

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி, அன்பே சிவம், அன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவிலார், காதல் செய்வீர் உலகோரே என்றெல்லாம் முன்னோர்களும், ஆன்மிகவாதிகளும், காதலையும் அன்பையும் ஒருசேர புனிதமாகவே கருதினர். இன்றைய சமுதாயத்தில் காதல் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இனக்கவர்ச்சியில் ஏற்படுவது என்றே விளம்பரபடுத்தப்படுகிறது.
தருமபுரிக்கருகில், படிக்கும் வயதில் 19 வயது இளைஞரும், 16 வயது சிறுமியும் இருவேறு
சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதை ஏற்காத பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அந்தந்த சமுதாயத் தலைவர்களைப் பொருத்தவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை செய்வதைவிட அவர்களின் ஒட்டுமொத்தமான வாக்குகளை கவருவதற்கே ஆர்வம் காட்டுகிறார்கள். இதை புரிந்துக்கொள்ளாமல் ஒற்றுமையாக சகோதரர்களாக வாழவேண்டிய இரு சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் வெறிகொண்டு தாக்கிக் கொண்டனர். அடிதடி, குடிசை எரிப்பும் நடந்தது. ஊடகங்களும் அதை வெளிச்சம் போட்டன. தமிழகமும் தலைகுனிந்தது.
முன்பெல்லாம், காதல் ஜோடி தற்கொலை, காதலர் காவல் நிலையத்தில் தஞ்சம், கல்லூரிக்கு சென்ற பெண் மாயம் பெற்றோர் தவிப்பு இதுபோன்ற தலைப்புகளில் செய்திகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக தினசரிகளில் காணக்
கிடைக்கும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நகரம், கிராம பேதமின்றி இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி குடும்பங்கள் தவிக்கும் நிலை உள்ளது. பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தற்போது இது சமுதாய பிரச்னையாகி உள்ளது. இதை மையமாக வைத்து சில அரசியல் தலைவர்கள் காதல் திருமணத்தை ஆதரித்தும், சிலர் காதல் திருமணத்தை நாடகம் என வர்ணித்தும் அரசியல் நடத்தி வருகின்றனர்.
இதெல்லாம் போதாதென டீக்கடை முதல் பிரபல ஊடகங்கள் வரை காதல் திருமணம் சரியா தவறா என்ற விவாதங்கள் சூடு பறக்கின்றன.
நடைமுறை வாழ்வில் என்னதான் நடக்கிறது.
வேலைவெட்டி இல்லாத, நல்ல பழக்க வழக்கங்கள் இல்லாத, வசதி குறைந்த எந்த பையனுக்கும் அவன் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களே பெண் தர முன்வருவதில்லை. சொந்த மாமா, அத்தை போன்றோரும் பெண் தர முன்வருவதில்லை. அதேப்போன்று நல்ல வேலையிலுள்ள வசதியான பையன் அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணை திருமணம் செய்ய முன்வருவதில்லை.
இது இப்படி இருக்க, வசதியான, நல்ல உத்தியோகத்திலுள்ள ஆணோ, பெண்ணோ அவர்களுக்கு இணையான வேறு சமுதாய ஆணையோ பெண்ணையோ காதல் திருமணம் செய்தால் காலபோக்கில் அதே பெற்றோர் அத்திருமணத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னாளில் உலகத்தில் நடக்காததா நடந்துவிட்டது? இதெல்லாம் இந்தக்காலத்தில் சகஜம்தான்... என பேசத் தொடங்கி விடுகின்றனர். தங்கள் மகள் காதலித்து திருமணம் செய்துக்கொள்வதை எந்தப் பெற்றோரும் விரும்பாவிட்டாலும், அவள் திருமணம் செய்துக்கொண்டு செல்லும் இடம், அவருக்கு பாதுகாப்பான நல்ல இடமாக வசதிவாய்ப்பு இருந்தால், அந்தக் காதலை நாளடைவில் ஏற்றுக் கொள்கின்றனர்.
அப்படியில்லாமல் காதல் என்ற பெயரில் கை பிடித்தவனோடு வாழ முடியாமல் கண்ணை கசக்கிக் கொண்டு தாய்வீடு வந்து நிற்கும்போதுதான் பெற்றோர் வயிறு எரிகிறது.
வெளி உலகம் தெரியாமல், குடும்பம், வாழ்க்கைபற்றி தெரியாமல், ஏதோ ஒரு உணர்ச்சிவேகத்தில் ஒருவனுடன் தன் பெண் ஓடிப்போய், வாழ்க்கையை இழந்துவிட்டு வாசலில் வந்து நிற்கும்போது, அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு தன் மகள் மீதான கோபம் அவனை காதலித்த இளைஞன் மீது திரும்புகிறது. இது எல்லா சமுதாயத்திலும் நடக்கிறது.
திருமணங்கள் நடந்து, அது நிலைபெறுவதற்கு பொருளாதாரமே முன்னிலை வகிக்கிறது. இளைஞர்களும் இளம்பெண்களும் குடும்ப அமைதியை குலைக்கும் காதலை விடுத்து, தங்களையும், குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பொருளாதார வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
21 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும்தான் திருமணம் செய்யக்கூடிய உடல் பக்குவமும், மனபக்குவமும் ஏற்படுவதாக மருத்துவர்களும், உளவியல் நிபுணர்களும் கூறுகின்றனர். விடலைப் பருவ திருமணங்கள் வேதனையில் முடிவதுதான் யதார்த்தம்.
சமுதாய சமத்துவத்திற்கும் ஜாதி வேறுபாடுகளை களைவதற்கும், காதல் கலப்பு திருமணங்கள்தான் ஒரே வழி என்பதும் உண்மையல்ல.
வெவ்வேறு சமுதாயத்தினர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டு நல்ல முறையில் வாழ்ந்தாலும், ஆண் எந்த சமுதாயமோ, அந்த சமுதாயத்தில்தான் அவனைத் திருமணம் செய்துக்கொண்ட பெண்ணும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இந்தக் கலப்புத் திருமணங்கள் ஒருபோதும் பேதங்களை அகற்றாது.
சமுதாய நல்லிணக்கம், சகஜமாக, இயற்கையாக இருக்கவேண்டும். அதுமட்டுமே நிரந்தரமான நல்லுறவையும், சமத்துவத்தையும் மலர செய்யும்.
காதல் என்பது கல்யாணத்திற்கு பிறகே என்பதும் தாம்பத்திய வாழ்க்கை என்பது வம்சவிருத்திக்கு மட்டுமே என்பதும் நமது கலாசாரமும், பண்பாடும், பாரம்பரியமும் நமக்கு காட்டும் பாதையாகும். நம்முடைய பண்பாட்டையும், கலாசாரத்தையும் உலகமே கைகூப்பி வரவேற்கிறது. அது நம்முடைய பாரம்பரிய சொத்து. அதை ஒருபோதும் கைவிட்டு விடக்கூடாது.
காதல் என்பது புனிதமானது. அது எல்லோரையும் வாழவைக்கும் தன்மைகொண்டது. யாரையும் சாகடிக்காது. சாகடிக்கவும் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.