வங்கிகளும், வாராக் கடன்களும்

முந்தைய காலத்தைவிட, சமீப காலங்களில் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். அந்த கவலைக்குக் காரணம் அவை, வங்கிகளின் முதலுக்கு மோசம் விளைவிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவை.
வங்கிகளும், வாராக் கடன்களும்
Updated on
3 min read

முந்தைய காலத்தைவிட, சமீப காலங்களில் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். அந்த கவலைக்குக் காரணம் அவை, வங்கிகளின் முதலுக்கு மோசம் விளைவிக்கக் கூடிய சக்தி வாய்ந்தவை. அவ்வாறு கரையும் வங்கிகளின் மூலதனம், பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்துதான், "கேப்பிட்டல் இன்ஃப்யூஷன்' என்ற பெயரில், அரசாங்கத்தால் அவ்வப்போது ஈடு செய்யப்படுகிறது. ஆகவே, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் என்பது, நாட்டின் வரவு - செலவு கணக்கில் ஓட்டையை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை பாதித்து, நம் வரிச்சுமையை அதிகரிக்க வல்ல ஒரு அரக்கனாகும். இந்தச் சூழ்நிலையில் தொழில் மற்றும் வியாபார மேம்பாட்டுக்காக வங்கிகளால் வழங்கப்படும் கடன் தேவதை எவ்வாறு வாராக்கடன் என்ற அரக்கனாக உருவெடுக்கிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்குட்பட்டு, பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட்டுகளை, வங்கிகள் - தொழில், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்குக் கடனாக வழங்குகின்றன. மற்ற வியாபாரங்களைப் போலவே, வங்கித் தொழிலிலும், கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் இடையேயான வித்தியாசம் மொத்த லாபமாகும். இதில், நிர்வாகம் மற்றும் ஏனைய செலவுகளைக் கழித்தால் கிடைப்பது நிகர லாபமாகும். வங்கிகளால் வழங்கப்பட்ட கடன், பயனாளிகளால் உரிய நேரத்தில் திரும்பச் செலுத்தப்படவில்லையானால், அதற்குரிய ஈட்டுத் தொகை வங்கியின் லாபத்திலிருந்து ஒதுக்கப்படும் அபாயம் காத்து நிற்கிறது.

"புரொவிஷன்' என்றழைக்கப்படும் இந்த ஈட்டுத்தொகையைக் கணக்கிட ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது. கடன் தொகைக்குப் பிணையமாக கொடுக்கப்பட்டிருக்கும், "கோலேட்டரல்' எனப்படும் சொத்துக்களின் மதிப்பு, கடன்தொகை வசூலாகாமல் நிலுவையில் உள்ள காலத்தின் அளவு ஆகியவை, வாராக்கடன்களுக்கான புரொவிஷன் கணக்கிடப்படுவதற்கு சில முக்கிய காரணிகளாகும். பிணையச் சொத்தின் மதிப்பு குறைவாக இருந்தால், புரொவிஷன் தொகை அதிகமாகும். அதேபோல், வசூலாகாமல் நிலுவையில் இருக்கும் அளவு மூன்று வருடங்களுக்கு மேல் போனால், சொத்தின் மதிப்பு எவ்வளவு இருந்தாலும், முழுக் கடன் தொகையும் புரொவிஷனாக லாபத்தில் கழிக்கப்படுகிறது. ஆகவே கடன் வழங்கும் முடிவை எடுக்கும்போது வங்கிகள் "பிரைமரி செக்யூரிட்டி' என்றழைக்கப்படும் வியாபாரம் மற்றும் தொழில் சார்ந்த சொத்துகள், வீடு, நிலம் போன்ற வியாபாரம் சாராத "கோலேட்டரல்' ஆகிய காரணிகளில் கவனம் செலுத்துகின்றன. இந்த கட்டத்தில், சொத்தை மதிப்பிடுவது, கடன் வாங்குபவர்களுக்கு, சட்டப்படி சொத்தின் மீதிருக்கும் முழு உரிமையைத் தீர்மானிப்பது போன்றவைகளில் தவறு நிகழ்ந்தால், கடனை வசூல் செய்யமுடியாத கட்டத்தில், வங்கி அந்த சொத்துகளைச் சுலபமாக விற்று கடனை நிறைவு செய்யமுடியாது. இதனால், அந்தக் கடன் பிற்காலத்தில் வாராக்கடனாகிவிடும். சிறுதொழில் சார்ந்த கடனுக்குப் பிணையமாக சொத்துகள் கோரப்படுவதில்லை. எனவே, அம்மாதிரி கடன்கள் திரும்பச் செலுத்தப்படவில்லையென்றால், புரொவிஷன் தொகை அதிகமாகும். சிறுதொழில் கடனுக்கான விண்ணப்பதாரர்களின் அனுபவம், ஏற்கெனவே பெறப்பட்ட கடனைச் சரிவர திருப்பிச் செலுத்திய நாணய வரலாறு ஆகியவை, கடன்கள் வழங்குவதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. சிறுதொழில் வணிகத்திற்குக் கொடுக்கப்படும் கடன்கள் பெரும்பாலும் திரும்பச் செலுத்தப்பட்டுவிடுகின்றன என்பது ஆறுதலான செய்தியாகும்.

வழங்கப்பட்ட கடன் தொகை, கடன் வாங்குபவருக்கு பரிச்சயமான லாபம் ஈட்டும் தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும்; குறுகிய கால கடன் தொகை, நிகழ்காலத்தில் வருமானமற்ற, நீண்டகால முதலீடுகளில் ஈடுபடுத்தப்படக் கூடாது. இந்தக் காரணிகளின் தரத்தை ஆராய்வதில் ஏற்படும் சிறு தவறுகளும், உரிய காலத்தில், கடன் முழுவதும் வசூலாகும் வாய்ப்புகளைத் தட்டிப்பறித்துவிடும். இல்லையென்றால், கடன் திரும்பச் செலுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். அதனால்தான், கடன் வழங்கும் கட்டம் போலவே, வழங்கப்பட்ட கடனை பராமரிக்கும் கட்டத்திலும் வங்கிகளுக்கு அதிக பொறுப்பு உண்டு.

லாபம் ஈட்டும் எந்தத் தொழிலிலும் இடர்கள் (ரிஸ்க்) உண்டு. அந்த அம்சங்களை முன்கூட்டியே அறிந்து, அவைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில்தான், தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் சாமர்த்தியமும், செயல்பாடுகளும் வேறுபடுகின்றன.

கடன் வழங்கினால்தான், வங்கிகள் லாபம் ஈட்ட முடியும். கடன் தொகையை வழங்குவதோடு வங்கிகளின் பணி முடிந்து விடுவதில்லை. மேற்கூறியபடி, கடன் வாங்கியவர், அதை வியாபாரத்தில் முழுவதும் பயன்படுத்தி லாபம் ஈட்டினால்தான், வாங்கிய கடனை வட்டியோடு அவர் திருப்பிச் செலுத்த முடியும். கடன் வாங்கியவரின் வியாபாரத்தை, சம்பந்தப்பட்ட வங்கி தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கவேண்டும். இதற்கு, தாங்கள் கடன் வழங்கும் தொழில் சார்ந்த அறிவு, வங்கி அதிகாரிகளுக்கு அவசியம் தேவை. ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குக் கடன் வழங்குவதற்கு முன்பு, அந்தத் தொழிலின் நெளிவு, சுளிவுகளை வங்கி அதிகாரிகள் கற்று அறியும் ஆர்வம் அவசியம் இருத்தல் வேண்டும். கடன் வழங்கும் பொறுப்பிலுள்ள அதிகாரிகளுக்கு, அதற்கான தீவிர பயிற்சிகளை அளிக்கும் பொறுப்பு, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்தைச் சாரும். கடன் துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சி இல்லாவிட்டால், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி எடுக்கப்படும் அவர்களின் முடிவுகள், பல வாராக்கடன்களுக்கு வழிவகுத்துவிடும்.

தொழில் முன்னேற்றத்திற்கு போதுமான கடன் தொகைகள் சரியான தருணத்தில் வங்கியால் அளிக்கப்படவில்லையென்றால் ஏற்கெனவே கொடுத்த கடன், வாராக்கடனாகும் அபாயமும் அதிகமாகிறது. தாமதமாகும் நியாயமான கடன் தேவைகள், கடன் வசதி பெறும் தொழிலை நலிவடையச் செய்வதோடு, வங்கிகளின் வாராக் கடன்களையும் அதிகரிக்கும். அதனால், கடன்கள் வழங்குவதில் வேகமும், விவேகமும் சேர்ந்த முடிவுகளை வங்கிகள் எடுக்க வேண்டும். வழங்கிய கடன்களைத் தொடர்ந்து மேற்பார்வையிட்டு, கொடுத்த தொகையை சட்டரீதியாக வசூலிக்கும் வங்கிப் பணியாளர்கள் போதுமான அளவில் இருத்தல் வேண்டும். வாராக்கடன்களை வசூலிக்கும் தகுதியுள்ள பணியாளர்களை அமர்த்துவதில் சரியான திட்டமிடுதல் அவசியம். சமீப காலங்களில், பல பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் வளர்ச்சிக்கு, வழங்கிய கடனை பராமரித்து வசூலிக்க, போதுமான பணியாளர்கள் இல்லாததும் ஒரு முக்கிய காரணி என்ற கருத்து நிலவுகிறது. கடனை வசூலிக்கும்போது, அரசியல் தலையீடுகள், மிரட்டல்கள் ஆகியவை அதிகாரிகளின் தனி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், வசூல் பணிகளில் தொய்வுகள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஒரு நிறுவனத்திற்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகள் கூட்டாக வழங்கும் "கன்சோர்டியம்' என்றழைக்கப்படும் பெரிய தொகைக் கடன்களும், சில சமயம் வாராக்கடன்களாகிவிடுகின்றன. ஒரு வங்கியின் சுவட்டில், மற்ற வங்கிகளும் கண்மூடித்தனமாக பயணிப்பதால் சில சமயங்களில் இம்மாதிரி விபத்துகள் நிகழ்கின்றன. சில குறிப்பிட்ட துறைகள் சார்ந்த கடன்கள், மீண்டும், மீண்டும் பல வங்கிகளில் வாராக்கடன்களாக தலைதூக்கி நிற்கின்றன. நடந்த தவறுகளிலிருந்து வங்கிகள் பாடங்களைக் கற்றறிந்து, இந்தக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். ஒரு வங்கியில் கடனை திருப்பிச் செலுத்தாமல், அதை வாராக்கடனாக்கிவிட்டு, அந்த நிறுவனத்தின் டைரக்டர்கள், மற்ற பெயர்களில் நிறுவனங்களைத் துவங்கி, அவைகளை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் அவலமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு வங்கியில் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் உள்ளவர்களும், சில சமயங்களில் "கடன் தள்ளுபடி'யின் பயனாளியாகிறார்கள். கடந்த காலங்களில், பெரிய அளவில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டால், நமக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சித் தகவலாகவே இருக்கும்.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடிக்கு மேல் வளர்ந்து நிற்கும் அரசு வங்கிகளின் வாராக்கடன்களை சிறிய தொகை என்று மறந்து ஒதுக்கிவிட முடியாது. இதில், 50 சதவிகிதத்திற்கு மேலான தொகை, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்ததாகும்.

வங்கிகளில் வசூலிக்கப்படாமல் தேங்கி நிற்கும் கடன் தொகைகள், அவைகளில் பெரும் பங்குதாரர்களாக விளங்கும் மத்திய அரசுக்கும் கவலையை விளைவித்துள்ளது. வாராக்கடன்களை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதில், நிர்வாகக் குழுவின் ஒப்புதல்களுக்காக காத்து நிற்கும் காலதாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கை வங்கி நிர்வாகங்களுக்கு, அரசின் நிதித் துறை மூலம் சமீபத்தில் அனுப்பப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

வங்கிகள் தாங்கள் வழங்கிய கடனை சுலபமாக வசூல் செய்வதற்காக இயற்றப்பட்ட "சர்ஃபேஸி' சட்டத்தில் எதிர்கொள்ளப்படும் ஓட்டைகள் ஆராயப்பட்டு, அவைகள் அடைக்கப்பட வேண்டும். வங்கிக் கடன் வசூலில் அரசியல் தலையீடுகள் அறவே கூடாது.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் முன்னோடிகளாகத் திகழும் வங்கிகளின் வளர்ச்சியில் "வாராக்கடன்கள்' என்ற புற்று நோயை வளரவிடக்கூடாது. வங்கிகளின் கடன் பராமரிப்பு முறைகளை ஆராய்ந்து, குறைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும். இந்திய வங்கிகளின் சீரான வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com