
பஞ்சாப் மாநில கிராமங்களிலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பரிசோதித்தபோது, அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, கோதுமை மூலம் டி.டி.டி. - எச்.சி.எச். - லின்டேன் - கிளேயாரோசேன் - எண்டோசல்பான் - மனோகுரோட்டோபஸ் - கெட்டாசியர் - பாஸ்மால்மிடான் - மாலதியான் - குளோரோபைரிபாஸ் போன்ற நச்சுப் பொருள்கள் அவர்களின் குருதியில் அதிகமாக கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் முக்கிய உணவுப் பொருள்களான அரிசி, கோதுமையில் கலந்துள்ள பூச்சிக் கொல்லி, வேதிப் பொருள்கள் 40 விழுக்காடு அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். தினந்தோறும் நாம் பயன்படுத்தும் காய்கறிகள், இறைச்சி, பால், முட்டை போன்ற 200-க்கும் மேற்பட்ட தானியங்களில் சோதனை நடத்தப்பட்டதில் 100 மேற்பட்ட தானிய வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவினைவிட 150 மடங்கு நச்சுத் தன்மை அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. சாதாரணமாக ஒரு மனிதனால் 50-லிருந்து 100 மி.லி. கிராம் விஷத்தன்மையைத்தான் தாங்கிக் கொள்ளமுடியும். ஆனால், உலக சுகாதார நிறுவன ஆய்வு அறிக்கையின்படி நாம் உண்ணும் உணவில் டைகுளோரோ டைபினில், ட்ரைகுளோரோ ஈதேன் போன்ற இன்னும் பல பூச்சிக்கொல்லி வேதிப்பொருள்கள் பிற நாடுகளைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகம். அதுமட்டுமல்ல, உலக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுமம் உலகின் பல்வேறு நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்திய தாய்மார்களின் தாய்ப்பாலில் கலந்துள்ள டி.டி.டி.யின் அளவு மற்ற நாடுகளிலுள்ள தாய்மார்களின் தாய்ப்பாலைவிட எட்டு சதவீதம் அதிகம் என்ற அதிர்ச்சிகரமான முடிவை அறிவித்துள்ளது.
கேரள மாநில மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் ஆய்வில் (கேரள - குட்டநாடு பகுதியில் மட்டும்) கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக ஓர் ஏக்கருக்கு 3.89 டன் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால், பயிர்கள் மட்டுமல்ல பழங்களும் மனிதனுக்குப் பகை. இவை கருச்சிதைவையும், குறைப் பிரசவத்தையும் ஏற்படுத்துகின்றன.
நாகரிக கலாசாரமான குளிர்பானத்திற்காக ஆண்டுக்கு 70 கோடி டாலர் வரை விளம்பரத்திற்காக செலவு செய்யப்படுகிறது. இந்த வகை அயல்நாட்டு பானங்களில் (இது நம் நாட்டில்தான் தயாரிக்கப்படுகிறது) பாஸ்பேரிக் அமிலம் (வேதிப்பொருள்) கலந்திருக்கிறது. அதில் உள்ள பாஸ்பேட் ரத்தத்தில் கலப்பதால், அதற்கு சமமான அளவு கால்சியம் நமது எலும்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது. இந்த பாஸ்பேரிக் அமிலம் சிறுநீரில் வெளியேறும்போது நமக்கு தேவையான கால்சியத்தையும் சேர்த்தே வெளியேற்றுவதால் எலும்புகளும், பற்களும் வலுவிழக்கின்றன.
அயல்நாட்டு குளிர்பானத்தை பயன்படுத்துவதால் பணத்தை கொடுத்து நோயையும் விலைக்கு வாங்குகிறோம். அவை வேதிப்பொருள்களுடன் சுவையூட்ட கலக்கப்படும் இனிப்புகளால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்த கொதிப்பு, நீரிழிவு, சிறுநீரகப் பாதிப்பு போன்ற பல பாதிப்புகள் நாம் அழைக்காமலேயே நம் உடலுக்கு விருந்தாளியாக வந்து நிரந்தரமாகத் தங்கி விடுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.