நீர்நிலைகளைப் பாதுகாப்போம்

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் - ஆமாம் ஆங்காங்கே பரவலாக ஒலிப்பது ""நீர்நிலைகளைப் பாதுகாப்போம்'' என்ற தாரக மந்திரம்.
நீர்நிலைகளைப் பாதுகாப்போம்
Published on
Updated on
2 min read

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் - ஆமாம் ஆங்காங்கே பரவலாக ஒலிப்பது ""நீர்நிலைகளைப் பாதுகாப்போம்'' என்ற தாரக மந்திரம்.

தமிழகத்தில் ஒரு வருடத்தில் 23 முதல் 25 நாட்களில் பெய்யும் சராசரி 925 மி.மீ. பருவ மழையினைக் கொண்டு ஆண்டு முழுதும் நமது தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதற்காகவே மழைக்கால நீரை சேமித்து பாதுகாக்கும் கொள்கலனாக நமது முன்னோர்கள் குளங்களையும் ஏரிகளையும் உருவாக்கி வைத்தனர்.

1970-இல் பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரப்படி 40 ஹெக்டேருக்கு மேல் ஆயக்கட்டு கொண்ட பொதுப்பணித் துறை பொறுப்பில் உள்ள 18,789 ஏரிகளும் 40 ஹெக்டேருக்கு கீழ் ஆயக்கட்டு கொண்ட ஊராட்சி ஒன்றியங்களின் பொறுப்பில் 20,413 ஏரிகளும் சேர்ந்து மொத்தம் தமிழ்நாட்டில் 39,202 ஏரிகள் உள்ளன.

இவைகளின் நிலை என்ன?

பராந்தக சோழன் (கி.பி.907 - 953) காலத்தில் உருவாக்கப்பட்ட வீரநாராயணன் ஏரியின் (வீராணம் ஏரி) கொள்ளளவு 1923-ஆம் ஆண்டில் 41 மி.க.மீ. தற்போது 25 மி.க.மீ. 1000 ஆண்டுகள் முன்னோர்களால் காப்பாற்றப்பட்ட ஏரியின் கொள்ளளவை 50 ஆண்டுகளில் பாதியாகக் குறைத்துள்ளோம். இது ஒரு உதாரணம்தான்.

ஏரிகளும் குளங்களும் மாயமாகிப் போனது எவ்வாறு?

பிற்கால சோழர்காலம் வரை கிராம சொத்தாக இருந்த நீர்நிலைகள் கிராம மக்களின் பொறுப்பில் கூட்டாக பராமரிக்கப்பட ஏரிவாரியப் பெருமக்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசின் சொத்தாக மாறிய நீர்நிலைகள், வருவாய்த் துறை அலுவலர்களின் கண்காணிப்பில் விடப்பட்டது. பின்னர் 1852-இல் பொதுப்பணித் துறை பெரிய ஏரிகளைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டது. சிறிய ஏரிகளை செப்பனிடும் பணி பஞ்சாயத்து மற்றும் ஜமீன்தார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. எதிர்பார்த்தபடி பணிகள் நடைபெறவில்லை. பின்னர் ஏரிப் பராமரிப்பை வேளாண் மக்களே செய்ய வேண்டும் என்ற "மரபு குடிமராமத்து' அமைக்கப்பட்டது.

விடுதலைக்குப் பின் பாசன பராமரிப்பு வேலைகள் அரசு நிதியிலிருந்து செய்யப்பட்டதால் மக்களுக்கு நீர்நிலைகளின் மீதிருந்த பற்று மறைந்து "அரசின் சொத்து' என்ற உணர்வு வந்துவிட்டது.

மரங்கள் வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆற்றுப்படுகை, ஏரிப் புறம்போக்கு நிலங்கள், "வரையறைக்கு உள்பட்ட பட்டா' (கன்டிஷனல் பட்டா) மூலம் தனியாருக்கு வழங்கப்பட்டன. 1970லிருந்து மரம் வளர்ப்பதற்குப் பதிலாக வீட்டு மனைக்காக ஏரிப் புறம்போக்கு நிலங்களைத் தனியாருக்கு அரசே வழங்கியது. அத்துடன் 10 ஆண்டுகள் ஆக்கிரமித்திருந்தால் அந்த இடத்துக்காக அவர்களுக்குரிய பட்டா வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

ஏரிப் புறம்போக்கு இடங்களில் பேருந்து நிலையம், விளையாட்டு மைதானம், மருத்துவமனைகள், கல்லூரிகள், அலுவலகம், பூங்கா, வீட்டு மனைகள் என்று அனைத்து தரப்பினருமே ஏரிகளை வளைத்துப் போட்டுள்ளது தெரிய வருகிறது.

இங்கு உச்சநீதிமன்றம் 23-2-2006ல் வழங்கிய தீர்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்.

""அனைத்து நீர்நிலைகளும் அரசாங்கத்துக்கு சொந்தமில்லை. அவற்றைக் காக்கும் அறங்காவலர்களாகவே அரசு இருக்க வேண்டும். ஏரிகளையோ அதனைச் சேர்ந்த நிலங்களையோ எடுத்துக் கொள்ளவும் அல்லது பிறருக்கு அதனைப் பயன்படுத்த அனுமதிக்கவும் அரசுக்கு அதிகாரம் இல்லை.''

இத் தீர்ப்பின் முக்கிய கருத்து, ஓர் இடத்தில் சுற்றுச்சூழலில் முக்கிய பங்கு வகிக்கும் ஏரிகளைக் காப்பது அரசின் பொறுப்பு. நீர்நிலைகள் எவ்விதப் பயன்பாட்டிற்கு ஏற்பட்டதோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதாம். இழந்ததை மீட்க முடியாது என்பது கசப்பான உண்மை. இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள என்ன வழி?

பொதுப்பணித் துறை, ஊராட்சி ஒன்றியம் ஆகியவைகளின் பொறுப்பிலுள்ள ஏரிகள், நீர்வழித் தடங்கள் ஆகியவற்றின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். அவற்றை கண்காணிப்பதற்கென்ற பிரத்யேக அலுவலர்களையும், அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும். (உதாரணம்: முன்பு Minor Irrigation Tank-ஐ கவனித்துக் கொண்ட MI ஓவர்சியர்கள் போன்றோர்.) இவர்களை மற்ற பொறுப்பிலிருந்து விடுவித்து, நீராதாரங்களையும், அசுத்தமடையும் கால்வாய்களையும் பராமரிக்கும் பொறுப்பும், கட்சி சார்ந்து குழுக்களாக நீராதாரங்களை ஆக்கிரமிக்கும் சமுதாய விரோதிகளை அரசுக்கு அடையாளம் காட்டும் நேரிடை அதிகாரமும் தரப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும், இயற்கை வளங்களை பேணுவதும் மக்களின் அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் சட்டப்பிரிவு 21-இல் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களாகிய நாம், நமது உரிமையை விட்டுத் தராமல் கடமையற்ற வேண்டிய நேரம் இது.

இன்று தன்னார்வ தொண்டர்களாலும் இளைஞர்களாலும் ஏரிகள் தூர்வாருவதும், குட்டைகள் அமைப்பது போன்ற செயல்களால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அண்மையில் பேஸ் புக்கில் ஒரு இளைஞர் விடுத்த அழைப்பை ஏற்று திருச்சியில் ஒரே நாளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியைத் தூர்வார இணைந்ததைக் கண்டு வியக்கிறோம்.

இத்தகைய பொதுமக்களின் தொண்டார்வத்தை அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நீர்நிலைக்கும் அந்தந்தப் பகுதி மக்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்ற நீர்வளத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

தொலைந்து போன நீர்நிலைகளையும், சாக்கடைகளாக மாறிவிட்ட நீர்வழித் தடங்களையும் மீட்டுத்தர அரசு முனைப்புடன் செயலாற்ற வேண்டும். செயலாற்றலும், அசாத்திய தைரியமும் கொண்ட முதல்வர், அரசியல்வாதிகளையும், அரசு பணியாளர்களையும் அவர்களது சுயவிருப்பம், சுயநலத்தை ஒதுக்கி வைத்து முழுமூச்சில் செயல்பட வைத்தார்களானால் இழந்துவிட்ட பொலிவைத் தமிழ்த்தாய் மீண்டும் பெற்று விடுவாள் என்பது திண்ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com