகிய நான்கையும் "தொற்றில்லா நோய்கள்' (நான்-கம்யூனிகபிள் டிசீஸ்) என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நான்கு நோய்களால் மட்டும் இந்தியாவில் 53 சதவீத மரணங்கள் நேரிடுகின்றன. எனவே இவற்றை முற்றிலும் கட்டுப்படுத்தவும், நோய் வருமுன்பே தடுக்கவும், பாதிக்கப்பட்டோர் சிறந்த சிகிச்சை பெறவும் தொடங்கப்பட்டதே "என்.சி.டி. கிளினிக்' என்ற தொற்றில்லா நோய்களின் சிகிச்சை மையமாகும்.

உலக வங்கியின் உதவியுடன், தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ் 2001 மார்ச் மாதம் முதல் கட்டமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், சென்னை, அரியலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், விருதுநகர், திருச்சி ஆகிய 16 மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு செயல்பாடுகள் ஆராயப்பட்டன.

அதன் விளைவாக ஏனைய 16 மாவட்டங்களில் 2013-ஆம் ஆண்டு முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, 2014-ஆம் ஆண்டை "தொற்றில்லா நோய்கள் ஆண்டாக' முதலமைச்சர் அறிவித்துள்ளார். சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன், இந் நோய்கள் இருப்பதே தெரியாமல் உள்ளுக்குள் நோயை வளர்த்து வருகிறவர்களை அடையாளம் காண்பதுதான் இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

நோய் இருப்பதே தெரியாமலும் நோயின் தீவிரத்தை உணராமலும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமலும் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளாமலும் இருக்கும் அப்பாவிகளின் உயிரைக் காக்கத்தான் இந்த திட்டம்.

ஒவ்வொரு மையத்துக்கும் அரசு மருத்துவமனை என்றால் 2 செவிலியர்களும், ஆரம்ப சுகாதார நிலையம் என்றால் ஒரு செவிலியரும் இதற்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடைய முக்கிய பணி, மருத்துவமனைக்கு வரும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றைப் பரிசோதிப்பதாகும். பெண்களாக இருந்தால் இவற்றுடன் மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விளக்கி விழிப்புணர்வை ஊட்டி சோதனைகளை நடத்துவதாகும்.

ரத்த அழுத்த நோயால், வயதானவர்களைவிட நடுத்தர வயதினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இதய நோய் ஆபத்துக் காரணிகளை இருவகையாகப் பிரிக்கலாம். மாற்ற முடியாத ஆபத்துக்காரணிகள், மாற்றிக்கொள்ளத்தக்க காரணிகள். முதல் வகையில் ஒரு நபரின் வயது, பாலினம், பரம்பரைக் காரணிகள் அடங்கும். இவற்றை நம்மால் மாற்ற முடியாது.

இரண்டாவது வகையில், கெட்ட கொழுப்புகள் அதிகம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்தல், உடற் பயிற்சி செய்தல், உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தல், உணவில் உப்பு, காரம், எண்ணெய் வகைகளைக் குறைத்தல், ஊறுகாய், கருவாடு போன்றவற்றை அறவே கைவிடல், புகைப்பழக்கத்தை நிறுத்திவிடல், தியானம், யோகாசனம் மூலம் மன இறுக்கத்தைக் குறைத்துக் கொள்ளுதல், உடல் எடையைக் குறைத்தல், மதுப்பழக்கத்தைத் தவிர்த்தல், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ணல் ஆகியவை அடங்கும்.

மாற்றிக்கொள்ளத்தக்க காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் இதய நோய் மட்டுமல்லாது சர்க்கரை நோயிலிருந்தும் காத்துக்கொள்ள முடியும்.

வறுத்த, பொரித்த உணவுகள், டின்களில் அடைக்கப்பட்ட தயார் தீனிகள், வனஸ்பதி கலந்து தயாரிக்கப்பட்ட பிரெட், கேக், பரோட்டா, பப்ஸ் போன்றவை கெட்ட கொழுப்பை அதிகரிக்கவைப்பவை. இவை போன்றவற்றுடன் பாக்கெட் தின்பண்டங்கள் பாட்டில் குளிர் பானங்களையும் தொடர்ந்து உட்கொண்டால் நோய் எதிர்ப்புசக்தி இல்லா தலைமுறை உருவாகும்.

தொற்றில்லா நோய்கள் மையத்துக்கு வருகிறவர்களுக்கு முதலில் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். உயரம், எடை, இடுப்புச் சுற்றளவு ஆகியவை கணக்கெடுக்கப்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்றும் பார்க்கப்படும். யாருக்காவது நோய் இருப்பது தெரியவந்தால் மருந்துகள் வழங்கப்படுவதுடன் தக்க மருத்துவ அறிவுரைகளும் கூறப்படும்.

பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்படும்.

ஒவ்வொரு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் இந்த சிறப்பு பரிசோதனை மற்றும் சிகிச்சை, வாரத்தின் அனைத்து வேலை நாள்களிலும் காலை 8 மணி முதல் 12 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த மையங்களுக்குச் சென்று தங்களுக்கு இந்த நோய்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com