கல்விக்கடன் ஒரு கனவா?

திரை விலகிவிட்டது. நாடகத்தின் அடுத்த காட்சி துவங்கி விட்டது. ஆம் "பிளஸ்-2' தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன.
Published on
Updated on
2 min read

திரை விலகிவிட்டது. நாடகத்தின் அடுத்த காட்சி துவங்கி விட்டது. ஆம் "பிளஸ்-2' தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. அடுத்து மருத்துவமா, பொறியியலா? இந்த ஆண்டு, இந்த "கட் ஃஆப்' மதிப்பெண்ணுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்குமா என்று மாணவர்களும் அதற்கு இணையாக அல்லது கூடுதலாக பெற்றோர்களும் திணறிக் கொண்டிருக்கும் நேரம் இது.

வங்கியில் கல்விக்கடன் கிடைக்குமா கிடைக்காதா என்று ஏங்கும் பெற்றோர்களும், மாணவர்களும் ஏராளம். அவர்களுக்கு உதவியாக சில குறிப்புகள்.

கல்விக்கடன் வாங்குமுன் ஒரு மாணவனிடம் இருக்க வேண்டிய ஆவணங்கள் என்னவென்று இனி காண்போம்.

1. கல்விக்கடன் பெறும் மாணவன் அல்லது மாணவியின் - (வருமான வரித்துறை வழங்கும் நிரந்தரக் கணக்கு எண்) "பான் - கார்டு' என்பது மிக மிக அவசியம். இதுவரை வாங்கவில்லை என்றாலும் உடனடியாக விண்ணப்பித்து ஒரு மாத காலத்திற்குள் "பான் - கார்டு' பெற்றுக் கொள்ளுதல் முக்கியமானது.

2. மாணவன் அல்லது மாணவியின் தந்தையாரின் "பான்-கார்டும்' அவசியம் (தந்தையில்லை எனில் தாயாரின் பான்-கார்டு).

3. கலந்தாய்வில் கலந்து கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரி பற்றிய விவரங்கள் அடங்கிய சேர்க்கைக் கடிதம். கல்விக்கடன் வாங்க விரும்புவோர் கலந்தாய்வில் கண்டிப்பாக கலந்துகொள்வது அவசியம். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்து கடன் பெற்றுக் கொள்ளலாம் என்பதைக் கூடியமட்டிலும் தவிர்ப்பது நல்லது.

4. மாணவர் அல்லது மாணவி, தான் சேரவிருக்கும் கல்லூரியில், தான் படிக்க இருக்கும் படிப்பிற்கான 4 வருடக் கட்டணம் அல்லது 5 வருடக் கட்டணம் - அதாவது, படிக்கும் காலத்திற்கான மொத்தத் தொகையையும் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் பெறவிருக்கும் கடன் தொகையைக் கணக்கிட முடியும். கல்லூரி அலுவலகத்தில் பெற்றோர் இதைக் கேட்டு வாங்க வேண்டும்.

5. மாணவர், பெற்றோரின் இருப்பிடச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருத்தல் அவசியம்.

6. பெற்றோரின் வருமானச் சான்று.

7. ஜாதிச் சான்றிதழ்.

8. குடும்பத்தில் முதல் பட்டதாரி எனில், அதற்கான சான்று (வி.ஏ.ஓ மூலம் பெற வேண்டும்).

9. மாணவர் அல்லது மாணவியரின் 3 புகைப்படங்கள் மற்றும் பெற்றோரின் 3 புகைப்படங்கள்.

மேற்குறிப்பிட்ட ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை ஒரு "ஃபைலில்' சேகரித்துக் கொண்டு, அருகிலுள்ள வங்கியை அணுகி. கல்விக் கடன் குறித்து கேட்கும்போது, ஆவணங்களை உடனுக்குடன் காண்பிக்கும்போது, கடன் வாங்கும் முறை எளிதாக இருக்கும். எந்த சந்தேகத்தையும் வங்கி அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதே சிறந்தது.

கல்விக் கடனைப் பொறுத்தவரையில், முதலாண்டு கல்லூரியில் சேரும்போது கல்விக் கட்டணத்தையும், விடுதிக் கட்டணத்தையும் துவக்கத்தில் கட்டிவிட்டு, அந்த ரசீதுகளைக் காட்டி அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் முதல் பருவத்தின் கல்விக்கடனைப் பெற்றுக் கொள்ளலாம். இரண்டாம் ஆண்டு முதல், வங்கி மூலமே நேரடியாகக் கல்லூரி பெயருக்கு வரைவோலை (டிடி) வழங்கப்பட்டுவிடும்.

தனியார் பொறியியற் கல்லூரிகளின் முழுக்கட்டணத்தையும், வங்கிக்கடன் மூலமாகப் பெற முடியாது. ஒரு பகுதியை பெற்றோர் ஏற்க வேண்டியிருக்கும். பெற்றோர்களின் வருட வருமானம் ரூ.4 லட்சத்திற்குள் இருந்தால் கல்விக்கடனுக்கான வட்டிச் சலுகை உண்டு. இதற்கான வருமானச் சான்றினை துணை வட்டாட்சியர் மூலம் பெறவேண்டும். இத்தகைய மாணவரின் கல்விக்கடனுக்கு வட்டி கிடையாது என்பது சரியல்ல. வட்டியினை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு வழங்கும். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிடும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை உண்டு. கல்விக்கடனை தொடர்ந்து பெறுவதிலும் பல்வேறு சிரமங்கள் உண்டு. உதாரணமாக ஒரு மாணவர் இரண்டாது அல்லது மூன்றாவது செமஸ்டர் தேர்வில் நாலைந்து பாடங்களில் தோல்வி அடைந்துவிட்டால், அவரது படிப்பு குறித்து வங்கி அதிகாரிகள் விசாரித்து "கவுன்சிலிங்' அளிப்பார்கள்.

பொறியியல், மருத்துவம் மட்டுமின்றி, பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்., ஆசிரியர் பயிற்சி போன்ற படிப்புகளுக்கும் கல்விக்கடன் உண்டு. இது குறித்தும் அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுகி தெளிவு பெறுவது நல்லது.

வங்கிக்கடன் வாங்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், முதலில் குறிப்பிட்ட ஆவணங்களோடு, ஜூலை முதல் அக்டோபர் மாதத்திற்குள் வங்கியை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். வங்கி அதிகாரிகளும், கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்பதை ஒரே தடவையில் சொல்லிவிடுவது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com