

ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்பார்கள். குறைந்தபட்சம் இம்மூன்று தேவைகளை நிறைவு செய்து கொள்ளவாவது நாம் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டே ஆக வேண்டும்.
வேலைவாய்ப்பு என்ற வார்த்தையை கேள்விப்பட்டதுமே எல்லோரும் நினைப்பது மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் அல்லது தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கள் என்பதுதான். அதாவது, காலை சென்று மாலை திரும்புவது, மாத சம்பளம் பெறுவது.
லட்சக்கணக்கான படித்த இளைஞர்களும் இளம்பெண்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பது எல்லோரும் அறிந்ததே. வேலை தேடுவதையே ஒரு வேலையாகக் கொண்டு ஆண்டுக்கணக்காக வேலை தேடி சோர்ந்து போவோரும் உண்டு.
எது நடந்தாலும் நன்மைக்கே என நினைப்பதும், ஒரு கதவை மூடினால் இறைவன் மறு கதவை திறப்பான் எனும் வார்த்தைகளும் வேலை தேடுபவர்களுக்கென்றே ஏற்பட்டவை. நாட்டின் ஜனத் தொகையில் 80 சதவீத மக்கள் சுயதொழில் அல்லது வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். நம் நாட்டின் பிரதான தொழில்களான விவசாயமும், நெசவும் சுயவேலைவாய்ப்புக்கள் தான். கோடிக்கணக்கான குடும்பங்களை இத்தொழில்கள் இன்றுவரை காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. படிக்காதவன் இரண்டு மாடுகளை வைத்து பால்பண்ணை நடத்துவான். கைத்தறிகள் விசைத்தறிகளானதும் விவசாயம் நவீனமயமானதும் காலத்தின் கட்டாயம்.
நாட்டில் தற்போதுள்ள தொழிலதிபர்களும், கல்வியாளர்களும் ஒரு காலத்தில் மாத சம்பளத்திற்கு வேலை தேடியவர்கள்தான். தற்போது அவர்கள் ஆயிரக்கணக்கான பேருக்கு மாத சம்பளம் கொடுப்பதை கண்கூடாக காணமுடிகிறது. மாத சம்பள வாழ்க்கையாக வாழ்வை சுருக்கி கொள்ளாமல் வானமே எல்லையாக வளம் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு ஊழியராக வேலையில் அமரும் ஒருவர் 35 ஆண்டு காலம் பணிமுடித்து ஓய்வு பெறும்போது அவர் காண்பது சொந்தத்தில் வீடும், ஓய்வூதியமும்தான். அந்த பகுதியில் டீ கடை, டிபன் கடை நடத்துபவருக்கு 1 கோடியில் கட்டடம் சொந்தமாக இருக்கும். அரசு ஊழியர் இவரைப் பார்த்து பெருமூச்சு விடுவார். ஊழியரின் மகன் டிப்ளமா படித்திருப்பார். டீக்கடைக்காரர் மகன் டாக்டராகி இருப்பார். இதற்கு வங்கிகள் தரும் கல்விக்கடனும் ஒரு காரணமாகும். வேலை தேடி கிடைக்காமல் போனதாலோ அல்லது வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதாலோ இன்றைக்கு நாட்டிற்கு அற்புதமான கலைஞர்களும், அரசியல்வாதிகளும், கல்வியாளர்களும், தொழிலதிபர்களும் கிடைத்துள்ளனர்.
ஆயிரத்தில் ஒருவராக, லட்சத்தில் ஒருவராக, கோடியில் ஒருவராக இதுபோன்ற சாதனையாளர்கள் எப்படி உருவாகிறார்கள் என்பதை நுணுக்கமாக ஆராய வேண்டும். அவரவர் தேர்ந்தெடுத்து கொண்ட துறையில் அல்லது தொழிலில் தகுதியையும் திறமையையும் வளர்த்துக் கொண்டதுதான் காரணம்.
திறமைக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை என்பதையும் உணர வேண்டும். நன்றாக படித்தவர் திறமை வாய்ந்தவராகவும் இருந்து விட்டால் அவரது வாழ்க்கை சோபிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மெத்த படித்தவர் திறமையற்றவராக இருந்துவிட்டால் அவரது கல்வி அவருக்கு ஓரளவே கைகொடுக்கும். சிறிதளவே படித்தவர் பெரிய அளவில் திறன்பெற்று வாழ்வில் அபார வெற்றி பெற்று விடுவார். மற்றவர்களிடம் காணமுடியாத விடாமுயற்சி, கடின உழைப்பு, மனசாட்சிபடி வாழ்தல் போன்ற நற்குணங்களே இவரை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கும்.
வணிகமும், சுயவேலையும் போட்டி நிறைந்த உலகம் என்பதில் ஐயமில்லை. நகரில் 200 மளிகை கடைகள் இருந்தாலும் 201-வதாக மளிகைக்கடை வைத்து வெற்றிகரமாக வியாபாரம் செய்யும் நபரை நடைமுறையில் காணமுடியும். கடல் அலைகள் ஓய்ந்த பிறகு குளிக்கலாம் என நினைப்பவன் கடலில் குளிக்கவே முடியாது.
முதுநிலை, இளநிலை படித்தவர்கள் முதற்கொண்டு படிப்பை பாதியிலே விட்டவர்கள் வரை மாத சம்பளத்திற்கு வேலை தேடுவதை ஒரு கால அளவுக்குள் முடித்துக்கொள்ளும் மனோநிலை வரவேண்டும். நாம் எதிர்பார்க்கும் வேலை கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்போம். காலம் கனியாமல் போகும் சூழ்நிலையில் வணிகம் அல்லது சுயதொழிலில் துணிச்சலுடன் ஈடுபடுவோம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். பொருளாதாரத்திற்கும், வழிகாட்டுதலுக்கும், மத்திய, மாநில அரசுகளும், வங்கிகளும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆயிரம் கட்டுப்பாடுகள் நிறைந்த மாத ஊதியம் பெறும் வேலைகளைவிட, சுதந்திரமும் மகிழ்ச்சியையும் தரும் வணிகம் அல்லது சுயதொழிலில் ஈடுபட முன்வருவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.