களை வளர்க்கும் நாற்றங்கால்களா?

கல்விச்சாலைகளை நாற்றங்கால்கள் என்றே அழைக்கிறார்கள். கல்வியறிவுடன் நல்ல ஒழுக்கங்களையும் கற்றுத்தருவதற்குத்தான் கல்விச்சாலைகள்.
களை வளர்க்கும் நாற்றங்கால்களா?
Updated on
1 min read

கல்விச்சாலைகளை நாற்றங்கால்கள் என்றே அழைக்கிறார்கள். கல்வியறிவுடன் நல்ல ஒழுக்கங்களையும் கற்றுத்தருவதற்குத்தான் கல்விச்சாலைகள். ஆனால் ஊழலும் முறைகேடுகளுமே கல்விச்சாலைகளின் நிர்வாகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தால் அங்கு படிக்கும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்?

சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒரு பிரபல ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் தன்னுடைய மகனை பிரி கே.ஜி. வகுப்பில் சேர்க்கச் சென்றார். அங்கு முதலில் பெற்றோரின் கல்வித் தகுதி (இருவரும் பட்டதாரியா என்பதை), தொழில், குடும்ப மாத வருமானம், சமூக அந்தஸ்து ஆகியவற்றைக் கேட்டுக்கொண்ட பிறகு குழந்தையிடம் சில கேள்விகளைக் கேட்டு அதன் அடிப்படை அறிவைச் சோதித்தனர். இறுதியாக தேர்ச்சிப் பட்டியல் வெளியிட்டனர்.

அதில் தங்களுடைய குழந்தையின் பெயரைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த நண்பரிடம், பள்ளியில் சேர்த்துக்கொள்ள கட்டணமாக பெருந்தொகையைக் கேட்டனர். இவ்வளவா என்று கேட்ட நண்பரிடம், வெளியில் சென்று இதே படிப்பைப் படிக்க பிற கல்வி நிறுவனங்களில் எவ்வளவு கேட்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு பிறகு பணத்தைச் செலுத்தினால்போதும் என்றார்கள். அதே சமயம் இந்த இடத்துக்காக பெரும் தொகையுடன் பலர் வரிசையில் காத்திருப்பதையும் சுட்டிக்காட்டினர்.

மற்ற இடங்களில் இதைவிட கட்டணம் அதிகம் என்பதால் நண்பரும் ஒப்புக்கொண்டு ரொக்கமாகவே செலுத்தினார். அவர் செலுத்தியது லட்சங்களில், அவருக்குத் தரப்பட்ட ரசீதோ ஆயிரங்களுக்கானது. ஏன் இப்படி என்று நண்பர் கேட்டபோது, உங்களுக்கு முன்னதாக 125 பேர் நீங்கள் செலுத்தியதைப் போன்ற தொகையைக் கொடுத்துவிட்டு, சில ஆயிரங்களுக்கான ரசீதை மட்டுமே வாங்கிச் சென்றுள்ளனர். விருப்பம் இருந்தால் குழந்தையைச் சேருங்கள், இல்லாவிட்டால் இடத்தைக்காலி செய்யுங்கள் என்று நாசூக்காகக் கூறினார்கள்.

இப்படி நன்கொடையாக தொடக்கத்திலிருந்து கொடுத்துக்கொண்டே வந்து எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவன் எப்படி 50 ரூபாய் பீஸ் வாங்கிக்கொண்டு சிகிச்சை செய்வான்? அதற்கேற்றபடியே அவன் வசூலிக்கும் கட்டணமும் இருக்கும்.

மிகவும் பிரபலமாகிவிட்ட அந்தக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் பட்டப்படிப்பு படித்தவர்கள்தான். ஒரு சிலர் மட்டுமே ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். அவர்களுடைய ஊதியம் மாதத்துக்கு ரூ.3,000 முதல் ரூ.7,000 வரை மட்டுமே. நன்கு படிக்கும் குழந்தைகளைத்தான் சேர்த்துக்கொள்கிறார்கள்.

பட்டதாரியான பெற்றோரையே வீட்டில் பாடம் கற்றுத்தரச் சொல்கிறார்கள். படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகளின் பெற்றோரை அழைத்து, ஏதோ சொல்லி டி.சி. கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இந்த உத்தியில்தான் தமிழ்நாட்டில் ஏராளமான தனியார் பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி காட்டுகின்றன.

இதைத் தடுக்க, தனியார் பள்ளிக்கூடங்களில் சேரும் மாணவர்கள் கட்டணங்களை நேரடியாக அரசு கஜானாவில்தான் கட்டவேண்டும், அரசு அதைப் பிரித்துத்தரும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.

பால்ய விவாகம், உடன்கட்டையேறுதல் போன்றவற்றைச்சீர் செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு, தனியார் பள்ளிக்கூடங்களைத் திருத்துவதுதானா பெரிய சவாலாக இருக்கப் போகிறது? முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com