

வாசிப்பு ஒரு தணியாத வேட்கை. ஒரு முறை சுவைத்தபின் நெஞ்சில் எப்போதும் நின்றாடும் இனிப்பைப் போன்றது நூல் வாசிப்பு. இழக்க மாட்டாத நட்பு அது. தொலைக்க முடியாத ஒரு பொக்கிஷம் போன்றது வாசிப்பு அனுபவம்.
நூல் வாசிப்பு, அலுப்பை நீக்கி விட்டு அந்த இடத்தில் பகிர்வைக் கொண்டு வந்து நடுகிறது. கசப்பை உறிஞ்சி எடுத்தபடி, நம்பிக்கையால் நிரப்புகிறது. நமது மனக் குடுவையை தனிமையின் நிழலில் குடியேற்றும் வாசிப்பு, படிப்பவரின் தோள்மேல் கை போட்டு, அப்புறம் என்று கேட்டபடி பேசத் தொடங்கிவிடுகிறது.
வறண்ட உதடுகளை மெல்லிய பூவிதழாய்ப் பிரித்து அதில் புன்னகையின் வாசத்தைப் பூசிவிட்டுப் போகிறது புத்தகம். அலைபாயும் நமது முடிக்கற்றைகளை சீர்திருத்தி முகத்துக்கும் அழகைக் கூட்டிக் கண்ணாடிமுன் கம்பீரமாகக் கொண்டு நிறுத்துகிறது ஒரு நூல்.
புத்தகத்தை நமது கையில் எடுத்து அதன் முதல் பக்கத்தைத் திறக்கையில் வாழ்வியல் இசைத்தட்டு ஒன்று உள்ளே சுழலத் தொடங்கவும், காந்த ஊசியைப் பொருத்துகிறது வாசிப்பு. பிறகென்ன இசை பரவத் தொடங்குகிறது. வாசிப்பவருக்குத் தெரியாமல் அவரை காடு, மலை, கடல், கண்டம் என்று எங்கெங்கோ கடத்திப் போகிறது நூல்.
அன்றாட வாழ்க்கையின் வழக்கமான வேதனைப் பளுவையே சுமக்கத் திணறுகிற மனிதர்களை ஆசுவாசப்படுத்தி, தனது கைகளைக் கொண்டு அதைக் கீழிறக்கி வைக்க உதவி, பின்னர் அதே மனிதர் இளைப்பாறி, அதைக் காட்டிலும் பல மடங்கு பளுவைக்கூட முக இறுக்கமின்றி சுமந்து செல்லப் பழக்குகிறது புத்தகம்.
புத்தகத்தைக் கையில் ஏந்தும் குழந்தையை அதன் பிறகு வாசிப்பு தனது தோள்களுக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டு உலகைக் காட்டத் தொடங்கிவிடுகிறது.
வாசிப்பு மிகப் பெரிய பரந்த வெளி. அடர்ந்த காடு. பொங்கும் கடல். விரிந்த சோலை. கரை புரண்டோடும் காட்டாறு. உயர்ந்த மலைச் சிகரம். உள்ளே நுழைந்த பிறகு, அவரவர் விருப்பம். அவரவர் துய்ப்பு. அவரவர் கொண்டாட்டம். எல்லைகளுக்குள் பேசப்படும் உலகினுள் எல்லைகளற்ற வேறு உலகமாக இயங்குகிறது நூல் வாசிப்பு.
வாகனத்தை, தொழில் கருவிகளை, இயந்திரங்களை அவ்வப்பொழுது ஒட்டுமொத்தமாகக் கழற்றிப் பார்த்துப் பிரித்துப் போட்டு உள்பாகங்களை எண்ணெயில் முழுக்காட்டி பழுது நீக்கி மீண்டும் ஒன்றாக்கிப் பளீரென்று புதிய பொருளாகக் காண்கையில் இன்புறுவதில்லையா, அதை அன்றாட வேலையாகவே செய்து உள்ளத்தைப் புதிதாகவே, சிந்தனைகளைச் சீராகவே, இயக்கத்தை ஆக்கப்பூர்வமாகவே வைத்திருக்கச் செய்யும் வேலையை புத்தகங்கள் சாத்தியமாக்குகின்றன.
இயற்கையின் தழுவுதலை, வரலாற்றின் வடுக்களை, மனித குல விடுதலைக்கான தாகத்தை, இசையின் சிலிர்ப்பை, தொல்பொருள்களின் கொண்டாட்டத்தை, நேயத்தின் நெகிழ்ச்சி இழைகளை, நிபந்தனையற்ற அன்பின் ததும்பல்களை, நீதியின் திறவுகோல்களை, சமத்துவ உணர்வுகளின் பெருமித விம்முதலை எளிதில் கடத்தியாக புத்தகங்கள் காலா காலத்துக்கும் தலைமுறை தலைமுறையாகக் கைமாற்றிக் கொண்டு செல்கின்றன.
வாசிப்பின் துள்ளாட்டமும், பகிர்வின் ஆர்ப்பாட்டமும் மனித நாகரிகத்தின் அற்புதக் குறியீடு. அது மட்டுமல்ல, சமூக மதிப்பீடும் கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.