கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழையமொழி. தண்ணீரில்லா ஊரில் தங்கியிருக்க வேண்டாம் என்பது இப்போது உருவாகிப்போன புது மொழி. எங்கள் மதுரை மாநகரம் அப்படித்தான் இப்போது ஆகிவிட்டிருக்கிறது. நிறையப்பேர் அங்கங்கே வீடுகளைப் பூட்டிப் போட்டுவிட்டு இடம் பெயர்கிறார்கள். சிலர் இருபதாண்டு, முப்பதாண்டு என்று வாழ்ந்து கழித்த வீட்டை விற்று விட்டுக் கிளம்புகிறார்கள். வேறு இடத்தில் இன்னும் கொஞ்ச காலத்திற்கு சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையில் நகர்கிறார்கள்.
சாதாரண ஜனம் தண்ணீருக்கு லோலோவென்று அலைகிறது. பாடாய்ப்படுகிறது. உனக்கு எனக்கு என்று அடிபிடியில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதினைந்து நாளுக்கு ஒரு முறை தண்ணீர் லாரி வருகிறதென்றால் அங்கே கூடும் கூட்டமும் காலிப் பிளாஸ்டிக் குடங்களும் கண்கொள்ளாக் காட்சி. ரசிக்கவா முடியும் அந்த வண்ணக் கோலத்தை?
நான் குடியிருக்கும் பகுதி ஒரு காலத்தில் அத்தனை செழிப்பு. கிணற்றில் குனிந்து கையால் தண்ணீரை அள்ளலாம். கற்கண்டாய் இனித்தது. இன்று எண்ணெயும் நுரையுமாய், என்ன இது தண்ணீரா? பூமியின் கண்ணீரா? பத்து நிமிடம் ஓடிய மோட்டார் இன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாய் ஓடினாலும் வெறும் காற்றுத்தான் குழாய்களின் வழியே பயணிக்கிறது.
எங்கள் பகுதியில் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க, மக்கள் எப்போதோ பழகியாயிற்று. நான் சொல்வது பாட்டில் தண்ணீரை அல்ல. கேன் தண்ணீரை. அது எந்த அளவுக்கு சுத்தம் என்ற கேள்வி இருந்துகொண்டேயிருக்கிறது. "சுடவச்சுக் குடிக்க வேண்டியதுதான்' என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
மினி லாரிகளில் தண்ணீர் வர ஆரம்பித்தாயிற்று. எப்போதும் லாரிச் சத்தம்தான். இரவு பகல் என்ற கணக்கே இல்லை. மக்களிடம் காசு இருக்கிறது. கொடுக்கிறாங்க, வாங்கிக்கிறாங்க, இதிலென்ன அதிசயம்? அப்படித்தானே விலைவாசிகளும் ஏறுகின்றன அப்படித்தானே பஸ் கட்டணங்களும், மின் கட்டணங்களும் ஏறின
அது கிடக்கட்டும். இத்தனை தண்ணீர் லாரிகள் எங்கேயிருந்து முளைத்தன? பார்த்தால் எல்லாம் பழைய லாரிகள் போல் இருக்கின்றனவே! வெகு நாளாய் இந்தத் தொழிலில் இருக்கிறார்களோ? இந்த லாரியைக் கழுவுவார்களா அல்லது அப்படி அப்படியே தண்ணீரை நிரப்பி எடுத்து வருவார்களா? உள்ளே தேங்கிக் கிடக்கும் கசடுகளை நீக்குகிறார்களா இல்லையா? தண்ணீரின் மூலமாய்த்தானே எல்லா வியாதிகளும் பரவுகின்றன?
"அதெல்லாம் க்ளீனா இருக்கும் சார். அப்படியெல்லாம் நீங்க நினைக்கவே வேணாம்'. பதில் அழகாய்த்தான் வருகிறது. பேசக் கற்றவர்கள். பேசுகிறார்கள்.
"நுரையே வரல்லே கவனிச்சீங்களா. அழுக்குப் போகமாட்டேங்குது வழவழன்னு இருக்கு சார்'. எதிர் வீட்டுக்காரரின் புலம்பல்.
லாரிகளில் செல் ஃபோன் எண் எழுதப்பட்டிருக்கிறது. கண்ணிலிருந்து அது மறையும் முன் பரபரப்போடு குறித்து வைத்துக் கொள்கிறார்கள். எங்கே அதுவும் கிடைக்காமல் போகுமோ என்று. இதுவும் கடந்து போகும் வசனமெல்லாம் சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு. யதார்த்தம்?
இன்று கொஞ்சம் சமாளிக்கிறோம், நாளை என்ன செய்வது என்று மிகச் சிலர். என்னத்தச் சமாளிக்கிறது அதான் பொட்டுத் தண்ணியில்லையே என்று மேல் தொட்டியின் அளவிற்கேற்றாற்போல் கேட்ட காசைக் கொடுத்தனுப்பும் அப்பாவிகள். வேறு வழி? நம் வயிற்றுக்குச் செலவழிப்பதை விட, இன்று தண்ணீர், மின்சாரம் என்று கொடுப்பதுதான் அதிகமாகிக் கொண்டு போகிறது...!
தொட்டிக்கு எவ்வளவுங்க.
2000 லிட்டர் 350 லேர்ந்து 400 ரூவா சார்.
என்னப்பா, ரொம்ப அநியாயமா இருக்கு. பார்த்துச் சொல்லுய்யா. சின்னத் தொட்டிதான.
இங்கேயிருந்து ஹோஸ் இழுத்து மேலே மாடில தொட்டில இறக்கணும்ல சார். எழுநூற்றம்பது ஆகும் சார். உங்க வீட்டுத் தொட்டி பெரிசு சார். ரெடிமேடான பதில்.
அது என்ன கணக்கோ, மனதில் தோன்றியதுதான் ரேட்.
அது சரி, எங்கேயிருந்து கொண்டாறீங்க.
அது முப்பது நாப்பது கி.மீ. போகணும் சார். போகிறார்கள். வருகிறார்கள். அங்கே என்றைக்கு இல்லாமல் போகுமோ?
எங்கள் பகுதியில் ஒரு பெரிய கண்மாய் இருந்தது. கரையில் ஒரு அய்யனார் கோயில். ஆண்களும், பெண்களும் அள்ளிக் குளித்த காலம். கரையேறி அய்யனாரை வணங்கி பயபக்தியோடு கடந்த நாள்கள் அவை. ஒரு ஓரத்தில் கம்பீரமான மாடுகள் குளிரக் குளிர தங்கள் எசமானரின் குளிப்பாட்டலுக்குத் தலையசைத்து மனம் குளிர்ந்த காலம்.
பக்கத்தில் ஒரு மேல் நிலைத் தொட்டி வந்தது. மிகப் பெரிய, பிரம்மாண்டமான, ராட்சசத்தனமான தொட்டி. மேலே சிறுவர்கள் பயமின்றி கிரிக்கெட் விளையாடலாம். அவ்வளவு பெரிய கிரவுண்ட். தண்ணீரை ஏற்றினார்கள் கண்மாயிலிருந்து. ஏன் சார் இப்படி கிரவுண்ட் வாட்டர் குறைஞ்சிடுமில்ல?
இந்தத் தண்ணிய நாங்களா வச்சிக்கப் போறோம்? உங்களுக்குத்தான் சார்! வீடு வீடா சப்ளை பண்ணப் போறோம். ஐயாயிரம் வீடுகளில் ஐநூறு வீடுகள் பலனடைந்திருக்குமா? அப்போதே மற்றவர்கள் ரோட்டில் அலைந்தார்களே? அதுவும் ஆறாயிரம், ஏழாயிரம் கட்டி குழாய் இணைப்புக் கொடுத்தவர்களுக்கு மட்டும். அது சரி, இன்று அவர்களுக்கும் தண்ணீர் இல்லை, எவருக்கும் தண்ணீர் இல்லை.
இவை எல்லாவற்றினூடே இன்னொன்று, அதுதான் முக்கியமானது. கூட்டுக் குடிநீர் திட்டம்.
அப்டியா வரப்போகுதா அப்பாடி. எந்த வழியிலயாவது தண்ணி வந்தாச் சரி. ஓடி ஓடிப் போய்ப் பஞ்சாயத்தில் பணத்தைக் கட்டினார்கள் பலர். அது ஆயிற்று வருடக் கணக்கில். இன்று போய்க் கேட்டால்.
"அந்தத் திட்டம் ஃபெய்ல்யூர் சார் பாதாளச் சாக்கடை போடும் போது, அல்லது தண்ணிக் குழாய் போடும் போது, இந்தக் காசக் கழிச்சிக்கிடுவாங்க. அடிஷனலா எவ்வளவுண்டோ அதைக் கட்ட வேண்டியிருக்கும். பணத்தைத் திருப்பித் தர மாட்டாங்க'.
அடிச்சிச் சொல்கிறார் பஞ்சாயத்தில் பணிபுரிபவர்.
அது சரி, கட்டின ஆறாயிரத்தத் திருப்பிக் கொடுன்னு நாங்கென்ன கேஸா போடப் போறோம். யானை வாய்க் கரும்பு - வேதனையில் முனகிக் கொண்டே நகர்கிறார்கள் மக்கள். இது மதுரைப் பிரச்னை மட்டுமா? ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டின் பிரச்னையல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.