
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, காகிதம் உபயோகத்தை கட்டுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
வங்கிகளில் ஏ.டி.எம். மையங்கள் மூலம் நேரம் மிச்சப்படுவதோடு பேப்பர் உபயோகமும் மிச்சப்படுகிறது. சில வங்கிகளில் ஈ-கார்னர் என்ற மின்னணு தானியங்கி பணம் செலுத்தும் முறையும் தற்போது செயல்படத் தொடங்கி இருக்கிறது.
இப்படி இருக்கையில் ரயில்வே நிர்வாகம் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ரயிலில் மாதாந்திர, காலாண்டு, ஆண்டு பயணச்சீட்டு உபயோகிப்பவர்கள், அவர்களுடைய இருப்பிடச்சான்று, புகைப்படச் சான்று அடையாளச் சான்று நகல்களுடன், மாதாந்திர பயணச்சீட்டு விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று. இந்த முறையும் ரயில் நிலையத்திற்கு ரயில் நிலையம் மாறுபடுகிறது.
பயணிகள் "இது ஒரு முறை மட்டும்தானே' என்று கேட்டதற்கு, "இந்த மாதத்திற்கு இது பொருந்தும், அடுத்த மாதத்திற்கு என்ன என்பது எங்களுக்கே தெரியாது' என்று பதிலளிக்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள். கடந்த சில தினங்களாக ரயில் நிலையங்களில், ஒவ்வொரு மாதமும் இனி மாதாந்திர பயணச்சீட்டு பெற அதற்குரிய விண்ணப்பப் படிவத்துடன் இருப்பிடச்சான்று, புகைப்பட சான்று அடையாளச் சான்று நகல் இணைக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டியவை, விண்ணப்பப் படிவத்தில் இருக்கும் வரிகள். "நான் சமூக விரோத, சட்ட விரோத செயல்களிலோ அல்லது இந்திய ரயில்வே சட்டத்துக்கோ எதிராகவோ ஏதேனும் செயல்களில் ஈடுபட்டாதாக கண்டுபிடிக்கப்பட்டால், எனக்கு வழங்கப்படும் மாதாந்திர பயணச்சீட்டை ரத்து செய்யலாம். புதிதாக வழங்கவும் வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன்' என அச்சிடப்பட்டு பயணிகளிடம் கையெழுத்து வாங்கப்படுவதுதான்.
ஆக, ஏதாவதொரு ரயில் நிலையத்தில் நியாயமான கோரிக்கைக்காக ரயில் மறியல் போன்ற ஏதாவதொரு அசம்பாவிதம் நடந்தால், அந்த ரயில் நிலையத்தில் மாதாந்திர பயணச்சீட்டு வாங்கியவர்கள் விவரங்களை எல்லாம் வைத்து, அதில் சம்பந்தப்படாத பயணிகளையும் இந்தப் பிரச்னையில் சிக்கவைத்துவிட இது வழிகோலாதா?
இந்தத் திட்டமானது, காகிதப் பயன்பாட்டையே குறைக்க வேண்டும் என்று புதிய அரசு முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கும் நிலைக்கு எதிரானது இல்லையா? அரசு வகுக்கும் திட்டங்கள் மக்களைச் சென்றடைய அதிகாரிகள் முனைய வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளை அதிகாரிகள் காற்றில் பறக்க விட்டுவிட்டார்களா?
முன்பதிவு செய்து பயணிக்க இன்டர்நெட் மூலம் ஈ-டிக்கெட் பதிவு செய்து வெறும் செல்போனில் அதற்குரிய பதிவை காண்பித்து பயணிக்க அனுமதிக்கும் ரயில்வே நிர்வாகம், தினசரி பயணிக்கும் தொழிலாளர்களுக்கும், பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் மட்டும் ஏன் இப்படி ஓர வஞ்சனை செய்கிறது?
மாதாந்திரப் பயணச்சீட்டு வாங்குவோர் மாதத்திற்கு இரண்டு நகல்கள் வழங்க வேண்டுமெனில் வருடத்திற்கு 24 நகல்கள் வழங்கவேண்டும். அதற்கு குறைந்தது 48 ரூபாய் செலவாகிறது. அப்படி பெறப்படும் நகல்களை குறைந்தது 3 வருடங்கள் வரை பாதுகாக்க வேண்டும் என்பது அரசு விதி. தமிழ்நாட்டில் 2 கோடி பேர் சீசன் டிக்கெட் உபயோகிப்பவர்கள் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. 2 கோடி பேருடைய நகல்களை மாத மாதம் பராமரிக்க இடம்? 3 வருடத்திற்கு பின்பு அவை அழிக்க வேண்டுமென்றால், அதனால், உருவாகும் சுற்றுச்சூழல் மாசின் அளவு?
ஒருமுறை சீசன் டிக்கெட் எடுக்க அடையாளச் சான்று (ஐ.டி. கார்டு) வாங்கினால், அவை 7 வருடங்கள் வரை செல்லுபடியாகும் என்பது ரயில்வே சீசன் டிக்கெட் விதி. அப்படியிருக்க ஏன் இந்த புது தலைவலி?
ரயில்வே நிர்வாகம் நினைத்தால், மாநகரத்தில் உள்ள புறநகர் ரயில்களில் பயன்படுத்தும் "ஸ்மார்ட் கார்டு' திட்டம் போன்றோ, ஆதார் அட்டை போன்றோ, இந்த மாதாந்திர பயணச்சீட்டுக்கும் திட்டம் வகுக்கமுடியாதா? இப்படிச் செய்தால் காகித செலவு, அலைச்சல், மன உளைச்சல் மிச்சமாகுமே!
ரயில் முன்பதிவு மையம் என்பது எல்லா இடத்திலும் இல்லை. ஆனால், மாதாந்திர பயணச்சீட்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் வழங்கப்படுகிறது. இதில் தொலைபேசி எண்கள் வேறு பெறப்படுகிறது. இவை தவறாகப் பயன்படுத்தப்படாது என்பது என்ன நிச்சயம்?
ரயில்வேத் துறையில் இதுபற்றி கேட்டால், இது பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று பதில் தருகிறார்கள். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் தினசரி பயணிக்கும் பயணிகள் என்று ஏதாவதொரு சம்பவத்தில் கண்டிபிடித்திருக்கிறார்களா? முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஏற்படுத்த வேண்டிய விதிகளையெல்லாம், தினசரி பயணிக்கும் சீசன் டிக்கெட் பயணிகளுக்கு விதித்தால் எப்படி?
உலகநாடுகளின் பார்வையில் இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பி, நவீன அறிவியல் யுகத்தில் நுழைந்திருக்கும் நாம், தினசரி ரயில் பயணத்தை எளிமைப்படுத்துவதற்கு பதிலாக சிக்கலாவதற்கு வழி கோலலாமா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.