எங்களை மன்னிப்பீர்களா கீதா பிரஹலாத்?

தமது தாய்க்குக் கொள்ளி போட்ட குற்றத்துக்காக ஒரு பெண்மணி கொல்லப்பட்டிருக்கிறார்.
எங்களை மன்னிப்பீர்களா கீதா பிரஹலாத்?
Updated on
2 min read

தமது தாய்க்குக் கொள்ளி போட்ட குற்றத்துக்காக ஒரு பெண்மணி கொல்லப்பட்டிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலம், மோதா ஊராட்சித் தலைவர் கீதா பிரஹலாத்தை அவரது சொந்த சகோதரர் தேஜ்ராம் வர்மா வெட்டிக் கொன்றுவிட்டார். இந்தப் பழி தீர்க்கும் தீச்செயலுக்குத் தந்தையுடன் துணை போயிருக்கிறார் அவரது மகன் பியூஷ். வம்சாவழியாக ஆணாதிக்க உரிமையை விட்டுத் தர முடியாதென்பதை என்ன விலை கொடுத்தும் நிரூபிக்கும் வெறித்தனம் இது.

தாய் சுர்ஜுபாய் தனது இறுதிக் காலத்தில் தன்னிடம் தெரிவித்த ஆசையை மட்டுமே கீதா நிறைவேற்றி இருக்கிறார். மகன்களிடம் அத்தனை வெறுத்துப் போனதால், பெற்ற மகளிடம் அப்படி ஒரு கோரிக்கையை அந்த பரிதாபத்துக்குரிய தாய் சுர்ஜுபாய் வைத்திருந்ததில் வியப்பு என்ன இருக்க முடியும்?

தங்களுக்குப் பிடித்தமற்ற செயலை யார் செய்தாலும் அவர்களைக் கொன்றே தீருவது என்ற சம கால உணர்ச்சிகளின் தீப்பிழம்பு நடுங்க வைக்கிறது. பேச்சு வார்த்தையோ, விவாதங்களோ, ஒருவருக்கொருவர் உள்ளம் திறந்து பேசி, விட்டுக் கொடுத்துப் போவதென்பதோ கிடையாது. வெட்டிச் சண்டைக்கெல்லாம் வெட்டுக் குத்துதான் தீர்வு. இள வயதுக்காரர்களிடம் கூட, ஏன், சிறுவர்களிடம்கூட இத்தகைய பகைமை உணர்ச்சி, பொறுமை இன்மை, சகிப்புத் தன்மை அற்ற வெறுப்புணர்வு, வெறி மேலிட்டு வருவது ஆரோக்கிய சமூகத்துக்கு அழகன்று.

சாதிய, மத விஷயங்களில் மட்டுமல்ல, பாலின பாகுபாட்டு விஷயத்திலும் இந்த வெறித்தனம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டி வட்டம் லிங்கநாயக்கன் பட்டி துர்க்கை அம்மன் கோயில் பூசாரி பின்னத் தேவர் மறைந்தவுடன் வம்சாவழியாக பூசாரியாக இருக்கும் உரிமை தனக்கு உண்டு என்று பணியாற்றச் சென்றார் அவரது மகள் பின்னியக்காள். ஒரு பெண் எப்படி பூசாரியாக இருக்கப் போயிற்று என்று அக்கம்பக்க கிராமத்து ஆண்கள் (பல பெண்களும் சேர) எதிர்த்து தகராறு செய்து தடுத்து விட்டிருக்கின்றனர். விசாரணை நடத்திய வட்டாட்சியர் 89 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர் என்று பதிவு செய்ததை அடுத்து பின்னியக்காள் நீதிமன்ற உதவியை நாடியிருக்கிறார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு வழங்கிய முக்கியமான தீர்ப்பைக் கவனியுங்கள்.

ஒரு பெண் அர்ச்சகராகச் செயல்படுவதை பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டித் தடுப்பதை ஏற்க முடியாது என்று சொன்னதோடு, நீதியரசர் கே.சந்துரு, அரசு ஊழியரான ஒரு வட்டாட்சியரே இத்தகைய மூடத்தனங்களுக்கு இரையாகி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதிருஷ்டவசமாக, குறிப்பிட்ட கோயில் ஆகம விதிகளின் கீழில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பின்னியக்காள் வழக்கில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், கோலாகலமாகத் தமது பணிக்குச் செல்ல வேண்டியவர், நீதிமன்ற உத்தரவுப்படியே மாவட்ட நிர்வாக பாதுகாவல் ஏற்பாட்டோடுதான் கோயில் முன் போய் நிற்க வேண்டியிருந்தது.

என்னோடு வங்கிக் கிளையில் பணியாற்றிய சரோஜா அம்மாள் ஒரு துப்புரவாளர். யாருக்கும் அஞ்சாத அவரது துணிவுமிக்க செயல்பாடுகளைக் கவனித்தபோது, அவரது வாழ்க்கையைப் பற்றி கேட்டறிந்து வியந்து போனேன். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்த அவர் தமது தந்தைக்கு ஆண் மகனை விடவும் அதிகப் பொறுப்பேற்று, மரம் ஏறுவதிலிருந்து அத்தனை கடுமையான உழைப்பையும் நல்கியவர்.

சகோதரர்கள் உதறித் தள்ளிய பெற்றோரைத் தங்கள் பொறுப்பில் ஏற்று கவனித்த சகோதரிகளில் ஒருவராக, தமது தந்தை இறந்தபோது அவர்தான் கொள்ளி வைத்தார். அதைச் சொல்கையில் அவரது கண்களில் மின்னிய பெருமிதத்தை மறக்க முடியாது. தன்னை வஞ்சித்த கணவனை விலக்கித் தள்ளிவிட்டுக் குழந்தைகளோடு துணிச்சலாக பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து குடியேறிவர்.

"ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்' என்று ஒட்டுமொத்த சமூகமும் கும்மியடித்துச் சொல்லாமல், சமத்துவ சமுதாயம் சாத்தியமில்லை. ஒரு சில பதவிகள், மிகச் சில பெயர்கள், மிக மிகச் சில விருதுகள், பாராட்டுதல்கள் போன்றவை மேலோட்டமான அங்கீகாரம் மட்டுமே.

உண்மையாகவே பெண்கள் குறித்த பொதுவான ஆழ்மன மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது கவலை கொள்ள வைக்கிறது. சத்தீஸ்கரில் கீதா பிரஹலாத் என்ற ஓர் அற்புத பெண்மணியின் அசாத்திய உயர்வு, அநியாயமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட விதத்தில் அது மிக மோசமாக பிரதிபலித்திருக்கிறது.

இந்த மாதிரியான எண்ணப் போக்குக்கு எதிரான தீர்மானமான கருத்தோட்டத்தை பள்ளி செல்லும் பருவத்திலிருந்தே குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையும் முகத்தில் வந்து அறைகிறது. எங்களை மன்னிப்பீர்களா கீதா பிரஹலாத்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com