
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோய்கள் நம்மை தாக்காமல் இருப்பதற்கும் அடிப்படையாக அமைவது உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வெள்ளம் வருமுன்பே அணை கட்டுவது போல, நோய் வருமுன்பே உடற்பயிற்சி செய்வது சிறந்த அரணாக அமையும். இப்போது உடற்பயிற்சி செய்பவர்கள் நோய் வந்ததால் அதன் தீவிரத்தைக் குறைப்பதற்காகவும், உடலுறுப்புகள் பழுதடையாமல் காக்கவுமே உடற்பயிற்சியை செய்து வருகின்றனர். உடல் ஆரோக்கியமாக இருக்கும்போதே உடற்பயிற்சியை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
உடற்பயிற்சியைப் போல உணவுக் கட்டுப்பாடும் மனிதனின் மனஉறுதியைச் சோதிக்கும் மற்றொரு கருவி. "உணவே மருந்து, மருந்தே உணவு' என்று வாழ்பவர்களைவிட, "வாழும் வரை வாய்க்கு ருசியாக உண்போம், விதி வந்தால் வேதனையை அனுபவிப்போம்' என்று எண்ணி, ஒவ்வொரு வேளை உணவையும் ரசித்து, ருசித்து உண்பவர்களே அதிகம். உடல் இயங்குவதற்கு சக்தியை வழங்குவது மட்டுமல்ல, நோய்களை வரவழைப்பதிலும் உணவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
உலக அதிசயங்களில் உயர்வானது, மனித உடல் இயக்கமே. அதில் ஒரு பகுதியான, உண்ணும் உணவு சத்தாக மாற்றப்படும் அதிசயமும் மிக உயர்ந்த அதிசயமே. நாம் உண்ணும் உணவே ரசமாகி, (சத்து) இரத்தமாகி, தசையாகி, எலும்பாகி, கொழுப்பாகி, மஜ்ஜையாகி நம் உடலை வழிநடத்துகிறது என்பதால், உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நல்ல உணவை உண்ணுவதும், நஞ்சான உணவைத் தள்ளுவதும் நமது கையில்தான் உள்ளது.
நாம், எந்த வகை உணவை உட்கொள்கிறோம், அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன, அல்லது அதனால் என்னென்ன கேடுகள் விளைகின்றன, நாள் ஒன்றுக்கு எந்த அளவு உணவு உட்கொள்கிறோம், எத்தனை வேளை உட்கொள்கிறோம், உண்ட உணவு ஜீரணிக்கும் அளவுக்கு உழைக்கிறோமா, ஜீரணித்த பிறகே அடுத்த வேளை உணவை உட்கொள்கிறோமா, உடலின் ஜீரண சக்திக்கு ஏற்பவும், வயதுக்கு தக்கவாறும் உணவு உட்கொள்கிறோமா என்றெல்லாம் நாம் சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நமது எண்ணமெல்லாம் பசியோடு இல்லாமல் குறிப்பிட்ட வேளையில் ஏதாவது ஒரு உணவை உட்கொள்ள வேண்டும், அந்த உணவு ருசியாக, பிடித்த உணவாக அமைந்துவிட்டால் நல்லது என்றவாறே அமைந்து விடுகிறது. நமக்கு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மட்டுமே, உணவு பற்றிக் கவலைப்படுகிறோம். அப்போதும்கூட நோய்க்கு ஏற்றவாறு, தேவையற்ற உணவை ஒதுக்கித் தள்ள மனம் ஒப்புவதில்லை. ருசிக்கு அடிமைப்பட்ட நாக்கிற்கு, நோயின் வேதனையை விட, வாயின் ருசியே வலிமை வாய்ந்ததாக அமைந்து விடுகிறது. மனம் விரும்பும் உணவை மருத்துவர் கைவிடச் சொன்னால், உணவை மாற்றிக் கொள்ளும் நபர்களைவிட, மருத்துவர்களை மாற்றிக்கொள்ளும் நபர்களே அதிகம்.
இதற்குக் காரணம் ருசிக்கு அடிமைபட்டு விடுவதால், வாயை நம்மால் கட்ட முடிவதில்லை.
பறவைகளும், விலங்குகளும் இயற்கை விதிகளை மீறுவதில்லை. மனிதன் மட்டுமே இயற்கைக்குப் புறம்பாக நடந்து கொண்டு, இயற்கை தரும் தண்டனைகளை ஏற்றுக்கொண்டு, இயற்கையோடுப் போராடுவதிலேயே காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறான். எந்த ஒரு பறவையும் இரவு நேரங்களில் இரையை எடுத்துக் கொள்வதில்லை. பகலில் மட்டுமே புசிக்கத் தயாராகிறது. விலங்குகளும் அதற்குரிய நேரங்களில் மட்டுமே பசியாறுகின்றன. வயிற்றில் பசியில்லாமல் அவை உணவை ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால் மனிதனோ, பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேளாவேளைக்கு உணவை எடுத்துக் கொள்ளத் தவறுவதில்லை. இரவு உணவு எவ்வளவு சீக்கிரம் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவு உடல் ஆரோக்கியம் அமையும். இரவு உணவை நாம் சீக்கிரம் முடித்துக் கொள்வதில்லை. இரவு உணவுக்கும், தூக்கத்திற்கும் குறைந்தது இரண்டு மணி நேரம் இடைவெளி இருந்தால், அதற்குள்ளாகவே உணவு ஓரளவு ஜீரணிக்கப்பட்டு, தூக்கத்தில் உடல் ஓய்வு கொள்ளும்.
ஆரோக்கியமும், நோயும் நமக்கு ஒரே நாளில் வந்து விடுவதில்லை. நாம் உண்ணும் உணவு, நமது பழக்கவழக்கங்கள் இவற்றிலே ஏற்படும் மாறுபாட்டால் உடல் கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைவதே நோயின் தொடக்கம். அதுபோலவே நமது உணவு, பழக்கவழக்கங்கள் இவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக திருத்தங்கள் ஏற்பட்டு, அதனால் சீர்படுவதே உடலின் ஆரோக்கியம் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
உடல் தன்னைத் தானே சரிப்படுத்திக் கொள்ள இயற்கை எப்போதும் உதவிக் கொண்டிருக்கிறது. நாம்தான் அவசரப்பட்டு, இயற்கையை மீறி, செயற்கைப் பொருள்களைத் திணித்து, உடலின் இயற்கைத் தன்மையை மாற்றி விடுகிறோம். இயற்கையின் முழு ரகசியங்களைப் புரிந்து கொள்ள முடியாத நாம், இயற்கையை மதித்து, இயற்கையோடு ஒன்றி வாழும்போது, இயல்பாக நமது ஆரோக்கியம் காக்கப்படுகிறது. மீறும்போது மட்டுமே இன்னல்கள் நோயாக நம்மைத் தாக்குகிறது. உணவுதானே, இதில் ஏன் கட்டுப்பாடு என்று அலட்சியமாக இருப்பதை விட்டுவிட்டு, உணவே நம் ஆரோக்கியத்தைக் காக்கிறது என்ற கவனத்துடன் இனி உணவைப் பார்ப்போம். உணவுக் கட்டுப்பாட்டை சுமையாக எண்ணாமல், சுகமாக எண்ணினால், ஆரோக்கியம் என்னும் அற்புதக் கவசம் நம்மை எந்நாளும் பாதுகாக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.