வரலாறு காணாத மழையா? வடிகால் மூடிய குறையா?

அண்மையில் பெய்த மழையால் சென்னை மாநகரம் பெரும் அழிவைக் கண்டது.குறிப்பாகப் புறநகர்ப்பகுதி மக்கள் மாபெரும் அவதிக்குள்ளாயினர். வெள்ளப்பெருக்கினால்  உடைமைகள்
Published on
Updated on
2 min read

அண்மையில் பெய்த மழையால் சென்னை மாநகரம் பெரும் அழிவைக் கண்டது.குறிப்பாகப் புறநகர்ப்பகுதி மக்கள் மாபெரும் அவதிக்குள்ளாயினர். வெள்ளப்பெருக்கினால்  உடைமைகள் அடித்துச்  செல்லப்பட்டன. பலர் உயிரிழந்தனர். வீடு இழந்து அகதிகளாய் மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். மின்சாரம் இல்லை. . போக்குவரத்தும் தொலைத்தொடர்பும் முடங்கிப்போயின. குடிநீர்,பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது..  வீதியெங்கும் தண்ணீரும் கண்ணீரும் கரைபுரண்டோடின. ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் செய்வதறியாது திகைத்தனர். சென்னை. முழுவதும் பீதியால் உறைந்து போனது.

‘வரலாறு காணாத மழை’, ‘நூறாண்டு பெய்திடாத மழை’, ‘மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாளில் பெய்துவிட்டது’  என்று ஊடகங்களில் அறிக்கைகளும் செய்திகளும் வெளிவந்தன.’ பேரிடர் பகுதியாகத் தமிழகத்தை அறிவிக்கவேண்டும்’ என்றும் குரல்கள் எழுந்தன.     

மழையினால் சென்னை சேதம் அடைந்தது கண்கூடாகக்கண்ட உண்மை. ஆனால் அது வரலாறு காணாத மழையினாலா? வடிகால்களை மூடிய செயலாலா? என்பதை உணர்ந்துகொள்வது எதிர்காலச் சென்னைக்குப் பாதுகாப்பாக இருக்கும்

சென்னையில் அதிக மழை பெய்துள்ளது உண்மை. அது கடந்த பல ஆண்டுகளைவிடக் கூடுதல் மழையென்பதும் உண்மை. ஆனால் இந்த மழையை வரலாறு காணாத மழையென்றும் நூறாண்டு பெய்யாத மழையென்றும் சொல்வதெல்லாம் ஐம்பது வயது நிரம்பாதவர்களின் புலம்பல்.

மேலும் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டியது மூன்றே நாட்களில் பெய்துவிட்டது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று. மழை தொடர்ந்தும் பெய்யும்; இடைவிட்டும் பெய்யும்.   மழை எப்போது? எந்த அளவு?   எவ்வளவு நேரம்? எந்த இடத்தில் பெய்யும் என்பதைத் தீர்மானிக்க முடியாது.இயற்கையின் நியதி அது.  ஆறேழு நாட்கள் அடைமழையாய் இதனைப் போன்று கொட்டித்தீர்த்த ஆண்டுகளும் உண்டு. ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத பேரிடர் இப்போது ஏன் ஏற்பட்டது?                                                                                           

மனிதர்கள் இழைத்த தவறுகளால் இப்பேரிடர் ஏற்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்..ஆட்சியாளர்,கட்சிக்காரர்,பொதுமக்கள்,அதிகாரிகள் என்று எல்லோரும் இந்த மனிதர்களுக்குள் அடங்குவர். இந்தக் கூட்டணி செய்த முதல் தவறு நீர் நிலைகளை ஆக்கிரமித்தது. செங்கல்பட்டு,காஞ்சிபுரம் திருவள்ளூர் ஏரிகள் நிறைந்த மாவட்டங்கள். இங்குள்ள ஏரிப்பரப்பு குடியிருப்பு,கல்விக்கூடம்,,மருத்துவமனை,அரசுக்கட்டிடம் என்று ஆக்கிரமிக்கப்பட்டுக்  கணிசமாகக்  குறைந்துவிட்டது. 

அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்றவை  ஆக்கிரமிப்பால்  அகலம் சுருங்கிக் கொள்ளளவு குறைந்தன.. ஏரிகளுக்கு வந்த உபரி நீர் திறந்து விடப்பட்டதே பெரும்பான்மை பாதிப்பை உண்டாக்கியது. ஏரிகளின் கொள்ளளவு குறைந்ததே உபரி நீர் மிகுதியானமைக்குக் காரணம். நீரை ஏற்றுக்கொள்ளும் சதுப்பு நிலங்கள் தொலைந்து போயின. நீர் தேங்கும் பள்ளப்பகுதிகளில் குடியிருப்புக்களை உருவாக்கியது இரண்டாவது தவறு.

நகரத்தின் வளர்ச்சிக்கேற்பக் குடியிருப்புக்கள் உண்டாக்குவது அவசியம். அதற்காகப் பள்ளமான பகுதிகளில் போதிய வசதிகள் செய்யாமல் குடியிருப்புக்களை ஏற்படுத்தியிருக்கக் கூடாது. நீர் வடிவதற்கு  வசதியாகப் புதிய கால்வாய்கள் அமைத்திருக்க வேண்டும் அதைச் செய்யாமல் விட்டுவிட்டனர். நீர் உறிஞ்சும் மண்  பரப்பை மறைத்துத் தெருவெங்கும் கான்கிரீட் சாலைகள் அமைத்தது மூன்றாவது தவறு. ஆறு,குளம்,ஏரிகளைச் சரியாக மராமத்துச் செய்யாதது அடுத்த தவறு. தூர்வாருதல் என்ற பெயரில் அண்மைக் காலமாக மக்களின் வரிப்பணம் விரையமாக்கப்பட்டதே தவிர செம்மையாகப் பணி நடைபெறவில்லை.படுகைகளில் குடியேறும் மக்களைத் தொடக்கத்திலேயே தடுக்காமல் வாக்கு வங்கியாகக் கருதி ஆட்சியாளர்கள் விட்டுவிடுகின்றனர். இத்தகைய காரணங்களால்  மழைநீரால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. இதனை  உணர்ந்து மக்களும் அரசும் செயல் படவேண்டும். 

வீட்டுமனைக்காகத்  தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன. இந்த அவலத்தைப் போக்கி வடிகால்களைத் துலக்கி நீர் வடிவதற்கு வழி ஏற்படுத்துவது உடனடித்தேவையாகும். 20நிமிட நேர இடி,மின்னலுடன் கூடிய புயலில் 12 கோடியே 50 லட்சம் காலன் அளவு தண்ணீர் கீழே வரும் என்பது அறிவியல் கணிப்பு.

இப்படி பூமிக்கு வரும் மழை நீரைச் சேமிக்கவும் பாதுகாப்பாக வெளியேற்றவும் திட்டமிடுவது அவசியம். நீரைச் சேமிக்க ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றிப் புனரமைப்புச் செய்ய வேண்டும். மிகை நீர் வடிவதற்கு வடிகால்களைச் சரிசெய்ய வேண்டும். இப்படிச் செய்தால் பருவத்தில் எவ்வளவு மழைபெய்தாலும் அது  நூறாண்டில் பெய்யாத மழையாகத் தெரியாது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com