

நமது வாழ்க்கை இரண்டு பிரிவை உள்ளடக்கியது. ஒன்று நாம் வாழும் வாழ்க்கை. இன்னொன்று நம்முடைய வாரிசுகளின் வாழ்க்கை. எந்தப் பெற்றோருமே தம்மைவிட தம் வாரிசுகள் வளமாக வாழ வேண்டும் என ஆசைப்படுவது இயற்கை. இதற்காகவே நடுத்தர, ஏழை மக்களும் சக்திக்கு மீறி செலவு செய்து தங்களின் வாரிசுகளைத் தனியார்ப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். எதிர்பார்த்த பலன் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. பலருக்கு கிடைப்பதில்லை ஆதங்கப்பட்டு இவர்களும் மன உளைச்சல் அடைவதோடு மட்டுமன்றி வாரிசுகளையும் மன உளைச்சல் அடைய வைத்து விடுகின்றனர். அவர்களுக்குப் பிடிக்காத பாடத் திட்டத்தை அவர்கள் மீது திணிப்பதும் உண்டு. வாழ்க்கையின் அடித்தளம் அடிப்படைக் கல்வி என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கல்வி மட்டுமே வாழ்வின் எல்லையை நிச்சயிப்பதில்லை.
ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்திறமையை இறை சக்தி வழங்கியுள்ளது. படிப்பு சரியாக வராத வாரிசுகளின் தனித்திறமையை கண்டறிந்து அந்தத் துறையில் அபார வெற்றிக்கான ஊக்கத்துடன் வழிகாட்ட வேண்டும். இருக்கின்ற வசதி வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்து தரும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இதிகாசங்களிலிருந்து வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய கருத்துகளையும், தத்துவங்களையும் அறிய வைக்கலாம். சுய முன்னேற்றப் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை உண்டாக்கலாம்.
டி.வி. பார்ப்பதிலும், பொழுதுபோக்கிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபடும் வாரிசுகளை படிப்பதிலும் தனித்திறமைகளை வளர்ப்பதிலும் தூண்டவேண்டும். படிப்பதே மகிழ்வுதரும் செயலாக மாறும்போது நன்றாக படிக்கவும் செய்வார்கள்.
15 வயது முதல் 21 வயதுக்குள்பட்ட காலம் வாரிசுகளின் 50 ஆண்டுகால வாழ்வின் அடித்தளம். கண்கொத்திப் பாம்பாக கண்காணிக்க வேண்டிய காலகட்டம். உன் நண்பனைப் பற்றி கூறு; உன்னைப்பற்றி கூறுகிறேன் என்பார்கள். நல்ல நண்பர்களோடு பழக ஊக்கப்படுத்த வேண்டும். காதல் வயப்படும் காலமும் இதுதான். வாரிசு ஆணாக இருந்தால் தந்தையும், பெண்ணாக இருந்தால் தாயும் நல்ல நண்பர்களை போன்று சகஜமாகப் பழக வேண்டும்.
காதல் திருமணங்கள் 10-இல் 8 தோல்வி அடைவதையும், பெற்றோர் செய்து வைக்கும் திருமணங்கள் 10-இல் 8 வெற்றி பெறுவதையும் இடமறிந்தும் காலமறிந்தும் அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். உணர்ச்சிவசப்படும்போது அறிவு மழுங்கிவிடும் என்பதையும், இளமையில் தடுமாறும்போது வாழ்வே தடம்மாறி போகும் அபாயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். குடும்பத்தைப்பற்றி, கல்வியைப்பற்றி, எதிர்கால திட்டம் பற்றி தினசரி 1 மணி நேரமாவது சாதாரணமாக உரையாடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாரிசுகளின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து பேச வேண்டும். அதிகமான கட்டுப்பாடுகளை விதித்தால் தாழ்வு மனப்பான்மையும், எரிச்சலும், விரக்தியும், கோபமும் அடைவார்கள். நம்மை பார்க்கும்போது அவர்
களுக்கு மகிழ்ச்சி ஏற்படவேண்டுமே தவிர, பயம் ஏற்பட்டு விடக்கூடாது. அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்தால், தைரியும், துணிச்சல் இல்லாதவர்களாகவும், ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாகவும் எதிர்த்து போராடி வெல்லும் குணநலன் அற்றவர்களாகவும் வளர்வார்கள்.
24 மணி நேரமும் தொலைகாட்சிகள் இயங்குவதால் குடும்ப நலன்கருதி சிலமணி நேரமாவது தொலைகாட்சியை நிறுத்திவைக்க வேண்டும். தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே செல்போனை பயன்படுத்துவோம். வாரிசுகள் பள்ளி, கல்லூரிகளில் செல்போனை பயன்படுத்துவதை அனுமதிக்கவே கூடாது.
16 வயது முதல் 30 வயதுக்குள்பட்டவர்களே உலகில் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக, குற்றவாளிகளாக உள்ளனர். இதே வயதுக்குள்பட்டவர்களே விஞ்ஞானிகளாக, அரசியல்வாதிகளாக, ஆன்மிகவாதிகளாக, மருத்துவர்களாக, தொழில்நுட்ப வல்லுனர்களாக உலா வருகின்றனர். நம்முடைய ஜெராக்ஸ் நம்முடைய வாரிசுகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நான் புகைபிடிப்பேன், மது அருந்துவேன், சிற்சில கெட்டபழக்கங்களும் இருக்கும். ஆனால், என்னுடைய மகன் ராமனாகவும், மகள் சீதையாகவும் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்துவராது. ஒழுக்கம் உயிரை விட மேலானது என வள்ளுவர் சொன்னது, நமது வாரிசுகளுக்கு மட்டுமல்ல, நமக்காகவும்தான்.
அத்தியவசியச் செலவுகளை மட்டுமே செய்து கொண்டு, ஆடம்பர செலவுகளை தவிர்த்து கொண்டாலே கடனில்லாமல் வாழலாம். நம்மைப் பார்த்து நமது வாரிசுகளும் சிக்கனமாக வாழ பழகிக்கொள்வார்கள்.
காலை எழுவது, நடைபயிற்சி, உடல்பயிற்சி, தியானம் என முறையான, அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வை பெற்றோர்கள் மேற்கொள்ளும்போது, இவை எல்லாமே வாரிசுகளை தொற்றிக் கொள்ளும். நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் மன ஒருமைப்பாடும் ஏற்படும். மன ஒருமைப்பாட்டோடு செய்யப்படும் எந்த ஒரு வேலையும் அசாதாரண வெற்றி பெற்றுவிடும். எதுவுமே உபதேசமாக இல்லாமல் நாம் கடைப்பிடித்து காட்டும்போது வாரிசுகளும் நம்பிக்கையோடு அதில் ஈடுபடுவார்கள். பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்தான். ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது எனும் நுட்பத்தையும் புரிய வைப்போம்.
பொறுப்புணர்ந்து செயல்பட்டால், வள்ளுவர் சொன்னதுபோல இதுபோன்ற மகனை அல்லது மகளை பெற என்ன தவம் செய்தனரோ என எல்லோரும் புகழ்வர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.