பார்த்து வாங்குவோம்!

அந்தத் தம்பதி மெத்தப் படித்தவர்கள். கணவன் தனியார் துறையில் பெரிய அதிகாரியாக வேலை பார்ப்பவர், மனைவி அரசாங்க அலுவலர். இருவருமே ஓய்வின்றி உழைப்பவர்கள்.
Published on
Updated on
2 min read

அந்தத் தம்பதி மெத்தப் படித்தவர்கள். கணவன் தனியார் துறையில் பெரிய அதிகாரியாக வேலை பார்ப்பவர், மனைவி அரசாங்க அலுவலர். இருவருமே ஓய்வின்றி உழைப்பவர்கள். சில நேரங்களில் வீட்டிற்கு வருவதற்கு இரவுகூட ஆகிவிடும். வீட்டிற்கு வந்த பிறகும் அலுவலகம் சம்பந்தமாக அலைபேசி ஒலித்துக்கொண்டே இருக்கும்.

அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை. ஒருநாள் காலையில் அக்குழந்தைக்கு வயிற்றுப்போக்கு உண்டானது. மருத்துவரிடம் காட்டியபின் சரியானதுபோல் இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் மீண்டு வயிற்றுப்போக்கு.

ஒருவர் மாற்றி ஒருவர் என்று மூன்று மருத்துவர்களை மாற்றியாகிவிட்டது. ஆனால், பிரச்னை தீரவில்லை. மிகவும் பிரபலமான மருத்துவரிடம்கூட சிபாரிசு முறையில் பார்த்தாகிவிட்டது. கணவனுக்கு ஒரே கவலை.

நண்பர் ஒருவர் ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைப் பற்றிக் கூற, பெரிய மருத்துவர்களே ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர் என்ன செய்துவிடப் போகிறார் என்று வேண்டா வெறுப்பாக அந்த ஆயுர்வேத மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்தார்கள்.

அந்த ஆயுர்வேத மருத்துவர், குழந்தையின் விவரங்களை கேட்க, கணவன் சலிப்புடன் விவரங்

களைக் கூறுகிறார். பிறகு மருத்துவர், குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் டப்பா உணவுகளை நான் பார்க்க வேண்டும் என்கிறார். கணவனும் காண்பிக்கிறார்.

அப்போது ஆயுர்வேத மருத்துவர், ஒரு டப்பாவில் அச்சிடப்பட்டிருக்கும் காலாவதி தேதியை காண்பிக்கிறார். அந்த டப்பா உணவு காலாவதியாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. இதுதான் உங்கள் குழந்தையின் வயிற்றுப்போக்குக்கு காரணம். மற்றபடி பயப்படும்படி ஏதும் இல்லை என்றார். கணவன், மனைவிக்கு நிம்மதி. மேலே குறிப்பிட்டது ஒர் உதாரணம் மட்டுமே. வெளியில் தெரியாத இதுபோன்ற சம்பவங்கள் பல.

இதுபோல் நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவு, மருந்து, உடல் சம்பந்தமான பொருள்களின் தயாரிப்புத் தேதியையும், காலாவதி தேதியையும் அதில் சேர்த்துள்ள மூலப் பொருள்களின் விவரங்களையும் நம்மில் எத்தனை பேர் பார்த்து, பரிசோதித்து வாங்குகிறோம்.

மெத்தப் படித்தவர்களும் இதுபோன்ற விஷயங்களை கவனிப்பதில்லை என்பதுதான் வேதனை. இன்றைய காலகட்டத்தில் தொலைகாட்சிப் பெட்டி இல்லாத வீடு இல்லை. தினசரி படிக்காதவர்களும் பெரும்பாலும் இல்லை. அப்படி இருந்தும் விழிப்புணர்வு அடையாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு காலாவதியான மருந்துகள் விற்கப்படுவதாக மிகப்பெரிய அளவில் பிரச்னைகள் எழுந்தது. அதன் பிறகு காலாவதியான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மாத்திரைகளைப் பொருத்தவரை 10 மாத்திரைகள் கொண்ட அட்டையில்தான் தயாரித்த தேதியும், கலாவதி தேதியும் அச்சிடப்பட்டிருக்கும். ஒன்று, இரண்டு மாத்திரைகள் வாங்குபவர்களின் நிலை?

போகட்டும், பெரிய டப்பா, பாக்கெட்டுகளில் தேதி விவரங்கள் இருக்கும். இன்று நுகர்வோரின் நீங்கா அன்பைப் பெற்ற மிகச் சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஊறுகாய், ஷாம்பூ, தேங்காய் எண்ணெய் முதலான பொருள்களில் எங்கு தேதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன?

சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், அதன் காலாவதி தேதி தெரியாமலேதான் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சிறிய பாக்கெட்டுகளை பயன்படுத்தியபின் வீசி எறியப்படும் குப்பையோ, நிலத்திற்குக் கேடு. அண்மையில் குற்றாலத்தில்கூட இது சிறிய பாக்கெட்டுகளால் தண்ணீரும், பகுதியும் பாதிக்கப்படுவதால் அதற்குப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கிறார்கள்.

நுகர்வோர் கலாசாரம் கொடிகட்டிப் பறக்கும் இன்றைய காலகட்டத்தில்கூட, நுகர்வோரிடம் பல விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும்கூட, ஏமாறும் மக்கள் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

"நுகர்வோரே ராஜா' என்பதை நாம் எப்போது அறிந்து கொள்ளப்போகிறோம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com