
எவ்வளவுதான் பரபரப்பாகக் காரியங்கள் செய்தாலும் 24 மணி நேரம் போதவில்லை என்பதே பலருடைய பாட்டாக இருக்கிறது. எப்படி திட்டமிட்டாலும் நேர மேலாண்மை கைவரவில்லையே என்று உருகுவோரும் உண்டு. ஒரு சிலர் மட்டும் அமைதியான மனம், ஆரவாரமில்லாத வாழ்வு, திட்டமிட்ட செயல்கள், செழுமையான எண்ணங்கள், சிறப்பான முடிவுகள் என்று வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் வெற்றி பெற்றுவருகின்றனர். இப்படி வெற்றிபெறும் அனைவரிடமும் இருக்கும் ஒற்றுமை, அதிகாலை நேரத்தில் எழுந்திருப்பதாகும்.
அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தையும் அறிவையும் தரும் என்கிறார் பெஞ்சமின் பிராங்ளின். ராணுவம், காவல்துறை, துணை நிலை ராணுவப் படை ஆகியவற்றில் சேரும் இளம் வீரர்களை அதிகாலையிலேயே விழிக்கச் செய்து உடல் பயிற்சிகளைக் கற்றுத்தருவர்.
எல்லா மதப் பாடசாலைகளிலும் மாணவர்களை அதிகாலையில் துயிலெழுப்பி மனப்பாடப் பகுதிகளைக் குழுவாகவே சேர்ந்து படிக்கச் சொல்வர். உள்ளுரைப் பள்ளிகளிலும் பள்ளிக்கூட, கல்லூரி விடுதிகளிலும் அதிகாலையில் படுக்கையிலிருந்து எழுவதைக் கட்டாயப்படுத்துவர்.
அரசியல் இயக்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நடத்தும் முகாம்களிலும் இப்படியே அதிகாலையில் விழித்தெழ வைத்து பணிகளைத் தொடங்குவர்.
அதிகாலையில் இரைச்சல் அதிகம் இராது. சூரியனின் கிரணங்கள் வராத நேரம் என்பதால் பூமியும் காற்றும் செடி, கொடிகளும், மரங்களும் குளிர்ச்சியாகக் காட்சி தரும். சில வேளைகளில் காற்று மண்டலத்தில் கண்ணுக்கு எளிதில் புலப்படும் வகையில் ஓசோன் மண்டலம் தரைக்கே வந்திருக்கும். அந்த நேரத்தில் மலர்களின் சுகந்தமும் பனிக்காற்றில் உள்ள இரும்புச் சத்தும் மூச்சுக்காற்றில் கலந்து உள்ளிழக்கப்படும்போது மூளைக்கு நிறைய பிராணவாயுவை எடுத்துச் செல்லும். ரத்த ஓட்டம் சுத்தம் அடையும். நினைவாற்றல் பெருகும். மனம் இனிமையாகப் பேசவும் பாடவும் விழையும்.
அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களைக் கழித்துவிட்டு பல் விளக்கி, பால் அல்லது தேநீர் குடித்துவிட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கினால் மனம் மகிழும் வகையில் விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்து முடிக்கலாம். படிக்கும் மாணவர்கள் பாடங்களைப் படிக்கும் அதே வேளையில் இல்லத்தரசிகள் அன்றைய வேலைகளை எளிதாகத் தொடங்கிவிடலாம். குடும்பத் தலைவர்கள் மற்றவர்களுக்கு ஊக்குவிப்பாக அவரவர் வேலைகளில் சிறிதளவு ஒத்துழைத்து மேற்பார்வை செய்வது போல நடுநாயகமாக வீட்டில் இருந்தால் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
சூரியன் உதித்த பிறகும் நெடுநேரம் படுக்கையிலேயே படுத்திருந்தால் உடலில் நச்சுக்கழிவுகள் சேர்வது அதிகரித்து உடல் கனக்கும். உடலில் நீரும் வாயுவும் கழிவுகளும் கூட்டணி அமைத்து உடலையும் மனதையும் களைப்படையச் செய்யும். நேரம் செல்லச் செல்ல சோம்பேறித்தனம்தான் அதிகரிக்குமே தவிர உடல் ஓய்வுகொள்ளாது.
இது பழக்கமே இல்லையே இனிமேல் எப்படி என்று நினைக்கிறீர்களா? எளிதான வழிகள் இரண்டு. இரவு படுக்கப்போகும்போது அல்லது நள்ளிரவில் கண் விழித்த பிறகு நிறைய தண்ணீர் குடிக்கவும். காலையில் விழிப்பு "தானாக' வரும். அதற்குத்துணையாக அலாரம் வைத்துத் தூங்கவும். கடிகாரத்தைக் கைக்கெட்டுகிற இடத்தில் வைக்க வேண்டாம். அலாரம் அடிக்கத் தொடங்கிய உடனேயே அணைத்துவிடத்தான் கை செல்லும். அதன் பிறகு வழக்கத்தைவிட அதிக நேரம் தூங்க நேரிடும். சற்று நடந்து செல்கிறபடி வைத்துக் கொள்ளவும்.
காலையில் சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும் என்றால் இரவில் சீக்கிரம் அதாவது 10 மணிக்குள் தூங்கிவிடும் பழக்கத்தையும் கைக்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.