மூளையின் செயல்பாடுகள்!

2014-ஆம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இங்கிலாந்து - அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் ஜான் ஓ கெபி (John O'Keefe) மற்றும் நார்வே மருத்துவத் தம்பதியர் மே பிரிட் மோசர் அண்ட் எட்வர்டு மோசர் (May Britt Moser & Edward Moser) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மூளையின் செயல்பாடுகள்!
Updated on
2 min read

2014-ஆம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இங்கிலாந்து - அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் ஜான் ஓ கெபி (John O'Keefe) மற்றும் நார்வே மருத்துவத் தம்பதியர் மே பிரிட் மோசர் அண்ட் எட்வர்டு மோசர் (May Britt Moser & Edward Moser) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு சாதாரணச் சூழலில் நம் மூளை GPS (Global Possitioning System) புவிஇடங்காட்டி போன்று செயல்பட்டு அந்தச் சூழலில் நம் நிலையினை எளிதில் உணர வைக்கும் ஆய்வுதான் இவர்களுக்கு நோபல் பரிசு பெற காரணமாக இருந்தது.

சாதாரணமாக ஒருவரைப் பார்த்து "உனக்கு மூளை இருக்கா' என்றால் அவர் மிகவும் கோபப்படுவார். அவர் மட்டும் அல்ல. நாம் அனைவரும் கோபப்படுவோம். யாருக்குத்தான் கோபம் வராது?

மனிதனின் தலைமைச் செயலகமாக செயல்படுவது மூளைதான். உடல் உறுப்புகள் அனைத்தும் நரம்புமண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நரம்பு மண்டலம் மூளையுடன் இணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது.

மூளை, மண்டை ஓட்டினுள் பாதுகாக்கப்பட்டு நம்மை மிகவும் சிறப்பாக இயங்க வைக்கின்றது.

பிறந்த குழந்தை மூளையின் எடை சுமார் 300 கிராம். குழந்தைக்கு முதல் ஒரு ஆண்டிலேயே மூளை சுமார் 3 மடங்கு வளர்ச்சி அடையும்.

சராசரியாக வளர்ந்த ஆணின் மூளையின் எடை 1,500 கிராம். பெண்ணின் மூளையின் எடை 1,100}லிருந்து 1,300 கிராம் வரை இருக்குமாம். ஆனால், மூளையின் செயல்பாட்டில் ஆண்-பெண் வேறுபாடு கிடையாது.

பிறந்ததிலிருந்து வளர்ந்துவரும் மூளையின் வளர்ச்சி, 18 வயதில் நின்றுவிடுகிறதாம். மேலும், ஒரு மனிதனின் மொத்த எடையில் சுமார் 2 சதவீதமே மூளையின் எடை ஆகும். அதாவது, ஒருவர் 70 கிலோ எடை இருப்பின் அவர் மூளையின் எடை 1.4 கிலோ ஆகும். அப்படியானால், நீங்களே உங்களின் மூளையின் எடையை தெரிந்து கொள்ளுங்களேன்.

யானை மூளையின் எடையின் அளவு மனித மூளையின் எடையைப்போல் ஆறு மடங்கு இருக்கும். ஆதாவது, சுமார் ஒன்பது கிலோ எடை. யானையின் எடையோடு ஒப்பிடுகையில் இந்த அளவு குறைவுதான். உடல் எடை மற்றும் மூளையின் அளவினை ஒப்பிடுகையில் அனைத்து உயிரினங்களிலும் மனிதனின் மூளையின் அளவு மிகப்பெரியதாகும்.

நமது உடலின் ஆற்றலில் 20 சதவீதத்தை மூளையே பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, நாம்தான் மூளையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் விழித்திருந்து செயல்படும் பொழுது சுமார் 25 வாட் சக்தியினை நமது மூளை உற்பத்தி செய்கின்றது. அதாவது 25 வாட் பல்பு எரியும் அளவிற்கான சக்தியினை வெளிப்படுத்துகின்றது.

ஒரு நாளைக்கு சுமார் 70,000 நினைவு அலைகளை நமது மூளை செயல்படுத்துகின்றதாம். அவைதாம் நமது மூளையில் நினைவுகளாக மாற்றப்படுகின்றன. அவை நீண்டகால குறுகியகால நினைவுகளாக மாற்றப்படுவதையே "நினைவுகள்' என்கின்றோம். திரும்ப அதனை செயல்படுத்தும்போது, நம்மால் வெளிகொணர முடிகின்றவற்றை நிரந்தர நினைவுகள் (Permanent Memory) என்கின்றோம். வெளிகொணர முடியாத எண்ண அலைகளை நாம் மறதி (Memory Loss) என்கின்றோம். சிறிது நேரத்திற்கு மட்டும் நினைவில் நிற்பவனவற்றை தாற்காலிக நினைவுகள் (Temperory Memory) என்கிறோம்.

நமது வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான நிகழ்வுகளை நாம் நமது மூளைக்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். அவற்றை எல்லாம் நமது மூளை உள்வாங்கி நினைவுபடுத்தி செயல்படுத்துகின்ற விதமே மூளையின் அளவுகோலாக செயல்பட்டு அவரை "அறிவாளி', "புத்தி கூர்மையானவர்' என்று அடையாளம் காட்டுகின்றது.

மூளையின் நடுபாகமாகக் காணப்படும் "லிம்பிக்' பகுதிதான் மனிதனின் உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்தி அவனைச் செம்மைப்படுத்துகின்றது.

மனிதனின் மூளை, குறுக்குக்கம்பி தொடர்பு கொண்டுள்ளது. இடது மூளை உடலின் வலது பாகங்களையும், வலது மூளை இடது பாகங்களையும் நிர்வகிக்கும் திறன் கொண்டவை. இடது கை பழக்கம் உடையவர்கள் வலப்புற மூளையினால் கட்டுப்படுத்தப்படுகின்றார்கள். இன்றைய மக்கள்தொகையில் சுமார் 10-15 சதவீதம் பேர் இடக்கைப் பழக்கம் உடையவர்கள்.

உள்ளதை உள்ளபடி செய்கின்ற செயலை மூளையின் இடதுபக்கமும், சற்று கடினமான செயலை வலதுபக்க மூளையும் செயல்படுத்துகின்றன. இடதுகை பழக்கமுடையவர்கள் வலது கை பழக்கமுடைய சாதாரண மனிதர்களைவிட 140 மடங்கு அறிவாற்றல் (IQ) அதிகமுடையவர்கள். அறிவியல் அறிஞர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், மேரி கியூரி, ஐசக் நியூட்டன் ஆகியோர் இடதுகை பழக்கமுடையவர்கள்.

சமீபகாலமாக "மூளைச்சாவு' பற்றிய செய்திகள் அதிகம் வெளிவருகின்றன. அதாவது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தால் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. ரத்த ஓட்டம் தடைபட்டு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத சூழ்நிலையில் மூளை செயல் இழந்து விடுகிறது. அப்படிச் செயல்படாத நிலை 8-10 வினாடிகள் தொடர்ந்து நிகழ்ந்தால் "மூளைச்சாவு' ஏற்படும்.

மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில் மனிதனின் பிற உடல் உறுப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அதனை அறுவை சிகிச்சை செய்து பிறருக்கு பொருத்துவது இப்போது நடைபெற்று வருகின்றது.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான அமைப்புடன்தான் மூளை உள்ளது. அது செயல்படுத்தும் விதத்தில்தான் வேறுபடுகிறது. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ஒரு குறிப்பிட்ட பகுதியில் 30 சதவீதம் விரிவடைந்து இருந்ததாம்.

அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், ஐன்ஸ்டீனின் மூளையை திருடி சுமார் 20 ஆண்டுகள் ஒரு கண்ணாடி ஜாடியில் பாதுகாத்து அதனை ஆய்வு செய்துள்ளாராம். அவர் எவ்வளவு பெரிய அறிவாளி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com