
அடிப்படை வசதிகளில் ஒன்று மயான வசதி. மனிதவர்க்கத்தினருக்கு உறைவிடம் எவ்வாறு முக்கியமோ - அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான் "உயிர் நீத்தார் உறைவிடம்'. துரதிருஷ்டவசமாக பெரும்பான்மையான மக்களும் சரி, உள்ளாட்சி அமைப்புகளும் சரி இதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. கழிப்பறை வசதிகளைப் போலவே, மயான வசதிகளையும், உள்ளாட்சி நிர்வாகங்கள் புறக்கணிக்கின்றன. மயானங்களை மேம்படுத்தி, அனைத்து வசதிகளையும் செய்து சீராக பராமரிக்க போதுமான நிதியை ஒதுக்குவதில்லை. அயல் நாடுகளுக்கு அடிக்கடி அரசுமுறைப் பயணங்கள் சென்றுவரும் மக்கள் பிரதிநிதிகள் - அந்நாடுகளின் மயானங்கள் பூங்காவுக்குச் சமமாக பராமரிக்கப்பட்டு வருவதை பார்த்திருக்கக் கூடும். இருந்தும் அதைப் பற்றி பேசுவதும் இல்லை. அயல்நாடுகளில் இருப்பது போல நமது நாட்டில் மயானங்கள் சகல வசதிகளுடன் இருக்க வேண்டும் என்று ஆசைகூட படுவதில்லை. அயல் நாட்டின் தொழில் வளத்தையும் தொழில்நுட்பத்தைப் போற்றி, நமது நாடும் அவ்வகையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஏனோ அயல்நாடுகளில் உள்ள மயானங்களைப் போல, இங்கும் அடிப்படை வசதிகளைக் கொண்ட மயானம் தேவை என்று பேசுவதுகூட கிடையாது.
தற்போது பல நகரங்களில் "மின் மயான எரிமேடை' வசதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. கோவையில் தனியார் அறக்கட்டளை மூலம் மின் மயானம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சென்னை மாநகராட்சியால் சென்னை, பெசன்ட் நகரில் இயக்கப்பட்டு வரும் மின் மயானம் சீராக பராமரிக்கப்படாமல், அடிக்கடி பழுதடைந்துவிடுகிறது என்று செய்திகள் கூறுகிறது. மின் மயானம் அமைக்கக் கூடுதல் செலவு ஆகிறது. குறைந்த செலவில் எரிவாயு உலை மயானம் / தகன மேடை சென்னையில் சில பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு திருப்திகரமாக இயங்கி வருகிறது. இவைகளை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி வருகின்றனர். என்றாலும், இந்த மயான வசதி எல்லா நகரப் பகுதிகளிலும் செய்யப்படவில்லை என்பது பெரும் குறை.
பல நகரங்களில் பிரேதங்களை தகனம் செய்பவர்களுக்கு ஓரளவுக்காவது வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பிரேதங்களை புதைக்கும் வழக்கமுடையவர்கள், இடுகாடுகளில் போதிய வசதியின்றி அல்லல்படுகிறார்கள். மயான பூமியில் - புதர்கள் மண்டிக் கிடக்கும். பிரேத சடங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அத்தனைப் பொருள்களும் அப்படியே அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே சிதறிக் கிடக்கும். சவத்தை அடக்கம் செய்யும்போது, மரியாதை செலுத்தும் வகையில் எவரும் செருப்பணிவதில்லை. செருப்பணியாமல், மயானபூமியில் நடக்கும்போதும் சவத்தை வலம் வரும்போதும், உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் முட்கள் நமது பாதத்தை பதம் பார்க்கும். தண்ணீர் மற்றும் விளக்கு வசதிகள் இல்லாத நூற்றுக்கணக்கான இடுகாடுகள் தமிழகத்தில் உள்ளன. இந்து சமயத்தவரின் மயானங்களின் நிலைமைதான் இப்படி. கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் மயானங்கள் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. அவைகளில் ஒரு சில பூஞ்சோலைகளைப் போல காணப்படுகின்றன. ஆனால் பல இந்துக்கள் மயானங்களோ இன்றும் முட்புதர்களாகத்தான் இருக்கின்றன. எது எதற்கோ குரல் எழுப்பும் இந்து அமைப்புத் தலைவர்கள்கூட, இதுகுறித்து கவலைப்படுவதில்லை. கிராமங்களில் இன்றும்கூட, மயானங்களுக்கு பாதை வசதியில்லை. கிராமங்களில் சில சாதிகளுக்கென்று இடுகாட்டில் - தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாதித் தலைவர்கள் இந்த இடுகாடுகளின் நிலை குறித்து கவலைப்படுவதில்லை. இடஒதுக்கீடும், பல உரிமைகளும் தங்கள் சாதிகளுக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்தும் சாதித் தலைவர்கள் - இடுகாட்டிற்கான வசதி குறித்து எந்த போராட்டத்தையும் நடத்துவதில்லை!
தமிழகத்தில் சுடுகாடுகளுக்கு "கூறை' வசதி செய்ய நிதி ஒதுக்கினால் அதிலும் நம்மூர் அரசியல்வாதிகள் "ஊழல்' செய்திருக்கிறார்கள். கார்கில் போரில் பலியானவர்களுக்காக வாங்கப்பட்ட "சவப்பெட்டி' பேரத்தில் நடந்த ஊழலும் - நாடறிந்த ஒன்று. ஊழல்களுக்கு சவப்பெட்டி மற்றும் மயானமும் தப்பியது இல்லை.
முக்கியத் தலைவர்கள் மறைந்தால் கடற்கரையில் சமாதி. முக்கியப் பிரமுகர்கள், கட்சித் தலைவர்கள் இறந்தால் அவர்களுக்கு மயானத்தில் பிரத்யேக இட வசதி; இடம் சுத்தப்படுத்தப்பட்டு பளிங்குக் கற்கள் பதித்த கல்லறை வசதி. ஆனால், நமது மக்கள் ஆட்சியில் அனைவரும் சமம், அனைவருக்கும் சம வாய்ப்பு என்றுதான் அரசியல் சாசனம் அறிவித்துள்ளது. உண்மையோ வேறு விதமாக உள்ளது. சமரசம் உலாவும் இடம், அனைவருக்கும் ஆறு அடி மண்தான் என்றாலும் அரசியல்வாதிகளுக்கும், வசதி வந்தவர்களுக்கும், சுடுகாட்டில்கூட இடஒதுக்கீடு என்பதுதான் நிதர்சனம்.
சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும், விண்கலத்தை அனுப்பியிருக்கிறோம் என்று பெருமை கொள்ளும் நாம், மயானம் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டிருப்பது குறித்து பெருமை கொள்ள முடியுமா?
இன்றைய காலத்தில் ஒரு பிணத்தை எடுக்க ஆகும் செலவில் ஒரு திருமணத்தையே நடத்தி விட முடியும். ஒரு பரம ஏழைகூட பூ பல்லாக்கு, சங்கு ஊதல், பறை / பேண்ட், டப்பாங்குத்து ஆட்டம், பாடையைச் சுமந்து செல்ல கூலி ஆட்கள், பட்டாசு, மயான செலவு என்று பல வகையில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இச்செலவுகளைக் குறைக்க நிச்சயம் முடியும். மதத் தலைவர்கள் தான் இதைச் செய்ய முன்வர வேண்டும். சவத்தை பாடை கட்டி 4 பேர் சுமந்து செல்லும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது வரவேற்க வேண்டிய ஒன்று. நகரங்களில் சவத்தைக் கொண்டு செல்ல அமரர் ஊர்தி வசதி சில தனியார் நிறுவனங்கள் செய்து வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ சவங்களை காட்டிற்குக் கொண்டு செல்ல "அமரர் ஊர்தி' வசதியை செய்து தர முன்வர வேண்டும். அது போலவே, அறக்கட்டளை நிறுவி, அனைத்து மயானங்களையும் சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.