
நிலக்கடலை, வேர்க்கடலை என்றும் கச்சான் என்றும்கூட அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட நிலக்கடலை, உலகின் பல நாடுகளில் பயிரிடப்படுகிறது.
நிலக்கடலை மகாத்மா காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நிலக்கடலையில் செய்யப்படும் கடலை மிட்டாய் மிகவும் பிரசித்தம் பெற்றது.
நிலக்கடலை தென்னிந்தியர்களின் உணவில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று. நிலக்கடலை பலவிதமான உணவு வகைகளுக்கும், துணை பதார்த்தங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நம்மில் பலருக்கு அதன் மருத்துவக் குணங்கள் தெரிவதில்லை.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில், காய் பிடிக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போடுவதைக் காணலாம். நிலக்கடலையில் "போலிக் ஆசிட்' அதிகம் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கு இது உதவுகிறது. நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடு, மாடு, நாய் வயல்வெளியைச் சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவதைக் காணலாம். நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. அது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் சிரமமின்றி உண்டாகும்.
பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்பு
களைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. இது மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக். நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது ஞாபக சக்திக்கும் பெரிதும் உதவும். இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
நிலக்கடலை நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்து, நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில்தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது "ஏழைகளின் முந்திரி' என்று அழைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.